Showing posts with label மொழிபெயர்ப்பு. Show all posts
Showing posts with label மொழிபெயர்ப்பு. Show all posts

Wednesday, June 1, 2011

நாலுகட்டு - எம்.டி.வாசுதேவன் நாயர் - தமிழில் சி.ஏ.பாலன்

பல்வேறு சமுதாயத்தின் வாழ்க்கை முறைகள், அந்தந்த கால கட்டத்தின் சமூக கட்டமைப்புகள், அந்த காலகட்டத்தின் மனித மனங்களின் போக்கும் அங்கீகாரங்களும் ஒரு நல்ல எழுத்தாளரின் பார்வையில் சுவாரஸ்யமாக இருக்கும். அந்த வரிசையில் பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயரின் “நாலுகட்டு”. 1958-59 வருட கேரள சாகித்ய அகாடமி விருது வாங்கிய இந்த நாவலை தமிழில் சி.ஏ .பாலன் மொழிபெயர்த்துள்ளார்.

சில இடங்களில் மூலக்கதையை அப்படியே தரவேண்டிய நிர்பந்தம். கேரள வாழ்க்கை முறை ஓரளவிற்கு தெரிந்தவர்களுக்கு சுலபத்தில் புரியும். இல்லாவிட்டால் சில பகுதிகளை மீண்டும் வாசிக்க நேரிடும். சில புழக்கத்தில் உள்ள சொற்களும் தமிழ் படுத்தும் போது அதன் உச்சரிப்பை சரியாக தரமுடியாததும் ஒரு சிறு இடறல். உ.தா. முத்தஷி - முத்தாட்சி, இடஞ்ஞாழி ( உழக்கு) - இடங்கழி போன்றவைகள்.

நாவல் ஒரு சிறுவனின் வாழ்க்கையும் அவமானமும் அதிலிருந்து அவன் எடுக்கும் தீர்மானமும் பற்றியது. எந்த சமுதாயம் அல்லது மக்கள் என்றாலும் அவர்களின் பாரம்பரியம் என்பது மிக மதிக்கப்படவேண்டிய ஒன்று. இதில் கேரள நாயர் குடும்பமும் அவர்களின் பாரம்பரிய வீடும் கதைக்களன்.

கேரள குடும்பங்கள் அவர்களின் வீட்டைக்கொண்டே விளிப்பது வழக்கம். அதை சுருங்க தரவாடு என்பர். வீடு என்பது பல ஆத்மாக்களின் சங்கமம், பெரிய வீடுகள் நாலு கட்டு கொண்டிருக்கும், வீட்டிலேயே குலதெய்வமோ, பகவதியோ, நாகமோ, குட்டிச்சாத்தானோ வைத்திருப்பார்கள்.

இதில் வடக்கே வீடு   என்னும் பெரிய நாலு கட்டு வீட்டில் வசிக்கும் பெரிய மாமா என்னும் குடும்பத்தலைவனும் அவரின் பெரிய குடும்பத்தையும் குறித்த கதை. நாயர் குடும்பங்களில் மணமகன் திருமணம் முடித்து மணமகள் வீட்டிற்கு சென்று வாழ்வதே அன்றைய வழக்கம். சொத்துக்களில் முன்னுரிமை பெண்களூக்கே. அப்படி ஒரு குடும்பத்தில் பிறக்கும் ஒரு பெண் தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவரை மணந்து வீட்டை விட்டு சென்று விடுகிறாள். அவர்களுக்கு பிறக்கும் மகனை பற்றியும் அந்த குறிப்பிட்ட வீட்டையும் பற்றியது நாலுகட்டு நாவல்.


பாருகுட்டி வடக்கே நாலுகட்டு வீட்டில் பிறந்த பெண், கோந்துண்ணி என்னும் சூதாட்ட வீரனை (சூதாட்டம் கௌரவமாக கருதப்பட்ட காலகட்டம்) மணந்து வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசிக்கிறார்கள். அவர்களூக்கு ஒரு மகன் பிறக்கிறான். அப்புண்ணி என்னும் அந்த சிறுவன் 3 வயது இருக்கும் போது செய்தாலி குட்டி என்னும் நண்பன் வைக்கும் விருந்தில் மாமிசம் அருந்தி இறந்து போகிறார் கோந்துண்ணி, செய்தாலி அதில் விசம் வைத்திருந்தார் என்று பேச்சு.

அப்புண்ணி அவன் தாயுடன் வசித்து வருகிறான், பாருக்குட்டி ஒரு நம்பூதிரி வீட்டில் வேலை செய்து அவனை காப்பாற்றுகிறாள். அவர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு முத்தஷி ( பாட்டி) அப்புண்ணியிடம் அவன் தாயின் பிறந்த வீட்டு பெருமைகளையும் அங்கு நடக்கும் விசேசங்களையும் கூறி கொண்டே இருந்ததால் அவனுக்கு அங்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. முத்தாட்சியுடன் அங்கு நடக்கும் ஒரு சர்ப்பவிழாவுக்கு செல்கிறான், அவன் சொந்த பாட்டி அவனை ஆதரிக்கிறாள் ஆனால் குடும்பத்தலைவனான பெரியமாமா அவனை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளுகிறார், சிறுவனின் மனதில் இது ஆறாத ரணமாகிறது.

இதற்கிடையில் அப்புண்ணி 8 வகுப்பு செல்கிறான். சங்கரன் நாயர் என்பவர் அப்புண்ணிக்கும் அவன் அம்மாவிற்கும் உதவி செய்கிறார். ஊரார் தவறாக பேசுகின்றனர். அப்புண்ணி அதை உண்மை என்று நினைத்து வீட்டை விட்டு வெளியேறி தனக்கும் வடக்கே வீட்டில் உரிமை உண்டு என்று கூறி நாலுகட்டு வீட்டுக்கு செல்கிறான். பல்வேறு தடைகளுக்கு இடையில் நன்கு படித்து ஆசிரியரின் உதவியுடன் வேலைக்கும் செல்கிறான்.

இப்போது அப்புண்ணி இளைஞன், வேலையில் இருந்து வெகு நாட்களூக்கு பின் அவன் சொந்த ஊருக்கு வருகிறான், பெரிய மாமாவின் குடும்பமும் சொத்தும் பிரிக்கப்பட்டு சிதறிக்கிடக்கின்றது. பெரிய மாமா அவனிடம் நாலுகட்டு வீட்டை அடகில் இருந்து மீட்க பணம் கேட்கிறார், தனக்கே விற்க சொல்லி அதை பட்டா பண்ணிக்கொல்கிறான் அப்புண்ணி. இறுதியில் பிரிந்து போன தாயையும் சங்கரன் நாயரையும் அந்த வீட்டுக்கு அழைத்து வருகிறான், வீட்டில் புழுக்கம் தாங்காமல் திணறும் தாயிடம் இடித்து கட்டுவதாக சொல்லுவதை வீட்டை மட்டும் அல்ல அவன் தாயும் சங்கரன் நாயருக்குமான உறவையும் அவன் ஏற்றுகொள்கிறான் என்பதாக முடிகிறது.

அப்புண்ணி சிறுவனாக அறிமுகம் ஆகும் போது ஆரம்பிக்கும் கதை அவனில் ஒரு நாளில் பெரும் பகுதியை நாமும் கழிக்கிறோம். பயந்த சிறுவன், சொந்தங்களை விரும்பும் சிறுவன், தாயின் புது மனித அறிமுகத்தை எதிர்க்கும் சிறுவன், படித்து பெரியவனாகி மனதில் சினத்தோடு இருக்கும் அப்புண்ணி, அவன் விரும்பிய அம்மினியின் மரணம் அவனை மாற்றும் சிந்தனை வரை நல்ல பாத்திரப்படைப்பு. அவன் தந்தையை கொன்றாதாக கூறும் செய்தாலிக்குட்டி சில இடங்களிலும் இறுதியில் பெரியவனான அப்புண்ணிக்கு வேலை வாங்கித்தந்து உதவுவதும், சங்கரன் நாயர் அப்புண்ணியின் குடும்பத்திற்கு உதவுவதை வெறுப்பதும், பெரிய வீட்டின் குடும்ப உறுப்பினரான பெரியமாமா, கிருஷ்னண் குட்டி, பாஸ்கரன், அப்பத்தா, குட்டன், மாளு, அம்மினி, மீனாஷி, போன்ற எல்லா கதை மாந்தர்களூம மறக்கமுடியாத நபர்கள்.

மொழிபெயர்ப்பு நூல்களில் என்னை கவர்வது அவர்களின் வாழ்க்கை முறை, இதில் அதற்கு குறையேதும் இல்லை, ஒரு பெரிய தரவாட்டு வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் விரிவாக இருப்பது அந்த நிகழ்வுகளில் படங்களாக விரிகிறது. படிக்க (பொறுமையுடன்) நல்ல நாவல்.

டிஸ்கி : வேறு ஏதேனும் நல்ல நாவல்கள் இருந்தால் சொல்லுங்க