Tuesday, May 31, 2011

நளபாகம் - தி.ஜா

நூல் விமர்சனம் எழுதும் அளவிற்கு படிப்பாளி இல்லை, இருந்தாலும் படிப்பதில் பிடிச்சதை பகிர்ந்து கொள்ளத்தான். நம்ம ரேஞ்ச் ஏனோ தி.ஜா, கி.ரா, சு.ரா, ஆதவன, ஜெயகாந்தன்,பாலகுமாரன், சுஜாதாவோட தேங்கிடறேன். என்னை பொறுத்தவரை எழுத்தாளர்கள் அவர்களை சுற்றி நிகழும் சம்பவங்களுடன், பலதரப்பட்ட மனித வாழ்வியல் முறைகளுடன் அவங்களையும் இணைத்து வெளிகொண்டுவரவேண்டும். அவர்களை மட்டுமே முதன்மை படுத்தி படிப்பவர்களை படுத்துவதை தவிர்க்கலாம்.

ஒரு வர்ணனை என்பது அதனுள் இழுத்து அதன் போக்கில் நாமும் பயணப்பட வைக்கவேண்டும், தாகூரின் கோராவில் வரும் மழைக்காட்சிகளில் கல்கத்தாவிலும், சு.ராவின் பெண்கள் குழந்தைகளில் கேரளாவிலும் நாமும் நனைவோம். கி.ராவின் கதை மாந்தர் பேசும் பேச்சுகளின் ஊமைபார்வையாளராக இருப்போம். பெண் எழுத்தாளர்களில் லஷ்மியின் வருணனைகள் என்னை கவர்ந்தவை. ஒவ்வொரு எழுத்தாளரும் அவர் நடையில் ஒரு வாசகனை கவரும் போதும் மீண்டும் படிக்க தூண்டுகையிலும் ஆதர்ச எழுத்தர் ஆகிறார். எனக்கு குறிப்பிட்ட யாரும் இல்லை எனினும் தி.ஜாவின் சில நூல்கள் மறுபடி படிக்க வைக்கும், அந்த வரிசையில் நளபாகம்.

நர்மதை ஆற்றின் மேல் ரயில்யாத்திரையில் ஆரம்பமாகும் கதை. கதைன்னு எடுத்துக்கிட்டால் ரொம்ப எளியது, ஆனால் அதில் வரும் மனிதர்களும் அவர்களின் ஆசாபாசங்களும் ஒரு தேர்ந்த சமையலின் எல்லா மண குணங்களையும் கொண்டது. ரங்கமணி என்னும் நடுத்தரவயது மாது, ஜோதிடர் முத்துசாமி, அவர் மனைவி இன்னும் பலருடன் ரயில் யாத்திரையில் வட இந்தியா பயணமாகிறார், கணவனும் குழதைகளும் அற்ற அவருக்கு ஒரு சுவீகார புத்திரனும் மருமகளும் இருக்கிறார்கள். ரயிலுல் தலைமை சமையல்காரனாக அறிமுகமாகும் காமேஸ்வரந்தான் இந்த நளபாகன். காமேச்வரனிடம் மகனை போல் பாசம் கொள்ளும் ரங்கமணி தன்னுடன் வந்து தங்குமாறு அழைக்கிறார். அதே நேரத்தில் அவரின் தத்துபிள்ளை, மருமகளின் ஜாதகத்தை பார்க்கும் முத்துசாமி ஜோதிடர், அவர் மகனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை, ஆனால் மருமகளுக்கு உண்டு என்றும் உறுதியாக கூறுகிறார்.

யாத்திரை முடிந்து ஊர் திரும்பியதும் காமேச்வரன் ரங்கமணி வீட்டிற்கு சென்று சமையல்காரனாக சேர்கிறார், அப்போது தான் ரங்கமணி காமேச்வரன் மூலம் தன் குடும்பத்துக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று விரும்பியது புரிகிறது. ரங்கமணி நினைத்தது நடந்ததா, காமேச்வரனின் வாழ்க்கையின் அடுத்து என்ன என்பது தான் கதை.

காமேச்வரின் பாத்திரம் ஒரு அம்பாள் உபாசகனாக, ஒரு தேர்ந்த சமையல்காரனாக அறிமுகப்படுத்தப்படுகிறது. முத்துசாமி ஜோதிடர் எல்லா ஜோதிடர்களின் நிழல் உருவமாகவும், ரங்கமணியின் குணாதிசியம் ஊரைப்பற்றி நினைக்காமல் தன் வம்ச விருத்தியை மட்டும் குறிக்கோளாக்கும் பெண்ணாகவும், பங்கஜத்தையும் துரையையும் நெடுநாள் பழகிய தம்பதியினரைப்போன்றும், காமேச்வரனின் குருவான வத்ஸனை இறந்தகால பாத்திரமாக்கி எப்பேர்பட்ட சன்யாசிக்கும் ஒரு இரவு உண்டு என்றும், வீட்டுக்கார பாட்டி, ஜகது, தேவாரம் ஐய்யங்கார் எல்லாருமே ஒரு கதாருசிதான்.