Showing posts with label பிறந்த நாள் வாழ்த்து. Show all posts
Showing posts with label பிறந்த நாள் வாழ்த்து. Show all posts

Friday, February 17, 2012

என் செல்லக்கண்ணம்மா



ஒரு ஜூன் மாதத்தில் என் நண்பனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருந்தாள், அவளை பார்த்ததும் எதோ ஒன்று இல்லாத வெறுமை டக்குன்னு தோனியது. கல்யாணம் ஆகி 8 மாசம் ஆச்சே, ஒண்ணும் விசேசம் இல்லையா போன்ற கேள்விகள் ஆரம்பம் ஆன நேரம். குழந்தையா நமக்கா? அய்யோ ஒரு பொம்மையை கூட ஒழுங்கா வெச்சுக்க வக்கில்லாத ஆளு, நம்ம பெருமை நமக்குதான் தெரியும்னு என்ற நினைப்பு மாறி ஒரு குழந்தை இருந்தா நல்லாத்தான் இருக்கும் போலன்னு தோன ஆரம்பித்தது அன்றுதான்.

ஜூலை 2, 2000 அன்று என் சின்ன மாமியார் மகப்பேறு மருத்துவர், உறுதியாக குழந்தைதான்னு சொன்னதும், அங்கயே விசில் அடிச்சேன். அந்த நிமிடம் முதல் என் குழந்தையுடன் பேச ஆரம்பித்தேன். அன்னைக்கே திரும்பி ட்ரெயினில் போகும் போது ஊருக்கதை அதனிடம் பேசி முடித்திருந்தேன். கூட்டமாகவே இருந்து பழக்கப்பட்ட நான் தனியா இருப்பதை விரும்பினேன். ஒரு மழைக்காலத்தில் என் நெஞ்சளவு தண்ணீரில் நடந்து வரும் போது அதையும் என் வயிற்றுக்குழந்தைக்கு சொல்லிட்டே வந்தேன்.

காதல் திருமணத்தின் அத்தனை சங்கடங்களையும் பாதியாக குறைக்க வந்த குழந்தை, டெலிவரிக்கு முன் கோவையில் செட்டில் பண்ணியே ஆகனும்னு பாட்டியின் அடத்தில் கோவை வந்தோம். ஒரு விடியற்காலையில் மருத்துவ அதிசயத்தில் ஒன்றாக பிறக்கும் குழந்தையை வலியின்றி ரசித்து பார்த்துகொண்டிருந்தேன். என்ன அழகான அழுகையா இருந்தது. என்ன குழந்தைன்னு தெரிஞ்சுக்கனுமான்னு மாமி கேட்டாங்க. எனக்கு பையன் வேணும்னு முதலில் நினைச்சுட்டு இருந்தேன். இல்ல வேண்டாம் நானே பார்த்துக்கறேன்னு சொல்லி குழந்தைவரும் வரை காத்திருந்தேன். தூயவெள்ளை டவலில் சுற்றிய ரோஜா வண்ண தேவதை, எவ்வளவு அழகான கண்கள், நான் பார்த்தவரைக்கும் உலகின் அழகிய கண், வரைந்த மாதிரியான இதழ்கள், சின்ன சங்கு பூ மாதிரி இமைகள், அழுத்தி எடுத்தால் ரத்தம் கன்றும் தாழம்பு கைகள். சொர்க்கம் என்பது என் முன் இருந்தது.

ஒரு நாள் இரவில் அழததில்லை, ஒரு முறைகூட என்னை சங்கடப்படுத்தியதில்லை, அது இது என்று எதற்கும் அடம் பிடித்ததில்லை. அவளுடைய உள்ளும் புறமுமாக எல்லாமாக நானே இருந்தேன், எனக்கு அவளும். மழலையாக பேசியதே இல்லை, நடக்க ஆரம்பிக்கும் முன்பே நன்றாக பேசுவாள், யாருமற்ற பகல் பொழுதுகளில் நானும் அவளும் இருண்ட அறைக்குள் பேசிக்களித்து களைத்த கதைகள் ஆயிரம். தாய்ப்பால் குடிக்கும் போதே என் முகம் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பாள், திடீரென்று முகம் விலக்கி ஒரு தேவதை சிரிப்பு சிரிப்பாள். அந்தக்காலம்தான் வாழ்ந்த காலத்தில் வசந்தம்.

சரியாக எல்.கே.ஜி போன அன்று இன்னொரு குழந்தை என் வயிற்றில். கொஞ்சம் பயந்தேன், பாசத்துக்கு பங்கு வருமென்று நினைப்பாளோ? மாலையில் வீட்டுக்கு வந்ததும் முதலில் அவளிடம் தான் சொன்னேன். அவளுக்கு ஊற்றி வைத்திருந்த ஹார்லிக்ஸை என் வயிற்றுக்கு அருகில் வைத்து பாப்ஸுக்கும்மா என்றாள். ஒரு குழந்தையை நல்லபடியா வளர்த்தியிருக்கிறேன் என்று கொஞ்சம் இறுமாந்தேன். தினம் பள்ளிக்கு செல்லும் போது அவள் ஸ்னாக்ஸில் கொஞ்சம் கொடுத்து செல்வாள், வந்ததும் அதுவரை முக்கியமான நான் விலக்கப்பட்டு அங்கு பாப்ஸ் வந்தது. இம்முறை வயிற்றிலிருப்பது பெண் தான் என்று தெரிந்திருந்தது. இருந்தாலும் சும்மா பாப்ஸ்ன்னு சொல்லுவோம். 8 மாதத்தில் ஒரு நாள் என் வயிற்றில் காது வைத்து குழந்தையின் அசைவை ரசித்துக்கொண்டிருந்தாள். எதோ சொல்லும் போது வயிற்றுக்குழந்தை செமையா ஒரு உதை உதைத்தது. என்ன சந்தோசம் அவளுக்கு. ரெண்டாவது குழந்தை பிறந்ததும் தினம் மருத்துவமனைக்கு வருவாள். வந்ததும் அவளிடம் தான் குழந்தைக்கு சர்வீஸ் போகும். நாப்கின் தருவது. எனக்கு உதவுவதுன்னு அவள் பிசியா இருப்பாள்.

இன்றுவரை பப்புக்கு அவள் தான் இன்னொரு அம்மா, நான் ஊரு உலகமே சுத்த போனாலும் அவளிடம் ஒரு வார்த்தை கண்ணு பப்புவை பார்த்துக்கடா என்று சொல்லி சென்றாள் போதும். கொஞ்சம் அடாவடியான எனக்கு இப்படி அமைதியான பொறுப்பான பெண்., உறவினர் எல்லாருமே சொல்லுவாங்க. அவ ரொம்ப அன்பான பொண்ணு, யாரு வந்தாலும் சிரித்த முகத்துடன் தண்ணீர் கொண்டுவந்து தருவாள். நானாக சொல்லித்தரவில்லை. அவளே செய்வாள். பிறகு அவளுண்டு அவ வேலை உண்டுன்னு அமைதியகா நகர்ந்துவிடுவாள். எப்பவும் படிப்பு படிப்பு .. பாட புத்தகமில்லை. அதை தவிர அனைத்தும். பொரி மடித்து வரும் பேப்பர் உட்பட படிச்சு முடிச்சுடுவா.

உலகத்தில் அவளுக்கு பிடித்த இன்னொரு விசயம் பரதநாட்டியம். அவளோட கடலளவு கண்ணுக்கு ஏற்ற விசயம். ரொம்ப சின்ன வயசில் இருந்து கத்துக்கறா, ஒரு முறை ஒரு நடன நிகழ்ச்சியின் போது வெள்ளை பட்டாடையில் முதல் ஆளா வரும்போது எனக்கு திக்குன்னு இருந்துச்சு. நம்ம குழந்தையா இது? இவ்வளவு அழகான ஒரு குழந்தைக்கு அம்மா என்பதே பெருமைதான். எந்த வரைமுறைகளூம் இல்லாத மிக இயல்பான எளிமையான பெண் என் மகள் என்றால் எனக்கு சந்தோசம் தானே. என் அம்மா இறந்த போதுஅழாமல் அசராமல் நின்று கொண்டு அடுத்த ஏற்பாடுகளை பார்த்துட்டு இருந்தேன். இவ வந்து கட்டிப்பிடித்ததும் என் அம்மாவின் ஸ்பரிச நினைவு உடனே வந்து ஒரு பெரிய அழுகையா வெளிவந்தது. இப்போதும் மனம் தடுமாறும் போதும் கோபப்படும் போதும் என் தெய்வ அசிரீரி அவள் தான்.


வர்ஷா வளர்ந்து கொண்டே போகிறாள் நான் அவளுக்கு குழந்தையாகிக்கொண்டே இருக்கிறேன். இதுவும் நன்றாக இருக்கிறது

என் உயிரான என் கண்மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், உனக்கு பிடித்தது மட்டுமே நடக்கட்டும். நம்ம மூணு பேருக்கும் பிடித்த பாட்டு.

உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி


 

Saturday, December 24, 2011

பொற்சித்திரமே பொக்கிஷமே



செல்லக்குட்டி, என் தங்கம், என் வெள்ளி .. இதெல்லாம் நான் பப்புவை கொஞ்சுவது இல்லை. அவ என்னை சொல்றது. இப்படி சொன்னா எதோ ஒரு காரியம் ஆகவேண்டி இருக்குன்னு அர்த்தம். தேவதைகளில் வால் முளைத்த தேவதையை பார்க்கனுமா? எங்க வீட்டில் இருக்கா.

சில நேரம் ரொம்ப பேசறாளேன்னு நினைக்கும் போது கூட இப்ப பெரும்பாலும் குழந்தைகள் அப்படித்தான் பேசுகிறார்கள், நாம தடுத்து ஒண்ணும் ஆகப்போவதில்லைன்னு விட்டுடுவேன். இருந்தாலும் எங்க அம்மினி கொஞ்சம் ஓவர் தான்.

பப்பு, ஒரு நடமாடும் இல்ல எப்பவும் ஆடிட்டே நடக்கும் ஒரு பட்டாம்பூச்சிதான். காலையில் எழுந்ததில் இருந்து ஆரம்பிக்கும் அவள் அட்டகாசங்கள் இரவு தூங்கும் போதும் சில நேரம் தூக்கத்திலும் தொடரும். எழுந்து வரும் போதே கட்டிலில் இருந்து கூப்பிடுவா, அவளை உப்பு மூட்டை தூக்கி வரனும், இனிமேல் முடியாது பெரிய பொண்ணு ஆயிட்டேன்னு சொன்னா, நீங்க தானே சொன்னீங்க எத்தனை வயசானாலும் நான் உங்க குழந்தைன்னு திருப்பி கேட்பாள். ப்ரஷ் பண்ண நாந்தான் தொடங்கி விடனும். அவ ரெடியாகி வந்ததும் எப்படி இருக்கேன்னு இடுப்பில் கை வைத்து ஸ்டைலா கேக்கும் போது பதில் ரெடியா வச்சிருக்கனும்.

பப்பு, அவளை சுற்றி இருக்கும் அனைவருக்கும் ஒரு உடனடி புன்னகை உற்பத்தி செய்யும் மந்திரக்காரிதான். நாம் யோசித்து சொல்வதை உடனே சொல்லி அசத்துவாள், சுத்தம், அவளோட பொருட்களை எடுத்து வைத்துக்கொள்வது. முக்கியமா சேமிப்பு, தெரியாமல் வெளியில் 5 ரூபாய் வைத்தால் கூட அது அவள் கணக்கில் போயிடும். அவகிட்ட கடன் வாங்கறதை நான் தான் நிறுத்தனும். நேத்து காய்க்காரம்மாவுக்கு தர 40 ரூபாய் எடுத்ததை நைட்டே கேட்டு வாங்கிட்டாள். எதுவும் கேக்கவே மாட்டாள். பிறந்த நாளுக்கு கூட அதிகபட்ச அவளோட ஆசை கலர்பென்சிலாகத்தான் இருக்கும். அவளோட ஷாப்பிங் போன கதை தனி பதிவா வரும்.

காய்ச்சல், சளி எதுவுமே அவளை சோர்ந்து போகச்செய்யாது. எதுவந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இப்பவே இருக்கு. போன மாதத்தில் கிட்டத்தட்ட 15 நாள் காய்ச்சலில் இருந்தாள், ஒரு நாள் கூட அழவோ, வேறு எந்த வித சோர்வையுமோ முகத்தில் காட்டவே இல்லை. டாக்டர் என்ன சொன்னாரோ அதை நாம் மறந்தாலும் அவ மறக்கவே மாட்டாள், டயட் என்னன்னு கேட்டுட்டு வந்தாள், அதைத்தவிர வேறு எதையும் தொடக்கூட இல்லை.

பப்பு ரொம்ப ப்ராக்டிகல், யாருடா உனக்கு பெஸ்ட் ப்ரெண்டுன்னு கேட்டேன் அவ பதிலில் ஆடிப்போயிட்டேன். எதுக்கும்மா ஸ்கூலில் ப்ரெண்டு? க்ளாஸ் முழுதும் ப்ரெண்ட் தான், ஆனா யாரும் க்ளோஸ் ப்ரெண்ட் இல்லம்மா, அப்பறம் அவங்க பேசலை இவங்க பேசலைன்னு புலம்பனும், எனக்கு அக்காவும் நீங்களூம் தான் பெஸ்ட் ப்ரெண்ட்.  க்ளோஸ் ப்ரெண்டுனா பிரச்சனைம்மா. எல்லார்கிட்டயும் பேசுவேன்.,பை சொல்லிட்டு வந்துடுவேன்னு.. வர்ஷாவும் இப்படித்தான். இந்த தெளிவு கடைசி வரை இருக்கட்டும்.


என் மாமியார் இறந்த போது சிலர் அழுதபோது பப்பு அவளோட கஸின் அவ வயதுதான் அவன்கிட்ட சொல்றா, ”எதுக்கு அழறாங்க? வலியோட இருந்தாங்க, இப்ப காட் கிட்ட போயிட்டாங்க, அங்க வலிக்காதாம், காட் கிட்ட போனா ஹேப்பியா இருப்பாங்க, அப்பறம் எதுக்கு நாம அழனும்னு”



பப்பு, நீயும் வர்ஷாவும் என் குழந்தைகளாக வந்ததால் நான் தான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கேன். தேங்க்ஸ்டா செல்லம். நீ என் பொக்கிஷம் தான். எப்பவாவது வாழ்க்கையில் சோர்வுறும் தருணங்களில் தெய்வம் போல் ஒலிக்கும் உன் குரல் தான் என் அடுத்த அடிக்கு ஆதாரம். இப்ப மாதிரியே எப்பவும் சந்தோசமா விரும்பிய அனைத்தும் கிடைத்து ஆனந்தமா இருடா செல்லம்.



இன்னைக்கு அவளுக்கு ஸ்பெஷலா அவ ட்ரெஸ் கலரில் ஒரு ரோஸ் வேற எங்க வீட்டில் பூத்தது, அவளுக்கான சிறப்பு ஆசிர்வாதம்.

அம்மா உங்களுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்னு கேட்கும் போது இந்த உலகம் அளவுக்குன்னு சொன்னேன், அவ சொன்னது அவளோட இதயம் அளவுக்காம்.


தேங்க்ஸ்டா குட்டி


உனக்கு பிடிச்ச இந்த பாடலுடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என் ரவுடி பப்பு

இன்னைக்கு தான் ராம் க்கும் பிறந்த நாள் ஹேப்பி பர்த்டே ராம்



Thursday, December 23, 2010

LOVE YOU பப்பு



காலையில சாப்பிட்டு ரெடியா இரு விஜி,ஸ்கேன் பண்ணி பார்த்துட்டு முடிவு பண்ணலாம்..சொல்லிட்டு டாக்டர் - ( எனக்கு சின்ன மாமியார்), கிளம்பிட்டாங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. மருத்துவமனையில் வந்து சேர்ந்து ஒரு வாரம் ஆகிடுச்சு, தினம் 4 யுனிட் சலைன், ரெண்டு முறை ஸ்ட்ராயிட் ஊசி, எல்லாம் முடிஞ்சுது. ஆனாலும் சரியாகவில்லை, வேறு வழியில்லை எதாவது ஒரு முடிவு நாளைக்கு எடுத்துத்தான் ஆகனும். ரெண்டாவது குழந்தை உறுதியான நாளிலிருந்து வாந்தியும் தலைசுத்தும் கடைசிநாள் வரை இருந்தது,, ஆறாம் மாத துவக்கத்தில் கர்ப்பகால சர்க்கரை நோய் வேறு, நல்லவேளை டயட்டிலேயே சரியாகும் என்று சொன்னது, இல்லைன்னா அதற்கு தினம் இன்சுலின் போடவேண்டி இருந்திருக்கும். 27வது வாரத்தில் கர்ப்பப்பை வாய் திறந்துவிட்டது என்று பாண்ட் போட்டிருந்தார்கள்,, 34 வாரம் தான் ஆகியிருந்தது, ஆனால் பனிக்குட நீர் ரொம்ப குறைவாக இருந்ததால் ஒரு வாரமாக மருத்துவமனை வாசம். 8 பாயிண்ட் இருக்க வேண்டிய பனிக்குட நீர் வந்து சேரும் போது 6 இருந்தது, ஒரு வாரத்தில் 4ஆக குறைந்து விட்டது. இனி அடுத்த நாள் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

ரெண்டு நாளில் சுனாமி வரப்போவதை அறியாமல் அந்த மருத்துவமனை மிக மெதுவாக விழித்துக்கொண்டது. வெள்ளிக்கிழமை- டிசம்பர் 24- 2004, காலையில் 10 மணிக்கு ஸ்கேன் பார்த்த போது குழந்தை 35 வாரம் ஆகியிருந்தது.. பொதுவாக 40 வாரம் இருக்க வேண்டும். ஆனால் வேற வழியில்லை. என்ன பண்ணலாம் விஜின்னு மறுபடியும் கேள்வி.. சிசேரியன் மட்டும் வேண்டாம் வேற என்ன வேண்டும் என்றாலும் ட்ரை பண்ணலாம். கடைசி நிமிடம் வரை நான் ஒத்துழைக்கிறேன்னு சொல்லிட்டேன். ஸ்கேன் பார்க்கும் போதே பிஞ்சு விரல்களில் அச்சு காட்டினார்கள். இன்னைக்கு வேண்டுமா இல்லனா நாளைக்கு ஒரு நாள் வரை தள்ளிப்போடலாம், கிருஸ்மஸ் பேபியா இருக்கும்னு சொன்னாங்க. நான் இல்ல வேண்டாம் இன்னைக்கே இருக்கட்டும், இன்னைக்கு பிறந்தா அது ராம்க்கு நான் தரும் ஸ்பெஷல் பர்த்டே கிஃப்ட்னு சொன்னேன். ஏனெனில் டிசம்பர் 24 ராம்க்கும் பிறந்தநாள்.


12 மணிவாக்கில் நார்மல் டெலிவர் நடக்க, வலி வருவதற்கு ஜெல் தரப்பட்டது. அரை மணி நேரத்தில் வலி ஆரம்பித்தது, நான் இந்த முறையும் டெலிவரியை பார்க்க விரும்பினேன். அதனால் எபிட்யுரல் அனஸ்தீஷியா போட சொன்னேன். அதற்குள் நல்லா வலி வந்ததால், மாமியார் கொஞ்ச நேரம் பொறுத்துக்க எதுக்கு அன்ஸ்தீஷியா வேண்டாம்னு சொன்னார், இல்ல நான் இந்த குழந்தையையும் முதல் நிமிடத்தில் இருந்து பார்க்கனும் என்று சொல்லி போட்டுக்கொண்டேன். மாலை 5.30 மணிவரை பார்க்கலாம் இல்லனா சிசேரியன் என்று சொல்லப்பட்டது.

நான் ரெண்டு குழந்தைகளூக்கும் வயிற்றில் உறுதி செய்யப்பட்ட நாள் முதல் அவர்களிடம் பேசுவேன். இப்பவும் சொன்னேன், குழந்தை வயிற்றில் இருக்கும் போதே அதற்கு பேரு வைத்திருந்தோம்.. பாப்ஸ் இதான் அந்த பேரு, பாப்ஸ் நீ இப்ப அம்மாவை கஷ்டப்படுத்தாம வந்திடு, உன்னை பார்த்துக்க அம்மாவை தவிர யாரும் இல்லை, அம்மாவையே இன்னொருத்தர் தயவில விட்டுடாதேடா செல்லம்னு கேட்டுக்கொண்டேன். ராம் கூடவே இருந்தார், 5 மணிக்கு டாக்டர் இன்னும் அரை மணி நேரத்தில் டெலிவரி ஆகிவிடும்னு சொன்னதும் ராமை வெளியில் போகச்சொல்லிவிட்டேன். வலியை உணராமல் குழந்தை வந்ததும் அதன் எடை ஒரு கிலோ 600 கிராம் மட்டுமே இருந்தது.. பெண் குழந்தை என்று தெரிந்ததும் ரொம்ப சந்தோசமாவும் அவளோட சுறுசுறுப்பான அழுகை சந்தோசமாகவும் இருந்தது...

எல்லா தாய்க்கும் அவர்கள் குழந்தை ரொம்ப ஸ்பெஷல் தான். அவர்களை பற்றி எவ்வளவு பேசினாலும் தீரவே தீராது. அதிலும் ரெண்டும் பெண் குழந்தைகளூம் என் வீட்டில் வளரும் தேவதை என்று கூட சொல்ல முடியாது, தெய்வங்கள் தான். எதாவது ஒரு முடிவெடுத்து அது தோல்வியில் முடிந்து மனசு கஷ்டப்படும் நேரங்களில் இவர்கள் பேசுவது தெய்வத்தின் குரலாகத்தான் தோனும்.

இன்னைக்கு என் குட்டி செல்லத்துக்கு 6 வயசு ஆகிறது. ஆனால் அவளோட நிதானம், கவனிக்கும் தன்மை, நகைச்சுவை உணர்வு எல்லாம் ஸ்பெஷல் தான்.. லவ் யூடா பப்பு :)) உன் சிரிப்பு, குறும்பு, டைமுக்கு அடிக்கும் டயலாக், ஒரு நாளைக்கு நீ கொடுக்கும் 100 முத்தம், எல்லாம் எப்பவும் இப்படியே இருக்கனும்டா... ஹேப்பி பர்த்டே செல்லம்


டிஸ்கி: இன்னைக்குத்தான் ராம்க்கும் பிறந்த நாள்... ஹேப்பி பர்த்டே ராம்.