ஒரு ஜூன் மாதத்தில் என் நண்பனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருந்தாள், அவளை பார்த்ததும் எதோ ஒன்று இல்லாத வெறுமை டக்குன்னு தோனியது. கல்யாணம் ஆகி 8 மாசம் ஆச்சே, ஒண்ணும் விசேசம் இல்லையா போன்ற கேள்விகள் ஆரம்பம் ஆன நேரம். குழந்தையா நமக்கா? அய்யோ ஒரு பொம்மையை கூட ஒழுங்கா வெச்சுக்க வக்கில்லாத ஆளு, நம்ம பெருமை நமக்குதான் தெரியும்னு என்ற நினைப்பு மாறி ஒரு குழந்தை இருந்தா நல்லாத்தான் இருக்கும் போலன்னு தோன ஆரம்பித்தது அன்றுதான்.
ஜூலை 2, 2000 அன்று என் சின்ன மாமியார் மகப்பேறு மருத்துவர், உறுதியாக குழந்தைதான்னு சொன்னதும், அங்கயே விசில் அடிச்சேன். அந்த நிமிடம் முதல் என் குழந்தையுடன் பேச ஆரம்பித்தேன். அன்னைக்கே திரும்பி ட்ரெயினில் போகும் போது ஊருக்கதை அதனிடம் பேசி முடித்திருந்தேன். கூட்டமாகவே இருந்து பழக்கப்பட்ட நான் தனியா இருப்பதை விரும்பினேன். ஒரு மழைக்காலத்தில் என் நெஞ்சளவு தண்ணீரில் நடந்து வரும் போது அதையும் என் வயிற்றுக்குழந்தைக்கு சொல்லிட்டே வந்தேன்.
காதல் திருமணத்தின் அத்தனை சங்கடங்களையும் பாதியாக குறைக்க வந்த குழந்தை, டெலிவரிக்கு முன் கோவையில் செட்டில் பண்ணியே ஆகனும்னு பாட்டியின் அடத்தில் கோவை வந்தோம். ஒரு விடியற்காலையில் மருத்துவ அதிசயத்தில் ஒன்றாக பிறக்கும் குழந்தையை வலியின்றி ரசித்து பார்த்துகொண்டிருந்தேன். என்ன அழகான அழுகையா இருந்தது. என்ன குழந்தைன்னு தெரிஞ்சுக்கனுமான்னு மாமி கேட்டாங்க. எனக்கு பையன் வேணும்னு முதலில் நினைச்சுட்டு இருந்தேன். இல்ல வேண்டாம் நானே பார்த்துக்கறேன்னு சொல்லி குழந்தைவரும் வரை காத்திருந்தேன். தூயவெள்ளை டவலில் சுற்றிய ரோஜா வண்ண தேவதை, எவ்வளவு அழகான கண்கள், நான் பார்த்தவரைக்கும் உலகின் அழகிய கண், வரைந்த மாதிரியான இதழ்கள், சின்ன சங்கு பூ மாதிரி இமைகள், அழுத்தி எடுத்தால் ரத்தம் கன்றும் தாழம்பு கைகள். சொர்க்கம் என்பது என் முன் இருந்தது.
ஒரு நாள் இரவில் அழததில்லை, ஒரு முறைகூட என்னை சங்கடப்படுத்தியதில்லை, அது இது என்று எதற்கும் அடம் பிடித்ததில்லை. அவளுடைய உள்ளும் புறமுமாக எல்லாமாக நானே இருந்தேன், எனக்கு அவளும். மழலையாக பேசியதே இல்லை, நடக்க ஆரம்பிக்கும் முன்பே நன்றாக பேசுவாள், யாருமற்ற பகல் பொழுதுகளில் நானும் அவளும் இருண்ட அறைக்குள் பேசிக்களித்து களைத்த கதைகள் ஆயிரம். தாய்ப்பால் குடிக்கும் போதே என் முகம் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பாள், திடீரென்று முகம் விலக்கி ஒரு தேவதை சிரிப்பு சிரிப்பாள். அந்தக்காலம்தான் வாழ்ந்த காலத்தில் வசந்தம்.
சரியாக எல்.கே.ஜி போன அன்று இன்னொரு குழந்தை என் வயிற்றில். கொஞ்சம் பயந்தேன், பாசத்துக்கு பங்கு வருமென்று நினைப்பாளோ? மாலையில் வீட்டுக்கு வந்ததும் முதலில் அவளிடம் தான் சொன்னேன். அவளுக்கு ஊற்றி வைத்திருந்த ஹார்லிக்ஸை என் வயிற்றுக்கு அருகில் வைத்து பாப்ஸுக்கும்மா என்றாள். ஒரு குழந்தையை நல்லபடியா வளர்த்தியிருக்கிறேன் என்று கொஞ்சம் இறுமாந்தேன். தினம் பள்ளிக்கு செல்லும் போது அவள் ஸ்னாக்ஸில் கொஞ்சம் கொடுத்து செல்வாள், வந்ததும் அதுவரை முக்கியமான நான் விலக்கப்பட்டு அங்கு பாப்ஸ் வந்தது. இம்முறை வயிற்றிலிருப்பது பெண் தான் என்று தெரிந்திருந்தது. இருந்தாலும் சும்மா பாப்ஸ்ன்னு சொல்லுவோம். 8 மாதத்தில் ஒரு நாள் என் வயிற்றில் காது வைத்து குழந்தையின் அசைவை ரசித்துக்கொண்டிருந்தாள். எதோ சொல்லும் போது வயிற்றுக்குழந்தை செமையா ஒரு உதை உதைத்தது. என்ன சந்தோசம் அவளுக்கு. ரெண்டாவது குழந்தை பிறந்ததும் தினம் மருத்துவமனைக்கு வருவாள். வந்ததும் அவளிடம் தான் குழந்தைக்கு சர்வீஸ் போகும். நாப்கின் தருவது. எனக்கு உதவுவதுன்னு அவள் பிசியா இருப்பாள்.
இன்றுவரை பப்புக்கு அவள் தான் இன்னொரு அம்மா, நான் ஊரு உலகமே சுத்த போனாலும் அவளிடம் ஒரு வார்த்தை கண்ணு பப்புவை பார்த்துக்கடா என்று சொல்லி சென்றாள் போதும். கொஞ்சம் அடாவடியான எனக்கு இப்படி அமைதியான பொறுப்பான பெண்., உறவினர் எல்லாருமே சொல்லுவாங்க. அவ ரொம்ப அன்பான பொண்ணு, யாரு வந்தாலும் சிரித்த முகத்துடன் தண்ணீர் கொண்டுவந்து தருவாள். நானாக சொல்லித்தரவில்லை. அவளே செய்வாள். பிறகு அவளுண்டு அவ வேலை உண்டுன்னு அமைதியகா நகர்ந்துவிடுவாள். எப்பவும் படிப்பு படிப்பு .. பாட புத்தகமில்லை. அதை தவிர அனைத்தும். பொரி மடித்து வரும் பேப்பர் உட்பட படிச்சு முடிச்சுடுவா.
உலகத்தில் அவளுக்கு பிடித்த இன்னொரு விசயம் பரதநாட்டியம். அவளோட கடலளவு கண்ணுக்கு ஏற்ற விசயம். ரொம்ப சின்ன வயசில் இருந்து கத்துக்கறா, ஒரு முறை ஒரு நடன நிகழ்ச்சியின் போது வெள்ளை பட்டாடையில் முதல் ஆளா வரும்போது எனக்கு திக்குன்னு இருந்துச்சு. நம்ம குழந்தையா இது? இவ்வளவு அழகான ஒரு குழந்தைக்கு அம்மா என்பதே பெருமைதான். எந்த வரைமுறைகளூம் இல்லாத மிக இயல்பான எளிமையான பெண் என் மகள் என்றால் எனக்கு சந்தோசம் தானே. என் அம்மா இறந்த போதுஅழாமல் அசராமல் நின்று கொண்டு அடுத்த ஏற்பாடுகளை பார்த்துட்டு இருந்தேன். இவ வந்து கட்டிப்பிடித்ததும் என் அம்மாவின் ஸ்பரிச நினைவு உடனே வந்து ஒரு பெரிய அழுகையா வெளிவந்தது. இப்போதும் மனம் தடுமாறும் போதும் கோபப்படும் போதும் என் தெய்வ அசிரீரி அவள் தான்.
வர்ஷா வளர்ந்து கொண்டே போகிறாள் நான் அவளுக்கு குழந்தையாகிக்கொண்டே இருக்கிறேன். இதுவும் நன்றாக இருக்கிறது
என் உயிரான என் கண்மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், உனக்கு பிடித்தது மட்டுமே நடக்கட்டும். நம்ம மூணு பேருக்கும் பிடித்த பாட்டு.
உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி
13 comments:
//
வர்ஷா வளர்ந்து கொண்டே போகிறாள் நான் அவளுக்கு குழந்தையாகிக்கொண்டே இருக்கிறேன். இதுவும் நன்றாக இருக்கிறது//
இந்த வரிகளில் மனசை தொட்டுட்ட பிசாசே.. ஐ லவ் யூ.,,,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செல்லத்துக்கு
ரொம்ப நாளைக்கு பிறகு அழகான ஒரு பதிவை படித்த நிறைவு,திருப்தி..! வாழ்த்துக்கள் உங்கள் மூவருக்கும்..!
தூயவெள்ளை டவலில் சுற்றிய ரோஜா வண்ண தேவதை, எவ்வளவு அழகான கண்கள், நான் பார்த்தவரைக்கும் உலகின் அழகிய கண், வரைந்த மாதிரியான இதழ்கள், சின்ன சங்கு பூ மாதிரி இமைகள், அழுத்தி எடுத்தால் ரத்தம் கன்றும் தாழம்பு கைகள். சொர்க்கம் என்பது என் முன் இருந்தது.// கவிதை..!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வர்ஷா...
பதிவு ரொம்ப நெகிழ்ச்சியா வந்திருக்கு விஜி. வாழ்த்துகள் உங்களுக்கும்.
வர்ஷாவிற்கு , இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !!
உங்க அம்மாவால கண்ணு கலங்கி போச்சு வர்ஷாக்குட்டி.. ஊரார் கண்ணோட என் கண்ணும் பட்டிருக்கும்.. அம்மாட்ட சொல்லி சுத்திப் போடுங்க ச்செல்லம்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்டா.. என்னைக்கும் நீங்க மனம்போல வாழ என்னப்பன் துணை இருக்கட்டும் :)
ஆனந்த விகடன் வலைப்பூ அறிமுக வாழ்த்துகள்
( சும்மாவே ப்டம் காட்டுவீங்க. ஹூம், இனி என்ன நடக்கப்போகுதோ?)
காதல் திருமணத்தின் அத்தனை சங்கடங்களையும் பாதியாக குறைக்க வந்த குழந்தை,
வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க
- idhuve super-ah irukkunga.
Thaiymai evvalavu periya visayam. Adha, ivvalavu azhagaa, anubavichu ezhuthikkeenga... Ungaloda ezhuthunadai romba azhagaa, elimaiyaa, unarvupoorvamaa irukku... Vaazhthukkal.
அருமையா அருமை.... எண்ண உணர்ச்சிகளின் மொத்தக் குவியல்...
குடும்பத்தோட உக்காந்து சுத்தி போட்டுக்கோங்க... வர்ஷக்கு பிறந்த நல்வாழ்த்துக்கள்
ur blog is nice. Pls see my blog also and guide as to how u make these nice photographs etc
nice...
Post a Comment
வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க