Tuesday, November 30, 2010

சி.சீ, மா, கும்ப கும்ப,,கும்பகோணம்.........

கொச்சின் போலாமா? திருவனந்தபுரம்?இதற்கு நடுவில் எங்க அஸோசியேசன்ல இருந்து கோவா இல்லைன்னா நெல்லியம்பதி போகலாம்னு வேற ஐடியா? கடைசியில் நவக்கிரக கோவில் போகலாம்னு முடிவு செய்து ஒரு வழியா கிளம்பினோம். கிளம்பினோம்னு சும்மா சொல்றேன், ஆனா இருக்கும் 4 நாளில் குழந்தைகளை அழைத்து செல்வதாலும் கும்மோனம் கோவில்கள் மதியம் சாமிகளை தூங்க வைத்து விடுவார்கள் என்பதாலும் மேப் வைத்து ப்ளான் போட்டு சென்றோம்..
கோவையிலிருந்து ஜனசதாப்தி ட்ரெயினில் காலை 7 மணிக்கு புறப்பட்டோம், திருப்பூரில் என் ஃப்ரெண்ட் சரோ, கோபால் அவர்கள் குழந்தைகள் அம்ருதா, சஞ்சிதாவும் சேர்ந்து கொண்டனர்.

எங்கள் ப்ளான் படி வியாழன் மதியம் முதல் ஒரு சாமியை விடாமல் பார்த்து விடுவது என்று.. வியாழன் மதியம் கும்பகோணத்தில் தங்கினால் அதன் அருகில் உள்ள கோவில்களை பார்த்து, அடுத்த நாள் தஞ்சை பெரிய கோவிலும் இன்ன பிறவும், பிறகு மாயவரம்.

இந்த ப்ளான் மிக அருமையாக, நேரம் மிகச்சரியாகவும், அனைத்து முக்கிய தலங்களை பார்க்கும் படியும் இருந்தது. தஞ்சை பார்க்க தேவையில்லை எனில் மாயவரத்தில் தங்குவது நல்லது. நாங்கள் தஞ்சையை எங்கள் லிஸ்டில் முக்கியமாக வைத்திருந்ததால் கும்பகோணத்தில் தங்கவேண்டியதாயிற்று.

வியாழன் மதியம் 2 மணிக்கு லஞ்ச் முடித்து அன்று வியாழன் என்பதால் குரு கோவில் திறந்திருக்கும், இல்லாவிட்டால் வழக்கமாக 4 மணிக்கு தான் கோவில் திறப்பார்களாம். முதலில் ஆலங்குடி குருஸ்தலம், அங்கிருந்து திருநாகேஸ்வரம், வழியில் இருக்கும் பாடைகட்டி மாரியம்மன் கோவில், உப்பிலியப்பன் கோவில், ஐய்யவாடி ப்ரதியங்கரதேவி பார்த்து கும்பகோணம் வந்து சாரங்கபாணி கோவில்.

அடுத்த நாள் வெள்ளி அன்று காலை 6.30 மணிக்கு கிளம்பி முதலில் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, புன்னைநல்லூர் மாரியம்மன், தஞ்சை பெரிய கோவில், திருவையாறு, திங்களூர் சந்திரன் கோவில், சுவாமிமலை, மறுபடியும் கும்பகோணம் திரும்பி லஞ்ச் முடித்து ஹோட்டல் ரூம் வெகேட் பண்ணி அங்கிருந்து மங்களாம்பிகை,சூரியனார் கோவில், கஞ்சனூர் சுக்கிரன் ஸ்தலம் பார்த்தோம், வழியில் திருமணஞ்சேரி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இரவு மயிலாடுதுறை அடைந்து அபி டாடி ஏற்பாடு செய்திருந்த ஹோட்டல் அறையில் சேர்ந்தோம், அடுத்த நாள் காலை 8 மணிக்கு கிளம்பி வைத்திஸ்வரன் கோவில், திருவென்காடு புதன் ஸ்தலம், கீழ்பெரும்பள்ளம் ( கேது) திருக்கடையூர் அபிராமி, மார்க்கண்டேயர் கோவில், அனந்த மங்களம் ஆஞ்சிநேயர் கோவில், தரங்கம்பாடி போர்ட், திருநள்ளாரு சனிஸ்வரன், கூத்தனூர் சரஸ்வதி, திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில்..மறுபடியும் இரவு மாயவரம்

அடுத்த நாள் சிதம்பரம், தில்லைக்காளி மட்டும் பார்த்து மதியம் அபி டாடி வீட்டில் லஞ்சு முடித்து ட்ரெயினைபிடித்தோம்.

இதான் ட்ரெயிலர்.. மெயின் பிக்ஸர் இனி ரெண்டு நாள் கழித்து,, ட்ரெயினில் மருதாணி வச்சு போற வரவங்க ட்ரெஸை கெடுத்தது, டிடிஆரே என்கிட்ட அட்வைஸ் கேட்ட கதை, அதைப்பார்த்து மக்கள் ஓட்டிய கதை, மழையோடு உறவாடி மழையோடு ஊரு சுத்தி, மழையிலேயே திரும்பி வந்தது, எல்லாகோவிலும் பிரசாதம் நல்லாருக்கும் நம்பி ஏமாந்தது, டாடா சுமோவில் ரெண்டு பக்கமும் தண்ணீர் சிதற ரெயின் கோட்டில் கேப்டன் எஃபெக்டில் போனது, எல்லாக்கதையும் வரும்.. வெயிட்டிஸ் .................:)

Friday, November 19, 2010

நூல் விலையை எதிர்த்து போராடும் திருப்பூர்


திருப்பூர்... மகாபாரத காலத்தில் அர்ஜுனன் பசுக்களை போரிட்டு திரும்ப அழைத்து சென்ற இடம் என்பதால் திருப்பூர் என்று வழங்குவதாக கூறுவர், கடும் உழைப்பாளிகளை கொண்ட ஒரு சிறிய நகரம், கிட்டத்தட்ட 3500 நேரடி ஏற்றுமதி நிறுவனங்களும் அதை ஒட்டி 20,000க்கும் அதிகமான துணைத்தொழில் நிறுவனங்களையும் கொண்டது. இன்றைக்கு திருப்பூரில் நூல் ஏற்றுமதியை தடை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது, அனைத்து சங்கங்களும் கலந்து கொள்ளும் இதை பெரிய அளவில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

நூல் என்பது முக்கிய மூலப்பொருள், பனியன் உற்பத்தி விலையில் கிட்டத்தட்ட 25% நூல் விலை இருக்கும், அது தவிர நிட்டிங், டையிங், ப்ரிண்டிங், கட்டிங், ஸ்டிட்ச்சிங் என்று மற்ற வேலைகளும் சேர்ந்து தான் பொருளின் விலை, ஆனால் தற்போது நூல் விலை கடுமையான ஏற்றத்தில் இருக்கிறது. மற்ற எந்த நாடுகளும் மூலப்பொருள் ஏற்றுமதியை ஊக்குவிப்பது இல்லை, ஏனெனில் மூலப்பொருளாக ஒன்றை ஏற்றுமதி செய்வதை விட ஃபினிஷ்ட் ப்ராடக்ட் எனப்படும் உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்வது ஒரு நாட்டின் வேலை வாய்ப்பு, பணப்புழக்கம், அன்னிய செலாவனி, தொழில்நுட்பத்திறன், உள்கட்டமைப்பு என்று எல்லாத்துறையையும் வளர்க்க
உதவும்.

ஏற்றுமதி ஆர்டர் பெறப்பட்டு அதிகபட்சம் 100 நாட்களுக்குள் முடிக்கவேண்டும், இன்றைய நிலையில் நூல் விலை தினம் தினம் மாறுகிறது, ஒரு ஆர்டர் பெறப்படும் போது உள்ள விலையில் இருந்து மீண்டும் நூல் விலை அதிகரிப்பால், அதன் உற்பத்தி செலவும் மாறுபடுகிறது,  இதனை பையர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், இந்த அதிகப்படியான விலையேற்றம் இங்குள்ள தொழில் நிறுவனங்களே செய்ய வேண்டும், கடந்த ஆறு மாதத்தில் இந்த விலையேற்றத்தை நினைத்தே நிறைய்ய ஆர்டர்கள் மறுக்கப்பட்டுள்ளன. ஒரு தொழில் செய்வதே லாபம் ஈட்டத்தான், அதையும் தெரிந்தே நட்டப்பட யாரும் விரும்ப மாட்டார்கள்.


இந்த நூல், காட்டன், துணி ஏற்றுமதியின் உலகின் முதலிடத்தில் உள்ள சீனா கூட மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வது இல்லை, மேலும் வெளியிடங்களில் இருந்து இறக்குமதி செய்வதை அனுமதிக்கின்றனர், நம் நாட்டிலும் கூட இறக்குமதி செய்து அதை உபயோகித்து உற்பத்தி செய்து மீண்டும் ஏற்றுமதி செய்யும் போது வரிசலுகைகள் உண்டு. சீனாவின் உற்பத்தி திறன் என்பது மிகப்பெரிய ஆர்டர்களை கொண்டது, ஆனால் நம் நாட்டின் பலமே எவ்வளவு குறைந்த அளவு ஆர்டர்களும் நாம் செய்து முடிப்போம் என்பது தான். சீனாவின் அரசாங்கம் உற்பத்திக்காக கொடுக்கும் சலுகைகளில் 10 % கூட நம் நாட்டு அரசாங்கம் தருவதில்லை என்பதே உண்மை.


நூல் விலை ஏற்றுமதியை தடை செய்து அல்லது முறைப்படுத்தி உள்நாட்டு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த பனியன் தொழிலை வளப்படுத்த வேண்டும்.

Thursday, November 11, 2010

ஹவ் ஸ்வீட் விஜி :)உற்றுப்பார்த்தா,,அட !!! என்னது என் ரத்தம் மட்டும் எனக்கு பிடிச்ச மாதிரி மெரூன் கலரில் இருக்கு, இதை ரத்தமெடுத்த அம்மினிகிட்ட கேக்கலாம்னு நினைச்சேன், ஏற்கனவே 3 டைம் ரத்தம் எடுத்துட்டாங்க, இதையும் கேட்டா கடுப்பில இன்னும் ரெண்டு குத்து குத்திருவாங்கன்னு பேசாம இருந்துட்டேன். எத்தனையோ முறை யாருக்கெல்லாமோ துணைக்கு மருத்துவமனைக்கு போயிருக்கேன், எனக்கும்தான், ஆனால் இந்த முறை ரொம்ப வித்யாசமா இருந்தது.

ஒரு பத்து நாளாகவே முதுகு, தோள் சில சமயம் நெஞ்சுவலியும் அதும் முக்கியமாக வண்டி ஓட்டும்போது குப்புன்னு வேர்த்து தலை சுத்துவது போலவும், ரெண்டு கையும், தோளும் செம வலியா இருந்தது, சரி நாம தீபாவளிக்கு ஒரு அளவுக்கு வேலை செஞ்சு ஓவரா சாப்பிட்டோம் போலன்னு நினைச்சுட்டு பவண்டோ, கோக், லெமன் ஜூஸ், மோர் இன்னபிற ஜூஸா உள்ள தள்ளி சரிபண்ணிடலாம்னு ட்ரை பண்ணிட்டே இருந்தேன். அன்னைக்கு காலையிலிருந்தே வலி அதிகமா தெரிஞ்சது, ஃப்ரெண்ட்ஸ் கூட ஃபுல் டேவும் ஷாப்பிங் அதனால பெரிசா எடுத்துக்கலை, நைட் தூங்க முடியலை, படுக்க முடியலை வலி நேரம் ஆக ஆக ரொம்ப ஆகிடுச்சு, எனக்கு அலோபதி மருந்துன்னாவே பயங்கர அலர்ஜி.. வேற வழியில்லாமல் ஒரு பெயின் கில்லர் சாப்பிட்டு தூங்க ட்ரை பண்ணினேன்.
காலையில் சரி மொய் வச்சு ரொம்ப நாள் ஆச்சுன்னு ஹாஸ்பிடல் போனோம், வேற எங்க குப்புசாமிக்குதான்..


ஹாஸ்பிடல் என்பது ரொம்ப ஆடம்பர பொருளாக மாறி ரொம்ப நாள் ஆயிடுச்சு, டாக்டர் ஃபீஸ் 200, அதும் ஒரே நாள் தான் அடுத்த நாள் மதியத்துக்குள்ள வந்து டெஸ்ட் ரிப்போர்ட் காட்டிடனும். இல்லைன்னா மறுபடியும் மொய். டாக்டர் செக் பண்ணிட்டு சினிமால வரும் கொடுமைக்கார மாமியார் தரும் வரதட்சனை லிஸ்ட் மாதிரி பெரிய லிஸ்ட் எழுதி கொடுத்தார், பார்த்ததும் பக்ன்னு இருந்தது,
இதுல தைராயிடு, ப்ளட் சுகர், ப்ளட் கொலஸ்ட்ரால், ப்ளேட்லெட்ஸ், யுரின் சுகர், எக்கோ, இசிஜி, எக்ஸ்ரே அப்படின்னு சிலது புரிஞ்சும், பலது புரியாமையும் இருந்தது.

ரெகுலரா மருத்துவமனைக்கு போயி பழகிட்டதால் எல்லா டெஸ்டும் வெளியில் எடுத்துட்டு வரலாம்னு வந்துட்டேன், ஏனெனில் வெளியில் விட மருத்துவமனை இரண்டரை மடங்கு அதிகம், உதாரணத்திற்கு வெளியில் குறிப்பிட்ட தைராயிட் டெஸ்ட் தைராய்ட் கேரில் 250 ரூபாய், அவர்கள் அதை சென்னைக்கு அனுப்பி ரிப்போர்ட் வர இரண்டு நாளாகும், மைக்ரோலேபில் 400 ரூபாய், அன்றே ரிப்போர்ட் கிடைக்கும் ஆனால் மருத்துவமனையில் 1000 ரூபாய்.. கண்ணுக்குமுன்னாடி கொள்ளை, வேற வழியில்லை டாக்டர்கள் சொல்லும் டெஸ்ட் எடுத்துத்தான் ஆகனும்,

அடுத்த நாள் காலையில் சாப்பிடாம ஒரு டெஸ்ட், சாப்பிட்டதுக்கப்பறம் ஒரு டெஸ்ட், வாந்தி வரும் அளவு க்ளுகோஸ் குடிச்சு அதுல ஒரு டெஸ்ட், எந்திரன் பார்ட் டூ மாதிரி உடல் முழுதும் வயர் வச்சு, ஜில்லுன்னு ஜெல் தடவி, சுத்தியும் பீப், பீப்ன்னு சவுண்டோட செம எஃபெக்டில் டெஸ்ட், குகை மாதிரி தனியா உள்ள போயி கண்ணை திறக்காதேனு சொல்லும் போதே இப்பவே திறந்து பார்க்கனும்னு தோனும் டெஸ்ட், இப்படின்னு ரொம்ப வேலை வாங்கிட்டாங்க

எல்லா ரிப்போர்ட்டும் எடுத்துட்டு ஹாஸ்பிடல் போனால், டாக்டர் எல்லாம் பார்த்துட்டு சிலது சொன்னாரு, என்னவா அது எதுக்கு அது வேண்டாம், நான் ரொம்ப நல்லவ,ஸ்வீட் பர்ஸன்னு எல்லாருக்கும் தெரியும், இப்ப மருத்துவ ஆய்வறிக்கையும் அதே தான் சொல்லுது.. அதுக்கப்பறம் டாக்டரு ஒரு பார்வை பார்த்துட்டு என்னமோ எழுதினாரு, ஒரு வேளை ப்ளாக்கரா இருக்குமோன்னு டவுட்டா பார்த்தேன், ஏன்ன்னா அம்புட்டு சீரியஸா எழுதிட்டு இருந்தாரு.

4 வகையான மாத்திரை, நாலு கலர்ல, ஒண்ணு கூட எனக்கு பிடிச்ச வயலட் கலரில் இல்லை என்பது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது, இது வரைக்கும் காய்ச்சலுக்கு கூட மருந்து சாப்பிடாம டிமிக்கி கொடுத்து கட்டிலுக்கு அடியில் போன க்ரோசின், கால்பால் இன்ன பிற மாத்திரைகள் பெரிய சைஸில் கண்ணுக்கு முன்னாடி வந்து - இப்ப என்ன பண்ணுவேன்னு குத்தாட்டம் போட்டுச்சு. அதும் இத்தனை மாத்திரையும் வருசகணக்கில சாப்பிடனுமாம். அதுசரி. நடக்கறகாரியமா இதெல்லாம்.

அதுக்குள்ள வந்தாரு ஒரு ஆபத்பாந்தவன், இன்னும் ஆறு மாசம் டைம் எடுத்துக்க விஜி, இதெல்லாம் ஒரு பார்டர் லைனில் தான் இருக்கு, ரெகுலர் வாக்கிங், உடற்பயிற்சி, வகைதொகையில்லாம சாப்பிடறதை நிறுத்தி, வெயிட் 10 கிலோ குறை, யு வில் பி ஆல்ரைட்ன்னு சொன்னாரு :) இப்பத்தான் மூச்சே வந்தது, வேற வழியில்லை, செய்துதான் ஆகனும்

இன்னைக்கு முழுசும், சீசன்ஸ், பைரவி, சி.எஸ், கிருஷ்னா டிபன் ஹவுஸ், அருண் ஐஸ்க்ரீம் என்று எல்லா இடங்களுக்கும் விசிட், என்னன்னா நாளையிலிருந்து நான் டயட்டு டயட்டு டயட்டு,..:)

Monday, November 1, 2010

முஸ்கின், ரித்திக் என்ன பாவம் செய்தார்கள்?

முஸ்கின் ஜெயின், அவள் தம்பி ரித்திக் ஜெயின்  11 மற்றும் 8 வயது சின்ன குழந்தைகள், அவர்களின்  ஒரு நாள் எப்படியெல்லாம் போயிருக்கும், பள்ளி தோழர்கள், அம்மா அப்பா என்று வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்த அந்த அழகான மலர்களை ஒவ்வொரு இதழையும் பிய்த்துப்போட்ட கொடூர மனம் படைத்த மிருகங்கள்.
கோவையில் இரண்டு நாளுக்கு முன் கடத்தி சென்று கொலை செய்யப்பட்ட சின்னக்குழந்தைகளை கடத்திட்டு போனது அவர்களின் பள்ளிக்கு செல்லும் வேன் ட்ரைவர், கோவையில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் குழந்தைகள் கடத்துவது அதிகமாக நடக்க ஆரம்பித்த இந்த வேலையில் பெற்றோருக்கான கடமைகளை நாம் இன்னும் இறுக்கவேண்டியது அவசியம்.குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் பற்றி அவசியம் சொல்லித்தரவும், அது யாரா இருந்தாலும் வேண்டாம், குடும்பத்தில் ஒருவராக நெருங்கிப் பழகியவர்களே நம்மைப்பற்றி மொட்டை கடுதாசி போடும் காலம் இது, (சொந்த அனுபவம்). என்னதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் சில நேரங்களில் இப்படி மக்களை கணிக்க தவறுவதும் நடக்கத்தானே செய்கிறது.
பொதுவாகவே குழந்தைகளோடு தொடர்புடைய மனிதர்களை நாமும் நல்லா அறிமுகம் செய்து கொள்வது அவசியம், முக்கியமா, வேன் டிரைவர், பள்ளி வாட்ச்மேன், செக்யுரிட்டி, கேம்ஸ் மாஸ்டர், வகுப்பு ஆசிரியர், எதேனும் வகுப்புகளுக்கு அனுப்புகிறோம் என்றால் அங்கு இருப்பவர்கள் எல்லாரின் முகவரியும் போன் நம்பரும் கண்டிப்பாக வைத்திருங்கள், வழக்கமாக வரும் நேரத்தை விட 5 நிமிடம் அதிகம் ஆனாலும் அவர்களை அழையுங்கள், ஒரு வேளை நீங்கள் சென்று அழைத்துவருவதாக இருந்தால் எதாவது காரணமாக தாமதமானால் அதையும் பள்ளிக்கோ அந்த வகுப்புக்கோ உடனே தெரிவியுங்கள்.

குடும்ப விசயம் வெளியில் பேசக்கூடாது என்று குழந்தைகளுக்கு பழக்குங்கள், வெளியூர் போவது வீட்டில் யார் இருக்கிறார்கள் போன்றவைகளை வேனிலோ ஆட்டோவிலோ பொது இடத்திலோ பேசவேண்டாம். நம் தொலைபேசி, மற்றும் சில எமர்ஜென்சி நம்பர் சொல்லிக்கொடுங்கள், குறைந்த பட்சம் 5 ரூபாயாவது எப்போதும் குழந்தைகளீடம் கொடுத்து எமர்ஜென்சி பணம் என்று சொல்லிவைக்கவும்.

நான் என் குழந்தைகளை மாலை 6 மணிக்கு தான் பள்ளியிலிருந்து அழைத்து வரப்போவேன், அப்போது வாரத்தில் 3 நாட்களாவது சில குழந்தைகள் ஒன் ருப்பி தாங்க ஆண்ட்டி இன்னும் அப்பா வரலை, ஆட்டோ மேன் வரலை என்று கேட்பார்கள், பெற்றோர் ஆசிரியர் கமிட்டி உறுப்பினராக இருப்பதால் பள்ளியில் இதை பற்றி கூறி ஒரு பொதுதொலைபேசி வைக்கும் படி கூறினேன், ஆயிரக்கணக்கில் கட்டணம் கட்டும் பள்ளியில் இது போன்ற ஒரு ரூபாய் செலவு பெரிதா குழந்தைகள் பாதுகாப்பு முக்கியமா என்று நீண்ட விவாதத்திற்குப்பின் இப்போது வைத்திருக்கிறார்கள். நான் தினம் போவதால் கிட்டத்தட்ட எல்லா குறைகளையும் பள்ளியின் கவனித்திற்கு கொண்டு போய்விடுவேன். இது எல்லாருக்கும் முடியாது, ஆனாலும் குறைந்த பட்சம் அம்மாவோ அப்பாவோ ஒரு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாவது போங்கள்.
வீட்டிலேயே கூட தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் யாரையும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அனுமதிக்க வேண்டாம், பக்கத்து வீட்டில் போய் படிப்பது, விளையாடுவது எதும் வேண்டாம், எதுவானாலும் நம் கண் முன் நடக்கட்டும்.

வெளியிடங்களூக்கு குழந்தைகளை கூட்டிக்கொண்டு போகும் போதும் விலையுயர்ந்த ஆடைகள் ஆபரண்ங்கள் வேண்டாம், பெண்குழந்தைகள் மட்டும் அல்ல ஆண் குழந்தைகளுக்கும் இந்த பிரச்சனை உண்டு. நூறு மடங்கு கவனம் நாம் வைக்காவிட்டால் இழப்பு நமக்குதான்

11 வயது குழந்தையிடம் பாலியல் கொடுமை பண்ணினவனை இனி விசாரித்து என்ன ஆகும்? விசாரனையே இல்லாமல் கொடுமையாக மிகக்கொடுமையா தண்டிக்கனும். இனிமேல் எவனும் இது மாதிரி ஒரு நினைப்பே வராதபடி தண்டிக்கனும், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு மிகக்கடுமையான கண்டனங்களை போலிசுக்கும் அரசுக்கும் தெரிவிப்பது நம்கடமை.

 

நம் எதிர்காலமே இன்னொருவரால் சிதைக்கப்படுவதை அனுமதிக்க முடியுமா?முடிந்தால் உங்கள் கண்டனங்களை உங்கள் பதிவுகளில் பதிவுசெய்யுங்கள்.