Sunday, February 16, 2014

காசி பயணம் - தயாராகிறோம்
 காசி


கஷ்டம் வரும்போது தான் கடவுளை நினைப்பாங்கன்னு சொல்லுவாங்க. அப்படி பார்த்தா நானெல்லாம் வாழ்க்கை முழுசும் கடவுளை மட்டுமே நினைச்சுட்டு இருக்கனும். கடவுளுக்கு இருக்கும் பிசி ஷெட்யுல்ல எப்பவும் நாம தொல்லை பண்ணிட்டே இருக்க கூடாதுன்னு நினைக்கற ஆள் நான். ஓவரா சாமி பக்தியினால அடுத்தவங்களை டார்ச்சர் பண்ணாம இருப்பதே பக்தி தானே? சாமி நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு கோவில்களுக்கு போறது பிடிக்கும். 
 
ரொம்ப பிடிச்ச இடம்னா திருப்பதி. இந்தியாவில் எத்தனை மொழி இருக்கோ அத்தனையும் மக்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும் ஊர். காரணமே சொல்லாம சில இடம் சில மனிதர்களை பிடிப்பது போல திருப்பதி எனக்கு பிடிச்ச இடம். நான் அதிகம் போனதும் திருப்பதிதான். அதற்கு அடுத்தபடியா கும்பகோண கோவில்கள். ஆள் அரவமே இல்லாத ஏக்கர் கணக்கான கோவில்களுக்கு உள்ளே போகும் போதே இதை கட்டின மன்னரோ, மக்களோ எப்படி இங்க வந்திருப்பாங்க, என்னல்லாம் பண்டிகை, ஜனங்க எப்படி இருந்திருப்பாங்கன்னு ஒரு படம் உள்ள ஓட ஆரம்பிக்கும். தஞ்சை பெரிய கோவிலுக்கு முன் வாசலிருந்தே படம் ஆரம்பிச்சிடும்.
 
 அதே போல் ஊர் சுற்றல் அல்லது டீசெண்டா பயணம்னு வைச்சுக்கலாம் அதுவும் நமக்கு இஷ்டமான ஒன்று. நாம பார்த்த இடங்கள் ரொம்ப குறைவு பார்க்காத இடங்கள் ஏராளம்னு அடிக்கடி தோனும். இங்க இருக்கும் பேரூருக்கு 3 முறைதான் போயிருக்கேன். மருதமலை ஒரே ஒரு முறை தான் போயிருக்கேன். பழனி போனதே இல்லை. ஆனா போகனும்னு நினைத்த இடங்கள் நிறைய இருந்தது.


சில நேரங்களில் நம்மையும் அறியாமல் சில விசயங்கள் நடக்கும். எதோ ஒரு விதத்தில் நம்மை வழி நடத்தும். எதிர்பார்க்காமல் நம் வாழ்க்கை சூழலையும் முறையையும் மாற்றும்.    அப்படி மாற்றி அல்லது மாற்ற சென்ற பயணங்களில் ஒன்று காசி. சென்ற முறை கும்ப மேளாவின் போது போகும் வாய்ப்பு அமையவில்லை. இந்த முறை எப்படியும் போகனும்னு இருந்தேன். காசி நமக்கு அளித்த பிம்பம் வேறு மாதிரியானது. நம்ம படிப்பில கூட ஒரு முக்கிய கேஸ் ஸ்டடி கங்கையின் அசுத்தம் பற்றியதுதான்.  வருடங்களாக காசி பற்றி அடுத்தவர் சொன்ன கதையும் அதை உறுதிசெய்ததுதான். ஆனால் ப்ரணவ பீட மாணவர்களின் கருத்தும் பார்வையும் அதை மாற்றியது. காசி போகவேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது.

 
 
கோவையிலிருந்து பெங்களூர் ட்ரெயின்  , பெங்களூரில் சில மாணவர்களும் இணைந்து டெல்லி - அவுட் சைட் டெம்ப்ரேச்சர் 18ன்னு சொன்னதும் ஆ இதெல்லாம் ஒரு குளிரான்னு தோனிச்சு. டில்லியிலிருந்து வாரணாசி ப்ளைட் சேர்ந்து அங்கிருந்து வாரணாசி நகருக்கும் நுழையும் போதே ஒரு நல்ல பயணத்திற்கான அத்தனை அறிகுறிகளும் தெரிந்தது. வட இந்திய ஊர்களில் பலவற்றில் பயணம் செய்திருப்பாதால் அதன் சுத்தம் சுகாதாரம் பற்றி நன்றாகவே தெரியும். அந்த இலக்கணம் சற்றும் குறையாத வழித்தடம். ஏன் தெரியுமா வட இந்தியாவில் சப்பாத்தி நல்லா பண்றாங்க, ரொம்ப சின்ன வயதிலிருந்தே வரட்டி தட்டி பழகிடும் பெண்களால் தான். ஊரெங்கும் வரட்டி ஒரே மாதிரியான அளவுகளில். ஒரு வழியாக குளிர் லேசா எலும்பை தொட்டு பார்க்க காசிக்குள் நுழைகிறோம்.

இன்னும் மனிதர்கள் இயக்கும் கை ரிக்‌ஷா குறுக்கும் நெடுக்குமாக அலைகிறது, ஒரு ரிக்‌ஷாவில் பெரியவர்கள் முன்னாடியும் பின்னாடி சின்ன குழந்தைகளும் அடைத்தும் ஒரு 10 அடி அகலமுள்ள தெருவில் கார், ரிக்‌ஷா, நடக்கும் மனிதர்கள், போதாகுறைக்கு பார்க்கிங் என்று அத்தனை நெரிசலான தெருக்களை கடந்து காசியில் நாங்கள் தங்கவேண்டிய கேதார் காட் எனப்படும் இடம் அடைந்தோம். ரிக்‌ஷா மட்டுமே போகும் குறுக்கலான தெருக்களில் உள்ளது குமாரசாமி மடம். இரவும் குளிரும் சூடான டீ இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தவுடன் சின்ன மண் குடுவைகளில் டீ அதுவும் கும்பலான எங்களுக்காக ஏலக்காயை வாங்கிட்டு வந்து சுடசுட டீயும் திக்கான பாலும் கிடைத்தது
 
 
   
 
 
 


காசி, மிக பழமையான நகரம், எதிரிகளால் கோவில் கொள்ளையடிக்காமல் இருக்க குதிரையில் வரும் மனிதர்களின் கால் சுவறில் தட்ட வேண்டும் என்று திட்டமிட்ட மிக குறுகலான சாலைகள், சாலைமுழுதும் சர்வ சுதந்திரமாக நடமாடியும் அவைகள் மனது வைத்தால் மட்டுமே நாம் கடந்து போகமுடியும் என்ற நிலைக்கு நம்மை வைக்கும் மிகபெரிய திமிலோடு பசுக்கள், எங்குமே சிங்கிளாக பார்க்கமுடியாத படி குறைந்த பட்சம் 10 குட்டிகளுடன் நாய்கள், குறுக்கலான தெருக்களின் இரு மருங்கிலும் ஏகப்பட்ட கடைகள், சுடசுட ரசகுல்லா கண்ணெதிரே வேகும், வாயில் பாக்கில்லாத மனிதர்களே இல்லாத கொஞ்சம் அழுக்கடைந்த மிக அழகான நகரமாக கண் முன் விரிகிறது. காசியில் நாம், நினைக்கவே பிரமிப்பாக இருந்தது. நாம் வளர்ந்த சூழலிலும் வாழ்க்கை முறையிலும் பார்க்கவே வாய்ப்பு குறைந்த ஊரில் இருப்பது  பிரமிப்பாக தானே இருக்கும்
 


 
 
 
 
 விடிகிறது, காலை 6 மணிக்கு கங்கை கரையில் கூடவேண்டும் என்பது நிகழ்ச்சிபடி முதல் வேலை. ஆறு மணி என்பது நடுஇரவு போன்றிருந்த இருள் பிரியாத வேளையில் ஏகப்பட்ட ஸ்வெட்டர் சால்வைகளூடன் கங்கை கரையை அடைந்தாகிற்று.  கரையில் அமர்ந்து கங்கையை கவனியுங்க, சூரிய உதயத்திற்கு பின்தான் குளியல் என்று சாமி சொன்னதும் படிகளில் அமர்ந்து முன் இருக்கும் நதியை அமைதியாக பார்க்க ஆரம்பிக்கிறோம்
 

 கண் முன் ஒரு நான்கு அடியில் தண்ணீர் தெரிகிறதே இதுவா கங்கை? வெறும் புகையும் இடது புறம் நான்கு படகுகளும் மட்டுமே தெரிகிறதே என்று தோன்றும் போதே மினுக் மினுக் என்று மிதந்து வருகிறது விளக்குகள். இருளில் முன் தெரியும் பனி புகையில் தூரத்தில் இரு வெளிச்ச புள்ளிகள் மிதந்து வருவதை நினைத்து பாருங்கள். ஓ அவ்வளவு தூரம் ஆறு இருக்கிறது என்று நினைக்கும் போதே மெல்ல மெல்ல இருள் விலகி கண் முன் ஒரு பிரவாகம் தெரிகிறது. இடதும் வலதும் திரும்பி பார்த்தால் கண்ணெட்டிய தூரம் வரை கடலென நீர். கங்கை. எத்தனையோ யுகங்களாக இருக்கும் மௌன சாட்சி. பெண்ணென்றும் தாயென்றும் தெய்வமென்றும் வர்ணிக்கப்படும் பேரழகி. மேலே பனிபுகையை ஆடையாக அணிந்து எந்த சலனமும் இன்றி விச்ராந்தியாக போகும் பேரிளம் பெண்ணாக நழுவுகிறாள். மற்ற மாணவர்களும் வந்ததும் குளிக்கும் நேரமும் வந்தது. முதல் நாள் உள்ளே இறங்கும் போது மட்டுமே குளிர் தெரிந்தது. மற்ற நேரங்களில் எல்லாம் அந்த குளிரும் இருளும் ஆற்றில் இறங்க ஆனந்தமாகவே இருந்தது. ஆர்க்யம் என்றால் என்ன? புனித நீர் நிலைகளில் எப்படி நீராடவேண்டும் என்பது முதற்கொண்டு அனைத்துமே எங்கள் குருவினால் சொல்லப்பட்டிருந்ததால் அதன்படி அனைவரும் நீராட துவங்கினர்.  நாங்கள் இருந்த கேதார்காட் படித்துறையில் பெண்களுக்கு உடை மாற்றும் அறை இருப்பதால் அங்கேயே உடை மாற்றி செம்பில் தண்ணீர் எடுத்து கேதாரநாதர் கோவில் இருக்கும் அனைத்து கடவுளருக்கும் நாங்களே அபிசேகம் செய்து கேதார நாதரை தரிசித்து அங்கிருந்த மண்டபத்தில் ஜெபம் செய்வதை வழக்கமாக கொண்டோம்.
கேதார்காட் படித்துறை

27.1.14
காலை 9 மணிக்குள் கேதாரநாதர் தரிசனம் முடித்து காசி விசுவநாதரை தரிசிக்க சென்றோம். வழக்கமான பிரச்சனைக்குரிய வழிபாட்டு தலங்களில் இருப்பதை போல் இங்கும் செக்யுரிட்டி செக்கிங் அதிகம் தான். செல்போன், டார்ச், பேனா, கத்தி, கீ செயின் முதல் கொண்டு எந்த ஒரு பொருளையும் எடுத்து செல்லகூடாது. காசியில் அதிக பணம் கையில் வைத்திருப்பதும் பாதுகாப்பில்லை என்பதால் பர்ஸ் அவசியமின்றி போகிறது. செருப்பை தங்கியிருந்த இடத்திலேயே விட்டு குறுகலான வீதிகளை கடந்து பயணிக்கிறோம். எங்கள் குழுவில் மொத்தம் 40 பேர். அனைவரும் ஒன்றாகவே இருந்தோம். கொஞ்சம் வழி தவறினாலும் மீண்டும் சேர்வது சிரமம். ஒரு வழியாக உள் நுழைந்து வேறு வழியாக வெளியேற வேண்டும். ஊரும் புதிது பாஷையும் தெரியாது. எனவே எங்கு சென்றாலும் ஒன்றாகவே இருத்தல் நலம்.   பகல் பூஜை நேரமானதால் கோவிலுக்குள் நான் உட்பட மூன்று பேரை மட்டும் அனுமதித்து மற்றவர்களை வெளியில் நிறுத்திவிட்டார்கள். உள்ளே சென்று திரும்பி பார்த்தால் மற்றவர்களை காணோம்.. திரும்பி வெளியில் வரவும் முடியாது. கோவிலுள் உள்ளே நல்ல கூட்டமும்...  .

கங்கையிலிருந்து காசி நகரம்

(தொடரும்)

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் பயணம் எங்களுக்கும் உதவும்...

நாங்களும் கூடவே வருகிறோம்... தொடர வாழ்த்துக்கள்...

திவாண்ணா said...

சஸ்பென்ஸு!

subramanian said...

Viji Ram: Unga article Super.. Photos too... From your varansi trip album and Swamiji's varanasi album I have used some of the photos in my article.. Thanks to both you.. Eagerly awaiting for your next post about the trip... Thanks for sharing...
-Subu

கிரி said...

நானும் காசி சென்று வர வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். விடுமுறை பிரச்சனை காரணமாக முடியாமல் உள்ளது.

இது போல கட்டுரைகள் மூலம் கொஞ்சம் தெரிந்து கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

காசி பற்றி அதன் அமைப்பு பற்றி இன்னும் கூடுதல் தகவல்களை எழுதவும்.

Unknown said...

gangai pol varthai pravagam. guruvai minjina sishyai. vazhthukkal. eagerly waiting for the next episode.

அகநாழிகை said...

நல்லா எழுதியிருக்கீங்க.

வெங்கட் நாகராஜ் said...

அருமை.... காசிப் பயணத்தில் நான் உணர்ந்தவற்றை இங்கே மீண்டும் படிக்க முடிந்தது.....

அமுதா கிருஷ்ணா said...

சூப்பரா எழுதி இருக்கீங்க.நான் போன வருடம் ஜூன் மாதத்தில் காசி,அலகாபாத் ஐந்தாவது முறையாக போய் வந்தேன். இன்னும் போவேன்.எனக்கு நடப்பது குரு தசா.எனவே தான் இத்தனை முறை போக முடிந்தாக நினைக்கிறேன்.

Post a Comment

வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க