Thursday, December 23, 2010

LOVE YOU பப்பு



காலையில சாப்பிட்டு ரெடியா இரு விஜி,ஸ்கேன் பண்ணி பார்த்துட்டு முடிவு பண்ணலாம்..சொல்லிட்டு டாக்டர் - ( எனக்கு சின்ன மாமியார்), கிளம்பிட்டாங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. மருத்துவமனையில் வந்து சேர்ந்து ஒரு வாரம் ஆகிடுச்சு, தினம் 4 யுனிட் சலைன், ரெண்டு முறை ஸ்ட்ராயிட் ஊசி, எல்லாம் முடிஞ்சுது. ஆனாலும் சரியாகவில்லை, வேறு வழியில்லை எதாவது ஒரு முடிவு நாளைக்கு எடுத்துத்தான் ஆகனும். ரெண்டாவது குழந்தை உறுதியான நாளிலிருந்து வாந்தியும் தலைசுத்தும் கடைசிநாள் வரை இருந்தது,, ஆறாம் மாத துவக்கத்தில் கர்ப்பகால சர்க்கரை நோய் வேறு, நல்லவேளை டயட்டிலேயே சரியாகும் என்று சொன்னது, இல்லைன்னா அதற்கு தினம் இன்சுலின் போடவேண்டி இருந்திருக்கும். 27வது வாரத்தில் கர்ப்பப்பை வாய் திறந்துவிட்டது என்று பாண்ட் போட்டிருந்தார்கள்,, 34 வாரம் தான் ஆகியிருந்தது, ஆனால் பனிக்குட நீர் ரொம்ப குறைவாக இருந்ததால் ஒரு வாரமாக மருத்துவமனை வாசம். 8 பாயிண்ட் இருக்க வேண்டிய பனிக்குட நீர் வந்து சேரும் போது 6 இருந்தது, ஒரு வாரத்தில் 4ஆக குறைந்து விட்டது. இனி அடுத்த நாள் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

ரெண்டு நாளில் சுனாமி வரப்போவதை அறியாமல் அந்த மருத்துவமனை மிக மெதுவாக விழித்துக்கொண்டது. வெள்ளிக்கிழமை- டிசம்பர் 24- 2004, காலையில் 10 மணிக்கு ஸ்கேன் பார்த்த போது குழந்தை 35 வாரம் ஆகியிருந்தது.. பொதுவாக 40 வாரம் இருக்க வேண்டும். ஆனால் வேற வழியில்லை. என்ன பண்ணலாம் விஜின்னு மறுபடியும் கேள்வி.. சிசேரியன் மட்டும் வேண்டாம் வேற என்ன வேண்டும் என்றாலும் ட்ரை பண்ணலாம். கடைசி நிமிடம் வரை நான் ஒத்துழைக்கிறேன்னு சொல்லிட்டேன். ஸ்கேன் பார்க்கும் போதே பிஞ்சு விரல்களில் அச்சு காட்டினார்கள். இன்னைக்கு வேண்டுமா இல்லனா நாளைக்கு ஒரு நாள் வரை தள்ளிப்போடலாம், கிருஸ்மஸ் பேபியா இருக்கும்னு சொன்னாங்க. நான் இல்ல வேண்டாம் இன்னைக்கே இருக்கட்டும், இன்னைக்கு பிறந்தா அது ராம்க்கு நான் தரும் ஸ்பெஷல் பர்த்டே கிஃப்ட்னு சொன்னேன். ஏனெனில் டிசம்பர் 24 ராம்க்கும் பிறந்தநாள்.


12 மணிவாக்கில் நார்மல் டெலிவர் நடக்க, வலி வருவதற்கு ஜெல் தரப்பட்டது. அரை மணி நேரத்தில் வலி ஆரம்பித்தது, நான் இந்த முறையும் டெலிவரியை பார்க்க விரும்பினேன். அதனால் எபிட்யுரல் அனஸ்தீஷியா போட சொன்னேன். அதற்குள் நல்லா வலி வந்ததால், மாமியார் கொஞ்ச நேரம் பொறுத்துக்க எதுக்கு அன்ஸ்தீஷியா வேண்டாம்னு சொன்னார், இல்ல நான் இந்த குழந்தையையும் முதல் நிமிடத்தில் இருந்து பார்க்கனும் என்று சொல்லி போட்டுக்கொண்டேன். மாலை 5.30 மணிவரை பார்க்கலாம் இல்லனா சிசேரியன் என்று சொல்லப்பட்டது.

நான் ரெண்டு குழந்தைகளூக்கும் வயிற்றில் உறுதி செய்யப்பட்ட நாள் முதல் அவர்களிடம் பேசுவேன். இப்பவும் சொன்னேன், குழந்தை வயிற்றில் இருக்கும் போதே அதற்கு பேரு வைத்திருந்தோம்.. பாப்ஸ் இதான் அந்த பேரு, பாப்ஸ் நீ இப்ப அம்மாவை கஷ்டப்படுத்தாம வந்திடு, உன்னை பார்த்துக்க அம்மாவை தவிர யாரும் இல்லை, அம்மாவையே இன்னொருத்தர் தயவில விட்டுடாதேடா செல்லம்னு கேட்டுக்கொண்டேன். ராம் கூடவே இருந்தார், 5 மணிக்கு டாக்டர் இன்னும் அரை மணி நேரத்தில் டெலிவரி ஆகிவிடும்னு சொன்னதும் ராமை வெளியில் போகச்சொல்லிவிட்டேன். வலியை உணராமல் குழந்தை வந்ததும் அதன் எடை ஒரு கிலோ 600 கிராம் மட்டுமே இருந்தது.. பெண் குழந்தை என்று தெரிந்ததும் ரொம்ப சந்தோசமாவும் அவளோட சுறுசுறுப்பான அழுகை சந்தோசமாகவும் இருந்தது...

எல்லா தாய்க்கும் அவர்கள் குழந்தை ரொம்ப ஸ்பெஷல் தான். அவர்களை பற்றி எவ்வளவு பேசினாலும் தீரவே தீராது. அதிலும் ரெண்டும் பெண் குழந்தைகளூம் என் வீட்டில் வளரும் தேவதை என்று கூட சொல்ல முடியாது, தெய்வங்கள் தான். எதாவது ஒரு முடிவெடுத்து அது தோல்வியில் முடிந்து மனசு கஷ்டப்படும் நேரங்களில் இவர்கள் பேசுவது தெய்வத்தின் குரலாகத்தான் தோனும்.

இன்னைக்கு என் குட்டி செல்லத்துக்கு 6 வயசு ஆகிறது. ஆனால் அவளோட நிதானம், கவனிக்கும் தன்மை, நகைச்சுவை உணர்வு எல்லாம் ஸ்பெஷல் தான்.. லவ் யூடா பப்பு :)) உன் சிரிப்பு, குறும்பு, டைமுக்கு அடிக்கும் டயலாக், ஒரு நாளைக்கு நீ கொடுக்கும் 100 முத்தம், எல்லாம் எப்பவும் இப்படியே இருக்கனும்டா... ஹேப்பி பர்த்டே செல்லம்


டிஸ்கி: இன்னைக்குத்தான் ராம்க்கும் பிறந்த நாள்... ஹேப்பி பர்த்டே ராம்.



Tuesday, December 14, 2010

பதிவர் சங்கமம் - ஈரோடு பதிவர் சந்திப்பு

நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு., உங்கள் எல்லாரையும் சந்திக்க ஆவலாக உள்ளோம்... ஈரோடு பதிவர் சங்கமத்தில் சந்திப்போம்.. வாங்க வாங்க


நாள் : 26.12.2010 ஞாயிறு
நேரம் : காலை 11.00 மணி
இடம் : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்
URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு

நிகழ்ச்சி முன்னோட்டம் .......

* பதிவர்கள் அறிமுகம்
* வலைப்பூக்கள் ஒரு மாற்று ஊடகம்
* சிறுகதைகளை உருவாக்குவோம்
* புகைப்படங்களில் நேர்த்தி
* நீங்களும் குறும்படம் எடுக்கலாம்
* உலகத்திரைப்படங்கள்
* வலைப்பக்கங்களை திறனுடன் பயன்படுத்துதல்
* பதிவர்கள் கலந்துரையாடல்

காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர்  என்று விருந்தும் உண்டாம். (பார்சல் உண்டான்னு கேக்க மறந்துட்டனே)

பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து அரங்கிற்கு வந்து செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்ய எண்ணியுள்ளோம்
உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்
தொடர்புகளுக்கு:
erodetamizh@gmail.com அல்லது குழும பதிவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

Tuesday, November 30, 2010

சி.சீ, மா, கும்ப கும்ப,,கும்பகோணம்.........

கொச்சின் போலாமா? திருவனந்தபுரம்?இதற்கு நடுவில் எங்க அஸோசியேசன்ல இருந்து கோவா இல்லைன்னா நெல்லியம்பதி போகலாம்னு வேற ஐடியா? கடைசியில் நவக்கிரக கோவில் போகலாம்னு முடிவு செய்து ஒரு வழியா கிளம்பினோம். கிளம்பினோம்னு சும்மா சொல்றேன், ஆனா இருக்கும் 4 நாளில் குழந்தைகளை அழைத்து செல்வதாலும் கும்மோனம் கோவில்கள் மதியம் சாமிகளை தூங்க வைத்து விடுவார்கள் என்பதாலும் மேப் வைத்து ப்ளான் போட்டு சென்றோம்..
கோவையிலிருந்து ஜனசதாப்தி ட்ரெயினில் காலை 7 மணிக்கு புறப்பட்டோம், திருப்பூரில் என் ஃப்ரெண்ட் சரோ, கோபால் அவர்கள் குழந்தைகள் அம்ருதா, சஞ்சிதாவும் சேர்ந்து கொண்டனர்.

எங்கள் ப்ளான் படி வியாழன் மதியம் முதல் ஒரு சாமியை விடாமல் பார்த்து விடுவது என்று.. வியாழன் மதியம் கும்பகோணத்தில் தங்கினால் அதன் அருகில் உள்ள கோவில்களை பார்த்து, அடுத்த நாள் தஞ்சை பெரிய கோவிலும் இன்ன பிறவும், பிறகு மாயவரம்.

இந்த ப்ளான் மிக அருமையாக, நேரம் மிகச்சரியாகவும், அனைத்து முக்கிய தலங்களை பார்க்கும் படியும் இருந்தது. தஞ்சை பார்க்க தேவையில்லை எனில் மாயவரத்தில் தங்குவது நல்லது. நாங்கள் தஞ்சையை எங்கள் லிஸ்டில் முக்கியமாக வைத்திருந்ததால் கும்பகோணத்தில் தங்கவேண்டியதாயிற்று.

வியாழன் மதியம் 2 மணிக்கு லஞ்ச் முடித்து அன்று வியாழன் என்பதால் குரு கோவில் திறந்திருக்கும், இல்லாவிட்டால் வழக்கமாக 4 மணிக்கு தான் கோவில் திறப்பார்களாம். முதலில் ஆலங்குடி குருஸ்தலம், அங்கிருந்து திருநாகேஸ்வரம், வழியில் இருக்கும் பாடைகட்டி மாரியம்மன் கோவில், உப்பிலியப்பன் கோவில், ஐய்யவாடி ப்ரதியங்கரதேவி பார்த்து கும்பகோணம் வந்து சாரங்கபாணி கோவில்.

அடுத்த நாள் வெள்ளி அன்று காலை 6.30 மணிக்கு கிளம்பி முதலில் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, புன்னைநல்லூர் மாரியம்மன், தஞ்சை பெரிய கோவில், திருவையாறு, திங்களூர் சந்திரன் கோவில், சுவாமிமலை, மறுபடியும் கும்பகோணம் திரும்பி லஞ்ச் முடித்து ஹோட்டல் ரூம் வெகேட் பண்ணி அங்கிருந்து மங்களாம்பிகை,சூரியனார் கோவில், கஞ்சனூர் சுக்கிரன் ஸ்தலம் பார்த்தோம், வழியில் திருமணஞ்சேரி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இரவு மயிலாடுதுறை அடைந்து அபி டாடி ஏற்பாடு செய்திருந்த ஹோட்டல் அறையில் சேர்ந்தோம், அடுத்த நாள் காலை 8 மணிக்கு கிளம்பி வைத்திஸ்வரன் கோவில், திருவென்காடு புதன் ஸ்தலம், கீழ்பெரும்பள்ளம் ( கேது) திருக்கடையூர் அபிராமி, மார்க்கண்டேயர் கோவில், அனந்த மங்களம் ஆஞ்சிநேயர் கோவில், தரங்கம்பாடி போர்ட், திருநள்ளாரு சனிஸ்வரன், கூத்தனூர் சரஸ்வதி, திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில்..மறுபடியும் இரவு மாயவரம்

அடுத்த நாள் சிதம்பரம், தில்லைக்காளி மட்டும் பார்த்து மதியம் அபி டாடி வீட்டில் லஞ்சு முடித்து ட்ரெயினைபிடித்தோம்.

இதான் ட்ரெயிலர்.. மெயின் பிக்ஸர் இனி ரெண்டு நாள் கழித்து,, ட்ரெயினில் மருதாணி வச்சு போற வரவங்க ட்ரெஸை கெடுத்தது, டிடிஆரே என்கிட்ட அட்வைஸ் கேட்ட கதை, அதைப்பார்த்து மக்கள் ஓட்டிய கதை, மழையோடு உறவாடி மழையோடு ஊரு சுத்தி, மழையிலேயே திரும்பி வந்தது, எல்லாகோவிலும் பிரசாதம் நல்லாருக்கும் நம்பி ஏமாந்தது, டாடா சுமோவில் ரெண்டு பக்கமும் தண்ணீர் சிதற ரெயின் கோட்டில் கேப்டன் எஃபெக்டில் போனது, எல்லாக்கதையும் வரும்.. வெயிட்டிஸ் .................:)

Friday, November 19, 2010

நூல் விலையை எதிர்த்து போராடும் திருப்பூர்


திருப்பூர்... மகாபாரத காலத்தில் அர்ஜுனன் பசுக்களை போரிட்டு திரும்ப அழைத்து சென்ற இடம் என்பதால் திருப்பூர் என்று வழங்குவதாக கூறுவர், கடும் உழைப்பாளிகளை கொண்ட ஒரு சிறிய நகரம், கிட்டத்தட்ட 3500 நேரடி ஏற்றுமதி நிறுவனங்களும் அதை ஒட்டி 20,000க்கும் அதிகமான துணைத்தொழில் நிறுவனங்களையும் கொண்டது. இன்றைக்கு திருப்பூரில் நூல் ஏற்றுமதியை தடை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது, அனைத்து சங்கங்களும் கலந்து கொள்ளும் இதை பெரிய அளவில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

நூல் என்பது முக்கிய மூலப்பொருள், பனியன் உற்பத்தி விலையில் கிட்டத்தட்ட 25% நூல் விலை இருக்கும், அது தவிர நிட்டிங், டையிங், ப்ரிண்டிங், கட்டிங், ஸ்டிட்ச்சிங் என்று மற்ற வேலைகளும் சேர்ந்து தான் பொருளின் விலை, ஆனால் தற்போது நூல் விலை கடுமையான ஏற்றத்தில் இருக்கிறது. மற்ற எந்த நாடுகளும் மூலப்பொருள் ஏற்றுமதியை ஊக்குவிப்பது இல்லை, ஏனெனில் மூலப்பொருளாக ஒன்றை ஏற்றுமதி செய்வதை விட ஃபினிஷ்ட் ப்ராடக்ட் எனப்படும் உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்வது ஒரு நாட்டின் வேலை வாய்ப்பு, பணப்புழக்கம், அன்னிய செலாவனி, தொழில்நுட்பத்திறன், உள்கட்டமைப்பு என்று எல்லாத்துறையையும் வளர்க்க
உதவும்.

ஏற்றுமதி ஆர்டர் பெறப்பட்டு அதிகபட்சம் 100 நாட்களுக்குள் முடிக்கவேண்டும், இன்றைய நிலையில் நூல் விலை தினம் தினம் மாறுகிறது, ஒரு ஆர்டர் பெறப்படும் போது உள்ள விலையில் இருந்து மீண்டும் நூல் விலை அதிகரிப்பால், அதன் உற்பத்தி செலவும் மாறுபடுகிறது,  இதனை பையர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், இந்த அதிகப்படியான விலையேற்றம் இங்குள்ள தொழில் நிறுவனங்களே செய்ய வேண்டும், கடந்த ஆறு மாதத்தில் இந்த விலையேற்றத்தை நினைத்தே நிறைய்ய ஆர்டர்கள் மறுக்கப்பட்டுள்ளன. ஒரு தொழில் செய்வதே லாபம் ஈட்டத்தான், அதையும் தெரிந்தே நட்டப்பட யாரும் விரும்ப மாட்டார்கள்.


இந்த நூல், காட்டன், துணி ஏற்றுமதியின் உலகின் முதலிடத்தில் உள்ள சீனா கூட மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வது இல்லை, மேலும் வெளியிடங்களில் இருந்து இறக்குமதி செய்வதை அனுமதிக்கின்றனர், நம் நாட்டிலும் கூட இறக்குமதி செய்து அதை உபயோகித்து உற்பத்தி செய்து மீண்டும் ஏற்றுமதி செய்யும் போது வரிசலுகைகள் உண்டு. சீனாவின் உற்பத்தி திறன் என்பது மிகப்பெரிய ஆர்டர்களை கொண்டது, ஆனால் நம் நாட்டின் பலமே எவ்வளவு குறைந்த அளவு ஆர்டர்களும் நாம் செய்து முடிப்போம் என்பது தான். சீனாவின் அரசாங்கம் உற்பத்திக்காக கொடுக்கும் சலுகைகளில் 10 % கூட நம் நாட்டு அரசாங்கம் தருவதில்லை என்பதே உண்மை.


நூல் விலை ஏற்றுமதியை தடை செய்து அல்லது முறைப்படுத்தி உள்நாட்டு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த பனியன் தொழிலை வளப்படுத்த வேண்டும்.

Monday, November 1, 2010

முஸ்கின், ரித்திக் என்ன பாவம் செய்தார்கள்?

முஸ்கின் ஜெயின், அவள் தம்பி ரித்திக் ஜெயின்  11 மற்றும் 8 வயது சின்ன குழந்தைகள், அவர்களின்  ஒரு நாள் எப்படியெல்லாம் போயிருக்கும், பள்ளி தோழர்கள், அம்மா அப்பா என்று வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்த அந்த அழகான மலர்களை ஒவ்வொரு இதழையும் பிய்த்துப்போட்ட கொடூர மனம் படைத்த மிருகங்கள்.
கோவையில் இரண்டு நாளுக்கு முன் கடத்தி சென்று கொலை செய்யப்பட்ட சின்னக்குழந்தைகளை கடத்திட்டு போனது அவர்களின் பள்ளிக்கு செல்லும் வேன் ட்ரைவர், கோவையில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் குழந்தைகள் கடத்துவது அதிகமாக நடக்க ஆரம்பித்த இந்த வேலையில் பெற்றோருக்கான கடமைகளை நாம் இன்னும் இறுக்கவேண்டியது அவசியம்.



குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் பற்றி அவசியம் சொல்லித்தரவும், அது யாரா இருந்தாலும் வேண்டாம், குடும்பத்தில் ஒருவராக நெருங்கிப் பழகியவர்களே நம்மைப்பற்றி மொட்டை கடுதாசி போடும் காலம் இது, (சொந்த அனுபவம்). என்னதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் சில நேரங்களில் இப்படி மக்களை கணிக்க தவறுவதும் நடக்கத்தானே செய்கிறது.
பொதுவாகவே குழந்தைகளோடு தொடர்புடைய மனிதர்களை நாமும் நல்லா அறிமுகம் செய்து கொள்வது அவசியம், முக்கியமா, வேன் டிரைவர், பள்ளி வாட்ச்மேன், செக்யுரிட்டி, கேம்ஸ் மாஸ்டர், வகுப்பு ஆசிரியர், எதேனும் வகுப்புகளுக்கு அனுப்புகிறோம் என்றால் அங்கு இருப்பவர்கள் எல்லாரின் முகவரியும் போன் நம்பரும் கண்டிப்பாக வைத்திருங்கள், வழக்கமாக வரும் நேரத்தை விட 5 நிமிடம் அதிகம் ஆனாலும் அவர்களை அழையுங்கள், ஒரு வேளை நீங்கள் சென்று அழைத்துவருவதாக இருந்தால் எதாவது காரணமாக தாமதமானால் அதையும் பள்ளிக்கோ அந்த வகுப்புக்கோ உடனே தெரிவியுங்கள்.

குடும்ப விசயம் வெளியில் பேசக்கூடாது என்று குழந்தைகளுக்கு பழக்குங்கள், வெளியூர் போவது வீட்டில் யார் இருக்கிறார்கள் போன்றவைகளை வேனிலோ ஆட்டோவிலோ பொது இடத்திலோ பேசவேண்டாம். நம் தொலைபேசி, மற்றும் சில எமர்ஜென்சி நம்பர் சொல்லிக்கொடுங்கள், குறைந்த பட்சம் 5 ரூபாயாவது எப்போதும் குழந்தைகளீடம் கொடுத்து எமர்ஜென்சி பணம் என்று சொல்லிவைக்கவும்.

நான் என் குழந்தைகளை மாலை 6 மணிக்கு தான் பள்ளியிலிருந்து அழைத்து வரப்போவேன், அப்போது வாரத்தில் 3 நாட்களாவது சில குழந்தைகள் ஒன் ருப்பி தாங்க ஆண்ட்டி இன்னும் அப்பா வரலை, ஆட்டோ மேன் வரலை என்று கேட்பார்கள், பெற்றோர் ஆசிரியர் கமிட்டி உறுப்பினராக இருப்பதால் பள்ளியில் இதை பற்றி கூறி ஒரு பொதுதொலைபேசி வைக்கும் படி கூறினேன், ஆயிரக்கணக்கில் கட்டணம் கட்டும் பள்ளியில் இது போன்ற ஒரு ரூபாய் செலவு பெரிதா குழந்தைகள் பாதுகாப்பு முக்கியமா என்று நீண்ட விவாதத்திற்குப்பின் இப்போது வைத்திருக்கிறார்கள். நான் தினம் போவதால் கிட்டத்தட்ட எல்லா குறைகளையும் பள்ளியின் கவனித்திற்கு கொண்டு போய்விடுவேன். இது எல்லாருக்கும் முடியாது, ஆனாலும் குறைந்த பட்சம் அம்மாவோ அப்பாவோ ஒரு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாவது போங்கள்.
வீட்டிலேயே கூட தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் யாரையும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அனுமதிக்க வேண்டாம், பக்கத்து வீட்டில் போய் படிப்பது, விளையாடுவது எதும் வேண்டாம், எதுவானாலும் நம் கண் முன் நடக்கட்டும்.

வெளியிடங்களூக்கு குழந்தைகளை கூட்டிக்கொண்டு போகும் போதும் விலையுயர்ந்த ஆடைகள் ஆபரண்ங்கள் வேண்டாம், பெண்குழந்தைகள் மட்டும் அல்ல ஆண் குழந்தைகளுக்கும் இந்த பிரச்சனை உண்டு. நூறு மடங்கு கவனம் நாம் வைக்காவிட்டால் இழப்பு நமக்குதான்

11 வயது குழந்தையிடம் பாலியல் கொடுமை பண்ணினவனை இனி விசாரித்து என்ன ஆகும்? விசாரனையே இல்லாமல் கொடுமையாக மிகக்கொடுமையா தண்டிக்கனும். இனிமேல் எவனும் இது மாதிரி ஒரு நினைப்பே வராதபடி தண்டிக்கனும், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு மிகக்கடுமையான கண்டனங்களை போலிசுக்கும் அரசுக்கும் தெரிவிப்பது நம்கடமை.

 

நம் எதிர்காலமே இன்னொருவரால் சிதைக்கப்படுவதை அனுமதிக்க முடியுமா?முடிந்தால் உங்கள் கண்டனங்களை உங்கள் பதிவுகளில் பதிவுசெய்யுங்கள்.

Saturday, October 30, 2010

பெண்ணியம் குடும்பத்துக்கு தேவையா?

நீங்க சொல்லுங்க பெண் என்றால் எப்படி இருக்கனும்?
அடக்கமா இருக்கனும்,அன்பா இருக்கனும்,

நீங்க சொல்லுங்க எப்படி உடை அணியனும்
புடவை, தாவணி தான் நல்லது

குடும்பத்தில் பெண்கள் எப்படி இருக்கணும்?
பொறுமையா, அன்பா, பண்பா (மதிய நேர சீரியல் கதாநாயகி மாதிரி போல)

கணவன் அடிச்சா என்ன பண்ணுவீங்க,
என் பக்கம் தப்பு இருந்தா அடிச்சா வாங்கிப்பேன்., திருப்பி அடிப்பேன், அப்ப அமைதியா இருப்பேன் அப்பறமா சொல்லித்திருத்துவேன்..

பெண்ணீயவாதிகள் எப்படி இருப்பாங்க?
சிகரெட் பிடிப்பாங்க, தண்ணி அடிப்பாங்க, யாரைப்பார்த்தும் பயப்பட மாட்டாங்க, போல்டா இருப்பாங்க, அடங்கவே மாட்டாங்க.. ப்ளா ப்ளா....


பெண்ணீயவாதிகளின் பார்வையில் பெண்ணீயம்னா என்ன?
உரிமையை எடுத்துக்கறது, சுதந்திரமா இருப்பது,பெண்கள் தண்ணி அடிச்சா என்ன தப்பு?, ஒரு பெண் அவள் விரும்பிய கணவனை தேர்ந்தெடுக்கவும், கல்யாணமே வேண்டுமா வேண்டாமா என்றும், திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழவும், எப்ப இஷ்டமோ அப்ப குழந்தை பெத்துக்க உரிமை வேண்டும்னு விவாதத்தை ஆரம்பிச்சாங்க.

இப்படி துவங்கிய பெண்ணியம் குடும்பத்தில் தேவையா இல்லையா என்ற பேச்சு - இதை விவாதம்னு சொல்ல முடியாது, ஏன்னா பேசியது அத்தனையும் நிகழ்ச்சி நடத்தும் இயக்குனர். இந்த வெட்டி பேச்சு தலைப்பைத் தாண்டி வேறு வேறு அர்த்தமற்ற விவாதத்தில் போனது, ஒரு ஆயாசத்தையும் எப்படா முடிப்பாங்க என்ற வெறுப்பையும் கொடுத்தது.

பெண்ணியம் என்று பொதுவில் சொல்லும் உரிமையை எடுப்பதும் கொடுப்பதும்.. யாரு யாருக்கு தருவது? பெரும்பாலான பெண்ணியம் பேசுபவர்கள் சிங்கிள் பர்சனாகவே இருக்கிறார்கள். ஆணோ பெண்ணோ ஒரு விசயம் அல்லது விருப்பம் அவர்கள் எப்படி நினைத்தார்களோ அந்த விகிதத்தில் சிறிதும் குறையாமல் அது நிறைவேறவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள், அது அப்படி நிறைவேறாமல் போனால் அதனால் ஏற்படும் ஒரு வித கோபம், ஆதங்கம் தான் பெண்ணியம், அல்லது ஆணாதிக்கம். ஆண்களால் மட்டுமே பெண்கள் கஷ்டப்படுகிறார்களா? ஏன் மாமியார், நாத்தனார், இன்னும் சொந்த அம்மாவால் கஷ்டப்படும் பெண்கள் கூட இருக்கிறார்கள். அதே மாதிரி பெண்களால் கஷ்டப்படும் ஆண்கள் இல்லாமலா இருக்காங்க? அவர்கள் வெளியில் சொல்லுவதில்லை என்பதே உண்மை. எதிர்பார்த்து அது நடக்காமல் போகும் போது வரும் விளைவுகளுக்கு நமக்கு சவுகரியமான பேரை வைத்திருக்கோம்.


குடும்பத்தில் பெண்ணீயம் தேவையா? இல்லையா? என்ன கருமம் இது?
பெண்கள் இல்லாத வாழ்க்கை எப்படி நல்லாருக்காதோ அதே போல் ஆண்கள் இல்லாத வாழ்க்கையும் சுவாரஸ்யம் இல்லாததுதான். ஒரு பெண் அழகா உடை உடுத்துவது அவளுக்கு தன்னம்பிக்கை தரும் அதே நேரம் நம் மனதுக்கு பிடித்தவர்களும் அதை ரசிக்கனும் என்ற எண்ணமும் இருக்கும், இதெல்லாமா பெண்ணியத்தில வரும்? அதே மாதிரி எந்த வீட்டிலாவது சண்டை இல்லாமல் எப்போதும் கொஞ்சிட்டு இருப்பாங்களா? நினைச்சுப்பாருங்க, எப்பவும் மனைவி பிராணநாதான்னும் கணவன் கண்ணே மணியேன்னும் பேசிட்டு இருந்தா எப்படி இருக்கும்.

ஒரு கணவனும் மனைவியும் கருத்துவேறுபாடால் தாராளமா பிரிஞ்சு போகலாம், ஆனால் ஒரு அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சு போனால் அப்படி ஒரு பெண்ணீயம் தேவையா? குழந்தைகள் நம் மூலம் உலகிற்கு வருகிறார்கள் நாமே அவங்களூக்கு எல்லாம் இல்லை, ஒரு பெற்றோரிடம் வளரும் உரிமையை அவங்ககிட்ட இருந்து பிரிக்க நாம யாரு?
உனக்கென்ன தெரியும், அவங்க கஷ்டம், சும்மா பேச நல்லாருக்கும்னு சொல்றவங்களுக்கு, காதல் கல்யாணமோ பெற்றோர் பார்த்து வைத்த கல்யாணமோ இரண்டு பேர் சேர்ந்து வாழும் போது கருத்துவேறுபாடு கண்டிப்பாவரும்.நம் அம்மா அப்பாவும் சண்டை போட்டுகலையா? சேர்ந்து இருக்கலையா?

இன்றைக்கு உண்மையில் பொருளாதார சுதந்திரம் தான் பெண்களை இப்படி யோசிக்க வைக்கிறது, அதே பொருளாதாரத்தை நம் குடும்பத்துக்கு பயன்படுத்தலாம் என்று தோணினால் இப்படி பிரிந்து போகும் எண்ணம் வருமா? திருமணம் ஆனதும் பெற்றொர்களுடன் இல்லாமல் ஒரு 3 வருடங்கள் தனியாக இருப்பது கூட ஒரு வகையில் நல்லது தான், ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்து எப்படி ஒரு குடும்பத்தை சமாளிப்பது என்று கற்றுக்கொள்ள உதவும், காலையில் எழுந்ததிலிருந்து மாலை வரை எத்தனை செலவுகள், அதை வருமானத்துக்குள் எப்படி அடக்குவது, என்ன சேமிப்பு போன்ற எல்லாம் கணவனும் மனைவியும் தெரிந்து கொள்ள இந்த காலகட்டம் தேவைப்படும்.

கருத்து வேறுபாடுகள் வர எவ்வளவோ காரணங்கள் இருக்கிறது, ஆணும் பெண்ணும் அதை அனுசரித்து போவது தான் குடும்பத்தை கொஞ்சம் நிம்மதியோடு நகர்த்த உதவும்.இன்னும் சொல்லப்போனால், இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் சேர்த்துதான், எல்லாரும் எதோ ஒரு நேரத்தில் பிடிக்கிறதோ பிடிக்கலையோ நடித்துதான் ஆகனும், அதை குடும்பத்தில் வெளி ஆட்களிடம் காட்டுவதில் தவறேதும் இல்லை, நம்முடனேயே இருக்கும் நம் குடும்ப ஆட்களுக்கு நம்மை பற்றி ஒளிவுமறைவின்றி தெரியும், ஓரிரு நாட்கள் வந்து செல்லும் சொந்தங்களையும் நட்புகளையும் மற்ற அனைத்தையும் புன்னகை முகமூடியின் பின் தள்ளி உபசரித்து அனுப்புவதால் நாம் ஒன்றும் குறைந்துவிடுவதில்லை, அது யார் பக்கம் இருந்து வந்தாலும், அதை விட இன்னொன்று கணவனோ மனைவியோ அவர்கள் பிறந்த வீட்டு சொந்தங்களை இரண்டாம் இடமாக வைத்திருந்தால் பிரச்சனையே இல்லை, யாரு விவாதத்திற்க்கு எடுத்துக்கொண்டாலும் குழந்தைகள் பெரிதானதும் நம் குடும்பமே முக்கியமாக எல்லாருக்கும் இருக்கும், அதில் மாற்றுகருத்து இருந்தால் அங்கே பிரச்சனை கண்டிப்பா வரும்.

பெண்ணீயம்,ஆணாதிக்கம் இதெல்லாம் குடும்பத்துக்கு தேவையே இல்லை, நீ பெரிசா நான் பெரிசான்னு ஆரம்பிச்சா அது போயி நிற்கும் இடம் பஞ்சாயத்தாத்தான் இருக்கும், இதுக்கா திருமணம்,?விரும்பும் போது குழந்தை பெத்துக்க உரிமையா? அதுக்கு பெண்ணியமா? ஒரு குழந்தைக்கு வருடக்கணக்கில் தவமிருக்கும் பெண்களுக்கே அதன் அருமை தெரியும்.

பெண்ணீயமோ ஆணாதிக்கமோ அதைப்பத்தி பேசி கடைசியில் இழப்பது ஒரு அழகான வாழ்க்கையை, கடைசியில் மிஞ்சும் விரக்தியை தான். நம் குழந்தைகள், அவர்களின் வாழ்க்கை, அதில் வரும் திருப்தி இதை யோசித்தாலே போதும். கணவன், மனைவி, சொந்தங்கள் என்று நம் வரையில் இருக்கும் சிலரை திருப்தி படுத்த முடியாதவங்க, வீட்டை ஒழுங்கா கட்டிக்காக்க துப்பில்லாதவங்க சமூகத்தை என்ன திருத்த போறாங்க?

யோசிக்கறேன்,சொல்லவந்ததை ஒழுங்கா இன்னும் சொல்லலை,இதுவே பதிவு பெரிசா போயிடுச்சு அதனால  இது இன்னும் வரும்..

Tuesday, October 26, 2010

காங்கிரஸ் என்றால் என்ன?

இதுவரைக்கும் அரசியலே எழுதினதில்லை, சரி அப்படியென்ன அதில இருக்குன்னு பார்ப்போம்,, அடிப்படை அரசியல் தெரியாத நிறைய பேரு நாட்டில இருக்கும் போது கேள்வி கேட்பது கடமை.. இதோ என் டவுட்டு, பதிவுலக நிஜ அரசியல் புலிகள் கவனிக்கவும் :)

1. அதிமுக, திமுகவுக்கு எல்லாம் ஃபுல் பார்ம் நமக்கு தெரியும். காங்கிரஸுக்கு அப்படி எதாவது இருக்கா?

2.அரசியல்ல திடீர் திருப்பம்னு சொல்றாங்களே அது எப்படி? வில்லன் படத்துல கருணாஸ் சொல்லுவது மாதிரி டக்குனு திரும்பறதா?

3 ஒரே ஆளு நாலு கட்சி மாத்தி மாத்தி தாவறாரே, எந்த சர்க்கஸ்ல ப்ராக்டிஸ் பண்ணிருப்பாரு?

4. உடன்பிறப்புன்னு சொல்றாங்களே, அப்ப அத்தை, மாம்ஸ், சித்தப்பூன்னு எப்ப சொல்லுவாங்க?

5.அதிக கோஷ்டிகளை கொண்ட கட்சி எது? சரியா சொன்னா ’கை’பேசி பரிசளிக்கப்படும்?

6.கழக கண்மணிகள்னு சொன்னா கண் ஆஸ்பத்திரிக்கு மார்க்கெட்டிங் பண்ராங்கன்னு அர்த்தமா?

7.இளரத்தம் கட்சியில பாய்ச்சறோம்னு சொன்னா என்ன அர்த்தம்? வன்முறையை தூண்டனுமா?

8.சூறாவளி சுற்றுப்பயணம்னா அவிங்க போனதும் சுனாமி வருமா?

9.வாரிசு அரசியல்ல இந்த உடன்பிறப்பு, ரத்தத்தின் ரத்தம் எல்லாம் அடக்கமா? அடங்குமா?

10. வாக்காளர்கள் என்பவர்கள் யாரு?

இப்போதைக்கு இவ்வளவுதான், இன்னும் இருக்கும் நிறைய பார்ட் வரும்.

 

Monday, October 25, 2010

ஒரு டிவி டாக்‌ஷோ அனுபவக்கொடுமை

பொதுவாகவே டிவி பார்க்க எனக்கு பிடிக்காது.

சின்னக்குழந்தைகளை முழு மேக்கப்புடன் அழைத்து வந்து ஆடவைத்து, பாடவைத்து, அழவைத்து, ஜெயித்தால் கட்டிப்பிடிச்சு, தோற்ற மனசுருக்க கணங்களை க்ளோசப்பில் காட்டி தேவையில்லாமல் இந்த வயதில் அவர்களை மன அயர்ச்சிக்கு ஆளாக்கும் பெற்றோர்களை உருவாக்கும் டிவி.

அடல்ஸண்ட் ஏஜ் எனப்படும் விடலைப்பருவத்தில் இருக்கும் குழந்தைகளை அவர்களைவிட பெரிய மனிதர்களாகவும், வயதிற்கு மீறிய வேலைகளை செய்பவர்களாகவும் காட்டி அந்த வயதிலிருப்போரை ஒரு மாய உலகத்திற்குள் தள்ளிவிடும் டிவி.

இளம்பெண்களையும், ஆணகளையும் கேக்கவே கர்ணகொடூரமாக இருக்கும் இசைக்கு கண்டபடி ஆடவிட்டு அதற்கு மதிப்பெண் கொடுக்க ஒரு கும்பலுமாக கெமிஸ்ரி, ஹிஸ்டரி என்று உளறிக்கொட்டும் மனிதர்களுக்கு நீதிபதி பதவி கொடுத்து அந்த பதவியை கேவலப்படுத்தும் டிவி.

இருபத்திநான்கு மணி நேரமும் ஒளிபரப்பு என்னும் நிலையில் அவர்கள் என்னதான் செய்ய முடியும்? சினிமாவும், அரசியலும் விட்டால் வேறு வழியே இல்லை. நல்ல செய்திகள் ஒரு 5% மக்களை அடையும் மீதி 95% சதவீத நிகழ்ச்சிகள் மக்களிடம் திணிக்கப்படுகிறது. இன்றைய நிலையில் மிக முக்கிய பிசினெஸ், பணப்புழக்கம் உள்ள இடம் டிவிதான்.

சமீபத்தில் எனக்கு ஒரு குறிப்பிட்ட டாக்‌ஷோவில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது, தலைப்பு செமையாக இருந்தது, எதிரணியினரும் சுவாரஸ்யமானவர்களாக இருக்கவே ஒத்துக்கொண்டு, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். வாழ்க்கையில் சமீபத்தில் செய்த பெரிய தவறு அதுதான். எனக்கு சாதாரணமா தலைவலியே வராது, (வரவைச்சுத்தான் பழக்கம்) ஆனால் இப்ப வரைக்கும் தலைக்கு உள்ளே எல்லாம் வலிப்பது மாதிரி ஒரு ஃபீலிங் :(

நிகழ்ச்சி மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டதால் சரியான நேரத்தில் அங்கே இருந்தேன், அப்போது இன்னொரு நிகழ்ச்சி (அதே ஷோவின் வேறு ஒரு தலைப்பு) படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது.. அப்பவே கடவுள் என்னை காப்பாத்த ட்ரை பண்ணிருக்கார்னு ரொம்ப லேட்டாத்தான் புரிஞ்சது.

இரண்டு மணிக்கு ஆரம்பிப்பதாக சொன்ன நிகழ்ச்சி மிகச்சரியாக 5.30க்கு ஆரம்பிக்கப்பட்டது, அதிலும் நான்கு வரிசைகளில் இருக்கைகள் இடப்பட்டிருந்தது, மிக உயரமான வரிசைகளில் ஏறமுடியாத பெண்கள் முன்வரிசையில் அமரவைக்கப்பட்டனர், அந்த இருக்கைகள் பாதி உடைந்தும், ஒரு பக்கம் லேசாக ஆடிக்கொண்டும் இருந்தது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் அமர்ந்து பேசக்கூடிய ஒரு நிகழ்ச்சியில் ஒரு வசதியான இருக்கை கூடவா போட முடியாது? அதைவிட கொடுமை சிறப்பு விருந்தினர் அமரும் இருக்கை,, டிவியில் பார்க்கும் போது ஒரு மாதிரி நெளியறாங்களே என்று நினைத்தேன், பின்ன மூட்டைப்பூச்சி கடிக்கும் போது சொறிய முடியாதில்ல, காமெரா வேற ஓடிட்டு இருக்கு, நெளிஞ்சுதானே ஆகனும்.

தலைப்பு மட்டும் தான் நல்லாருந்தது, ஆனால் நிகழ்ச்சி ஒரு மினி குழாயடி சண்டைதான், ஒரு குருப்புக்கு ஒரு மைக் அதை ஒருத்தர் பேசுவதற்குள் இன்னொருவர் பிடுங்க, கிட்டத்தட்ட அடிதடிதான், இதை பார்த்து கேலியாக சிரிக்கும் பார்வையாளர் கூட்டம், நான் மேல் வரிசையில் உட்கார்ந்திருந்தேன், பின்னால் திரும்பி கீழே பார்த்தால் வாந்தி வருவது மாதிரி இருந்தது. இடையில் டீ கொடுத்தார்கள் குடித்து விட்டு கப்பை பின்னாடி போட்டிருங்கன்னு சொன்னா அப்படித்தானே இருக்கும். கொடுத்திருக்கும் தலைப்புக்கும் பேசும் பேச்சுக்கும் அர்த்தமோ,தொடர்போ இல்லை, நிகழ்ச்சியை நடத்துபவர் அவருக்கு வரும் டாக்பேக் ( இயக்குனர் எப்படி பேசனும், என்ன டயலாக் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார் அதான் டாக்பேக்) அதை கிளிப்பிள்ளையாக சமாளிக்கிறார், சொல்லவரும் கருத்தை பாதியிலேயே மறுப்பது, அதற்கு தேவையில்லாமல் நேர்மாறாக கேள்வி கேட்பது, மிக செயற்கையாக, நாடகத்தனமாக ரியாக்சன், பங்கேற்பாளர்கள் சொல்வதை முழுதும் கேட்காமல் இயக்குனர் திருப்பும் திசைக்கு நிகழ்ச்சி திரும்புவது, பங்கேற்பாளர்கள் என்று வருபவர்கள் ரொம்ப சொற்பம் மற்றவர்கள் ஃபில்லர்ஸ் எனப்படும் நிரப்பபடுபவர்கள்,
(பரவலாக பங்கேற்பாளர்களை அமர வைத்து நடுவில் அவர்கள் யூனிட் ஆட்களை அல்லது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அமரவைப்பது, இவர்களுக்கு ஃபில்லர்ஸ் என்றூ பெயர்) என்று ஒரு டாக் ஷோவின் உண்மையான முகம் இதுதான்.

இந்த மாதிரி நிகழ்ச்சிகள் எப்படி படம்பிடிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளத்தான் அதில் கலந்து கொள்ள சம்மதித்தேன், ஆனா அது இவ்வளவு கொடுமையாக இருக்கும் என்று தெரியவில்லை. இதில் பாராட்டப்பட வேண்டிய விசயம், இந்த நிகழ்ச்சியை நடத்த துணைபுரியும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், அவர்கள் பெரும்பாலும் பெண்கள் மிக சுறுசுறுப்பாக, எவ்வளவு பொறுமையாக வேலைபார்த்தார்கள், பணி முடிந்து வீடு போக விடியற்காலை 3 மணி ஆனதாக கூறினார்கள்.

இப்படியாக போய்க்கொண்டே இருந்தது, ஒரு கட்டத்தில் தலைவலி தாங்கமுடியாமல், கடுப்பாகி கொண்டே இருந்தது நிகழ்ச்சி முடியும் அறிகுறியே இல்லை, 7.30 மணிவரை பேசியதையே திரும்பத்திரும்ப பேசி சாவடித்தார்கள். பொறுமை எருமையை விட பெரிது தான் ஆனாலும் என் பொறுமை எல்லை தாண்டிபோயிடுச்சு.. அதனால அங்க இருந்து எஸ்கேப்.. இனிமேல் யாராவது டாக்‌ஷோ, குரங்காட கோட்டானாட, அப்படின்னா சொன்னா... என்னை கொலைகாரி ஆக்க விருப்பமிருப்போர் சொல்லலாம்..

 

 

Saturday, October 16, 2010

சில நேரங்களில் சில மனிதர்கள்....

எதுக்கு இப்படி சண்டை போட்டுக்கிறார்கள்ன்னு அதிசயமாக பார்த்து தூணைக்கட்டி நின்றது நல்லா நினைவிருக்கிறது, 8வது படிக்கும் போது. அந்த வீட்டின் திண்ணையில் நிறைய பெரியவங்க உட்கார்ந்திருக்காங்க, இந்தப்பக்கம் லச்சுமி அக்கா அந்தப்பக்கம் தண்டபாணி அண்ணன், நடுவில லச்சுமி அக்காவின் அம்மா அப்பா, பெரிய சண்டைன்னு தோனுது என்னன்னு புரியலை, போன லீவுக்கு லச்சுமி அக்கா வீட்டுக்கு போன போது கூட அரசாணிக்கா தோட்டத்துல இருந்து அறுத்துட்டு வந்து சின்ன வெங்காயம் போட்டு வேகவைச்சு தந்தாங்க அவங்க மாமியார், இப்ப எதுக்கு அழறாங்க? ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி 3 வருசம் முடிஞ்சிருந்தது. இந்த பேச்சு வார்த்தைக்கு  பிறகு லச்சுமி அக்கா அவங்க அம்மா வீட்டிலேயே இருந்துட்டாங்க.

10வது படிக்கும் போதுதான் தெரிந்தது ரெண்டு பேருக்கும் அத்து விட்டுடாங்கன்னு, அப்படின்னா என்னன்னு கூட தெரியலை, இனிமேல் லச்சுமி அக்கா இங்க தான் இருப்பாங்கங்கறது மட்டும் புரிஞ்சுது. சில நேரங்களில் பள்ளிக்கூடம் விட்டு வரும் போது தண்டபாணி அண்ணன்
ரோட்டோரத்தில நின்னு எதாவது சாப்பிட தரும், அப்படியே லச்சுமி அக்காவை கூப்பிட சொல்லும், எனக்கு அவங்க அம்மாவை பார்த்தா கொஞ்சம் அலர்ஜி அதனால மாட்டேன்னு சொல்லிடுவேன், லச்சுமிக்காவும் பயந்துட்டு வராது.. எல்லாரும் சொல்லுவாங்க அவ அவியம்மாவுக்கு பயந்து பொழப்பை தொலைச்சுட்டான்னு.. சிவன் மலையடிவாரத்தில கடை வச்சிருந்தாங்க தண்டபானி அண்ணன், அப்பல்லாம் எங்க தெருவில மக்கள் மாசாமாசம் சிவன்மலை போவாங்க, யாரோடவாவது ஒட்டிட்டு நானும் போவேன், தவறாம சர்க்கரை மிட்டாய் வாங்கி தந்து லச்சுமிக்காவை விசாரிப்பாரு, அவரு கடையிலதான் செருப்பை விட்டுட்டு போவோம், திரும்பி வரும்போது வடை,டீ  லச்சுமிக்காவின் நலவிசாரிப்போடு கிடைக்கும்.

காலேஜ் படிக்கும் போது தான் தெரிந்தது, லச்சுமிக்கா அழுது புலம்பின அன்னைக்குதான் தண்டபானி அண்ணனுக்கு கல்யாணமாம், லச்சுமிக்கா அழுதுபுலம்பியதில் தெரிந்ததுகொண்டது, குழந்தையில்லாததால் லச்சுமிக்காவின் அம்மா திரும்ப அங்க போக வேண்டாம்னு சொல்லிட்டதாவும், அவங்க சேர்ந்து இருக்கும் போது வாங்கின 5 செண்ட் இடத்தை அவங்க அம்மா பேரில் எழுதி வாங்கிக்கொண்டதாகவும் புத்தியில்லாம அந்த அண்ணனைவிட்டு வந்துட்டேன்னு சொல்லி அழுதாங்க, எனக்கு என்னன்னு ஒண்ணும் புரியலை, இப்ப புரியுது,, சில வருசங்களுக்கு முன் காங்கயம் பஸ்ஸ்டாண்டில் தண்டபானி அண்ணனை பார்த்தேன், எனக்கே ரெண்டு குழந்தைகள் இருக்காங்க அவரு என்னை இன்னும் 10 வகுப்பு புள்ளன்னு நினைச்சு அச்சு முறுக்கு, கடலைபர்பி, சர்க்கரை மிட்டாய் பொட்டலம் கட்டி தந்தாரு, எங்கூட இருந்த மக்கள் செம கிண்டல் பண்ணினாங்க, ஆனா எனக்கு அந்த அன்பு பிடிச்சிருந்தது, அவரிடம் என் குழந்தைகளின் போட்டா காட்டியபோது அவரின் கண்ணில், பேச்சில் தெரிந்த பிரியம் இன்னைக்கும் மறக்கலை, திரும்பி வரும்போதும் அவர் லச்சுமி அக்காவை விசாரித்தார், நான் இப்ப அந்த ஊரிலேயே இல்லைன்னு சொன்னேன், அந்த அண்ணனுக்கு கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதாக சொன்னார், எனக்கு லச்சுமிக்காவின் அழுகை முகம் நினைவுக்கு வந்தது..

நல்லா யோசிச்சு பார்த்தா இந்த இருவரின் வாழ்க்கை இப்படி ஆக காரணம் லச்சுமிக்காவின் அம்மாதான், அவருக்கு இவங்க ஒரே பொண்ணு, கல்யாணம் பண்ணினதே மிக லேட்டாத்தான், அப்படியும் அவங்களை வாழ விடாமல் செய்த குணம் ஏன்? முதல் காரணம் சொத்து இவங்க சொத்தெல்லாம் மாப்பிள்ளைக்கு போயிடும் கடைசி காலத்தில் கஷ்டப்படனும்னு அடிக்கடி சொல்லிட்டு இருப்பாங்க, அதே பயத்தில தான் லச்சுமிக்காவின் இடத்தையும் அவங்க பேரிலேயே மாத்திக்கிட்டாங்க,  முதலில் வந்தது லச்சுமிக்காவின் அம்மா அவங்க பேரு பாப்பாத்தியம்மா..மிக உயரமான நல்ல உறுதியான பெண்மணி, வெத்திலை பாக்கும் குரங்கு மார்க் புகையிலையும் ஓடிப்போய் கடையில் வாங்கிட்டுவான்னு சொல்லி முடிப்பதுக்குள்ள போயிருப்பென், அப்படி ஒரு குரல். அவங்க பேச்சுக்கு பயந்தே தாவணி போடசொல்லி எங்கம்மா என்னை திட்டிட்டே இருப்பாங்க :(

பாப்பாத்தியம்மா மாதிரி சில அம்மாக்களும் இருக்காங்க, இதுவரை இப்படி 2 பேரை நான் சந்திச்சிருக்கேன், வாழ்வின் சிலகாலம் கூட சேர்ந்து வாழ்ந்திருக்கேன். நினைவு தெரிந்து நான் சந்திச்ச மனிதர்கள், அவர்களின் குணம், நட்பு,  பாசம், துரோகம், பிடிச்சது, பிடிக்காதது,வெகுளித்தனம், அவங்க கேரக்டர் என்று என் பார்வையில் ஒரு சின்ன தொடரா பதிந்து வைக்கலாம்னு தோனியது,. இதற்கு இதைவிட பொருத்தமான தலைப்பு தோனலை..

Thursday, October 7, 2010

காமினி, என்னை காப்பாத்து !!! (சவால் சிறுகதை)

காமினிக்கு மூச்சை அடைத்தது. எப்படியாவது செத்து போயிடனும் என்று வெறியானது, சுற்றிலும் டாக்டர், நர்ஸ் என்று ஆட்களும் இந்த சிகிச்சையும், நேரம் கடந்து கொண்டிருக்கிறது. யோசித்து முடிவெடுத்தாள்,

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.. இதோடு முடிந்தது..

---

 தேவிகாவை திருமணம் செய்ய ஒரே தடை காமினிதான், எப்படியாவது அவளை நகர்த்திட்டால் எந்த பிரச்சனையும் இல்லை, அதனால் வீட்டுக்கு வர வைத்து காமினியை பயமுறுத்தி அனுப்பிடவேண்டும் என்று காத்திருந்தான், ஆனால் அவள் எதற்கும் ஒத்து வர வில்லை, கடைசியில் சாரி எனக்கு வேற வழிதெரியலை என்று காமினியின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்தான் சிவா..

----

அந்த பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சியின் தலைவர் பரந்தாமன் சந்தோசத்தில் இருந்தார், அவர் முன் வைரமும், காமினியும், வெல்டன், எப்படியோ போலீஸ் கண்ல மண்ணை தூவிட்டு இந்த டைமண்டை கொண்டு வந்துட்டியே என்று பாராட்டினார் பரந்தாமன்...


----

ச்சே,,  மூன்று பேப்பரையும் கசக்கி வீசினான், ஆனந்த், ம்ம் காமினின்னு கேரக்டர்ல நடிக்கற ஆர்டிஸ்ட் இனி கண்டினியூ பண்ணலைன்னு சொல்லிட்டாங்க, அந்த கேரக்டரை கொல்லுவதா, இல்ல வேற ஆளைப்போட்டு கண்டினியூ பண்ணுவதான்னு புரியலையே. டைரக்டர்கிட்ட என்ன சொல்லுவது என்று எரிச்சலுடன் யோசித்தான், தினம் ஒன்பது மணிக்கு வரும் சொர்க்கத்தில் ஒரு நாள் சீரியலின் ரைட்டர் ஆனந்த்..
 
ஆயிரம் பொற்காசு தரலைன்னாலும் பரவாயில்லை, ஆறுதல் பரிசாவது அனுப்பி வைக்கவும், அப்பறம் நான் தான் முதல் கதை இந்த சிறுகதை போட்டிக்கு அனுப்பி வைத்தேன் அதையும் நினைப்பில் வைத்துக்கொள்ளவும் நடுவர்களே :)))

Sunday, October 3, 2010

வெல்கம் பேக் விஜி :))

ஆடினவங்க காலும் பாடினவங்க வாயும் சும்மா இருக்காது மாதிரி , இந்த பதிவர்களையும் சேர்த்துக்கலாம் போல, மயில் பேரில நான் வச்சிருந்த ப்ளாக் காக்கா தூக்கிட்டு போயிடுச்சு, உங்களையெல்லாம் நிம்மதியா இருக்க விட முடியுமா? ஒரு இலக்கியவியாதியை தடுக்க முடியுமா? உங்க எல்லாரின் வேண்டுகோளின் படி  ( ஓவரா இருக்கோ) மறுபடியும் எழுதறேன்.. இதுல இன்னொரு ஸ்பெஷல் இருக்கு அது அடுத்த பதிவுல சொல்றேன்.. இப்ப எல்லாரும் ஜோரா ஒரு டைம் கை தட்டுங்க.. தேங்க்ஸ்..( நோ க்ரையிங்.. ஒன்லி ஆனந்தக்கண்ணீர் )