Wednesday, November 30, 2011

காந்தலும் ருசி

காந்தல் ஒரு ருசி, காந்தல்ன்னா சமைக்கும்போது அதிக வெப்பத்தினால் தீய்ந்து போகும் பகுதி. அதற்கென ஒரு ருசியும் வாசனையும் உண்டு. காந்தலே ஒரு ருசின்னு ஒத்துக்கொள்ளூம் போது ஏன் இன்னும் சில மனிதர்கள் கருப்பை ஒரு கலராக ஒத்துக்கொள்ள தயங்குகிறார்கள்?

ஷாப்பிங் போன ஒரு சின்ன குழந்தை 5 வயதிருக்கும் கொஞ்சம் ஒல்லியா கருப்பா லட்சணமா விளையாடிட்டு இருந்தது. அதோட கண்கள் அவ்வளவு அழகு, எனக்கு பக்கத்தில் அந்த குழந்தையின் அம்மாவும் பாட்டியும் அவளுக்கு பிறந்த நாள் துணி எடுக்கிறார்கள் போல், எந்த உடை எடுத்தாலும் கருப்பா இருக்கிறா அவளுக்கு செட் ஆகாதுன்னு சொல்லி ஒதுக்கி முடிவில் ஒரு மஞ்சள் கலர் துணி எடுத்து போனார்கள்..
வர்ஷா படிக்கும் நடனப்பள்ளியில் கிட்டத்தட்ட 15 வயதில் ஒரு பெண் இருக்கிறாள், அத்தனை நளினமாக அழகா அபிநயம் பிடித்து ஆடுவாள், ஆனால் அவள் கருப்பாக இருக்கும் ஒரே காரணத்தினால் எப்போதும் பின்வரிசை தோழியாக..

இது சும்மா உதாரணம் தான், ஆனால் இந்த ஒரு வாரத்தில் கருப்பாக இருக்கிறாய் என்று யாரையாவது யாராவது குறை கூறிக்கொண்டே இருப்பதை கேட்டுக்கொண்டே இருக்கிறேன். எதேச்சையாக பார்த்த விளம்பரத்திலும் கருப்பான பெண் அவமானமாக உணர்கிறாளாம்....என்ன நினைப்பு இது?கருப்பு என்பது உடலின் மெலனின் மட்டுமே அதுவா ஒரு மனித உயிர்? அதுவா உணர்வு? அதுவா அளவுகோல்?

கருப்பு என்பது மிக கவர்ந்திருக்கும் நிறம். எப்போதாவது நீங்கள் கருப்பு உடை அணிந்து பாருங்கள் உங்களுக்கே உங்களை பிடிக்கும். சின்னக்குழந்தைகளை கருப்புன்னு சொல்லுவது எவ்வளவு அவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை தரும் என்பதை ஏன் பெற்றோர் உணருவது இல்லை?
அவர்களை நான்கு பேர் முன்னிலையில் சொல்வதை எப்போது நிறுத்துவார்கள்? அப்படி சொல்லும் போது அந்த குழந்தையின் முகம் போகும் போக்கை பாருங்கள். கோவில் சிலையில் கூட கருப்புதான் அழகான சிலையாக இருக்கிறது.

நான் சின்னப்புள்ளையா இருக்கும் போது இப்படி தினம் தினம் கேட்டிருக்கேன். அப்பல்லாம் எல்லாரும் ஒரே கலரில் இருப்போம் வெள்ளையானவர்கள் ரொம்ப குறைவு.. நானும் கல்லூரி காலங்களில் நினைத்தது உண்டு..ச்சே இன்னும் ஒரு ஷேடு டல்லாயிருக்கலாம்னு ( தொழில் புத்தி) ஆனால் கலரில் ஒரு மண்ணும் இல்லைன்னு புரிய ரொம்ப நாள் ஆயிடுச்சு.  

சோப்பு, க்ரீம் போட்டு கலர் வருதோ இல்லையோ சில பாட்டி வைத்தியங்கள் மூலம் நம் தோலை மிருதுவாக வாசனையாக சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்.

அதில் ஒன்று இது

பாசிப்பயிறு - 1கிலோ
கடலைப்பருப்பு -அரைக்கிலோ
கஸ்தூரி மஞ்சள் - 150 கிராம்
பூலாங்கிழங்கு - 150 கிராம்
கோரைக்கிழங்கு - 150 கிராம்
வெட்டிவேர் - 150 கிராம்
ஆவாரம்பூ - 150 கிராம்
இதை மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். சோப்பு தேய்த்த பிறகு இதை தினம் தேய்த்து குளித்தால் உடம்பில் இருக்கும் சொறசொறப்பு, வறட்டுத்தன்மை நீங்கும். வெட்டிவேர் நல்ல வாசனையை தரும். முக்கியமா வேர்வை வாசனையை போக்கும். இதை ஆண்களும் உபயோகிக்கலாம். கஸ்தூரி மஞ்சள் தவிர்த்து மற்றவைகளை பொடிசெய்து கொள்ளலாம். இது அனைத்துமே நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். இதோடு குப்பைமேனி தழை ரோஜா இதழ்களும் சேர்த்து அரைத்தால் பெண் குழந்தைகளின் உடம்பில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்கும்.

(ரொம்ப நாளா பதிவு எழுதாமல் டச் விட்டு போயிடுச்சு. இனி எழுத ட்ரை பண்ணுவோம்..#தப்பிக்க முடியாதுல்ல)