Showing posts with label வர்ஷா. Show all posts
Showing posts with label வர்ஷா. Show all posts

Monday, June 10, 2013

என் வெளிச்ச பூக்களுக்கு வாழ்த்துகள்


ம்ம்மா சாயங்காலம் வரும் வரைக்கும் ரெஸ்ட் எடுங்கம்மா, வந்து பார்த்துக்கலாம். இது என் கண்மணிகள் இன்னைக்கு எங்கிட்ட சொல்லிட்டு போனது. கடந்த 50 நாட்களாக என்னுடன்.. இப்படி சொல்லுவது கூட தப்புதான் அவங்களோட எப்படி ஓடுச்சுன்னே தெரியலை. நான் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ரொம்ப சோர்ந்து போன தற்கொலை எண்ணம் கூட வந்த நாட்கள். என் குழந்தைகளோட முழு தைரியமும் என் வளர்ப்பு குறித்த சிறு பெருமிதமும் கொள்ள வைத்த நாட்கள். என்குழந்தைகள் என் முழு தோழிகளாகவும் சில நேரம் அம்மாவாகவும் என்னிடம் அன்புகாட்டிய விடுமுறை. இந்த விடுமுறை முடியாமல் இருந்திருக்கலாம்.


இந்த விடுமுறையில் கண்டிப்பா எதாவது கத்துக்கனும்னு நான் சொன்னபோது அவங்க சாய்ஸ் வீட்டு வேலைகளும் சமையலுமாக இருந்தது. வேற வீட்டுக்கு குடிவந்த நான்கு மாதம் ஆகிறது, இந்த நான்கு மாதத்தில் பெரும்பாலும் எல்லா வேலைகளூம் அவங்க தான் பண்ணிருக்காங்க. சமையல் கூட சில நேரம் அவங்கதான். அம்மா குழந்தைகள் உறவு மாறி தோழிகள் என்ற நிலை வந்து ரொம்ப நாள் ஆனபோதும் இந்த விடுமுறையில் என்னை உக்காரவைச்சு என்குழந்தைகள் ரொம்ப பார்த்துக்கிட்டாங்க. உடம்பு சரியில்லைன்னதும் அவங்களோட தவிப்பும் வேதனையும் எனக்கு இன்னும் பயத்தை உண்டாக்கிடுச்சு. கண்ணுகளா உங்களுக்காகவாவது எல்லாத்தையும் சமாளிக்கலாம்னு தோனுதுடா. 

இந்தவருசம் 8வது போகும் வர்ஷு சுடிதார்ல வந்து நிக்கும் போதுதான் என் பொண்ணு எவ்வளவு பெரியவளாயிட்டான்னு தோனுது. முன்னாடி இருக்கும் கடமைகள் பயமுறுத்துகிறது. கிட்டதட்ட அவ தோள் தாண்டி வளர்ந்து நிக்கும் பப்பு இந்த வருசம் 4ம் வகுப்பு. வழக்கம் போல இந்த வருடமும் என் செல்லங்கள் புஸ்தகத்தை கட்டிட்டு அழவேண்டியதில்லை. இந்த விடுமுறை பப்புக்கு அவ மொழியில் வெட்டியா போயிடுச்சு. வர்ஷா சிலது கற்றுக்கொண்டாள். ஹிந்து பேப்பர் நடத்தின ஃபோட்டாகிராபி சம்மர் கேம்ப், சுட்டிவிகடன் நடத்திய சுட்டி ஸ்டார் என்னும் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் தேர்வுல கலந்துட்டு செலக்ட் ஆயிருக்கா. விவசாயகல்லூரி வானொலியில் நான் பேட்டி கொடுக்க போனபோது கூட ரேடியோ ஸ்டேசன் காட்ட ரெண்டுபேரையும் கூட்டிட்டு போயிருந்தேன். அங்கு கதை, பாட்டுன்னு பாடினதில் வாராவாரம் கதை நேரத்தில் வர்ஷாவோட கதை வெளிவர அவங்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். வாழ்த்துகள் கண்ணம்மா.

பப்பு இந்த வருசம் பென்சிலை விட்டு பேனாவில் எழுத போறாளாம், பேனாவை பத்தி ஏகப்பட்ட ஆராய்ச்சி பண்ணி வாங்கிட்டு போயிருக்கா. அவளால் மட்டுமே இந்த 2 மாதங்கள் சின்ன சிரிப்பொலி கேக்க முடிஞ்சது. வருங்காலத்தில் விவசாயம் பார்க்க போறாளாம். அக்ரி யுனிவர்சிடியில் ஒரு ப்ரொபசரை ப்ரெண்ட் பிடிச்சி வச்சிருக்கா. அவரும் இவளுக்கு ஒரு துண்டு வெச்சிருக்காராம். பாவம் அக்ரி.

என் செல்லங்களுக்கு, எப்பவும் போல இப்பவும் உங்களை படின்னு சொல்லி படுத்த மாட்டேன். உங்களுக்கு என்ன தேவைன்னு உங்களுக்கே இப்ப தெரிஞ்சிருக்கும், இது பண்ணுங்க இதை செய்யாதிங்கன்னு இனி சொல்லிதர வேண்டாம். முடிவு பண்ணிக்குங்க, முடிவு செய்தபிறகு எதுக்காகவும் யோசிக்கவோ கவலைப்படவோ தேவையில்லை. இதெல்லாம் நம்மால் முடியும்னு நம்பிக்கையில தான் அந்த முடிவு நம்முள்ள வருது. அதனால் எப்பவும் எதையும் சந்தோசமா தெளிவா அணுகுங்க. கேள்வி நீங்க உங்களையே கேட்டு அதற்கு எல்லாகோணத்திலும் பதில் நீங்களே சொல்லி பாருங்க. இந்த பதிலில் இந்த முடிவு வரும் இது எதிர்விளைவா நடக்கும்னு நினைச்சு பாருங்க. வாழ்க்கை ஒரு முழு நீள கலர் படம் விரும்பிய வண்ணங்களில் அழகா அமைச்சுக்குங்க.ஒரு அம்மாவா அதுக்கு நான் என் உதவிகளை கண்டிப்பா செய்வேன். 

என்னை மன அளவில் இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என் தோழிகளுக்கு ஆல் தெ பெஸ்ட்..என் ஜாய். அண்ட் தேங்க்ஸ்.

உங்களுக்கு பிடித்த பாடலுடன் இந்த நாள் துவங்கட்டும். லவ் யு கண்ணுகளா


Monday, June 4, 2012

என் சிறகும் வானமும்


ஒன்றரை மாதம் கழித்து இன்னைக்குதான் ரெண்டு பேரும் சூரிய உதயம் பார்க்கிறார்கள். என்ன ஒரு ஆட்டம். ஏப்ரல் 18இல் இருந்து நேற்றுவரை வாசலில் பெய்த வெயில் முழுதும் இவங்க தலையில் தான் இருந்திருக்கும்.

தாத்தா வீட்டுக்கு ஒரு வாரம் அனுப்பி வைத்திருந்தேன். அடுத்த நாளிலிருந்து போன், அம்மா போரடிக்குது வாங்கம்மா, எப்பம்மா வருவீங்க, சாப்பிடவே பிடிக்கலம்மா, ஒரு இரவு ரெண்டு பேரும் குட்நைட்டுக்கு பதில் ஒரே அழுகை, வந்து கூட்டிட்டு போங்கன்னு..பின்ன இங்க ரோஹித், ரிஷித், மஹாலஷ்மி, காவியா, சனந்தா, பிருந்தா, நிதின், ஹரிஷ், அச்சு, சக்தி, ஸ்ரீவத்ஸன், இத்தனை பேரோட செம ஆட்டம். இதில் 10 நாள் முன்பு ரோஹித், ரிஷித் (ரெண்டு பேரும் இவங்க கஸின்) ஊருக்கு போயிட்டாங்க. சக்தி, அச்சு வீடு காலி செய்து போயிட்டார்கள். இருந்தாலும் கொஞ்சமும் குறையாத விடுமுறைகூத்துதான். வழக்கமாக போகும் டேபிள்டென்னிஸ், டான்ஸ், பாட்டு எல்லாம் நிறுத்திட்டேன். இருக்கவே இருக்கு இன்னைக்கு இருந்து அந்த கொடுமை எல்லாம். ஒரு மாசம் ஜாலியா இருக்கட்டும்னுதான்.

ம்ம்ம் ஒரு சின்ன கொசுவர்த்தி சுத்தி பார்த்தால், பால்யமும் பள்ளிவிடுமுறையும் எவ்வளவு அழகானது. இப்ப நாலு சுவருக்குள் விளையாடினாலும் அதுவும் அழகுதான். சின்ன சண்டை,கோபம், சமாதானம், மறுபடியும் சண்டை.

வர்ஷா பள்ளி சென்ற முதல் நாள் தான் பப்பு வயிற்றில் இருப்பதை உறுதி செய்த நாள். அதனால் அது எனக்கு கொஞ்சம் ஸ்பெஷலான நாள். தினம் அவளை நானே கொண்டு விட்டு கூட்டிட்டு வரனும்னு நினைத்தேன். பப்பு பள்ளிக்கு போனா நாளில் ஊரெங்கும் செம மழை. எப்படித்தான் மிஸ் இவளை சமாளிப்பாங்கன்னு கவலையா இருந்தது. அதே போல் இவங்க ரெண்டு பேரில் பப்பு மிஸ்கிட்ட தான் ஏகப்பட்ட பிரச்சனை.

ஒரு வாரமாக துவங்கிய தடபுடல் ஏற்பாடுகள் புது சாக்ஸ், பென்சில் பாக்ஸ், பேனா, இன்னபிற வஸ்துகள். ஆனால் ரெண்டு பேரிடமும் நல்லவிசயம் தேவையற்றதுன்னு எடுத்து சொன்னா வேண்டாம்னு ஒதுக்கிடுவாங்க. அதிக விலையுயர்ந்த எந்த பொருளையும் வாங்கித்தரமாட்டேன். கடையில் பென்சில் பாக்ஸ் 400க்கும் மேல விக்கறாங்க. அதை வாங்கித்தரவும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்!!!  2 ரூவா பென்சிலுக்கு 400ரூபாய் பாக்ஸ்..!!!


என்னதான் விளையாட்டாக நாட்கள் சென்றாலும் அவங்க பள்ளி திறக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். எல்லாவருடம் போலவும் இந்த வருடமும் உற்சாகமாக கிளம்பி போயாச்சு. எனக்குதான் எல்லா அறைகளும் காலியாக வெறுமையாக இருக்கும். ஒரு வருடம் எப்படி ஓடிற்று? கண்முன் குழந்தைகள் வளர்ந்து வருவதை சின்னதான சீருடைகள் எடுத்துரைக்கிறது. எனக்கிருக்கும் பொறுப்புகளை அடுத்த அளவுக்கு போன அவர்களின் காலணிகள் கவனிக்க செய்கின்றது. தலைவாரும் போது அவர்களின் உயரக்கூடல் ஒரு வருடம் கூடியதை உணர்த்துகிறது. ஊட்டிவிடும்மா என்று சொல்லாமல் வர்ஷா தானே வேகவேகமாக சாப்பிடுவதை பார்க்கும் போது பால்யம் முடிந்து பதின்ம வயது வருகிறதோ என்று மனசுக்குள் ஒரு சின்ன பதற்றம்.


போட்டி நிறைந்த இந்த உலகில் மனசு விட்டு சிரிப்பது கூட குழந்தைகளுக்கு கடினமாக விசயமாக ஆகிவிட்டது. ஒரு சாக்கு மூட்டை அளவு புத்தகங்கள், இதெல்லாமா அவங்களுக்கு வாழ்க்கையை சொல்லிதரும்? இவ்வளவு விடியக்காலையில் பள்ளிக்கூடத்தில் என்ன செய்வார்கள்? காலையில் 8.40 முதல் மாலை 4 மணிவரை. என்ன கொடுமை இது? 10 மணிக்குப் பள்ளி ஆரம்பித்தால் என்ன? கிட்டத்தட்ட 8 மணிநேரம் ஒரே இடத்தில் ஒரே வேலையை விதவிதமான குணாதியம் உள்ள ஆசிரியர்களுடன் கழிப்பது கொஞ்சம் கடினம் தான். அதும் அறிவியல் ஆசிரியர்களும் கணித மேதைகளூம் எப்போதுமே கடினமாகவே இருக்கிறார்களாம்.


ஸ்கூல்க்கு போங்க, சந்தோசமா இருங்க, சொல்லித்தரதை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க, சும்மா நெஞ்சில் அடிச்சு மனப்பாடம் பண்ண வேண்டாம். ட்யுசன் வைக்க மாட்டேன், நானும் சொல்லித்தர மாட்டேன், நீயா படி நீயா புரிஞ்சுக்க, என்ன புரியுதோ அதை எழுது அதுக்கு மார்க் வந்தா போதும். அதனால் ரொம்ப டென்சன் ஆகாமல் போ. எந்த டீச்சரையும் பார்த்து பயந்துக்க வேண்டாம், தெரியலைன்னா தைரியமா கேளுன்னு சொல்லி அனுப்பிருக்கேன்.


வர்ஷா,பப்பு பள்ளியில் ஆயிரம் பேரில் நீங்களும் ஒருத்தர், ஆனா எனக்கு என் உலகமே நீங்க தான்.  நான் வெறும் தாய்ப்பறவை, என் சிறகும் வானமும் நீங்க தான். படிச்சு பெரிய வேலைக்கு போயி சம்பாதிக்கனும்னு இம்சை பண்ணமாட்டேண்டா. உங்களுக்கு சவுகரியா இருக்கும் அளவுக்கு நான் சம்பாதிச்சு தரேன். நீங்க சந்தோசமா இருங்க. வாழ்க்கையை அதன் போக்கில் வாழகற்றுக்கொள்ளுங்கள். எவ்வளவு போராட்டமான தருணமாக இருந்தாலும் எதிர்கொள்ளுங்கள், பணம் காசை விட பெரியது மன தைரியம், தன்னம்பிக்கை. அனாவசிய பயமில்லாமல், சுதந்திரமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். அதுவே பெரிய பாடமும் படிப்பும்.


வாழ்த்துகள் கண்ணுகளா.. ஆல் தெ பெஸ்ட்


.உங்க ரெண்டுபேருக்கும் பிடிச்ச உங்க ஃபேவரைட் பாட்டு :)

YOU FOLLOW WHAT YOU FEEL INSIDE, YOU DON'T HAVE TO TRY, IT COMES NATURALLY :))



Friday, February 17, 2012

என் செல்லக்கண்ணம்மா



ஒரு ஜூன் மாதத்தில் என் நண்பனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருந்தாள், அவளை பார்த்ததும் எதோ ஒன்று இல்லாத வெறுமை டக்குன்னு தோனியது. கல்யாணம் ஆகி 8 மாசம் ஆச்சே, ஒண்ணும் விசேசம் இல்லையா போன்ற கேள்விகள் ஆரம்பம் ஆன நேரம். குழந்தையா நமக்கா? அய்யோ ஒரு பொம்மையை கூட ஒழுங்கா வெச்சுக்க வக்கில்லாத ஆளு, நம்ம பெருமை நமக்குதான் தெரியும்னு என்ற நினைப்பு மாறி ஒரு குழந்தை இருந்தா நல்லாத்தான் இருக்கும் போலன்னு தோன ஆரம்பித்தது அன்றுதான்.

ஜூலை 2, 2000 அன்று என் சின்ன மாமியார் மகப்பேறு மருத்துவர், உறுதியாக குழந்தைதான்னு சொன்னதும், அங்கயே விசில் அடிச்சேன். அந்த நிமிடம் முதல் என் குழந்தையுடன் பேச ஆரம்பித்தேன். அன்னைக்கே திரும்பி ட்ரெயினில் போகும் போது ஊருக்கதை அதனிடம் பேசி முடித்திருந்தேன். கூட்டமாகவே இருந்து பழக்கப்பட்ட நான் தனியா இருப்பதை விரும்பினேன். ஒரு மழைக்காலத்தில் என் நெஞ்சளவு தண்ணீரில் நடந்து வரும் போது அதையும் என் வயிற்றுக்குழந்தைக்கு சொல்லிட்டே வந்தேன்.

காதல் திருமணத்தின் அத்தனை சங்கடங்களையும் பாதியாக குறைக்க வந்த குழந்தை, டெலிவரிக்கு முன் கோவையில் செட்டில் பண்ணியே ஆகனும்னு பாட்டியின் அடத்தில் கோவை வந்தோம். ஒரு விடியற்காலையில் மருத்துவ அதிசயத்தில் ஒன்றாக பிறக்கும் குழந்தையை வலியின்றி ரசித்து பார்த்துகொண்டிருந்தேன். என்ன அழகான அழுகையா இருந்தது. என்ன குழந்தைன்னு தெரிஞ்சுக்கனுமான்னு மாமி கேட்டாங்க. எனக்கு பையன் வேணும்னு முதலில் நினைச்சுட்டு இருந்தேன். இல்ல வேண்டாம் நானே பார்த்துக்கறேன்னு சொல்லி குழந்தைவரும் வரை காத்திருந்தேன். தூயவெள்ளை டவலில் சுற்றிய ரோஜா வண்ண தேவதை, எவ்வளவு அழகான கண்கள், நான் பார்த்தவரைக்கும் உலகின் அழகிய கண், வரைந்த மாதிரியான இதழ்கள், சின்ன சங்கு பூ மாதிரி இமைகள், அழுத்தி எடுத்தால் ரத்தம் கன்றும் தாழம்பு கைகள். சொர்க்கம் என்பது என் முன் இருந்தது.

ஒரு நாள் இரவில் அழததில்லை, ஒரு முறைகூட என்னை சங்கடப்படுத்தியதில்லை, அது இது என்று எதற்கும் அடம் பிடித்ததில்லை. அவளுடைய உள்ளும் புறமுமாக எல்லாமாக நானே இருந்தேன், எனக்கு அவளும். மழலையாக பேசியதே இல்லை, நடக்க ஆரம்பிக்கும் முன்பே நன்றாக பேசுவாள், யாருமற்ற பகல் பொழுதுகளில் நானும் அவளும் இருண்ட அறைக்குள் பேசிக்களித்து களைத்த கதைகள் ஆயிரம். தாய்ப்பால் குடிக்கும் போதே என் முகம் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பாள், திடீரென்று முகம் விலக்கி ஒரு தேவதை சிரிப்பு சிரிப்பாள். அந்தக்காலம்தான் வாழ்ந்த காலத்தில் வசந்தம்.

சரியாக எல்.கே.ஜி போன அன்று இன்னொரு குழந்தை என் வயிற்றில். கொஞ்சம் பயந்தேன், பாசத்துக்கு பங்கு வருமென்று நினைப்பாளோ? மாலையில் வீட்டுக்கு வந்ததும் முதலில் அவளிடம் தான் சொன்னேன். அவளுக்கு ஊற்றி வைத்திருந்த ஹார்லிக்ஸை என் வயிற்றுக்கு அருகில் வைத்து பாப்ஸுக்கும்மா என்றாள். ஒரு குழந்தையை நல்லபடியா வளர்த்தியிருக்கிறேன் என்று கொஞ்சம் இறுமாந்தேன். தினம் பள்ளிக்கு செல்லும் போது அவள் ஸ்னாக்ஸில் கொஞ்சம் கொடுத்து செல்வாள், வந்ததும் அதுவரை முக்கியமான நான் விலக்கப்பட்டு அங்கு பாப்ஸ் வந்தது. இம்முறை வயிற்றிலிருப்பது பெண் தான் என்று தெரிந்திருந்தது. இருந்தாலும் சும்மா பாப்ஸ்ன்னு சொல்லுவோம். 8 மாதத்தில் ஒரு நாள் என் வயிற்றில் காது வைத்து குழந்தையின் அசைவை ரசித்துக்கொண்டிருந்தாள். எதோ சொல்லும் போது வயிற்றுக்குழந்தை செமையா ஒரு உதை உதைத்தது. என்ன சந்தோசம் அவளுக்கு. ரெண்டாவது குழந்தை பிறந்ததும் தினம் மருத்துவமனைக்கு வருவாள். வந்ததும் அவளிடம் தான் குழந்தைக்கு சர்வீஸ் போகும். நாப்கின் தருவது. எனக்கு உதவுவதுன்னு அவள் பிசியா இருப்பாள்.

இன்றுவரை பப்புக்கு அவள் தான் இன்னொரு அம்மா, நான் ஊரு உலகமே சுத்த போனாலும் அவளிடம் ஒரு வார்த்தை கண்ணு பப்புவை பார்த்துக்கடா என்று சொல்லி சென்றாள் போதும். கொஞ்சம் அடாவடியான எனக்கு இப்படி அமைதியான பொறுப்பான பெண்., உறவினர் எல்லாருமே சொல்லுவாங்க. அவ ரொம்ப அன்பான பொண்ணு, யாரு வந்தாலும் சிரித்த முகத்துடன் தண்ணீர் கொண்டுவந்து தருவாள். நானாக சொல்லித்தரவில்லை. அவளே செய்வாள். பிறகு அவளுண்டு அவ வேலை உண்டுன்னு அமைதியகா நகர்ந்துவிடுவாள். எப்பவும் படிப்பு படிப்பு .. பாட புத்தகமில்லை. அதை தவிர அனைத்தும். பொரி மடித்து வரும் பேப்பர் உட்பட படிச்சு முடிச்சுடுவா.

உலகத்தில் அவளுக்கு பிடித்த இன்னொரு விசயம் பரதநாட்டியம். அவளோட கடலளவு கண்ணுக்கு ஏற்ற விசயம். ரொம்ப சின்ன வயசில் இருந்து கத்துக்கறா, ஒரு முறை ஒரு நடன நிகழ்ச்சியின் போது வெள்ளை பட்டாடையில் முதல் ஆளா வரும்போது எனக்கு திக்குன்னு இருந்துச்சு. நம்ம குழந்தையா இது? இவ்வளவு அழகான ஒரு குழந்தைக்கு அம்மா என்பதே பெருமைதான். எந்த வரைமுறைகளூம் இல்லாத மிக இயல்பான எளிமையான பெண் என் மகள் என்றால் எனக்கு சந்தோசம் தானே. என் அம்மா இறந்த போதுஅழாமல் அசராமல் நின்று கொண்டு அடுத்த ஏற்பாடுகளை பார்த்துட்டு இருந்தேன். இவ வந்து கட்டிப்பிடித்ததும் என் அம்மாவின் ஸ்பரிச நினைவு உடனே வந்து ஒரு பெரிய அழுகையா வெளிவந்தது. இப்போதும் மனம் தடுமாறும் போதும் கோபப்படும் போதும் என் தெய்வ அசிரீரி அவள் தான்.


வர்ஷா வளர்ந்து கொண்டே போகிறாள் நான் அவளுக்கு குழந்தையாகிக்கொண்டே இருக்கிறேன். இதுவும் நன்றாக இருக்கிறது

என் உயிரான என் கண்மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், உனக்கு பிடித்தது மட்டுமே நடக்கட்டும். நம்ம மூணு பேருக்கும் பிடித்த பாட்டு.

உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி


 

Wednesday, June 15, 2011

தேவதைகள் கலைத்த வீடு


கிட்டத்தட்ட 60 நாட்கள், காலைச்சுற்றும் பூனைக்குட்டி மாதிரி வீடு முழுதும் வியாபித்த என் தேவதைகள், படுக்கை அறைக்கதவு காலை 10 மணிக்கு மேல் தான் திறக்கும், அதற்குள் அதிலிருந்து வரும் சந்தோசக்குரலில் தெரியும் குறும்பு அந்த நாளைக்கான அலும்புக்கான அஸ்திவாரம்.

ராம நாமம் ஜெபித்தால் புண்ணியமாம்? அதைவிட அதிக முறை அதைவிட அதிக அன்புடன், காதலுடன், கோவத்துடன், பாசத்துடன் உங்களை கூப்பிட்டிருக்கிறேன், என்ன கத்தினாலும் ஒரு சின்ன எதிர்வினை கூட உங்ககிட்ட இருந்து வராது.

என்னைமட்டுமல்ல சுற்றி இருக்கும் நண்பர்களையும் சந்தோசமாகவும், உயிர்ப்போடும் வைத்திருக்கும் வித்தை எங்கிருந்து வந்தது? தினம் பப்புவை தேடி வரும் நண்பர்களுக்கு அவள் அளிக்கும் பதிலிருந்தே அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள்ன்னு தெரிந்துவிடும். 60 நாட்கள் கொண்டாட்டமுடன் கழிந்த இரவுகள், கடைசியாக நேற்று இரவு போட்ட ஆட்டமும், தினம் பாடிய பாடல்களும், உங்களிடம் வாங்கின எண்ணற்ற பல்புக்களும் தான் இனிவரும் நாளையும் நகர்த்த உதவும்.

எதற்கு இன்று விடியவேண்டும்? இதோ திரும்பி வந்து பார்க்கும் போது கலைந்து கிடக்கும் வீடு. காலையில் உங்களை ஆசிர்வதிப்பது போல் தூறிய மழை, அதோடு பப்புவின் பெரிய வகுப்பு போகும் (2 வகுப்பு) முன்னேற்பாடுகள், சொத்து பிரிப்பை விட ஜாக்ரதையாக பிரிக்கப்பட்ட பென்சில்கள், க்ரேயான்கள். ஒவ்வொன்றும் நீங்கள் இப்போது இங்கில்லை என்று குறைகூறுகிறது..

கண்ணுகளா, பள்ளி என்பது ஒவ்வொரு நிமிடமும் சந்தோசமுடன் நினைவு கொள்ள வேண்டியது. எப்போதும் போல் இனியும் படின்னு படுத்த மாட்டேன். முதல் மார்க் எடுத்து உங்க அறிவை நீங்க நிருபிக்க வேண்டியதில்லை, சந்தோசமா அனுபவியுங்கள், பள்ளிதரும் அனுபவம், நண்பர்கள், ஒரு நாள் நோட் கொண்டு போகாட்டி மிஸ் வந்து திட்டுவாங்களோ என்ற பய உணர்வு, பிடிச்ச லஞ்ச் கொண்டு போய் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ண, பிறந்தநாள் நண்பர்களின் தனித்தருணங்களில் உடனிருங்கள், இது கடந்து போனால் திரும்ப வராது. வீடு, வாழ்வியல் துன்பங்கள் எல்லாருக்கும் காத்திருக்கும், கடந்து செல்லவேண்டியும் இருக்கும், அதுவரை பள்ளியை அனுபவியுங்கள். அதோடு முடிஞ்சா கொஞ்சம் படிங்க, ஒரு போதும் ட்யுசன் போ என்றோ, ஏன் முதல் மதிப்பெண் வரலைன்னோ கண்டிப்பா நான் கேட்க மாட்டேன்.
என்ன பிடிக்குதோ அதை செய்யுங்கள், அதில் மேலும் சிறப்பாக வர பெற்றோரா என்ன கடமையோ அதை நாங்கள் செய்கிறோம். உங்கள் சந்தோசம் முக்கியம்.

அன்பான குழந்தைகளை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி.. சிலநேரம் அடுத்தடுத்த சென்ற வருடம் இறந்து போன என் பெற்றோரை நினைத்து மூட் அவுட் ஆகும் போது வர்ஷா வந்து மெதுவா அணைத்துக் கொள்ளுவாள், பப்புவோ இப்ப எதுக்கு சோக சீன்ன்னு கேட்பாள்,

இரண்டையும் அனுபவிக்கும் அம்மாவாக ஆனதற்கு நன்றி கடவுளே.என் அம்மாவாக, தோழிகளாக, செல்ல எதிரிகளாக, எப்போதும் கலாய்க்கும் என் இனிய ராட்சசிகளுக்கு இந்தப்பாட்டு.

உங்களுக்கு பிடிச்ச பாட்டு உங்களுக்காக மட்டும் செல்லங்களா..