கமலா நேரு பார்க்கில் இங்கேயும் அங்கேயுமாய் சிலர் நின்று உக்கார்ந்து போட்டாவுக்கு சிரித்துக்கொண்டிருந்தனர். கார்த்திக்கும் மாயாவும் குழந்தைகளோடு நிற்க சித்ரா அவர்களை சுற்றி வளைத்து சுட்டுக்கொண்டிருந்தாள்.
"கார்த்திக் போதும் போலாமா' என்று மாயா நகர்ந்தாள். காலையில் இருந்து மும்பையை சுத்தி வெறுத்துபோயிருந்தாள் மாயா, எப்போது வீட்டுக்கு போவோம் என்று இருந்தது. கடைசியா மெரைன் ட்ரைவ் போகலாம் ப்ளிஸ் , சொன்ன கார்த்திக்கையும் சித்ரா, குழந்தைகளின் ஆர்வத்தையும் பார்த்து தலையசைத்தில் தயக்கமும் இருந்தது.
7 மணி ஆகிவிட்டது, இதற்கு மேல் இந்த மும்பை ட்ராபிக்கில் எப்படி வீடு போவது என்று மலைப்பாக இருந்தது மாயாவிற்கு.
"கார்த்திக் ப்ளிஸ் கிளம்பலாம். எனக்கு ஒரு டாக்ஸி வைத்துக்கொடு நானும் குழந்தைகளும் போயிடுவோம்" என்றாள்.
கார்த்திக் "இல்ல நான் ட்ராப் பண்றேன். சித்ராவும் ஆதியும் வீட்டுக்குப்போயிடுவாங்க. உனக்குதான் ஊரு புதுசு நானே ட்ராப் பண்றேன்" என்றான்.
"வேண்டாம் கார்த்திக் நீ டாக்ஸி மட்டும் அரேஞ்ச் பண்ணு" என்று பிடிவாதமாக மறுத்தாள்.
ஒரு நிமிடம் உற்றுப்பார்த்துவிட்டு ம்ம்ம் சரி என்று டாக்ஸியை அமர்த்தினான். 'போனை ஆஃப் பண்ணிடாதே, நான் வழி சொல்றேன். வீட்டுக்கு போனதும் கண்டிப்பா போன் பண்ணு என்று மறுபடியும் மறுபடியும் சொல்லிக்கொண்டே போனோன்"
. சரி கார்த்திக் வரேன். வரேன் சித்ரா. ஆதி பை. சின்னு, மது டாட்டா சொல்லுங்க போகலாம்,. என்றவாறு டாக்ஸியில் ஏறினாள்.
போட்டிருந்த உடை பாதி ஈரத்திலும் மனது முழு ஈரத்திலும் இருந்தது. ஒரு திருமணத்திற்கு மும்பை வந்தவள், கார்த்திக்கின் அண்ணன் ராஜேஷிடம் மும்பைக்கு வருவேன் என்று சொல்லி இருந்ததை நினைவு வைத்து ராஜேஷை முதல் நாள் காலையே அனுப்பி மாயாவையும் குழந்தைகளையும் வீட்டுக்கு வரவழைத்தான் கார்த்திக்.மாயா எவ்வளவு சொல்லியும் கேக்காமல் ராஜேஷ் பிடிவாதமாக இருந்தான். போன இடத்தில் அடுத்தவர்கள் முன் எதும் விவாதம் செய்ய விரும்பாமல் மாயா உடனே திரும்பிவிடும் கண்டிசனோடு கார்த்திக் வீட்டுக்கு வந்தாள்.
மாலை வரைக்கும் சித்ரா, ஆதியோடு பொழுது போனது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து கார்த்திக்கை சந்திக்கும் நொடியை தவிர்க்க முடியாமல் எப்படி எதிர்கொள்வது என்று யோசித்து மனது சலித்தது. ஏழுமணிக்கு கார்த்திக் வந்ததும் அப்போது பார்த்த அதே உருவம் சிறிது எடை கூடி இருப்பது போல் தெரிந்தது. அவனும் அதையே நினைத்திருப்பான் போல,
”அடையாளமே தெரியலை மாயா, ரொம்ப மாறிட்டே..” என்றான்.
”சரி கிளம்பறேன் கார்த்திக் உன்னை பார்க்கத்தான் இவ்ளோ நேரம் இருந்தேன்” ராஜேஷை வீட்டில் ட்ராப் பண்ண சொல்லிகேட்டாள்.
கார்த்திக் கொஞ்சம் கோபத்துடன் ”இதற்கு நீ அப்பவே போயிருக்கலாமே எதுக்கு இருந்தே” என்ற படி சித்ராவை அழைத்து ”மாயாக்கு டின்னர் ரெடி பண்ணு” என்றான்.
மாயா ”வேண்டாம் நான் கிளம்பறேன், கார்த்திக் ”,
”மாயா இப்ப போறதுன்னா போ இனி ஒரு 15 வருசம் கழிச்சு பார்த்துக்கலாம்” என்றான்.
மாயா பேசவில்லை. அதற்குள் ஆதி, சின்னு, மது எல்லோரும் அவர்கள் பள்ளிக்கதைகளுடன் வேறு உலகத்தில் இருந்தனர். மாயா நான் சமைக்கிறேன் என்று எழுந்தாள்,
கார்த்திக் ”நீ அது வேற செய்வியா? மாறிட்டேன்னு சொன்னனே அதுல இதும் வரும்” என்ற படி அவளை தொடர்ந்தான். ”மாயா சித்ரா சமைக்கட்டும் நீ கொஞ்சம் என்னோடு வா,”
எங்க?
வா சொல்றேன் என்ற படி கிளம்பினான், மாயா சித்ராவை பார்க்க அவள் போ என்பது போல் கையசைத்தாள்.
”நீ இங்க தங்கும் ஐடியாவில் வந்திருக்க மாட்டே, நாளைக்கு நான் லீவு, நாம வெளியில் போகலாம். அதனால்” என்று ஒரு ஷாப்பிங் ஏரியாவில் காரை நிறுத்தினான்.
மாயா முள் மேலிருந்தாள். ”சீக்கிரம் போகனும் கார்த்திக் அதெல்லாம் வேண்டாம். காலையில் நான் கிளம்பிடுவேன்” என்றாள்.
“மாயா ப்ளிஸ் இப்பவாவது நான் சொல்றதை கேளு” என்று கடைக்குள் நுழைந்தான். அவளுக்கும் சின்னு மதுவுக்கும் அவனுக்கு பிடித்த உடைகளாக வாங்கினான். மாயா வேறு ஒரு ஏரியாவில் சித்ராவிற்கும் ஆதிக்கும் சின்ன கிஃப்ட் வாங்கினாள். திரும்பி வரும் வரை பேச ஒன்றுமில்லை. தூக்கம் வராமல் கலைந்து போன கனவுகளின் மிச்சத்தோடு விடிந்தது.
முழு நாளும் கோவில், சானிடோரியம், ஹோட்டல், பார்க் என்று ஓடியது. வெளியில் போட்டா எடுக்கும் போதும் சித்ராவை விட்டு மாயாவோடு நடந்த படி பழைய ஊர்க்கதை பேசும் போதும் மாயா தயக்கத்துடன் சித்ராவை அடிக்கடி பார்த்துக்கொண்டாள். உனக்கு பைனாப்பிள் ஜூஸ் பிடிக்குமே மாயா என்று அவள் க்ளாஸில் அவனுடைய ஜூஸை பாதி ஊற்றும்போது சித்ராவின் கண்களில் எதையோ தேடினாள்..
டாக்ஸி சித்திவிநாயகர் கோவில் தாண்டி பிரபாதேவியில் நுழைந்தது. வீட்டில் இறங்கியதும் கார்த்திக்கை அழைந்து வந்து சேர்ந்து விட்டதாக தகவல் சொன்னாள். கார்த்திக் இரவு அழைக்கிறேன் என்றதும் மறுபடியும் கவலை வந்தது. சொன்னபடி இரவு பத்துமணிக்கு மேல் அழைத்தான்,
”மாயா நீ வருவேன்னு நினைக்கவே இல்லை. குழந்தைகளோடு உன்னைப்பார்த்ததும் எனக்கு ஒரு நிமிடம் என்ன பேசறதுன்னே தெரியலை. இன்னும் கோபமில்லைன்னு மட்டும் தெரிஞ்சுது. தேங்க்ஸ் மாயா. நம்ம கல்யாணம் நிச்சயத்தோட நின்னு போனதும் என் அம்மா அப்பாவை மீறி நான் எதும் செய்யலைன்னும் உனக்கு கோபமிருக்கும்னு நினைச்சேன் மாயா. நல்லா இருக்கியா ?”
“கார்த்திக் கல்யாணம் நின்னு போனாலும் நீயும் நானும் உறவினர் இல்லைன்னு ஆயிடாது. அதை நான் மறந்துட்டேன், நீயும் மறந்துடு, சித்ராவிற்கு நம்ம விசயம் தெரியுமா” என்றாள்.
கார்த்திக் ”தெரியும் அவ உன்க்குஒரு கிஃப்ட் கொடுத்திருக்கா, நான் ஏர்போர்ட் வரேன், கொண்டுவந்து தரேன்” என்றான்.
”வேண்டாம் நீ யாரிடாவது கொடுத்து அனுப்பு” என்றாள் மாயா.
ஏர்போர்டில் கார்த்திக்கின் அண்ணன் ராஜேஷ் வந்து இனிப்புகளோடு ஒரு சிறு பெட்டியும் கொடுத்து சென்றார். ப்ளைட் கிளம்பியதும் மெதுவாக பிரித்து பார்த்தால், ஒரு வெள்ளைக்கல் மோதிரம். மாயா கார்த்திக் திருமண நிச்சயத்தின் போது கார்த்திக் போட்ட மோதிரம், மாயா ஆத்திரத்தில் திருப்பி அனுப்பிய மோதிரம். இதை விரலில் போடுவதா? என்ன செய்வது என்று குழம்பியபடி இருக்கையில் சின்னு கேட்டாள் ”அம்மா ஆதி அண்ணாவோட அப்பா நமக்கு என்ன ரிலேசன்? நான் என்னான்னு கூப்பிடனும்?” மாயா திகைத்தாள்
ப்ளைட் சேரும் இடம் நெருங்கியது.