Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Sunday, May 12, 2013

இல்லாத அம்மாக்கு அன்னையர் தின வாழ்த்து

நல்லா பேசிட்டு இருப்போம்,திடீர்னு மூட்ஆகும், மனதை காயப்படுத்திய சம்பவங்கள் நினைவுக்கு வந்து மேலும் கிளரும். என்னை மூட் அவுட் பண்ணும் விஷயம் இரண்டு. முதல் விஷயம் என் அம்மா. என்னடாது அம்மாவ நினைத்தால் எப்படி கஷ்டமா இருக்கும்னு யோசிக்காதீங்க.

எல்லோருக்குமே அம்மா என்பது ஒரு அற்புதமான உறவு, அவர் கடைசி வரை நம்மோடு நல்லபடியா இருந்து நம் சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்ள எப்போதும் தயாரா இருக்கணும். இருப்பார், ஒரு அம்மாக்கு அதவிட பெரிய சந்தோசம் எதுவும் இருக்காது. ஆனால் அப்படி அம்மா எல்லோருக்கும் அமையாது, அமைந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் .

என் அம்மா ஒரு சின்ன கிராமத்தில் இருந்து வந்தவர், அவரோட அம்மா என் மாமா பிறந்த உடனே இறந்துட்டங்கலாம். சின்ன வயதில் இருந்து கஷ்டப்பட்டவர்கள். திருமணம் ஆகி திருப்பூர் வந்தபின் அவர் அப்பா, ( என் அப்பிச்சி) நெலம் எல்லாம் வித்து என் அம்மாவின் அருகிலே வந்து குடும்பத்துடன் செட்டில் ஆயிட்டார்.

என் கல்லூரி காலம் வரை ஒரு குடம் தண்ணீர் எடுக்க என் அம்மா என்னை விட்டதில்லை. இத்தனைக்கும் நாங்கள் நாலு பேர்( 2 தம்பி, ஒரு தங்கை), யாரையும் ஒரு வேலை செய்ய விடமாட்டார். நான் வேலைக்கு போகும் சமயம் கூட நான் வெளியில் இருந்து வண்டி ஸ்டார்ட் பண்ணி சத்தம் போட்டுடே இருப்பேன், லஞ்ச் பாக்சை தலைகீழ கவுத்து லேசா வெளியில் வந்த அப்படியே வெச்சுட்டு போய்டுவேன். ரொம்ப படுத்தி இருக்கேன். திடீர்னு ஒரு நாள் நான் ஊரில் இல்லாத சமயம் என் அம்மா தண்ணீர் தொட்டியில் கீழ விழுந்துட்டாங்க, மயக்கமும் வந்துடுச்சு, அந்த நேரம் யாரும் இல்லை, என் பாட்டி வந்து எடுத்து விட்டு ஹாஸ்பிடல் போனால் பக்கவாதம் என்று சொன்னார்கள்.

அன்று முதல் இன்னைக்கு வரை அவர்க்கு சரியாகவே இல்லை, கொஞ்சமா வீட்டுக்குள் நடப்பார், அவ்வளவு தான், இதுவரை பார்க்காத வைத்தியம் இல்லை, மருத்துவர்கள் சொல்வது, அவங்க fight பண்ணவே மாட்டேங்கறாங்க, மருந்தை விட மனசு சரியாகணும் , என் அம்மாக்கு முதல் முறை உடல் நிலை சரி இல்லாத போது என் வீட்டில் சில பிரச்னை இருந்தது. இப்ப அதெல்லாம் ஒன்றும் இல்லாவிட்டாலும் அவர் இன்னும் குணமாக வில்லை. எதுவுமே நினைவு இல்லை, எப்பவும் என்னை பார்த்தால் அழுவாங்க.

எனக்கு குழந்தை பிறந்த சமயம் தினமும் நான் என் அம்மாவை நினைத்து அழுவேன். இன்னமும் என்னைக்கு அவரை நினைக்கிறேனோ அந்த நாள் முழுதும் அவர் நினைவாகவே இருக்கும்,

அவரிடம் நான் பலமுறை கேட்டு பதில் பெறாத கேள்வி, ஏம்மா இப்படி இருக்கே, உனக்கு என்ன வேணும் என்கிட்ட சொல், நான் கண்டிப்பா பண்றேன். மறுபடியும் என் ஸ்கூல் காலேஜ் கால அம்மா எனக்கு வேணும், இதுவரை உன் மடியில் தூங்கினதா எனக்கு நினைவே இல்லை, ஒரு தடவை யாவது தூங்கனும், எவ்வளவு வருஷம் ஆச்சு, உன் கையால் சாப்பிட்டு, எல்லோரும் சொல்லராங்க நான் உன்னை மாதிரியே இருக்கேன், உன்னை மாதிரியே சமையல் பண்றேன், அம்மா உனக்கு ஒரு கடமையும் மீதி இல்லை, உன் உடம்பு சரியில்லாமல் போன சமயம் இருந்த மாதிரி இல்லை நம் குடும்பம், எனக்கு, நம்ம குட்டி மகேஷுக்கு கல்யாணம் ஆயிடுச்சு, நீதான் வரவே இல்லையே, நம்ம பழைய வீடு வித்துட்டாலும் புது வீடு கட்டி அதில்தான் நீ இருக்கே. உன் நிலையில் நான் இருந்து எல்லாமே முடிச்சுட்டேன். ப்ளீஸ் மா, ஒரு தடவை பழைய மாதிரி இரும்மா, உன்ன கட்டி பிடிச்சு அழக்கூட பயமா இருக்கு, உனக்கு எதாவது ஆயிடுமோன்னு, உன்னோட புடவையை என் கண் முன்னாடி வச்சுருக்கேன், எப்பவும் நீ என் கூட இரு. ஏன் என்னை பார்த்தல் அழுகறே? என்ன இருக்கு உன் மனசில், நாங்க எல்லோரும் நல்ல இருக்கோம், அம்மா நீ இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு, என்ன செஞ்சா நீ திரும்ப பழையபடி வருவே.

அம்மா உன்னை நான் என்னனு வாழ்த்தறது, நான் எதாவது தப்பு பண்ணிருந்தா என்னை மன்னிச்சுடு. ப்ளீஸ்.

எவ்வளவு நாள் உன் போட்டோ , புடவையும் வைத்து உன் வாசம் பிடிப்பது, அம்மா ஒரு தரம் என்னை பார்த்து சிரி. ப்ளீஸ்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்


----------

நாலு வருசம் முன்னாடி எழுதினது. இதில் எதுமே நடக்காமலே ஒன்றரை வருடங்களுக்கு முன் இறந்து போன அம்மாக்காக

Tuesday, February 14, 2012

அம்மா

பிப்ரவரி மாதம் என் வாழ்க்கையில் மிக முக்கியமானது. வர்ஷா பிறந்து நான் ஒரு அம்மான்னு ஆனதும் என் அம்மா இந்த உலகைவிட்டு போனதும் ஒரு பிப்ரவரி மாதம்.  இன்றோடு ஒரு வருசம்.. முழுசாக ஒரு வருசம். எப்படி ஓடிப்போயிடுச்சு. ஒரு வாரமாகவே போன வருசம் இந்த நேரம், இந்த நாள்னு ஒவ்வொரு நாளும் எதோ ஒரு வகையில் தடுமாற்றம். பிப்ரவரி 14. ஒரு வருசம்மா.. நீ எங்களை விட்டு போயி ஒரு வருசம் ஆயிடுச்சு. உடம்பு சரியில்லைன்னு ஒரு வாரம் ஹாஸ்பிடலில் வீட்டுக்கு போனதும் கண்ணை திறந்து என்னை பார்த்தபடி போன உன் உயிர்..  அம்மா.

அம்மாவும் அப்பாவும் அடுத்தத்து தவறுவது ரொம்ப கொடுமைம்மா. எதாவது தோனும் போது,. ஒரு சந்தோசமோ துக்கமோ சட்டுன்னு சொல்ல ஒரு ஆள் இல்லையே. என்னதான் விட்டேத்தியா இருந்தாலும் நமக்குன்னு அம்மா அப்பா இல்லையேன்னு ரொம்ப தோனுதும்மா. நீயும் போன இந்த ஒரு வருசத்தில் எவ்வளவோ நடந்திடுச்சு. உன் மரணம் என்னை ரொம்ப மாத்திடுச்சும்மா. நீ இப்படி டக்குன்னு போவேன்னு நான் எதிர்பார்க்கலை.

ரொம்ப நாள் கழிச்சு இதை எழுதும் போது என்னவோ நினைப்பு வந்து வாய்விட்டு அழனும் போல இருக்கு. அம்மா. எப்பவாவது எங்களை பார்க்கனும்னு உனக்கு தோனிச்சா?  மின்மயானத்தில் இருந்து வரும் போது எப்படி இருந்துச்சு தெரியுமா? ஒரு மண் பானையில் இதான் உன் அம்மா அப்பான்னு வாங்கி ஆத்தில் கரைக்கும் போது உங்களை வைத்து கட்டின கனவுகளும் கரைஞ்சுடுச்சு.  ரொம்ப நாளா உன் புடவையை வச்சு தூங்கிட்டு இருப்பேன். இனி ஆயுசுக்கும் அப்படித்தான்னு நினைச்சு தாங்க முடியலைம்மா. எவ்வளவோ நாள் எத்தனையோ கஷ்டப்பட்டிருப்போம், ஆனாலும் உங்களோடு இருந்த அந்த சந்தோசமான நாட்கள் இனிமேல் வரவே வராதும்மா. அப்பா போனதும் பாதி போயிடுச்சு, நீயும் போனதும் உடம்பில் மனசில் இருந்து என்னமோ போயிடுச்சும்மா.

ரெண்டு பேரும் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இப்படி போயிட்டீங்க. எங்களுக்குன்னு யாரும் இல்லன்னு ஏன் தோனலை? ரோட்டில் யாராவது உங்க வயசில் போனாலே அவங்களிடம் உங்க ஜாடையை தேடுகிறேன். இந்த மாதிரிதான் அப்பா இருப்பாரு, அம்மா நடப்பாங்க, முடியலைம்மா.
போனில் உன் நம்பரைபார்த்தாலே கஷ்டமா இருக்குப்பா.ஊரு உலகத்தில் சின்ன வயசில் அம்மா அப்பாவை இழந்தவங்க எவ்வளவோ பேரு இருப்பாங்க. ஏன் உனக்கு கூட உன் அம்மா சின்ன வயசிலேயே இறந்துட்டாங்கல்லமா, ஆனாலும் அம்மா அப்பா உறவை விட வேறு எதுவும் தனியா சிறப்பானதா இல்லை.


அம்மா அப்பா எங்களோடவே இருங்க, மறந்துடாதீங்க.. எங்களுக்கு யாரும் இல்லைம்மா.
..

Wednesday, June 15, 2011

தேவதைகள் கலைத்த வீடு


கிட்டத்தட்ட 60 நாட்கள், காலைச்சுற்றும் பூனைக்குட்டி மாதிரி வீடு முழுதும் வியாபித்த என் தேவதைகள், படுக்கை அறைக்கதவு காலை 10 மணிக்கு மேல் தான் திறக்கும், அதற்குள் அதிலிருந்து வரும் சந்தோசக்குரலில் தெரியும் குறும்பு அந்த நாளைக்கான அலும்புக்கான அஸ்திவாரம்.

ராம நாமம் ஜெபித்தால் புண்ணியமாம்? அதைவிட அதிக முறை அதைவிட அதிக அன்புடன், காதலுடன், கோவத்துடன், பாசத்துடன் உங்களை கூப்பிட்டிருக்கிறேன், என்ன கத்தினாலும் ஒரு சின்ன எதிர்வினை கூட உங்ககிட்ட இருந்து வராது.

என்னைமட்டுமல்ல சுற்றி இருக்கும் நண்பர்களையும் சந்தோசமாகவும், உயிர்ப்போடும் வைத்திருக்கும் வித்தை எங்கிருந்து வந்தது? தினம் பப்புவை தேடி வரும் நண்பர்களுக்கு அவள் அளிக்கும் பதிலிருந்தே அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள்ன்னு தெரிந்துவிடும். 60 நாட்கள் கொண்டாட்டமுடன் கழிந்த இரவுகள், கடைசியாக நேற்று இரவு போட்ட ஆட்டமும், தினம் பாடிய பாடல்களும், உங்களிடம் வாங்கின எண்ணற்ற பல்புக்களும் தான் இனிவரும் நாளையும் நகர்த்த உதவும்.

எதற்கு இன்று விடியவேண்டும்? இதோ திரும்பி வந்து பார்க்கும் போது கலைந்து கிடக்கும் வீடு. காலையில் உங்களை ஆசிர்வதிப்பது போல் தூறிய மழை, அதோடு பப்புவின் பெரிய வகுப்பு போகும் (2 வகுப்பு) முன்னேற்பாடுகள், சொத்து பிரிப்பை விட ஜாக்ரதையாக பிரிக்கப்பட்ட பென்சில்கள், க்ரேயான்கள். ஒவ்வொன்றும் நீங்கள் இப்போது இங்கில்லை என்று குறைகூறுகிறது..

கண்ணுகளா, பள்ளி என்பது ஒவ்வொரு நிமிடமும் சந்தோசமுடன் நினைவு கொள்ள வேண்டியது. எப்போதும் போல் இனியும் படின்னு படுத்த மாட்டேன். முதல் மார்க் எடுத்து உங்க அறிவை நீங்க நிருபிக்க வேண்டியதில்லை, சந்தோசமா அனுபவியுங்கள், பள்ளிதரும் அனுபவம், நண்பர்கள், ஒரு நாள் நோட் கொண்டு போகாட்டி மிஸ் வந்து திட்டுவாங்களோ என்ற பய உணர்வு, பிடிச்ச லஞ்ச் கொண்டு போய் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ண, பிறந்தநாள் நண்பர்களின் தனித்தருணங்களில் உடனிருங்கள், இது கடந்து போனால் திரும்ப வராது. வீடு, வாழ்வியல் துன்பங்கள் எல்லாருக்கும் காத்திருக்கும், கடந்து செல்லவேண்டியும் இருக்கும், அதுவரை பள்ளியை அனுபவியுங்கள். அதோடு முடிஞ்சா கொஞ்சம் படிங்க, ஒரு போதும் ட்யுசன் போ என்றோ, ஏன் முதல் மதிப்பெண் வரலைன்னோ கண்டிப்பா நான் கேட்க மாட்டேன்.
என்ன பிடிக்குதோ அதை செய்யுங்கள், அதில் மேலும் சிறப்பாக வர பெற்றோரா என்ன கடமையோ அதை நாங்கள் செய்கிறோம். உங்கள் சந்தோசம் முக்கியம்.

அன்பான குழந்தைகளை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி.. சிலநேரம் அடுத்தடுத்த சென்ற வருடம் இறந்து போன என் பெற்றோரை நினைத்து மூட் அவுட் ஆகும் போது வர்ஷா வந்து மெதுவா அணைத்துக் கொள்ளுவாள், பப்புவோ இப்ப எதுக்கு சோக சீன்ன்னு கேட்பாள்,

இரண்டையும் அனுபவிக்கும் அம்மாவாக ஆனதற்கு நன்றி கடவுளே.என் அம்மாவாக, தோழிகளாக, செல்ல எதிரிகளாக, எப்போதும் கலாய்க்கும் என் இனிய ராட்சசிகளுக்கு இந்தப்பாட்டு.

உங்களுக்கு பிடிச்ச பாட்டு உங்களுக்காக மட்டும் செல்லங்களா..

Monday, March 14, 2011

அம்மா. அப்பா காக்கா......

இன்றோடு ஒரு மாதம், புதை சேறில் மூழ்கி மூச்சு திணறி போராடி வெளி வந்த காலம், போன மாதம் இதே 14 ஆம் தேதி, 5 நாட்களாக கோமாவில் இருந்த என் அம்மா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட 15வது நிமிடம் கண்ணைத்திறந்து என்னைப்பார்த்ததும், நான் பார்த்துக்கொண்டே இருக்கும் போதே அவர் உயிர் பிரிந்ததும்  நிகழ்ந்த நாள்.என் அப்பா இறந்து முழுதாக ஒரு வருடம் 15 நாட்களே ஆன நிலையில் அம்மாவும் கிளம்பிட்டாங்க. திடீர்ன்னு ஒரு வட்டவெளியில் பாதுகாப்பு இல்லாமல் நிற்பது போல ஒரு உணர்வு..அம்மா....

அம்மா...உனக்கும் எனக்குமான உறவு ரொம்ப அன்னியோன்னியமா இருந்ததில்லை. 6 குழந்தைகளை பெற்று வளர்க்கும் ஆயாசத்தில் குறிப்பிடும் படி நீ  என்னை கவனித்ததாக நினைவு இல்லை.  ஒரு வயசில் கொண்டு போய் அப்பிச்சி வீட்டில் விட்டுட்டே, நான் திரும்பி வரும்போது எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா பிறந்து சாமிகிட்ட போயிட்டதும், புதுசா ஒரு தம்பி பிறந்திருப்பதும் தெரிஞ்சுது. ஆனா உனக்கு தெரிஞ்சிருக்கும், அந்த வீட்டு வாசப்படியில் உக்கார்ந்து நான் அம்மாவை நினைச்சு அழுதது இன்னும் புகையாக நினைவிருக்கிறது.

அம்மா...உன்னோடு வந்த பிறகும் ஒரு நாள்கூட உன் பக்கத்தில் தூங்கினதில்லம்மா, எனக்கு பிறகு 2 தம்பி, 1 தங்கைன்னு எப்பவும் உன்னை பங்குபோட்டுக்க ரெடியா இருப்பாங்க. ஒவ்வொரு வருச லீவுக்கும் நான் போகவே மாட்டேன்னு அழுவேன், நீயும் அப்பிச்சியும் பிடிவாதமா ஊருக்கு கொண்டு போய் விடுவீங்க, எப்ப திரும்பி வந்து கூட்டிட்டு போவேன்னு தினம் ராத்திரி அழுதுட்டேதான் இருப்பேன்.

அம்மா...கொஞ்சம் பெரியவளானதும் அதே காம்பவுண்டில் இருந்த விதவை தூரத்து சொந்தக்கரம்மாக்கு துணைக்கு நிரந்தர துணையாக ஆயிட்டேன். உன்கூட ஒரு நாள் கூட பக்கத்தில் உக்கார்ந்தோ உன் கையில் சாப்பிட்டோ நினைவே இல்லம்மா. உன்னால தலை பின்ன முடியாதுன்னு நான் 10வரைக்கும் முடியே வளர்த்தலை. நான் உன்னை எவ்வளவு எதிர்பார்த்தனோ அவ்வளவு தூரத்தில் இருந்தேன்.

அம்மா, நீ ரொம்ப பாவம், படிப்பறிவு இல்லாத, அப்பாதான் உலகம்னு நம்பி இருந்த லட்சக்கணக்கான அம்மாவில் நீயும் ஒருத்தி, ஒரு நாள் கூட என்னைப்படின்னு சொன்னதில்லை, திட்டினதில்லை, அடிச்சதில்லை, ஒரு முத்தம்கூட கொடுத்ததில்லை. ஆனா நீ கடைசி படுக்கையில் இருந்த போது நான் உனக்கு கொடுத்தேன், மகேஷும், தேவாவும் ரமேசும் அழுதுட்டே இருந்தாங்க, நீ போயிடுவேன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சுது, நாங்க உன்கிட்ட பேசினது உனக்கு தெரிஞ்சுதா?

அம்மா...எனக்கு குழந்தைகள் பிறந்தபோதும் நீ என் அருகில் இல்லை, உன்னை ரொம்ப மிஸ் பண்ணினது அப்பதான். உனக்கு அப்பாமேல எவ்வளவு நம்பிக்கை, நாங்க கிண்டல் பண்ணினமாதிரியே உன்னால அப்பா இல்லாமல் இருக்க முடியலையா? உன் கண்ணை தானம் கொடுததது உனக்கு தெரிஞ்சிருந்தா நீ என்ன சொல்லிருப்பேன்னு யோசிக்கறேன்.

அம்மா.. நீ என்னை பார்த்துட்டே கண்ணை மூடினையே அனத நிமிசம் எனக்கு என்ன தோனிச்சு தெரியுமா? நல்லதும்மா நீ போனதே நல்லது, இப்படி கஷ்டப்பட்டு படுக்கையில் இருப்பதற்கு போவதே நல்லதுன்னு தோனிச்சும்மா. நீ இல்லாத இந்த 30 நாட்களில் வாழ்க்கையின் இழப்பதற்கு ஒன்னுமில்லைன்னு புரிஞ்சுது. நீ போன 5வது நாள் இன்னொரு மரணமும் நம்ம வீட்டில் நடந்துடுச்சு. யாருக்காகவோ வாங்கின வலி, அர்த்தமற்று யார் மேலோ கொண்ட அன்பு, கோபம், பொறாமை, துக்கம், ஏமாற்றம் எல்லாமே அந்த நேர உணர்வுகள்.

அம்மா.. நீ சொன்னது மாதிரி நான் கொஞ்சம் கல்லுதான்மா, அப்பா இறந்தபோது இருந்த திடுக்கிடல் நீ போனபோது இல்லம்மா, ஒருவேளை உன் முடிவு ஏற்கனவே தெரிந்தனாலயால் இருக்கும். இப்ப எங்க இருக்கே? இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாமில்ல? உனக்கு புரியுதோ இல்லையோ உன்கிட்ட எல்லாம் சொல்லனும்னு தோனும், எப்பவும் போல பேசாம இருந்திடுவேன், நேத்து திருப்பூர் போயிட்டு வரும்போது இனி இங்க நமக்கு யார் இருக்காங்கன்னு தோனுச்சு.

அப்பா, இப்பவாவது அம்மாவை நல்லா பார்த்துக்க. தினம் காலையில் வரும் காக்காக்கள் தான் இனி நீங்க நினைச்சுக்கறேன். எப்பவும் எங்க கூட இருங்க. ரெண்டு பேருமே இல்லைன்னு நினைக்கும்போது ஒரு துக்கமான, ஏமாற்ற, ஒரு குறை இருப்பது போன்ற  உணர்வு வருவதை தவிர்க்கமுடியலை.. இனிமேல் சும்மா கூப்பிடக்கூட நீங்க ரெண்டு பேரும் இல்லையே. இதிலிருந்து நான் சீக்கிரம் வந்துடுவேன், அவங்களையும் வரவைங்க.

அம்மா, அப்பா இனி போட்டாவிலும், வீட்டை சுத்தும் காக்கா உருவிலும்..