Sunday, September 18, 2011

பால்யம் - ஜவ்வு மிட்டாய்

க்ளிங் க்ளிங் க்ளிங்.. இந்த வித்யாசமான மணி முட்டாய் தாத்தாவோடது.  மறக்கமுடியாத சில முகங்களில் அவரோடதும் ஒண்ணு. முட்டாய்தாத்தா,, காலையில் வெயில் மண்டைகாய வைக்கும் போது நிலாகாய்ஞ்சுட்டு மெதுவா நடந்து வருவார். ஒவ்வொரு அடி எட்டு வைக்கும் போதும் அதற்கு பேக்ரவுண்ட் இந்த க்ளிங் சத்தம். 

அவரோட தோளில் இருக்கும் துண்டை மெத்தையாக்ககி ஒரு  மரசட்டம் சாய்ந்திருக்கும், அதில ஒரு பொம்மை முகம் சகல அலங்காரங்களும் செய்து பொட்டு வைத்து பூச்சூடி இருக்கும். அவளோட உடம்புதான் விசேசம். நல்ல பிங்க் கலரில் வெள்ளை பார்டரோடு நடுவில் வரிவரியா சிவப்பும் சில நேரம் இருக்கும், இழுக்க இழுக்க வரும் இனிப்பு ட்ரெஸ் அவளுக்கு. 

ஐஞ்சு பைசாக்கு செயின், பத்து பைசாக்கு டாலர் வச்ச நெக்லஸ், வாட்ச், இன்னும் ஐஞ்சு பைசா சேர்த்து கொடுத்தா செயின், நெக்லஸ், வாட்ச் எல்லாம் கிடைக்கும். பரபரன்னு அந்த ஜவ்வு மிட்டாயை இழுத்து ரெண்டு சுத்து சுத்தி நகை செய்து மாட்டியும் விடுவார்.  அதோட கண்டிப்பா ஒரு கொசுறு கன்னத்தில் ஒட்டிவிடப்படும்.  சனி ஞாயிறு காலை பதினோரு மணி எங்க முட்டாய் தாத்தாவிடம் நெக்லஸ் வாங்கி போட்டுகொண்டால் மட்டும் தான் நகரும். பிசுபிசுன்னு உடம்பு முழுசும் ஒட்டிக்கொள்ளும் அதை எவ்வளவு  முடியுமோ அவ்வளவு இழுத்து ரசிச்சு சாப்பிடனும்.

இப்பல்லாம் எப்பவாவது எங்காவது போகும் போது ஏதும் திருவிழா மாதிரி தெரிந்தால் நானும் முடிஞ்ச அளவு தேடிப்பார்க்கிறேன். இந்த மிட்டாய் மட்டும் இருக்காது. கடைசியில் கண்டே பிடிச்சேன். ஒரு நண்பனின் திருமணத்தில் தீம் ஊர்திருவிழா, அதற்காக அவன் குழந்தைகளுக்கு சின்ன ரங்கராட்டினம், இந்த மிட்டாய்காரர், ஒரு பஞ்சு மிட்டாய், பலூன் கடையும் வச்சிருந்தான்... யாருக்கும் தெரியாமல் நைசா ஒண்ணு வாங்கிட்டு வந்தேன். வீட்டுக்கு வந்து எப்பவும் போல ஒரு செயின் செய்து சாப்பிட முயற்சி செய்தேன்.. சுவையும் பிடிக்கலை அதை செயினா போடவும் பிடிக்கலை. ஆனால் பிசுபிசுப்பு மட்டும் அப்படியே பழைய மாதிரியே இருந்தது...வயசாயிடுச்சோ? இல்ல வாழ்க்கை முறை மாற்றத்தில் பழசு மறக்கப்படுகிறதோன்னு ஒரே ஃபீல் பண்ணி அடுத்தது மூக்குத்திப்பூ பத்தி யோசிச்சேன்.Thursday, September 15, 2011

பால்யம் - எருக்கம்பூ

எங்க ஸ்கூலுக்கும் வீட்டுக்கும் ஒரு கிலோ மீட்டருக்கு அதிக தூரமிருக்கும். நேர்வழியில் போனால் லேட்டாகும். அதனால் குறுக்குவழி.(என்னைக்கு நேர்வழியில் போயிருக்கேன்னு சொல்லுவது கேட்கிறது) போகும் வழியில் நிறைய அரளிப்பூ, வெள்ளெருக்கு, ஊமந்தம்பூ, இன்ன பிற பேர் தெரியா பூக்கள் இருக்கும். அதைவிட அதிகமாக முள்ளு மரம். சின்னசின்ன சந்துகளின் முடிவில் ஒரு பெரிய வீடு இருக்கும். ரொம்ப அதிசயமாக தினம் பார்த்து செல்வோம். அங்க தான் இருக்கு பெரிய எருக்கம்பூ தோட்டம். பின்ன ஒரே இடத்தில் 20 செடி இருந்தா அது தோட்டம் தானே?  முதலில் அது பக்கம் போகவே மாட்டேன். ரெண்டு  மூணு நாய் அங்கயே படுத்திருக்கும்.  எந்த மனுசபயலுகளை கண்டும் பயப்படாத இந்த சிங்கம் அந்த தம்மாத்துண்டு நாய்க்கு பயப்படும். இப்பவும் தான்.

கொழுக்கட்டைக்காக விநாயகரை தீவிரமா கும்பிடும் சதுர்த்தி காலத்தில் ஈஸ்வரன் கோவிலில் ஒரு இன்ப அதிர்ச்சி. விநாயகர் கழுத்தில் நம்ம எருக்கம்பூ மாலை. அப்பத்தான் தெரிஞ்சுது விநாயகர் எம்புட்டு எளிமையானவர்னு. சரி நாமும் ஒரு மாலை கட்டுவோம்னு நான், சித்ரா, வனிதா, செல்வி எல்லாரும் எருக்கம்பூ வேட்டைக்கு போனோம். எருக்கம்பூல இருந்து பால் வருமாம் அதை கையில் தொட்டா கையில புண்ணு வரும், ஆறவே ஆறாது, மேல பட்டா சொறியும் போன்ற தடாபுடா முஸ்தீபுகளுடன் பூ பறிக்கும் படலம் ஆரம்பமானது. ஒரு கொத்தா பூ, லேசா மொட்டோடு ஒரு மாதிரி வெண்மை கலந்த சாம்பல் ஊதாவில் அவ்வளவு அழகான பூ. லேசா குமிழ் மாதிரி அமைப்பில், கொத்து கொத்தாக இருந்தது. லேசா அழுத்தி பார்த்தேன். பட்... அட பூ விரிஞ்சுடுச்சே...கண்டுபிடிச்சமில்ல. எல்லா பூவையும் அழுத்தி அழுத்தி பட் பட்ன்னு விரிய வச்சோம்....விரிஞ்ச பிறகு அழகு கொஞ்சம் குறைச்சலா போனது போல பட்டது.

அதற்குபிறகு எப்ப எங்க எருக்கம்பூ பார்த்தாலும் ஒரு பட் கண்டிப்பா உண்டு. இப்ப வரைக்கும். இது நான் எடுத்த எருக்கம்பூ படம். என் பால்யத்தை நினைவுபடுத்தும் பூ...

இன்னும் வரும்
டிஸ்கி..இது சின்ன பதிவுதான். பஸ்ல போடலாம்னு எழுதினது.இருந்தாலும் ஒரு கல்வெட்டா கிடக்கட்டும்னு :))))