Monday, June 4, 2012

என் சிறகும் வானமும்


ஒன்றரை மாதம் கழித்து இன்னைக்குதான் ரெண்டு பேரும் சூரிய உதயம் பார்க்கிறார்கள். என்ன ஒரு ஆட்டம். ஏப்ரல் 18இல் இருந்து நேற்றுவரை வாசலில் பெய்த வெயில் முழுதும் இவங்க தலையில் தான் இருந்திருக்கும்.

தாத்தா வீட்டுக்கு ஒரு வாரம் அனுப்பி வைத்திருந்தேன். அடுத்த நாளிலிருந்து போன், அம்மா போரடிக்குது வாங்கம்மா, எப்பம்மா வருவீங்க, சாப்பிடவே பிடிக்கலம்மா, ஒரு இரவு ரெண்டு பேரும் குட்நைட்டுக்கு பதில் ஒரே அழுகை, வந்து கூட்டிட்டு போங்கன்னு..பின்ன இங்க ரோஹித், ரிஷித், மஹாலஷ்மி, காவியா, சனந்தா, பிருந்தா, நிதின், ஹரிஷ், அச்சு, சக்தி, ஸ்ரீவத்ஸன், இத்தனை பேரோட செம ஆட்டம். இதில் 10 நாள் முன்பு ரோஹித், ரிஷித் (ரெண்டு பேரும் இவங்க கஸின்) ஊருக்கு போயிட்டாங்க. சக்தி, அச்சு வீடு காலி செய்து போயிட்டார்கள். இருந்தாலும் கொஞ்சமும் குறையாத விடுமுறைகூத்துதான். வழக்கமாக போகும் டேபிள்டென்னிஸ், டான்ஸ், பாட்டு எல்லாம் நிறுத்திட்டேன். இருக்கவே இருக்கு இன்னைக்கு இருந்து அந்த கொடுமை எல்லாம். ஒரு மாசம் ஜாலியா இருக்கட்டும்னுதான்.

ம்ம்ம் ஒரு சின்ன கொசுவர்த்தி சுத்தி பார்த்தால், பால்யமும் பள்ளிவிடுமுறையும் எவ்வளவு அழகானது. இப்ப நாலு சுவருக்குள் விளையாடினாலும் அதுவும் அழகுதான். சின்ன சண்டை,கோபம், சமாதானம், மறுபடியும் சண்டை.

வர்ஷா பள்ளி சென்ற முதல் நாள் தான் பப்பு வயிற்றில் இருப்பதை உறுதி செய்த நாள். அதனால் அது எனக்கு கொஞ்சம் ஸ்பெஷலான நாள். தினம் அவளை நானே கொண்டு விட்டு கூட்டிட்டு வரனும்னு நினைத்தேன். பப்பு பள்ளிக்கு போனா நாளில் ஊரெங்கும் செம மழை. எப்படித்தான் மிஸ் இவளை சமாளிப்பாங்கன்னு கவலையா இருந்தது. அதே போல் இவங்க ரெண்டு பேரில் பப்பு மிஸ்கிட்ட தான் ஏகப்பட்ட பிரச்சனை.

ஒரு வாரமாக துவங்கிய தடபுடல் ஏற்பாடுகள் புது சாக்ஸ், பென்சில் பாக்ஸ், பேனா, இன்னபிற வஸ்துகள். ஆனால் ரெண்டு பேரிடமும் நல்லவிசயம் தேவையற்றதுன்னு எடுத்து சொன்னா வேண்டாம்னு ஒதுக்கிடுவாங்க. அதிக விலையுயர்ந்த எந்த பொருளையும் வாங்கித்தரமாட்டேன். கடையில் பென்சில் பாக்ஸ் 400க்கும் மேல விக்கறாங்க. அதை வாங்கித்தரவும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்!!!  2 ரூவா பென்சிலுக்கு 400ரூபாய் பாக்ஸ்..!!!


என்னதான் விளையாட்டாக நாட்கள் சென்றாலும் அவங்க பள்ளி திறக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். எல்லாவருடம் போலவும் இந்த வருடமும் உற்சாகமாக கிளம்பி போயாச்சு. எனக்குதான் எல்லா அறைகளும் காலியாக வெறுமையாக இருக்கும். ஒரு வருடம் எப்படி ஓடிற்று? கண்முன் குழந்தைகள் வளர்ந்து வருவதை சின்னதான சீருடைகள் எடுத்துரைக்கிறது. எனக்கிருக்கும் பொறுப்புகளை அடுத்த அளவுக்கு போன அவர்களின் காலணிகள் கவனிக்க செய்கின்றது. தலைவாரும் போது அவர்களின் உயரக்கூடல் ஒரு வருடம் கூடியதை உணர்த்துகிறது. ஊட்டிவிடும்மா என்று சொல்லாமல் வர்ஷா தானே வேகவேகமாக சாப்பிடுவதை பார்க்கும் போது பால்யம் முடிந்து பதின்ம வயது வருகிறதோ என்று மனசுக்குள் ஒரு சின்ன பதற்றம்.


போட்டி நிறைந்த இந்த உலகில் மனசு விட்டு சிரிப்பது கூட குழந்தைகளுக்கு கடினமாக விசயமாக ஆகிவிட்டது. ஒரு சாக்கு மூட்டை அளவு புத்தகங்கள், இதெல்லாமா அவங்களுக்கு வாழ்க்கையை சொல்லிதரும்? இவ்வளவு விடியக்காலையில் பள்ளிக்கூடத்தில் என்ன செய்வார்கள்? காலையில் 8.40 முதல் மாலை 4 மணிவரை. என்ன கொடுமை இது? 10 மணிக்குப் பள்ளி ஆரம்பித்தால் என்ன? கிட்டத்தட்ட 8 மணிநேரம் ஒரே இடத்தில் ஒரே வேலையை விதவிதமான குணாதியம் உள்ள ஆசிரியர்களுடன் கழிப்பது கொஞ்சம் கடினம் தான். அதும் அறிவியல் ஆசிரியர்களும் கணித மேதைகளூம் எப்போதுமே கடினமாகவே இருக்கிறார்களாம்.


ஸ்கூல்க்கு போங்க, சந்தோசமா இருங்க, சொல்லித்தரதை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க, சும்மா நெஞ்சில் அடிச்சு மனப்பாடம் பண்ண வேண்டாம். ட்யுசன் வைக்க மாட்டேன், நானும் சொல்லித்தர மாட்டேன், நீயா படி நீயா புரிஞ்சுக்க, என்ன புரியுதோ அதை எழுது அதுக்கு மார்க் வந்தா போதும். அதனால் ரொம்ப டென்சன் ஆகாமல் போ. எந்த டீச்சரையும் பார்த்து பயந்துக்க வேண்டாம், தெரியலைன்னா தைரியமா கேளுன்னு சொல்லி அனுப்பிருக்கேன்.


வர்ஷா,பப்பு பள்ளியில் ஆயிரம் பேரில் நீங்களும் ஒருத்தர், ஆனா எனக்கு என் உலகமே நீங்க தான்.  நான் வெறும் தாய்ப்பறவை, என் சிறகும் வானமும் நீங்க தான். படிச்சு பெரிய வேலைக்கு போயி சம்பாதிக்கனும்னு இம்சை பண்ணமாட்டேண்டா. உங்களுக்கு சவுகரியா இருக்கும் அளவுக்கு நான் சம்பாதிச்சு தரேன். நீங்க சந்தோசமா இருங்க. வாழ்க்கையை அதன் போக்கில் வாழகற்றுக்கொள்ளுங்கள். எவ்வளவு போராட்டமான தருணமாக இருந்தாலும் எதிர்கொள்ளுங்கள், பணம் காசை விட பெரியது மன தைரியம், தன்னம்பிக்கை. அனாவசிய பயமில்லாமல், சுதந்திரமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். அதுவே பெரிய பாடமும் படிப்பும்.


வாழ்த்துகள் கண்ணுகளா.. ஆல் தெ பெஸ்ட்


.உங்க ரெண்டுபேருக்கும் பிடிச்ச உங்க ஃபேவரைட் பாட்டு :)

YOU FOLLOW WHAT YOU FEEL INSIDE, YOU DON'T HAVE TO TRY, IT COMES NATURALLY :))



10 comments:

ஸ்வாமி ஓம்கார் said...

இலக்கியம் இலக்கியம் :)))

Unknown said...

வாழ்த்துகள் வர்ஷா,பப்பு

mou said...

very nice song.....

உலக சினிமா ரசிகன் said...

மேடம்...பெண்கள் பிரச்சனை சார்ந்த உலகசினிமாவை அறிமுகப்படுத்தி எழுதலாமே!

மகி said...

அம்மான்னா அம்மாதான்,,,,, விஜி என் பாலிசியும் இதேதான்...

காவேரிகணேஷ் said...

தன்னம்பிக்கை தொடர் குழந்தைகளுக்காக..

கோபிநாத் said...

நல்ல பகிர்வு அக்கா ;-)

சுசி said...

அழகான நெகிழ்வான பகிர்வுடா.. குட்டீஸ்க்கு வாழ்த்துகள் :)

இல்யாஸ்.மு said...

அட்டகாசம்

சந்திர வம்சம் said...

" காலையில் 8.40 முதல் மாலை 4 மணிவரை. "

தவறு! அதிகாலை 5.00 மணிக்கே 'தனிப்பயிற்சி' ஆரம்பமாகிறது!

Post a Comment

வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க