Friday, August 8, 2014

நல்லதங்காள் கதை




நல்லதங்காள் கதை

அர்ச்சுனாபுரம் ஒரு கிராமம். இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. வத்திராயிருப்பு அருகில் உள்ளது. இந்தப் பகுதியில் மாந்தோப்பு, தென்னந்தோப்பு ஏராளம். வாழைமரம், பாக்குமரம், தேக்குமரம் ஏராளம். வானம் பொய்க்காத வளமான பூமி.

அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் பிறந்த ஊர். நல்லதங்காளின் தந்தை ராமலிங்க ராஜா. தாயார் இந்திராணி. அண்ணன் நல்லதம்பி.

நல்லதங்காள் சின்னப் பெண்ணாக இருந்தபோது தாயும் தந்தையும் இறந்துவிட்டார்கள். நல்லதம்பிதான் தங்கச்சியை செல்லமாக வளர்த்தான். மானாமதுரை ராஜா காசிராஜனுக்கு நல்லதங்காளைக் கட்டிக்கொடுத்தான். கல்யாணம் ஆகும்போது நல்லதங்காளுக்கு ஏழு வயது. காசிராஜன் நல்லதங்காளுக்கு நிறைய பரிசுப் பணம் கொடுத்தார். சித்திரை மாதம் கல்யாணம் நடந்தது. செல்வக் கல்யாணம்.

பனைமரம் பிளந்து பந்தக்கால் நட்டார்கள்.
தென்னைமரம் பிளந்து தெருவெல்லாம் பந்தல் இட்டார்கள்.
நல்ல தம்பி தங்கச்சிக்கு நிறைய சீதனங்கள் கொடுத்தான்.
வேலி நிறைய வெள்ளாடுகள்
பட்டி நிறைய பால்மாடுகள்
மோர் கடைய முக்காலி பொன்னால்
அளக்குற நாழி பொன்னால்
மரக்கால் பொன்னால்.

இன்னமும் சீதனங்கள் நிறைய உண்டு. சொல்லிக்கொண்டே போகலாம். கல்யாணம் முடிந்தது. விருந்துச் சாப்பாடு முடிந்தது.

நல்லதங்காளும் காசிராஜனும் மானாமதுரைக்குப் புறப்பட்டார்கள். நல்லதங்காளுக்கு அண்ணனைப் பிரிய மனம் இல்லை.

அழுதுபுரண்டு அழுதாள்,
ஆபரணம் அற்று விழ,
முட்டி அழுதாள்.
முத்து மணி அற்று விழ.

நல்லதம்பி தங்கச்சிக்கு ஆறுதல் சொன்னான். ஒருவழியாக நல்லதங்காள் மானாமதுரைக்குப் புறப்பட்டுப் போனாள்.

நல்லதம்பிக்கு ஒரு மனைவி உண்டு. அவள் பெயர் மூளி அலங்காரி. அவள் கொடுமைக்காரி. நல்லதங்காள் போன பிறகு நல்லதங்காளைப் பார்க்க நல்லதம்பி ஒரு தடவைகூட மானாமதுரை போகவில்லையாம். அதற்கு மூளி அலங்காரிதான் காரணமாம்.

நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. பிள்ளை குட்டிகளுடன் அவள் சந்தோஷமாக வாழ்ந்தாள். இதெல்லாம் கொஞ்ச காலம்தான்.

மானாமதுரையில் மழை இல்லை. 12 வருடமாக நல்ல மழை இல்லை. வயல்களில் விளைச்சல் இல்லை. மக்கள் பசியால் வாடினார்கள். பட்டினியால் தவித்தார்கள்.

பஞ்சமோ பஞ்சம்.
மரக்கால் உருண்ட பஞ்சம்
மன்னவரைத் தோற்ற பஞ்சம்
நாழி உருண்ட பஞ்சம்
நாயகரைத் தோற்ற பஞ்சம்
தாலி பறிகொடுத்து
கணவரைப் பறிகொடுத்து
கைக்குழந்தை விற்ற பஞ்சம்

இப்படி மக்கள் பஞ்சத்தில் செத்தார்கள். நல்லதங்காள் வீட்டையும் பஞ்சம் விடவில்லை. தாலி தவிர மற்றது எல்லாம் நல்லதங்காள் விற்றாள். குத்தும் உலக்கை, கூடை, முறம்கூட விற்றுவிட்டாள். எல்லாம் விற்றும் பஞ்சம் தீரவில்லை. குழந்தைகள் பசியால் துடித்தன.

நல்லதங்காள் யோசித்து யோசித்துப் பார்த்தாள். இன்னும் கொஞ்ச நாள் நீடித்தால் பிள்ளைகள் பசியால் செத்துப்போகும் என்று பயந்தாள். ஒரு முடிவு எடுத்தாள். அண்ணன் வீட்டுக்குப் பிள்ளைகளுடன் கொஞ்ச நாள் போய் இருக்கலாம் என்று முடிவு எடுத்தாள்.

காசிராஜனிடம் தன் முடிவைச் சொன்னாள். காசிராஜன் நல்லதங்காள் சொன்ன முடிவை ஒப்புக்கொள்ளவில்லை.

“அடி பெண்ணே! வாழ்ந்து கெட்டுப்போனால் ஒரு வகையிலும் சேர்க்கமாட்டார்கள். கெட்டு நொந்துபோனால் கிளையிலும் சேர்க்க மாட்டார்கள். கை கொட்டிச் சிரிப்பார்கள். நீ போக வேண்டாம். கஷ்டம் வருவது சகஜம். நாம் பிடித்து நிற்க வேண்டும். சாணி எடுத்தாவது தப்பிப் பிழைப்போமடி! வேலி விறகொடித்து விற்றுப் பிழைப்போமடி’’ என்று காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளிடம் பலவாறு சொன்னாள்.

காசிராஜன் சொன்னதை நல்லதங்காள் கேட்கவில்லை. இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்று நினைத்தாள்.

சந்தனம் தொட்ட கையால் - நான்
சாணி தொட காலமோ!
குங்குமம் எடுக்கும் கையால் - நான்
கூலி வேலை செய்ய காலமோ
என்று சொல்லி நல்லதங்காள் அழுதாள்.

இதற்குமேல் நல்லதங்காளைச் சமாதானப்படுத்த முடியாது என்று காசிராஜன் தெரிந்துகொண்டான். “சரி போய் வா. பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்’’ என்று சொல்லி வழியனுப்பி வைத்தான்.

நல்லதங்காள் பிள்ளைகளைப் பாசத்தோடு அழைத்தாள். “வாருங்கள் பிள்ளைகளா! உங்கள் மாமன் வீட்டுக்குப் போவோம். அங்கே தின்பதற்கு தேங்காய் கிடைக்கும், மாங்காய் கிடைக்கும், ஓடி விளையாட மான் கிடைக்கும்’’ என்று சொல்லி அழைத்தாள். பிள்ளைகள் ஆசை ஆசையாகப் புறப்பட்டன.

நல்லதங்காளும் பிள்ளைகளும் மானாமதுரையில் இருந்து அர்சசுனாபுரத்துக்குப் புறப்பட்டு வந்தார்கள். காடு மலையெல்லாம் தாண்டி வந்தார்கள். வனாந்திரங்களைக் கடந்து வந்தார்கள்.

அர்ச்சுனாபுரம் பக்கம் வந்துவிட்டார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு நடக்க முடியவில்லை. பசி பசி என்று கத்தினார்கள். அழுதார்கள்.

அந்த நேரம் பார்த்து நல்லதம்பி அந்தப் பக்கம் வந்தான். படை பரிவாரங்களோடு வந்தான். வேட்டையாட வந்தான். வந்த இடத்தில் நல்லதங்காளையும் பிள்ளைகளையும் பார்த்தான்.

அந்தக் கோலத்தில் அவர்களைப் பார்த்ததும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

குதிரை அரிதாச்சோ
குடி இருந்த சீமையிலே!
பல்லக்குதான் பஞ்சமோ
பத்தினியே உனக்கு!
கால்நடையாய் வர
காரணம் ஏன் தங்கச்சி?

என்று அழுது புலம்பினான். நல்லதங்காள் தன் வீட்டு நிலைமைகளைச் சொன்னான். நல்லதம்பி அவளைத் தேற்றினான். “சரி தங்கச்சி நம் வீட்டுக்குப் போ. தெற்குமூலையில் தேங்காய் குவிந்திருக்கும் வடக்குமூலையில் மாங்காய் குவிந்திருக்கும். காட்டு யானை வாசலில் கட்டி இருக்கும் காராம் பசுவும் உண்டு. போ தங்கச்சி போ! போய்ப் பிள்ளைகளுடன் பசியாறி இரு’’ என்று நல்லதம்பி சொன்னான்.

நல்லதங்காள் அண்ணன் இல்லாத வீட்டுக்குப் போக தயங்கினாள். அண்ணா! நீயும் கூட வா! என்று அண்ணனைக் கூப்பிட்டாள்.

“அம்மா நல்லதங்காள் நீ முதலில் போ. உன் அண்ணி மூளி அலங்காளி உன்னையும் பிள்ளைகளையும் நன்றாக கவனித்துக்கொள்வாள். நான் பின்னால் வருகிறேன். சீக்கிரன் வந்துவிடுவேன். உன் பிள்ளைகளுக்கு விளையாட புள்ளிமான் கொண்டுவருவேன்’’ என்று சொல்லி சமாதானப்படுத்தினான்.

நல்லதங்காள் அண்ணன் வீட்டுக்கு அரை மனதுடன் புறப்பட்டாள். அப்போது மூளி அலங்காரி வீட்டு மாடியில் இருந்தாள்.

நல்லதங்காளும் பிள்ளைகளும் பசியோடு தன் வீடு வருவதைப் பார்த்து விட்டாள். வேகவேகமாக இறங்கி வந்தாள். கதவுகளை அடைக்கச் சொன்னாள். இறுக்கிக் கதவை அடைத்தாள். ஈர மண் போட்டு அடைத்தாள். சோற்றுப் பானையை ஒளித்து வைத்தாள். பழந்துணி ஒன்றை உடுத்திக்கொண்டான். முகத்தில் பத்துப் போட்டு மூலையில் படுத்துக்கொண்டாள்.

நல்லதங்காள் வந்தாள். அண்ணி அண்ணி என்று ஆசையாகக் கூப்பிட்டு கதவைத் தட்டினாள். கதவு திறக்கவில்லை.

கால் கடுக்குது அண்ணி கதவைத் திற, தண்ணீர் தண்ணீர் என்று தவிக்குறாள் பாலகர். அன்னம் அன்னம் என்று சொல்லி அலையுறார் பாலகர். புத்திரர் பசியாற கதவைத் திறவாயோ?

என்று அழுது அழுது கூப்பிட்டாள். அதற்கும் கதவு திறக்கவில்லை. நல்லதங்காளுக்கு கோபம் வந்தது.

நான் பத்தினியானால் கதவு படீர் என்று திறக்கட்டும்

என்று கட்டளையிட்டாள். கதவுகள் திறந்தன. பிள்ளைகள் உள்ளே ஓடினார்கள். சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஒரு பண்டமும் இல்லை. மூளி அலங்காரி படுத்திருந்த இடத்தில் தேங்காயும், மாங்காயும் குவிந்து கிடந்தன.

ஓடிச்சென்று ஒரு பிள்ளை தேங்காயை எடுத்தது. தாவிச்சென்று ஒரு பிள்ளை மாங்காயைக் கடித்தது. மூளி அலங்காரி விருட்டென்று எழுந்தாள். மாங்காயைப் பறித்துப் போட்டாள். ஆயிரம் அழுகல் மாங்காயில் ஒன்று எடுத்துக் கொடுத்தாள். தேங்காயைப் பறித்துப் போட்டாள். ஆயிரம் தேங்காயில் அழுகல் தேங்காய் ஒன்று எடுத்துக் கொடுத்தாள்.

பார்த்தாள் நல்லதங்காள். மனம் பதறினாள். அண்ணி என் மக்களின் பசியை ஆத்துங்க என்று கெஞ்சினாள்.
மூளி அலங்காரி ஏழு வருசம் மக்கிப்போன கேப்பையைக் கொடுத்தாள். திரிப்பதற்கு உடைந்த திருகையைக் கொடுத்தாள். உலை வைக்க ஓட்டைப் பானையைக் கொடுத்தாள். நல்லதங்காள் பொறுமையாகக் கேப்பையைக் திருகையில் போட்டு அரைத்தாள்.

எப்படியே கஷ்டப்பட்டு கஞ்சி காய்ச்சினாள். ஈரமட்டைகளை வைத்து எரித்தாள். கூழும் கொதிக்கணும், குழந்தை பசியாறணும் என்று தெய்வங்களை வேண்டிக்கொண்டாள்.

ஒருவழியாகக் கஞ்சி கொதித்தது. ஆனால் பிள்ளைகள் கஞ்சியைக் குடிக்கப் போகும் நேரத்தில் மூளி அலங்காரி வந்தாள். பானையைத் தட்டிவிட்டாள். பானை உடைந்தது. கூழ் வழிந்து ஓடியது. பிள்ளைகள் அதை வழித்துக் குடித்தார்கள்.

நல்லதங்காளுக்கு இந்தக் காட்சியைப் பார்க்க சகிக்கவில்லை. இனியும் அவமானப்பட வேண்டாம். செத்துவிடலாம் என்று முடிவு எடுத்தாள்.

பிள்ளைகளைக் கூப்பிட்டு தெருவில் இறங்கினாள். வீதியில் நடந்தாள். அவளைப் பார்த்தவர்கள் பரிதாபப்பட்டார்கள். சாப்பிடுவதற்கு தங்கள் வீட்டுக்கு அழைத்தார்கள்.

பச்சரிசி குத்தித் தாரோம்
பாலும் கலந்து தாரோம்!
பாலரும் நீயும்
பசியாறிப் போங்க!

என்று கூப்பிட்டார்கள். நல்லதங்காள் மறுத்துவிட்டாள்.

அரச வம்சம் நாங்கள்
அண்டை வீட்டில்
தண்ணீர் குடிக்க மாட்டோம்.
என்று சொல்லிவிட்டாள்.

காட்டு வழியே பிள்ளைகளைக் கூட்டிப் போனாள். பாழும் கிணறு தேடிப் போனாள். அண்ணன் வந்தால் அடையாளம் தெரியட்டும் என்று ஆவாரம் செடிகளை ஒடித்துப் போட்டுக்கொண்டே போனாள்.

நல்லதங்காளும் பிள்ளைகளும் நெடுந்தூரம் வந்து விட்டார்கள். ஒரு கிணறும் காணோம். அப்போது சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களைப் பார்த்து நல்லதங்காள் கேட்டாள்.

“தண்ணீர் தாகமப்பா. தண்ணீர் குடிக்கணும். பாழும் கிணறு இருந்தால் பார்த்துச் சொல்லுமப்பா!’’ என்று கேட்டாள். ஒரு சிறுவன் ஓடிச்சென்று ஆழமுள்ள பாழும் கிணற்றைக் காட்டினான்.

நல்லதங்காள் பிள்ளைகளோடு அங்கு போனாள். கணவன் கண்ணில் படுமாறு தாலியைக் கழற்றி கிணற்றுப் படியில் வைத்தாள். அண்ணன் கண்ணில் படுமாறு பாலூட்டும் சங்கை கிணற்று மேட்டில் வைத்தாள். அண்ணி கொடுத்த அழுகல் தேங்காயை ஓர் ஓரத்தில் வைத்தாள்.

ஒவ்வொரு பிள்ளையாக கிணற்றில் தூக்கிப் போட்டாள். ஒவ்வொரு பிள்ளையும் பயந்து பயந்து அம்மாவின் காலைக் கட்டிக்கொண்டன. காலைக் கட்டிய பிள்ளையை பிடித்து இழுத்து கிணற்றில் போட்டாள். இப்படி ஆறு பிள்ளைகளைப் போட்டுவிட்டாள்.

மூத்த பிள்ளை நல்லதங்காளுக்குப் பிடிபடாமல் ஓடினான். என்னை மட்டும் கொல்லாதே என்னைப் பெற்ற மாதாவே! என்று கெஞ்சினான்.

தப்பிப் பிழைத்து அம்மா - நான்
தகப்பன் பேர் சொல்லுவேன்
ஓடிப் பிழைத்து அம்மா - நான்
உனது பேர் சொல்லுவேன்

என்று சொல்லி தப்பித்து ஓடினான். ஓடிய பிள்ளையை நல்லதங்காள் ஆட்டு இடையர்களை வைத்துப் பிடிக்கச் சொன்னாள். இடையர்களுக்கு விசயம் தெரியாது. தாய்க்கு அடங்காத தறுதலைப் பிள்ளை என்று நினைத்து அவனைப் பிடித்துக்கொண்டுவந்து நல்லதங்காளிடம் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

நல்லதங்காள் கதறி அழுத மூத்த மகனையும் பிடித்து கிணற்றுக்குள் போட்டாள். பிறகு தானும் குதித்தாள். நல்லதங்காளும், ஏழு பிள்ளைகளும் இறந்து மிதந்தார்கள். நல்லதங்காளுக்கு 16 அடிக் கூந்தல். அவள் கூந்தல் கிணறு பூராவும் பிரிந்து பரந்து கிடந்தது. பிள்ளைகளும் தெரியவில்லை. கிணற்றுத் தண்ணீரும் தெரியவில்லை. நல்லதங்காளின் கூந்தல் மட்டுமே கிணறு பூராவும் தெரிந்தது.

நல்லதங்காள் குடும்பம் இப்படி பட்டினியால் செத்து முடிந்தது.

நல்லதங்காள் புறப்பட்டு வந்த சில நாட்களிலேயே மானாமதுரையில் நல்ல மழை பெய்தது. பயிர்கள் திகிடுமுகடாக விளைந்தன. நாடு செழிப்பு அடைந்தது. காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளையும் தன் பிள்ளைகளையும் அழைப்பதற்கு புறப்பட்டு வந்தான்.

நல்லதம்பி வேட்டை முடித்து வீட்டுக்கு வந்தான். தங்கச்சியைக் காணவில்லை. தங்கச்சி பிள்ளைகளையும் காணவில்லை. பதறிப்போனான்.

மூளி அலங்காரியைப் பார்த்து என் தங்கச்சியையும், தங்கச்சி பிள்ளைகளையும் எங்கே என்று கேட்டாள். மூளி கூசாமல் பொய் சொன்னாள்.

“சீரகச் சம்பா சோறு ஆக்கிப் போட்டேன்
பத்து வகைக் காய்கறி வைத்தேன்.
சாப்பிட்டுப் போனாங்க’’
என்று பொய் சொன்னாள்.

நல்லதம்பி இதை நம்பவில்லை. பக்கத்து வீடுகளில் போய்க் கேட்டான். அவர்கள் நடந்து நடந்தபடி சொன்னார்கள். பிள்ளைகளைப் பட்டினி போட்டதைச் சொன்னார்கள். அவ்வளவுதான் நல்லதம்பிக்கு மீசை துடித்தது. கண் சிவந்தது. பக்கச் சதை எல்லாம் பம்பரம் போல் ஆடியது. தங்கையைத் தேடி காட்டுவழியே போனான். பதறிப் பதறிப் போனான். நல்லதங்காள் ஒடித்துப் போட்ட ஆவாரஞ் செடிகள் வழிகாட்டின. நல்லதம்பி பாழும் கிணற்றின் பக்கம் வந்தான். உள்ளே எட்டிப் பார்த்தான். அய்யோ தங்கையும் பிள்ளைகளும் செத்து மிதந்தார்கள். நல்லதம்பி ஓங்காரமிட்டு அழுதான்.

தங்கச்சி தங்கச்சி என்று தரையில் புரண்டு அழுதான். அம்மா அம்மா என்று அடித்துப் புரண்டு அழுதான். இப்படி அவன் அழுது புரண்டு கொண்டு இருந்தபோது காசிராஜனும் அங்கே வந்து விட்டான். பிள்ளைகளையும் மனைவியையும் பிணமாகப் பார்த்தான். மனைவியைக் கட்டிக் கொண்டு கதறி அழுதான்.

நல்லதங்காளையும் பிள்ளைகளையும் வெளியே எடுத்து தகனம் செய்தார்கள். நல்லதம்பி தன் மனைவி மூளி அலங்காரியைப் பழிவாங்க நினைத்தான். அவளை மட்டுமல்ல. அவள் குலத்தைப் பழிவாங்க ஏற்பாடு செய்தான். தன் மகனுக்கு உடனடியாக திருமணம் ஏற்பாடு செய்தான். மூளி அலங்காரியின் உறவினர்கள் உட்காரும் இடத்தில் இடிப்பந்தல் போட்டான். இடிப்பந்தலைத் தட்டிவிட்டு எல்லோரையும் கொன்றான். மூளி அலங்காரியையும் அரிவாளால் வெட்டிக் கொன்றான்.

இத்துடன் கதை முடியவில்லை. நல்லதம்பி ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான். அதேபோல் காசிராஜனும் ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான். இவ்வாறு இரண்டு குடும்பங்களும் பூண்டோடு அழிந்தன. இதற்கு அடிப்படையான காரணம் என்ன?

வறுமை ஒரு பக்கம். மூளி அலங்காரியின் கொடுமை மறுபக்கம். வறுமை கொடியது. பசி கொடியது. பட்டினி கொடியது. அதைவிடக் கொடியது மனிதத்தன்மையற்ற செயல்.

நல்லதங்காள் பட்ட துன்பத்தை இந்த நாடு மறக்காது


from facebook

Wednesday, February 19, 2014

காசி பயணம் - காசி - அலகாபாத்

 27.01.14 - 28.01.14

 



வட இந்திய கோவில்களுக்கும் நம்ம ஊர் கோவில்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசங்களில் ஒன்று, அங்கு நாமே நம் கையால் சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் பண்ணலாம், தொட்டு கும்பிடலாம். பெரும்பாலும் வெள்ளை மார்பிள் கற்களால் ஆன சிலைகளை பார்த்தால் தென்னிந்தியாவிலிருந்துபோன நமக்கு பக்தி வருவது சந்தேகமே. நாம் கோவிலுக்கு வெளியே நின்று கருங்கல் சிலையை லட்சணமாக அலங்கரித்து வீசப்படும் விபூதியையோ குங்குமத்தையோ பயபக்தியாக பெற்றுவருபவர்கள். அத்தனை ஈசியா சாமியை தொட நமக்கு மனசும் சம்மதிப்பதில்லை. முன்பொருமுறை ஹரித்துவார் ரிஷிகேஷ் போன போது இதை ஆச்சரியமாக இருந்தது.


கங்கையில் குளித்து கையில் ஒரு செம்பு தண்ணீருடன் ஒவ்வொரு சிவலிங்கமாக விட்டு இறுதியாக சுயம்புவான கேதாரநாதலிங்கத்தின் மீது அபிஷேகித்து கோவில் மண்டபத்தில் அமர்ந்து ஜெபம் முடித்து காலை சிற்றுண்டியும் சுவாமியின் சிற்றுரையையும் கேட்டு காசி விசுவநாதரை தரிசிக்க கிளம்பினோம். 



வழக்கமான பிரச்சனைக்குரிய வழிபாட்டு தலங்களில் இருப்பதை போல் இங்கும் செக்யுரிட்டி செக்கிங் அதிகம் தான். செல்போன், டார்ச், பேனா, கத்தி, கீ செயின் முதல் கொண்டு எந்த ஒரு பொருளையும் எடுத்து செல்லகூடாது. காசியில் அதிக பணம் கையில் வைத்திருப்பதும் பாதுகாப்பில்லை என்பதால் பர்ஸ் அவசியமின்றி போகிறது. செருப்பை தங்கியிருந்த இடத்திலேயே விட்டு குறுகலான வீதிகளை கடந்து பயணிக்கிறோம். எங்கள் குழுவில் மொத்தம் 40 பேர். அனைவரும் ஒன்றாகவே இருந்தோம். கொஞ்சம் வழி தவறினாலும் மீண்டும் சேர்வது சிரமம். ஒரு வழியாக உள் நுழைந்து வேறு வழியாக வெளியேற வேண்டும். ஊரும் புதிது பாஷையும் தெரியாது. எனவே எங்கு சென்றாலும் ஒன்றாகவே இருத்தல் நலம்.   பகல் பூஜை நேரமானதால் கோவிலுக்குள் நான் உட்பட மூன்று பேரை மட்டும் அனுமதித்து மற்றவர்களை வெளியில் நிறுத்திவிட்டார்கள். உள்ளே சென்று திரும்பி பார்த்தால் மற்றவர்களை காணோம்.. திரும்பி வெளியில் வரவும் முடியாது. கோவிலுள் உள்ளே நல்ல கூட்டமும்...  காவலர்கள் கெடுபிடியினால் உள்ளிருப்பவர்கள் அனைவரையும் உடனே அனுப்பிவிடுகின்றனர். நாங்கள் மூன்று பேரும் தீபாராதனை மற்றும் விசுவநாதரை தரிசித்து எங்கள் குழுவினர் வந்தால் கண்டுபிடிக்க கூடிய இடமாக பார்த்து அங்கிருந்த மண்டபத்தில் காத்திருந்தோம்.  எல்லோரும் வந்த பின் விசுவநாதர் கோவிலை ஒரு சுற்று சுற்றிவந்தோம்.


விசுவநாதரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே. (காசியை பற்றியும் கோவில்களை பற்றியும் இங்கு நான் தரும் எல்லா தகவல்களும் எங்களுக்கு எங்கள் குரு மூலம் கூறப்பட்டதே ) ஏகப்பட்ட முறை கொள்ளையடிக்கப்பட்ட கோவில் இது. மதுராவில் உள்ளது போல் அடுத்த சுவர் ஒரு மசூதிதான். தஞ்சை பிரகதீஸ்வரரை போன்ற பிரம்மாண்டத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். அதிகம் போனால் ஒரு அடி அளவிலே உள்ளார் உலகாளும் இறைவன். சுற்றிலும் வெள்ளி கவச சுவருடன் மேலே எப்போதும்  இருக்கும் ஜலத்துடன் நாமே தொட்டு வழிபட்டு வரலாம். கோவிலின் உள்ளே ஒரு கிணறு உள்ளது, அதில் உண்மையான லிங்கம் இருப்பதாக கூறுகின்றனர்.
தொந்தி கணபதி என்று விநாயகரும் உள்ளேயே ஒரு அன்னபூரணியும் உண்டு. வழிபட்டு கோவிலின் இன்னொரு வாசல் வழியாக வெளியேறி அன்னபூரணி சந்நதியை அடைகிறோம். மேருமலையும் அன்னபூரணியும் அதுனுள் சிவன், ராமர், ஆஞ்சநேயர் என்று சந்நதிகளூம் உண்டு. வழிபட்டு அங்க்யே நித்திய அன்னதான கட்டிடத்தை சரணடைந்தோம். காசி வந்து அன்னபூரணியிடம் உணவருந்தாமல் போகமுடியுமா? இனிப்பு, தயிர், சாம்பார், சாதம் என்று அருசுவை விருந்து உண்டு இன்னொரு வாசல் வழியே வெளியேறுகிறோம்.

விஸ்வநாதரும் அன்னபூரணியும் மட்டுமே ஓரிடத்தில் உள்ளார்கள், விசாலாட்சி கொஞ்சம் தள்ளி தனியான இடத்தில் இருக்கிறார். குறுகலான சந்துகளில் கொஞ்சம் நடந்து சென்றால் சட்டென்று வரும் ஒரு சின்னஞ்சிறு கட்டிடத்தில் சுயம்புவடிவான விசாலாட்சி அலங்கரிக்கப்பட்டு அருள்பாலிக்கிறார். அவரையும் தரிசித்து மீண்டும் காசிதெருக்களில் இருபுறமும் வேடிக்கை பார்த்து நாங்கள் தங்கியிருந்த குமாரசாமி மடத்தை அடைகிறோம்.

 


மாலை மணி நான்கு ஆகிறது,  உடனே கங்கையில் குளித்து சந்தியாவேளையில் கங்கையில் நிகழும் மங்களாரத்தியை காண போக வேண்டும். மீண்டும் கேதாரநாதர் படித்துறை, காலையில் இருந்த கால நிலை இப்போது அப்படியே தான் இருக்கிறது. மீண்டும் திவ்யமான குளியல், ஜெபம், கேதாரநாதர் தரிசனம் முடித்து அனைவரும் தச அசுவமேத காட் செல்கிறோம். மாலை 5.50 முதல் தினமும் நடக்கும் கங்கா ஆரத்தியை வர்ணிக்க முயற்சிதான் செய்ய முடியும். நேரில் பார்த்து அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும்.


விஸ்வநாதர் கோவில் செல்லும் வழியில் சட்டென்று பிரியும் ஓரிடத்தில் வலப்புறமாக கங்கை பிரவாக்கிறாள். அங்கே படித்துறையில் மேடை அமைத்து கங்கைக்கு தினமும் ஆரத்தி காட்டப்படுகிறது. இந்த மொத்த பயணத்தில் இருமுறை கங்கா ஆரத்தியை காணும் வாய்ப்பு கிட்டியது. அந்த இருளும், குளிரும், வேதங்களும் இசையும் மக்களின் கங்கா மாதாகி ஜெய் கோஷமும் வேறு விதமான பக்தியை வேறு ஒரு உலகத்தை உங்களுக்கு காட்டும். தென்னிந்தியாவில் ஸ்தலம் முக்கியம், வட இந்தியாவில் தீர்த்தம் முக்கியம். நதிக்கரையே நாகரிகம், நதியே தெய்வம், நதியே வாழ்க்கை அப்படி இருக்கும் போது  நதியை நமஸ்கரித்து வணங்கி மகிழ்வதே ஆரத்தி. உயரமான இடமாக தேடி அமர்ந்தேன், நான் சென்ற இடங்களை என் குழந்தைகளும் நண்பர்களும் எப்போது சென்று பார்ப்பார்கள் என்பது இப்போது தீர்மானிக்க முடியாது. இந்த கங்கை ஆரத்தியை அவர்களுக்கு புகைப்படமாகவேணும் காட்ட வேண்டுமே.
கண்முன் கங்கையை வணக்கி விதவிதமான தீபமும் மற்ற சடங்குகளும் நடந்தேறியது. ஒரு மணிநேர நிகழ்வு முடிந்ததும் கங்கை, விசுவநாதர், அன்னபூரனி, விசாலாட்சியுடன் ஆதிசங்கர மகராஜுக்கும் ஜெய் என்று வாழ்த்துரைத்து கலைகின்றனர்.








அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் உள்ளது நகரத்தார் சத்திரம். இரவு உணவிற்கு அங்குதான் செல்ல வேண்டும். காசியில் தமிழர்கள் அதிகம் வருவதாலோ என்னவோ நீங்கள் தமிழ் பேசினால் அவர்கள் புரிந்துகொள்வார்கள். மற்ற இடங்களை போல் இல்லாமல் இங்கு இட்லியும் தோசையுமே பிரதானமாக கடைகளில் உள்ளது.கூடவே மூன்று நேரம் வேண்டுமானாலும் உப்புமா கிடைக்கும். தங்க குமாரசாமி மடமும், உணவுடன் தங்க நகரத்தார் சத்திரமும் முன்கூட்டியே பதிவு செய்தால் பிரச்சனை இன்றி சுகமான பயணம் அமைய வழிவகுக்கும்.







வயிற்றை கெடுக்காத உணவுடன் மீண்டும் குமாரசாமி மடம் திரும்புகிறோம். காலையில் 6 மணிக்கு அனைவரும் திரிவேணி சங்கமம் உள்ள அலகாபாத் செல்ல தயாராக இருக்க வேண்டும்.



தயாராக இருந்தோம், அவ்வளவாக ரோடும் கால நிலையும் சரியில்லாததால் நீண்ட பயணமாக 9 மணிக்கு வித்யாஞ்சல் எனப்படும் விந்திய வாசினி கோவிலை அடைந்தோம். சக்திபீடங்களில் ஒன்றான விந்தியவாசினியை தரிசித்து அங்கிருந்த காளியையும் வணங்கி பிரம்மாண்ட ஹோம குண்டத்தை சுற்றி அமர்ந்து அந்த சூழலை உள்வாங்கி கிளம்பினோம்.



சீதாமாட்டி என்னும் இடம் அடுத்த இலக்கு, சீதையை கண்ட அனுமன் தனியான ஒரு கோவிலில் இருக்கிறார். அனுமன் என்றாலே பிரம்மாண்டம் தானே, அந்த நித்யபிரம்மாண்டத்தை வணங்கி சீதையை காண செல்கிறோம்.



 


சீதை, தன் தாயுடன் பூமிக்குள் சரணடைந்த இடம். பெரிய ஓடைபோன்ற நதிக்கரையில் இரண்டு அடுக்குகளாக அமைந்திருக்கும் கோவில். மேல் அடுக்கில் சீதை மணப்பெண் அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார். கீழ் அடுக்கில் சீதையின் சமாதி நிலை என்று தத்ரூப காட்சிகள் சிலையாக வடிக்கப்பட்டிருக்கின்றன. சீதையை விட பின்புலமாக செதுக்கப்பட்டுள்ள மற்றவர்களின் சிலைகள் இன்னும் தத்ரூபமாக இருந்தது









 



















 






 



  


அங்கிருந்து கிளம்பி மாலை 3 மணி அளவில் அலகாபாத் சென்றடைந்து சிறு படகின் மூலம் திரிவேணி சங்கமம் நெருங்குகிறோம், மாலையும் நெருங்குவதால் தொலைவில் சூரியனும் நதியில் சரணடைய தயாராகிறார். தூரத்தில் விளக்கு வெளிச்சம் தெரிகிறதே அதுவே திரிவேணி சங்கமம் என்று சுவாமி சொல்லும் போது நெருங்கிவிட்டோம். தொலைவில் தெரிந்த விளக்கொளியில் திரிவேணி கனகமாக ஜொலித்தது. பெரும் வெள்ள பிரவாகத்தில் நீராடி திரிவேணியை வணங்கி மீண்டும் படகில் ஏறினோம்.

 


 
 
இந்த பயணத்தில் நான் மிக ரசித்த, மனதிற்கு இதமான, பிடித்த ஒரு நிகழ்வு திரும்பி வரும் படகுபயணத்தில் நிகழ்ந்தது. குளிர் போர்த்திய முன்னிரவில் அமாவாசைக்கு முந்தைய நாளில் நட்சத்திரத்தின் ஒளியில் தூரத்தில் தெரியும் நகரின் விளக்கை தவிர வேறு எந்த சலனமும் இல்லாத அமைதியான சூழலில் மந்திர ஜெபம் செய்தோம். அதன் பிறகு சுவாமியிடம் பஜன் பாடலாமே என்ற போது அவரும் இசைந்து தெய்வநாமங்களை பாடதுவங்கினார், நாங்களும் பின்பற்றினோம். அந்த சூழலே மாறியது, ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் படகோட்டிகளும் எங்களுடன் பஜனை பாடல்களை சேர்ந்திசைக்க ஆரம்பித்தனர். எங்கள் மாணவர்கள் பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன், நானும் சில பஜன் நிகழ்வுகளில் இருந்திருக்கிறேன். என்றாலும் அந்த இரவில், நதியின் ஓட்டத்தில் குருவின் குரல் எங்கள் ஆன்மாவை அசைத்தது என்பதே உண்மை. “ மந்த்ரமூலம் குருவாக்யம்”
 
 
 
 
 
 
அடுத்த நாள் தை அமாவாசை, நடு ஜாமம் ஒரு மணி அளவில் காசியை அடைகிறோம். வழக்கம் போல் காலை 6 மணிக்கு நதிக்கரையில் சந்திக்கலாம்....

Sunday, February 16, 2014

காசி பயணம் - தயாராகிறோம்




 காசி


கஷ்டம் வரும்போது தான் கடவுளை நினைப்பாங்கன்னு சொல்லுவாங்க. அப்படி பார்த்தா நானெல்லாம் வாழ்க்கை முழுசும் கடவுளை மட்டுமே நினைச்சுட்டு இருக்கனும். கடவுளுக்கு இருக்கும் பிசி ஷெட்யுல்ல எப்பவும் நாம தொல்லை பண்ணிட்டே இருக்க கூடாதுன்னு நினைக்கற ஆள் நான். ஓவரா சாமி பக்தியினால அடுத்தவங்களை டார்ச்சர் பண்ணாம இருப்பதே பக்தி தானே? சாமி நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு கோவில்களுக்கு போறது பிடிக்கும். 
 
ரொம்ப பிடிச்ச இடம்னா திருப்பதி. இந்தியாவில் எத்தனை மொழி இருக்கோ அத்தனையும் மக்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும் ஊர். காரணமே சொல்லாம சில இடம் சில மனிதர்களை பிடிப்பது போல திருப்பதி எனக்கு பிடிச்ச இடம். நான் அதிகம் போனதும் திருப்பதிதான். அதற்கு அடுத்தபடியா கும்பகோண கோவில்கள். ஆள் அரவமே இல்லாத ஏக்கர் கணக்கான கோவில்களுக்கு உள்ளே போகும் போதே இதை கட்டின மன்னரோ, மக்களோ எப்படி இங்க வந்திருப்பாங்க, என்னல்லாம் பண்டிகை, ஜனங்க எப்படி இருந்திருப்பாங்கன்னு ஒரு படம் உள்ள ஓட ஆரம்பிக்கும். தஞ்சை பெரிய கோவிலுக்கு முன் வாசலிருந்தே படம் ஆரம்பிச்சிடும்.
 
 அதே போல் ஊர் சுற்றல் அல்லது டீசெண்டா பயணம்னு வைச்சுக்கலாம் அதுவும் நமக்கு இஷ்டமான ஒன்று. நாம பார்த்த இடங்கள் ரொம்ப குறைவு பார்க்காத இடங்கள் ஏராளம்னு அடிக்கடி தோனும். இங்க இருக்கும் பேரூருக்கு 3 முறைதான் போயிருக்கேன். மருதமலை ஒரே ஒரு முறை தான் போயிருக்கேன். பழனி போனதே இல்லை. ஆனா போகனும்னு நினைத்த இடங்கள் நிறைய இருந்தது.


சில நேரங்களில் நம்மையும் அறியாமல் சில விசயங்கள் நடக்கும். எதோ ஒரு விதத்தில் நம்மை வழி நடத்தும். எதிர்பார்க்காமல் நம் வாழ்க்கை சூழலையும் முறையையும் மாற்றும்.    அப்படி மாற்றி அல்லது மாற்ற சென்ற பயணங்களில் ஒன்று காசி. சென்ற முறை கும்ப மேளாவின் போது போகும் வாய்ப்பு அமையவில்லை. இந்த முறை எப்படியும் போகனும்னு இருந்தேன். காசி நமக்கு அளித்த பிம்பம் வேறு மாதிரியானது. நம்ம படிப்பில கூட ஒரு முக்கிய கேஸ் ஸ்டடி கங்கையின் அசுத்தம் பற்றியதுதான்.  வருடங்களாக காசி பற்றி அடுத்தவர் சொன்ன கதையும் அதை உறுதிசெய்ததுதான். ஆனால் ப்ரணவ பீட மாணவர்களின் கருத்தும் பார்வையும் அதை மாற்றியது. காசி போகவேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது.

 
 
கோவையிலிருந்து பெங்களூர் ட்ரெயின்  , பெங்களூரில் சில மாணவர்களும் இணைந்து டெல்லி - அவுட் சைட் டெம்ப்ரேச்சர் 18ன்னு சொன்னதும் ஆ இதெல்லாம் ஒரு குளிரான்னு தோனிச்சு. டில்லியிலிருந்து வாரணாசி ப்ளைட் சேர்ந்து அங்கிருந்து வாரணாசி நகருக்கும் நுழையும் போதே ஒரு நல்ல பயணத்திற்கான அத்தனை அறிகுறிகளும் தெரிந்தது. வட இந்திய ஊர்களில் பலவற்றில் பயணம் செய்திருப்பாதால் அதன் சுத்தம் சுகாதாரம் பற்றி நன்றாகவே தெரியும். அந்த இலக்கணம் சற்றும் குறையாத வழித்தடம். ஏன் தெரியுமா வட இந்தியாவில் சப்பாத்தி நல்லா பண்றாங்க, ரொம்ப சின்ன வயதிலிருந்தே வரட்டி தட்டி பழகிடும் பெண்களால் தான். ஊரெங்கும் வரட்டி ஒரே மாதிரியான அளவுகளில். ஒரு வழியாக குளிர் லேசா எலும்பை தொட்டு பார்க்க காசிக்குள் நுழைகிறோம்.

இன்னும் மனிதர்கள் இயக்கும் கை ரிக்‌ஷா குறுக்கும் நெடுக்குமாக அலைகிறது, ஒரு ரிக்‌ஷாவில் பெரியவர்கள் முன்னாடியும் பின்னாடி சின்ன குழந்தைகளும் அடைத்தும் ஒரு 10 அடி அகலமுள்ள தெருவில் கார், ரிக்‌ஷா, நடக்கும் மனிதர்கள், போதாகுறைக்கு பார்க்கிங் என்று அத்தனை நெரிசலான தெருக்களை கடந்து காசியில் நாங்கள் தங்கவேண்டிய கேதார் காட் எனப்படும் இடம் அடைந்தோம். ரிக்‌ஷா மட்டுமே போகும் குறுக்கலான தெருக்களில் உள்ளது குமாரசாமி மடம். இரவும் குளிரும் சூடான டீ இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தவுடன் சின்ன மண் குடுவைகளில் டீ அதுவும் கும்பலான எங்களுக்காக ஏலக்காயை வாங்கிட்டு வந்து சுடசுட டீயும் திக்கான பாலும் கிடைத்தது
 
 
   
 
 
 


காசி, மிக பழமையான நகரம், எதிரிகளால் கோவில் கொள்ளையடிக்காமல் இருக்க குதிரையில் வரும் மனிதர்களின் கால் சுவறில் தட்ட வேண்டும் என்று திட்டமிட்ட மிக குறுகலான சாலைகள், சாலைமுழுதும் சர்வ சுதந்திரமாக நடமாடியும் அவைகள் மனது வைத்தால் மட்டுமே நாம் கடந்து போகமுடியும் என்ற நிலைக்கு நம்மை வைக்கும் மிகபெரிய திமிலோடு பசுக்கள், எங்குமே சிங்கிளாக பார்க்கமுடியாத படி குறைந்த பட்சம் 10 குட்டிகளுடன் நாய்கள், குறுக்கலான தெருக்களின் இரு மருங்கிலும் ஏகப்பட்ட கடைகள், சுடசுட ரசகுல்லா கண்ணெதிரே வேகும், வாயில் பாக்கில்லாத மனிதர்களே இல்லாத கொஞ்சம் அழுக்கடைந்த மிக அழகான நகரமாக கண் முன் விரிகிறது. காசியில் நாம், நினைக்கவே பிரமிப்பாக இருந்தது. நாம் வளர்ந்த சூழலிலும் வாழ்க்கை முறையிலும் பார்க்கவே வாய்ப்பு குறைந்த ஊரில் இருப்பது  பிரமிப்பாக தானே இருக்கும்
 


 
 
 
 
 விடிகிறது, காலை 6 மணிக்கு கங்கை கரையில் கூடவேண்டும் என்பது நிகழ்ச்சிபடி முதல் வேலை. ஆறு மணி என்பது நடுஇரவு போன்றிருந்த இருள் பிரியாத வேளையில் ஏகப்பட்ட ஸ்வெட்டர் சால்வைகளூடன் கங்கை கரையை அடைந்தாகிற்று.  கரையில் அமர்ந்து கங்கையை கவனியுங்க, சூரிய உதயத்திற்கு பின்தான் குளியல் என்று சாமி சொன்னதும் படிகளில் அமர்ந்து முன் இருக்கும் நதியை அமைதியாக பார்க்க ஆரம்பிக்கிறோம்
 

 கண் முன் ஒரு நான்கு அடியில் தண்ணீர் தெரிகிறதே இதுவா கங்கை? வெறும் புகையும் இடது புறம் நான்கு படகுகளும் மட்டுமே தெரிகிறதே என்று தோன்றும் போதே மினுக் மினுக் என்று மிதந்து வருகிறது விளக்குகள். இருளில் முன் தெரியும் பனி புகையில் தூரத்தில் இரு வெளிச்ச புள்ளிகள் மிதந்து வருவதை நினைத்து பாருங்கள். ஓ அவ்வளவு தூரம் ஆறு இருக்கிறது என்று நினைக்கும் போதே மெல்ல மெல்ல இருள் விலகி கண் முன் ஒரு பிரவாகம் தெரிகிறது. இடதும் வலதும் திரும்பி பார்த்தால் கண்ணெட்டிய தூரம் வரை கடலென நீர். கங்கை. எத்தனையோ யுகங்களாக இருக்கும் மௌன சாட்சி. பெண்ணென்றும் தாயென்றும் தெய்வமென்றும் வர்ணிக்கப்படும் பேரழகி. மேலே பனிபுகையை ஆடையாக அணிந்து எந்த சலனமும் இன்றி விச்ராந்தியாக போகும் பேரிளம் பெண்ணாக நழுவுகிறாள். மற்ற மாணவர்களும் வந்ததும் குளிக்கும் நேரமும் வந்தது. முதல் நாள் உள்ளே இறங்கும் போது மட்டுமே குளிர் தெரிந்தது. மற்ற நேரங்களில் எல்லாம் அந்த குளிரும் இருளும் ஆற்றில் இறங்க ஆனந்தமாகவே இருந்தது. ஆர்க்யம் என்றால் என்ன? புனித நீர் நிலைகளில் எப்படி நீராடவேண்டும் என்பது முதற்கொண்டு அனைத்துமே எங்கள் குருவினால் சொல்லப்பட்டிருந்ததால் அதன்படி அனைவரும் நீராட துவங்கினர்.  நாங்கள் இருந்த கேதார்காட் படித்துறையில் பெண்களுக்கு உடை மாற்றும் அறை இருப்பதால் அங்கேயே உடை மாற்றி செம்பில் தண்ணீர் எடுத்து கேதாரநாதர் கோவில் இருக்கும் அனைத்து கடவுளருக்கும் நாங்களே அபிசேகம் செய்து கேதார நாதரை தரிசித்து அங்கிருந்த மண்டபத்தில் ஜெபம் செய்வதை வழக்கமாக கொண்டோம்.
கேதார்காட் படித்துறை

27.1.14
காலை 9 மணிக்குள் கேதாரநாதர் தரிசனம் முடித்து காசி விசுவநாதரை தரிசிக்க சென்றோம். வழக்கமான பிரச்சனைக்குரிய வழிபாட்டு தலங்களில் இருப்பதை போல் இங்கும் செக்யுரிட்டி செக்கிங் அதிகம் தான். செல்போன், டார்ச், பேனா, கத்தி, கீ செயின் முதல் கொண்டு எந்த ஒரு பொருளையும் எடுத்து செல்லகூடாது. காசியில் அதிக பணம் கையில் வைத்திருப்பதும் பாதுகாப்பில்லை என்பதால் பர்ஸ் அவசியமின்றி போகிறது. செருப்பை தங்கியிருந்த இடத்திலேயே விட்டு குறுகலான வீதிகளை கடந்து பயணிக்கிறோம். எங்கள் குழுவில் மொத்தம் 40 பேர். அனைவரும் ஒன்றாகவே இருந்தோம். கொஞ்சம் வழி தவறினாலும் மீண்டும் சேர்வது சிரமம். ஒரு வழியாக உள் நுழைந்து வேறு வழியாக வெளியேற வேண்டும். ஊரும் புதிது பாஷையும் தெரியாது. எனவே எங்கு சென்றாலும் ஒன்றாகவே இருத்தல் நலம்.   பகல் பூஜை நேரமானதால் கோவிலுக்குள் நான் உட்பட மூன்று பேரை மட்டும் அனுமதித்து மற்றவர்களை வெளியில் நிறுத்திவிட்டார்கள். உள்ளே சென்று திரும்பி பார்த்தால் மற்றவர்களை காணோம்.. திரும்பி வெளியில் வரவும் முடியாது. கோவிலுள் உள்ளே நல்ல கூட்டமும்...  .

கங்கையிலிருந்து காசி நகரம்

(தொடரும்)