Friday, June 17, 2011

அக்கம் பக்கம்

கோவையில் இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்.. இன்னொரு தமாசா ஆகாமல் இருக்கனும். என்னதான் சட்டம் போட்டாலும் நம்ம மக்கள் அதை ஸ்டைலா மாத்திடுவாங்க. ஹெல்மெட் வண்டி பெட்ரோல் டாங்க் மேல், கண்ணாடி மேல், சைடில் என்று தலையைத்தவிர எல்லா இடமும் தொங்கியது. தலைதொங்காமல் இருக்கத்தான்யா ஹெல்மெட்.

---

தினம் புதுபுதுப்பாடல்கள் கேட்க நல்லாத்தான் இருக்கு. சமீபத்தில் கேட்ட பாடல் 180. நல்லாத்தான் இருக்கு. கேட்டதும் கடுப்படித்த பாடல் வேங்கை படத்தில் வரும் ஓப்பனிங் பாட்டு. கதை, சதைன்னு காது வலிக்குது..ஏன்யா ஏன்?
----
சமீபத்தில் தான் ஆடுகளம் பார்த்தேன், ஒத்தை சொல்லாலே பாட்டுக்கு தனுஷ் என்னா ஆட்டம். பார்க்கும் போதே அந்த சந்தோசம் நமக்கும் தொற்றி ஒரு ஆட்டம் போடலாம்னு தோனுச்சு. 60 வருச பழமையான வீட்டில் இருக்கோம்னு நினைப்பு வந்து கம்முனு இருந்துட்டேன். இந்தப்பாட்டை பார்த்து தனுஷ் ரசிகையா மாறலாமான்னு யோசிக்கும் போது வேங்கை படப்பாட்டை கேட்டேன்..என்ன கொடுமை தனுஷ் இது.. வரட்டும் பார்ப்போம்.

------
பள்ளி திறந்து எல்லாரும் செட்டில் ஆகியாச்சு. விலைவாசி ஏற்றத்துக்கு வேன் ட்ரைவர் மட்டும் தப்புவாறா என்ன? போன வருசம் வேனுக்கு 1,100 ரூபாய் ரெண்டு பேருக்கும் சேர்ந்து கொடுத்தேன், இந்த வருசம் அது 2,000. பள்ளிக்கூடம் பக்கமா இருந்தா நடந்தே போயிடலாம். அதனால் ஸ்கூல் பஸ்ஸை சரணடையப்பட்டது. சமச்சீர் இதுக்கு வர வாய்ப்பு உண்டா?

------
கோவையில் இருப்பவர்கள் லேசில் வேறு ஊரில் செட்டில் ஆக மாட்டார்கள், அப்படி இருக்கு ஃப்ரீயா ஊருமுழுதும் ஏசி பண்ணியது போல்.. சொர்க்கமே என்றாலும்.....

----

ஒரு க்ரூப் டூர் போலாம்னு எங்க சங்கத்தில முடிவு செய்து அதற்கு ஒருங்கினைப்பு வேலை நடக்குது. இரண்டு பெண்கள் இருந்தாலே சமாளிப்பது கஷ்டம். 16 பேரை எப்படி கூட்டிட்டு போயி திருப்பி கொண்டு வந்து சேர்த்தப்போறேன்னு நினைச்சாலே கண்ணைக்கட்டுது. ஆனால் சில பல பதிவு எழுத விசயம் கிடைக்கும்.. நரி கிழக்க போனாலும் மேற்கே போனாலும்...............

--------
எங்க ஊருக்கு வரவங்களுக்கு ஒரு அறிமுகம் கொடுக்கலாம்னு :) கோவை வரவங்க எல்லாருக்கும் அன்னபூர்னா தவிர ஹோட்டலே இல்லாத மாதிரி ஒரு பில்டப்பு இருக்கு. அதையும் தாண்டி வயித்தை கெடுக்காத காசையும் பிடுங்காத நல்ல ஹோட்டல் நிறைய்ய இருக்கு.

சாப்பாடு : ரொம்ப பழைமையான ஹோட்டல்.கிட்டத்தட்ட சுதந்திரத்திற்கு  முன் இருந்து இருக்கும்னு நினைக்கிறேன். C.S. MEALS. மதியம் மட்டுமல்ல இரவும் கோவையில் ஃபுல் மீல்ஸ் இருக்கும் இரண்டு உணவகங்களில் இது ஒன்று. ( இன்னொன்று கீதா கபே) மதியம் கெட்டித்தயிர், இனிப்பு ( இது மட்டும் சுமாரா இருக்கும்) வத்தக்குழம்புன்னு நல்ல லஞ்ச். அதே இரவில் நீர்த்த மோர், ஒரு கூட்டுன்னு சிம்பிள் சாப்பாடு. ரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கு, அவங்களோடதே அருகில் டிபன் செண்டரும் வச்சிருக்காங்க அங்க அடை, அவியல், வெண்ணெய், வெல்லம்...ம்ம்ம்ம்ம்ம் சூப்பர். எதிரில் கலெக்டர் ஆபிஸ் இருப்பதால் ஓரளவிற்கு கூட்டமும் இருக்கும். நல்ல சைவ ஹோட்டல்.

-----


கூகுள் பஸ்ஸில் முழு நேரம் போவதால் இந்த பதிவு டைரி எழுதும் பழக்கம் குறைஞ்சு போச்சு. இனி கொஞ்சமாவது எழுதனும்னு என்று பாடிகார்ட் முனிஸ்வரனை வேண்டிக்கறேன்.

Wednesday, June 15, 2011

தேவதைகள் கலைத்த வீடு


கிட்டத்தட்ட 60 நாட்கள், காலைச்சுற்றும் பூனைக்குட்டி மாதிரி வீடு முழுதும் வியாபித்த என் தேவதைகள், படுக்கை அறைக்கதவு காலை 10 மணிக்கு மேல் தான் திறக்கும், அதற்குள் அதிலிருந்து வரும் சந்தோசக்குரலில் தெரியும் குறும்பு அந்த நாளைக்கான அலும்புக்கான அஸ்திவாரம்.

ராம நாமம் ஜெபித்தால் புண்ணியமாம்? அதைவிட அதிக முறை அதைவிட அதிக அன்புடன், காதலுடன், கோவத்துடன், பாசத்துடன் உங்களை கூப்பிட்டிருக்கிறேன், என்ன கத்தினாலும் ஒரு சின்ன எதிர்வினை கூட உங்ககிட்ட இருந்து வராது.

என்னைமட்டுமல்ல சுற்றி இருக்கும் நண்பர்களையும் சந்தோசமாகவும், உயிர்ப்போடும் வைத்திருக்கும் வித்தை எங்கிருந்து வந்தது? தினம் பப்புவை தேடி வரும் நண்பர்களுக்கு அவள் அளிக்கும் பதிலிருந்தே அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள்ன்னு தெரிந்துவிடும். 60 நாட்கள் கொண்டாட்டமுடன் கழிந்த இரவுகள், கடைசியாக நேற்று இரவு போட்ட ஆட்டமும், தினம் பாடிய பாடல்களும், உங்களிடம் வாங்கின எண்ணற்ற பல்புக்களும் தான் இனிவரும் நாளையும் நகர்த்த உதவும்.

எதற்கு இன்று விடியவேண்டும்? இதோ திரும்பி வந்து பார்க்கும் போது கலைந்து கிடக்கும் வீடு. காலையில் உங்களை ஆசிர்வதிப்பது போல் தூறிய மழை, அதோடு பப்புவின் பெரிய வகுப்பு போகும் (2 வகுப்பு) முன்னேற்பாடுகள், சொத்து பிரிப்பை விட ஜாக்ரதையாக பிரிக்கப்பட்ட பென்சில்கள், க்ரேயான்கள். ஒவ்வொன்றும் நீங்கள் இப்போது இங்கில்லை என்று குறைகூறுகிறது..

கண்ணுகளா, பள்ளி என்பது ஒவ்வொரு நிமிடமும் சந்தோசமுடன் நினைவு கொள்ள வேண்டியது. எப்போதும் போல் இனியும் படின்னு படுத்த மாட்டேன். முதல் மார்க் எடுத்து உங்க அறிவை நீங்க நிருபிக்க வேண்டியதில்லை, சந்தோசமா அனுபவியுங்கள், பள்ளிதரும் அனுபவம், நண்பர்கள், ஒரு நாள் நோட் கொண்டு போகாட்டி மிஸ் வந்து திட்டுவாங்களோ என்ற பய உணர்வு, பிடிச்ச லஞ்ச் கொண்டு போய் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ண, பிறந்தநாள் நண்பர்களின் தனித்தருணங்களில் உடனிருங்கள், இது கடந்து போனால் திரும்ப வராது. வீடு, வாழ்வியல் துன்பங்கள் எல்லாருக்கும் காத்திருக்கும், கடந்து செல்லவேண்டியும் இருக்கும், அதுவரை பள்ளியை அனுபவியுங்கள். அதோடு முடிஞ்சா கொஞ்சம் படிங்க, ஒரு போதும் ட்யுசன் போ என்றோ, ஏன் முதல் மதிப்பெண் வரலைன்னோ கண்டிப்பா நான் கேட்க மாட்டேன்.
என்ன பிடிக்குதோ அதை செய்யுங்கள், அதில் மேலும் சிறப்பாக வர பெற்றோரா என்ன கடமையோ அதை நாங்கள் செய்கிறோம். உங்கள் சந்தோசம் முக்கியம்.

அன்பான குழந்தைகளை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி.. சிலநேரம் அடுத்தடுத்த சென்ற வருடம் இறந்து போன என் பெற்றோரை நினைத்து மூட் அவுட் ஆகும் போது வர்ஷா வந்து மெதுவா அணைத்துக் கொள்ளுவாள், பப்புவோ இப்ப எதுக்கு சோக சீன்ன்னு கேட்பாள்,

இரண்டையும் அனுபவிக்கும் அம்மாவாக ஆனதற்கு நன்றி கடவுளே.என் அம்மாவாக, தோழிகளாக, செல்ல எதிரிகளாக, எப்போதும் கலாய்க்கும் என் இனிய ராட்சசிகளுக்கு இந்தப்பாட்டு.

உங்களுக்கு பிடிச்ச பாட்டு உங்களுக்காக மட்டும் செல்லங்களா..

Wednesday, June 1, 2011

நாலுகட்டு - எம்.டி.வாசுதேவன் நாயர் - தமிழில் சி.ஏ.பாலன்

பல்வேறு சமுதாயத்தின் வாழ்க்கை முறைகள், அந்தந்த கால கட்டத்தின் சமூக கட்டமைப்புகள், அந்த காலகட்டத்தின் மனித மனங்களின் போக்கும் அங்கீகாரங்களும் ஒரு நல்ல எழுத்தாளரின் பார்வையில் சுவாரஸ்யமாக இருக்கும். அந்த வரிசையில் பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயரின் “நாலுகட்டு”. 1958-59 வருட கேரள சாகித்ய அகாடமி விருது வாங்கிய இந்த நாவலை தமிழில் சி.ஏ .பாலன் மொழிபெயர்த்துள்ளார்.

சில இடங்களில் மூலக்கதையை அப்படியே தரவேண்டிய நிர்பந்தம். கேரள வாழ்க்கை முறை ஓரளவிற்கு தெரிந்தவர்களுக்கு சுலபத்தில் புரியும். இல்லாவிட்டால் சில பகுதிகளை மீண்டும் வாசிக்க நேரிடும். சில புழக்கத்தில் உள்ள சொற்களும் தமிழ் படுத்தும் போது அதன் உச்சரிப்பை சரியாக தரமுடியாததும் ஒரு சிறு இடறல். உ.தா. முத்தஷி - முத்தாட்சி, இடஞ்ஞாழி ( உழக்கு) - இடங்கழி போன்றவைகள்.

நாவல் ஒரு சிறுவனின் வாழ்க்கையும் அவமானமும் அதிலிருந்து அவன் எடுக்கும் தீர்மானமும் பற்றியது. எந்த சமுதாயம் அல்லது மக்கள் என்றாலும் அவர்களின் பாரம்பரியம் என்பது மிக மதிக்கப்படவேண்டிய ஒன்று. இதில் கேரள நாயர் குடும்பமும் அவர்களின் பாரம்பரிய வீடும் கதைக்களன்.

கேரள குடும்பங்கள் அவர்களின் வீட்டைக்கொண்டே விளிப்பது வழக்கம். அதை சுருங்க தரவாடு என்பர். வீடு என்பது பல ஆத்மாக்களின் சங்கமம், பெரிய வீடுகள் நாலு கட்டு கொண்டிருக்கும், வீட்டிலேயே குலதெய்வமோ, பகவதியோ, நாகமோ, குட்டிச்சாத்தானோ வைத்திருப்பார்கள்.

இதில் வடக்கே வீடு   என்னும் பெரிய நாலு கட்டு வீட்டில் வசிக்கும் பெரிய மாமா என்னும் குடும்பத்தலைவனும் அவரின் பெரிய குடும்பத்தையும் குறித்த கதை. நாயர் குடும்பங்களில் மணமகன் திருமணம் முடித்து மணமகள் வீட்டிற்கு சென்று வாழ்வதே அன்றைய வழக்கம். சொத்துக்களில் முன்னுரிமை பெண்களூக்கே. அப்படி ஒரு குடும்பத்தில் பிறக்கும் ஒரு பெண் தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவரை மணந்து வீட்டை விட்டு சென்று விடுகிறாள். அவர்களுக்கு பிறக்கும் மகனை பற்றியும் அந்த குறிப்பிட்ட வீட்டையும் பற்றியது நாலுகட்டு நாவல்.


பாருகுட்டி வடக்கே நாலுகட்டு வீட்டில் பிறந்த பெண், கோந்துண்ணி என்னும் சூதாட்ட வீரனை (சூதாட்டம் கௌரவமாக கருதப்பட்ட காலகட்டம்) மணந்து வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசிக்கிறார்கள். அவர்களூக்கு ஒரு மகன் பிறக்கிறான். அப்புண்ணி என்னும் அந்த சிறுவன் 3 வயது இருக்கும் போது செய்தாலி குட்டி என்னும் நண்பன் வைக்கும் விருந்தில் மாமிசம் அருந்தி இறந்து போகிறார் கோந்துண்ணி, செய்தாலி அதில் விசம் வைத்திருந்தார் என்று பேச்சு.

அப்புண்ணி அவன் தாயுடன் வசித்து வருகிறான், பாருக்குட்டி ஒரு நம்பூதிரி வீட்டில் வேலை செய்து அவனை காப்பாற்றுகிறாள். அவர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு முத்தஷி ( பாட்டி) அப்புண்ணியிடம் அவன் தாயின் பிறந்த வீட்டு பெருமைகளையும் அங்கு நடக்கும் விசேசங்களையும் கூறி கொண்டே இருந்ததால் அவனுக்கு அங்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. முத்தாட்சியுடன் அங்கு நடக்கும் ஒரு சர்ப்பவிழாவுக்கு செல்கிறான், அவன் சொந்த பாட்டி அவனை ஆதரிக்கிறாள் ஆனால் குடும்பத்தலைவனான பெரியமாமா அவனை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளுகிறார், சிறுவனின் மனதில் இது ஆறாத ரணமாகிறது.

இதற்கிடையில் அப்புண்ணி 8 வகுப்பு செல்கிறான். சங்கரன் நாயர் என்பவர் அப்புண்ணிக்கும் அவன் அம்மாவிற்கும் உதவி செய்கிறார். ஊரார் தவறாக பேசுகின்றனர். அப்புண்ணி அதை உண்மை என்று நினைத்து வீட்டை விட்டு வெளியேறி தனக்கும் வடக்கே வீட்டில் உரிமை உண்டு என்று கூறி நாலுகட்டு வீட்டுக்கு செல்கிறான். பல்வேறு தடைகளுக்கு இடையில் நன்கு படித்து ஆசிரியரின் உதவியுடன் வேலைக்கும் செல்கிறான்.

இப்போது அப்புண்ணி இளைஞன், வேலையில் இருந்து வெகு நாட்களூக்கு பின் அவன் சொந்த ஊருக்கு வருகிறான், பெரிய மாமாவின் குடும்பமும் சொத்தும் பிரிக்கப்பட்டு சிதறிக்கிடக்கின்றது. பெரிய மாமா அவனிடம் நாலுகட்டு வீட்டை அடகில் இருந்து மீட்க பணம் கேட்கிறார், தனக்கே விற்க சொல்லி அதை பட்டா பண்ணிக்கொல்கிறான் அப்புண்ணி. இறுதியில் பிரிந்து போன தாயையும் சங்கரன் நாயரையும் அந்த வீட்டுக்கு அழைத்து வருகிறான், வீட்டில் புழுக்கம் தாங்காமல் திணறும் தாயிடம் இடித்து கட்டுவதாக சொல்லுவதை வீட்டை மட்டும் அல்ல அவன் தாயும் சங்கரன் நாயருக்குமான உறவையும் அவன் ஏற்றுகொள்கிறான் என்பதாக முடிகிறது.

அப்புண்ணி சிறுவனாக அறிமுகம் ஆகும் போது ஆரம்பிக்கும் கதை அவனில் ஒரு நாளில் பெரும் பகுதியை நாமும் கழிக்கிறோம். பயந்த சிறுவன், சொந்தங்களை விரும்பும் சிறுவன், தாயின் புது மனித அறிமுகத்தை எதிர்க்கும் சிறுவன், படித்து பெரியவனாகி மனதில் சினத்தோடு இருக்கும் அப்புண்ணி, அவன் விரும்பிய அம்மினியின் மரணம் அவனை மாற்றும் சிந்தனை வரை நல்ல பாத்திரப்படைப்பு. அவன் தந்தையை கொன்றாதாக கூறும் செய்தாலிக்குட்டி சில இடங்களிலும் இறுதியில் பெரியவனான அப்புண்ணிக்கு வேலை வாங்கித்தந்து உதவுவதும், சங்கரன் நாயர் அப்புண்ணியின் குடும்பத்திற்கு உதவுவதை வெறுப்பதும், பெரிய வீட்டின் குடும்ப உறுப்பினரான பெரியமாமா, கிருஷ்னண் குட்டி, பாஸ்கரன், அப்பத்தா, குட்டன், மாளு, அம்மினி, மீனாஷி, போன்ற எல்லா கதை மாந்தர்களூம மறக்கமுடியாத நபர்கள்.

மொழிபெயர்ப்பு நூல்களில் என்னை கவர்வது அவர்களின் வாழ்க்கை முறை, இதில் அதற்கு குறையேதும் இல்லை, ஒரு பெரிய தரவாட்டு வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் விரிவாக இருப்பது அந்த நிகழ்வுகளில் படங்களாக விரிகிறது. படிக்க (பொறுமையுடன்) நல்ல நாவல்.

டிஸ்கி : வேறு ஏதேனும் நல்ல நாவல்கள் இருந்தால் சொல்லுங்க