Monday, May 7, 2012

பாண்டிச்சேரி - கண் குறைதீர்ப்பு மையம்

உலகில் பத்தில் 6 பேருக்கு கண்ணில் குறைபாடுகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. கிட்டப்பார்வை, தூரப்பார்வை, நிறம் பிரித்தறிய இயலாத குறை, ஒரு கண் பெரிதாகவும் இன்னொரு கண் சிறிதாகவும் இருத்தல், என்று அனேகமான குறைபாடுகள் மரபுவழியாக வருகின்றது. ஆனால் தற்சமயம் வாழ்வியல் குறைபாடுகளினால் வரும் கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் அதைவிட அதிகம். ஒரு வகுப்பில் பாதிக்கும் மேல் குழந்தைகள் கண்ணாடி அணிந்திருக்கின்றன. அதிகநேர டிவியும் கம்ப்யுட்டரும் பார்த்த சோர்ந்த கண்கள் வேறு என்ன செய்யும். என் குழந்தைகளும் இதற்கு விதிவிலக்குன்னு சொல்ல முடியாது. இரண்டு பேரும் கண்ணாடி.

போன வருட இறுதியில் பதிவர் ஆரூரன் அவர்களின் பதிவில் பாண்டிசேரி அரவிந்த் ஆஷ்ரம கண் பயிற்சி நிலையம் பற்றி கூறியிருந்தார். அப்போதே தொடர்பு கொண்டபோது 7 வயது முடிந்த குழந்தைகளே பயிற்சிக்கு ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்பதால் போகமுடியவில்லை. இந்தவருடம் முன்கூட்டியே பதிவு செய்து ஒரு வாரம் சென்று பயிற்சியும் முடித்துவந்தாகிவிட்டது.

முதல் நாள் பரிசோதனையின் போது கடைசி இரண்டு வரிகள் படிக்கவே முடியவில்லை. ஆனால் இறுதி நாள் பயிற்சியின் போது நன்றாக படிக்கமுடிந்ததுடன் இன்று அவர்களின் படிக்கும் தூரம் இன்னும் ஒரு அடி முன்னேறி இருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் கண்ணாடி அணிவதில்லை.

7 வயதுமுதல் 40 வயது வரை யார் வேண்டுமானாலும் போகலாம். முன்கூட்டியே பதிவு செய்வது நல்லது. கண்களின் குறைபாடுகளின் தன்மை பொறுத்து கண்களை முறைப்படி கழுவுதல், சன் ட்ரீட்மெண்ட், மசாஜ், பாமிங். குறைந்த வெளிச்சத்தில் மிகப்பொடி எழுத்துகள் படித்தல், சாதாரண வெளிச்சத்தில் படித்தல், பந்து போட்டு கண்களுக்கு பயிற்சி, ஸ்விங் எனப்படும் தொலைதூர பார்வை பயிற்சி, தூரத்தை பொறுத்து சார்ட் ரீடிங் எனப்படும் பயிற்சி, விரலின் அசைவுக்கு தக்கன விழிகள் அசைக்கும் பயிற்சி, இன்னும் சில பயிற்சிகள் தரப்படுகின்றன. இறுதியாக கண்களுக்கு ஆவிபிடித்தல், சிறிது குளிர்ந்த நீரில் கண்களுக்கு ஓய்வு கொடுத்தல் என்று முறையான பயிற்சிகளில் ஒரு நாளைக்கு சுமார் இரண்டு மணிநேரம் வீதம் காலையும் மாலையும் தரப்படுகிறது.

வீட்டிலும் இதனை தொடர்ந்து செய்யவேண்டும். இதற்கு அரவிந்த் ஆஷ்ரமத்தில் கட்டணம் ஏதும் வாங்குவதில்லை. வரும்போது நமக்கு விருப்பப்பட்ட எதேனும் ஒரு தொகையை நன்கொடையாக தரலாம். முன்கூட்டியே தங்கும் இடமும் பதிவுசெய்து கொள்ளலாம். ஒரு மூன்று படுக்கைகள் கொண்ட பெரிய அறை ரூபாய் 300 மட்டுமே. அங்கேயே சைவ உணவுகளும் கிடைக்கும்.

ஒரு வாரம் கண்டிப்பாக தங்கவேண்டி இருக்கும். முதன்முறை என்பதால் 7 நாட்களாவது பயிற்சி எடுத்தால் மட்டுமே நமக்கும் அந்த பயிற்சி நினைவில் இருக்கும். குழந்தைகளுடன் அவர்களின் பெற்றோர்களும் இருத்தல் அவசியம்.ஈமெயிலில் தொடர்பு கொண்டு பதிவு செய்வது நலம். போகும் போது இந்த கடிதங்களையும் கொண்டுசெல்லுங்கள், 7வயது தாண்டிய குழந்தைகளுக்கு பிறப்புசான்றிதழ் அவசியம். மெயிலில் தொடர்பு கொள்ளூம் போது யாருக்கு, என்ன வயசு, எந்த தேதி உங்களுக்கு வசதிப்படும் போன்ற விபரங்களை தெரிவிக்கவும். பாண்டிச்சேரியில் அரவிந்த் ஆஷ்ரமம் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் திங்கள் விடுமுறை. ஆகவே அவர்கள் வாரம் என்பது செவ்வாய் அன்று தான் ஆரம்பம். ஞாயிறு வேலை நாள். இதனை கருத்தில் கொண்டு தேதி முடிவுசெய்யவும்.

தொடர்புக்கு :

School of perfect Eye sight - auroeyesight@yahoo.com 

தங்கும் இடம் : ஏகப்பட்ட ஆசிரம கெஸ்ட் ஹவுஸ் இருக்கின்றது. எனினும் நாங்கள் தங்கிய இந்த கெஸ்ட் ஹவுஸ் விபரம்.

ஈமெயில் - newguesthouse@gamail.com
போன் -  0413 2233 634 

மெயிலில் அவர்கள் புக்கிங் எண் கொடுத்ததும் ஒரு நாளைக்கான பணத்தை மணியார்டர் செய்து உறுதிசெய்து கொள்ளுங்கள். முன்கூட்டியே எத்தனை நாள் தேவைப்படும் என்பதும் சொல்லிவைக்கவும். இரண்டு படுக்கை கொண்ட அறை 200 ரூபாய். இந்த தங்கும் விடுதிக்கும் அந்த மையத்திற்கும் நடந்து செல்லும் தூரமே. போகும் வழியில் மணக்குள வினாயகர் கோவில், அன்னை ஆஷ்ரமம் போன்றவை உள்ளது.