Showing posts with label சுயபுராணம். Show all posts
Showing posts with label சுயபுராணம். Show all posts

Monday, June 4, 2012

என் சிறகும் வானமும்


ஒன்றரை மாதம் கழித்து இன்னைக்குதான் ரெண்டு பேரும் சூரிய உதயம் பார்க்கிறார்கள். என்ன ஒரு ஆட்டம். ஏப்ரல் 18இல் இருந்து நேற்றுவரை வாசலில் பெய்த வெயில் முழுதும் இவங்க தலையில் தான் இருந்திருக்கும்.

தாத்தா வீட்டுக்கு ஒரு வாரம் அனுப்பி வைத்திருந்தேன். அடுத்த நாளிலிருந்து போன், அம்மா போரடிக்குது வாங்கம்மா, எப்பம்மா வருவீங்க, சாப்பிடவே பிடிக்கலம்மா, ஒரு இரவு ரெண்டு பேரும் குட்நைட்டுக்கு பதில் ஒரே அழுகை, வந்து கூட்டிட்டு போங்கன்னு..பின்ன இங்க ரோஹித், ரிஷித், மஹாலஷ்மி, காவியா, சனந்தா, பிருந்தா, நிதின், ஹரிஷ், அச்சு, சக்தி, ஸ்ரீவத்ஸன், இத்தனை பேரோட செம ஆட்டம். இதில் 10 நாள் முன்பு ரோஹித், ரிஷித் (ரெண்டு பேரும் இவங்க கஸின்) ஊருக்கு போயிட்டாங்க. சக்தி, அச்சு வீடு காலி செய்து போயிட்டார்கள். இருந்தாலும் கொஞ்சமும் குறையாத விடுமுறைகூத்துதான். வழக்கமாக போகும் டேபிள்டென்னிஸ், டான்ஸ், பாட்டு எல்லாம் நிறுத்திட்டேன். இருக்கவே இருக்கு இன்னைக்கு இருந்து அந்த கொடுமை எல்லாம். ஒரு மாசம் ஜாலியா இருக்கட்டும்னுதான்.

ம்ம்ம் ஒரு சின்ன கொசுவர்த்தி சுத்தி பார்த்தால், பால்யமும் பள்ளிவிடுமுறையும் எவ்வளவு அழகானது. இப்ப நாலு சுவருக்குள் விளையாடினாலும் அதுவும் அழகுதான். சின்ன சண்டை,கோபம், சமாதானம், மறுபடியும் சண்டை.

வர்ஷா பள்ளி சென்ற முதல் நாள் தான் பப்பு வயிற்றில் இருப்பதை உறுதி செய்த நாள். அதனால் அது எனக்கு கொஞ்சம் ஸ்பெஷலான நாள். தினம் அவளை நானே கொண்டு விட்டு கூட்டிட்டு வரனும்னு நினைத்தேன். பப்பு பள்ளிக்கு போனா நாளில் ஊரெங்கும் செம மழை. எப்படித்தான் மிஸ் இவளை சமாளிப்பாங்கன்னு கவலையா இருந்தது. அதே போல் இவங்க ரெண்டு பேரில் பப்பு மிஸ்கிட்ட தான் ஏகப்பட்ட பிரச்சனை.

ஒரு வாரமாக துவங்கிய தடபுடல் ஏற்பாடுகள் புது சாக்ஸ், பென்சில் பாக்ஸ், பேனா, இன்னபிற வஸ்துகள். ஆனால் ரெண்டு பேரிடமும் நல்லவிசயம் தேவையற்றதுன்னு எடுத்து சொன்னா வேண்டாம்னு ஒதுக்கிடுவாங்க. அதிக விலையுயர்ந்த எந்த பொருளையும் வாங்கித்தரமாட்டேன். கடையில் பென்சில் பாக்ஸ் 400க்கும் மேல விக்கறாங்க. அதை வாங்கித்தரவும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்!!!  2 ரூவா பென்சிலுக்கு 400ரூபாய் பாக்ஸ்..!!!


என்னதான் விளையாட்டாக நாட்கள் சென்றாலும் அவங்க பள்ளி திறக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். எல்லாவருடம் போலவும் இந்த வருடமும் உற்சாகமாக கிளம்பி போயாச்சு. எனக்குதான் எல்லா அறைகளும் காலியாக வெறுமையாக இருக்கும். ஒரு வருடம் எப்படி ஓடிற்று? கண்முன் குழந்தைகள் வளர்ந்து வருவதை சின்னதான சீருடைகள் எடுத்துரைக்கிறது. எனக்கிருக்கும் பொறுப்புகளை அடுத்த அளவுக்கு போன அவர்களின் காலணிகள் கவனிக்க செய்கின்றது. தலைவாரும் போது அவர்களின் உயரக்கூடல் ஒரு வருடம் கூடியதை உணர்த்துகிறது. ஊட்டிவிடும்மா என்று சொல்லாமல் வர்ஷா தானே வேகவேகமாக சாப்பிடுவதை பார்க்கும் போது பால்யம் முடிந்து பதின்ம வயது வருகிறதோ என்று மனசுக்குள் ஒரு சின்ன பதற்றம்.


போட்டி நிறைந்த இந்த உலகில் மனசு விட்டு சிரிப்பது கூட குழந்தைகளுக்கு கடினமாக விசயமாக ஆகிவிட்டது. ஒரு சாக்கு மூட்டை அளவு புத்தகங்கள், இதெல்லாமா அவங்களுக்கு வாழ்க்கையை சொல்லிதரும்? இவ்வளவு விடியக்காலையில் பள்ளிக்கூடத்தில் என்ன செய்வார்கள்? காலையில் 8.40 முதல் மாலை 4 மணிவரை. என்ன கொடுமை இது? 10 மணிக்குப் பள்ளி ஆரம்பித்தால் என்ன? கிட்டத்தட்ட 8 மணிநேரம் ஒரே இடத்தில் ஒரே வேலையை விதவிதமான குணாதியம் உள்ள ஆசிரியர்களுடன் கழிப்பது கொஞ்சம் கடினம் தான். அதும் அறிவியல் ஆசிரியர்களும் கணித மேதைகளூம் எப்போதுமே கடினமாகவே இருக்கிறார்களாம்.


ஸ்கூல்க்கு போங்க, சந்தோசமா இருங்க, சொல்லித்தரதை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க, சும்மா நெஞ்சில் அடிச்சு மனப்பாடம் பண்ண வேண்டாம். ட்யுசன் வைக்க மாட்டேன், நானும் சொல்லித்தர மாட்டேன், நீயா படி நீயா புரிஞ்சுக்க, என்ன புரியுதோ அதை எழுது அதுக்கு மார்க் வந்தா போதும். அதனால் ரொம்ப டென்சன் ஆகாமல் போ. எந்த டீச்சரையும் பார்த்து பயந்துக்க வேண்டாம், தெரியலைன்னா தைரியமா கேளுன்னு சொல்லி அனுப்பிருக்கேன்.


வர்ஷா,பப்பு பள்ளியில் ஆயிரம் பேரில் நீங்களும் ஒருத்தர், ஆனா எனக்கு என் உலகமே நீங்க தான்.  நான் வெறும் தாய்ப்பறவை, என் சிறகும் வானமும் நீங்க தான். படிச்சு பெரிய வேலைக்கு போயி சம்பாதிக்கனும்னு இம்சை பண்ணமாட்டேண்டா. உங்களுக்கு சவுகரியா இருக்கும் அளவுக்கு நான் சம்பாதிச்சு தரேன். நீங்க சந்தோசமா இருங்க. வாழ்க்கையை அதன் போக்கில் வாழகற்றுக்கொள்ளுங்கள். எவ்வளவு போராட்டமான தருணமாக இருந்தாலும் எதிர்கொள்ளுங்கள், பணம் காசை விட பெரியது மன தைரியம், தன்னம்பிக்கை. அனாவசிய பயமில்லாமல், சுதந்திரமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். அதுவே பெரிய பாடமும் படிப்பும்.


வாழ்த்துகள் கண்ணுகளா.. ஆல் தெ பெஸ்ட்


.உங்க ரெண்டுபேருக்கும் பிடிச்ச உங்க ஃபேவரைட் பாட்டு :)

YOU FOLLOW WHAT YOU FEEL INSIDE, YOU DON'T HAVE TO TRY, IT COMES NATURALLY :))



Friday, December 30, 2011

ஐ லவ் யு செல்லம்

வலைப்பதிவு என்பதே ஒரு கொசுவர்த்திதானே. இந்த வருச கொசுவர்த்தியை சுத்திப்பார்க்கிறேன். ஒவ்வொரு வருசமும் முடியும் போது ஏகப்பட்ட அனுபவங்களும் படிப்பினைகளும் வாழ்க்கையை செப்பனிடுகிறது.

இந்தவருடம் ஆரம்பமே அமர்க்களம். இடது கை உடைந்து 4 கிலோ அளவுக்கு பெரிய கட்டுடன் தான் வரவேற்றேன். ஊரே புத்தாண்டு கொண்டாடும் போதும் கங்கா மருத்துவமனையில் வலியில் புலம்பிட்டு இருந்தேன்.  போனவருடம் முழுதும் இழப்புகளின் வருடம், அப்பா இறந்தது, சில பல பர்சனல் இழப்புகள்னு ஒரே ஆர்ட் ப்லிம் ரேஞ்சுக்கு இருந்தது. இந்தவருடம் மட்டும் சளைச்சதா என்ன?

ஜனவரி கைகட்டுடன் வரவேற்று அனுப்பி பிப்ரவரி  வரும்போதே வாழ்வில் மறக்க முடியாத மாதமாக வந்தது. பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று என் அம்மாவின் மரணம், அதை அடுத்து 4 நாட்களில் மாமாவின் மரணம். மரண அடின்னு சொல்லுவாங்களே அதுதான் இது.


மார்ச் இத்தனை இழப்பிற்கு ஈடு செய்வது போல் எங்க வீட்டின் புது வரவு, என் தங்கை பையன் நந்தன். அவன் சிரிப்பு மட்டுமே எங்கள் இழப்பை கொஞ்சம் தள்ளி வைக்கிறது. ஏப்ரல் மாதம் கட்டு பிரித்து கை ஒரளவிற்கு வந்ததும் அப்பாடான்னு இருந்தது. இதற்கிடையில் இழந்த இன்னொரு பொருளும் மறுபடியும் கிடைத்தது. இனிமேல் பத்திரமா வைச்சுக்கனும்.

ஜூன் முதல் செப்டம்பர் வரையான மாதங்கள் மருத்துவமனையிலேயே பெரும்பாலான நாட்கள் கழிக்க வேண்டியிருந்தது. மாமியாரின் மரணம் வரை இந்த கதை தொடர்ந்தது. மரணங்களை மிக அருகில் பார்த்து பார்த்து மனது அடப்போ இவ்வளவு தானா என்று சலிக்கும் அளவுக்கு இந்த வருடம் எல்லாவிதத்திலும் பாடம் கற்றுக்கொடுத்தது.

போலியான மனிதர்களை வழக்கம் போல கடைசியில் கண்டு ஓடிப்போயிடுன்னு துரத்தி விட்டு, மறுபடியும் வண்டிசக்கரத்தில் எண்ணெய் விட்டு வாழ்க்கை சுற்ற ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு நாளும் கற்றுக்கொடுக்கும் வாழ்க்கையே ஐ லவ் யு. இப்பத்தான் தினம் தினம் வருவதை எதிர்கொண்டு வாழ பிடிக்கிறது. எவ்வளவு சுவாரஸியமா இருக்கிறது. மனிதர்கள் அதுவும் சாதாரணமான மனிதர்களா? எவ்வளவு வகை, ஒவ்வொரு மனிதனும் நிழலில் ஒன்று வெளிச்சத்தில் ஒன்று, இருட்டில் ஒன்றுன்னு ஏகப்பட்ட முகமூடிகளுடன், அவர்கள் நிகழ்த்தும் அல்லது அவர்களை சுற்றி நிகழும் நிகழ்வுகள், கவலைகள், காதல்கள், மரணங்கள், சிரிப்புகள், வேதனை, வலி, சந்தோசம், எல்லாம் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.

இத்தனை விசயங்களுக்கு நடுவில் சில பல ஊர் சுற்றல்கள், சிங்கப்பூர், மலேசியான்னு பெரிய கும்பலை கூட்டிட்டு போயி கொண்டு வந்து பத்திரமா விட்டது பெரிய அனுபவம். வழக்கம் போல் என் நட்புகளும் உறவுகளும் சீண்டியும் சிரித்தும் தொடர்கிறது.

இணையத்தில் வந்த இந்த 5வதுவருட ஆரம்பம் மகிழ்ச்சியாகவே தொடங்குகிறது. கூகுள் பஸ் சோர்ந்து போன, தனிமையான  பல தருணங்களில் தோள் கொடுத்திருக்கிறது. அதன் மூலம் கிடைத்த நட்புகளுக்கு ஒரு தனி நன்றி. எதையும் உடனே பகிரவேண்டும் வாழ்த்தோ திட்டோ சிரிப்போ அவர்களுடன் சேர்ந்து இருக்கவேண்டும்னு தோனியது. தேங்க்ஸ் மக்கா :)

இந்த வருடம் புதுசா எதுவும் உறுதிமொழி இல்லை, பிடிக்காததை சட்டுன்னு தூக்கி எறியும் இந்த குணம் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா பண்ணனும். இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா மனிதர்களை படிக்கனும். அம்புட்டுதான். வழக்கம் போல கலாய்ச்சு, கலாய்க்கப்பட்டு, கவலைகளை பிரித்து தீர்வு கண்டு சந்தோசமா இருக்கனும். நீங்களும் உங்க எண்ணங்கள் எல்லாம் ஈடேறி சந்தோசமா இருங்க.

சில நண்பர்களுடன் சேர்ந்து உருப்படியா ஒரு வேலை செய்யலாம்னு இருக்கேன். உங்க ஆதரவு எப்பவும் அதற்கு தேவை. ஜனவரி ஒன்று அன்று அறிவிக்கலாம்னு இருக்கோம். அதற்கான உங்க ஆதரவுக்கு இப்பவே ஒரு பெரிய நன்றி சொல்லிக்கறேன்.



இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :)

Friday, December 16, 2011

பல்ப் ஃப்ரம் பப்பு

இது கூகுள் பஸ்ஸில் எழுதியது. ஒரு தொகுப்பா எடுத்து வைத்து பப்பு பெரியவளானதும் கொடுக்கனும்

========

பப்பு சீக்கிரம் சாப்பிடு கண்ணு

அரை மணி நேரம் கழிச்சு அதே பருப்பு சாதம் நோண்டிட்டு இருந்தா

ஏநான் :என்னடி பண்றே. சீக்கிரம் சாப்பிடுன்னு சொன்னனே, நீ சாப்பிடற 4 பருக்கை பருப்பு சாதத்துக்கு அரை மணி நேரமா?

பப்பு : நான் டயட்டும்மா...

நான் : ங்ஙே!!!! என்னது டயட்டா?

பப்பு: ஆமாம்மா டயட்டுன்னா உங்களை மாதிரி இல்ல, நிஜ டயட்டு.. மீதி ஆனதை சாப்பிட மாட்டேம்மா.

-------
1.பப்புவும் வர்ஷாவும் சாப்பிட்டு இருந்தாங்க, ஒரு மாசமா டிவிக்கு தடா, வாரம் 3 மணி நேரம் டிவியில் ப்ரோக்ராமும், ஒரு படம் டவுன்லோடியும் பார்க்கலாம், சாய்ஸ் இருக்கு டிவி வேண்டாதவங்க கம்ப்யுட்டர் கேம்ஸ் ஆடலாம், யாரு குறைவா டிவி, கம்புட்டர் முன்னாடி இருக்காங்களோ அவங்களுக்கு வாரம் 50 பாயிண்ட், 500 பாயிண்ட் யாரு முதலில் ரீச் பண்றாங்களோ அவங்க இஷ்டப்படி 150 ரூபாய்க்கு ட்ரீட், ஒன்லி சாப்பாடு, ட்ரீட் வேண்டாதவங்க அந்த காசை உண்டியில் சேர்த்துடலாம். வர்ஷா 800, பப்பு 600 ரூபாய் வச்சிருக்காங்க, அதுல நான் 300ரூபாய் கடன் வாங்கினேன், மேட்டர் அது இல்ல வர்ஷாக்கு மேத்ஸ்ல இண்ட்ரஸ்ட்னு ஒன்னு சொல்லிதந்திருக்காங்க, அவ அதை பப்பு கிட்ட சொல்ல, பப்பு 12% வட்டி கணக்கு போட்டு அதை அவங்க பாட்டிகிட்ட செக் பண்ணி வந்து என்கிட்ட கேக்குது...அந்த 300 ரூபாய்க்கு இது இண்ட்ரஸ்ட்ம்மா, அதையும் சேர்த்துடுன்னு :((

2. எதோ சினிமா பாட்டு பாடிட்டு இருந்தா நான் முறைச்சேன், அதுக்கு ரொம்ப கூலா சொல்லுது எதை கேக்கறதா இருந்தாலும் என்கிட்ட கேக்காதீங்க, என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேளுங்க, அவங்கதான் சொல்லித்தந்தாங்க, நான் சும்மா பாடிப்பார்த்தேன்னு.

--------
பப்பு :அம்மாஆஆ, நீங்க என்ன சொன்னாலும் கலைஞருக்கு ஓட்டு போட மாட்டேன்

நான் : சுட்டி டிவி அவங்களுதுதான், ஓட்டு போடலைன்னா எப்படி தெரியும்?

பப்பு : ஓ அப்படியா? சரி போடறேன் :))

வருங்கால அரசியல்வாதி ரெடி


------
நான் : பப்பு போயி குளிடி..

பப்பு : ஒரு லுக்கோடு - ம்ம் எனக்கு ஆர்டர் போட அந்த ஆண்டவனே யோசிப்பான்

நான் : என்னடி சொல்றே?

பப்பு : பஞ்ச் டயலாக்கும்மா :))))

------
ஒவ்வொரு வருசமும் சித்ராபவுர்னமி மிக சிறப்பா சத்யநாராயண பூஜை ராமின் சித்தி வீட்டில் செய்வது வழக்கம், நேத்து நைட் பப்புவிடமும் வர்ஷாவிடமும் நாளைக்கு சாயங்காலம் இந்த பூஜைக்கு போறோம்னு சொன்னேன்..

இதற்கு முன் ஒரு சின்ன ப்ளாஷ்பேக் : பப்பு,வர்ஷா ரெண்டு பேருக்கும் பிடிச்ச கதை அவங்க பிறந்த கதைதான். வயிற்றில் இருக்கும் போது என்ன நடந்தது, எப்படி பிறந்தார்கள்ன்னு கேள்வியில் துளைச்சுடுவாங்க, டைரி எழுதும் பழக்கம் இருந்தது , (இப்ப இல்லை) அதை கொடுத்து படிச்சுக்க சொல்லிடுவேன். அப்படி ஒரு சித்ரா பவுர்னமி விரதத்திற்கு பிறகு பிறந்தவள் பப்பு, இதை சொல்லியிருந்தேன்.

மறுபடியும் நேத்து நைட் ஸ்டோரி..

நான்: பப்பு சீகிரம் கிளம்பனும், பாட்டிகூடவே போயிட்டு வந்திடலாம்

பப்பு : நான் வரலம்மா

நான் : ஏண்டா

பப்பு: இந்த பூஜைக்கு போயித்தானே நான் பிறந்தேன் , நாளைக்கு போயிட்டு வந்தா இன்னொரு பாப்பா வரும், எனக்கு பிடிக்கலை, நான் வரலை, எப்பவும் நாந்தான் பாப்பா........(பாரேன் இந்த புள்ளக்குள்ள இம்புட்டு இருக்கு)

நான் ----- பல்ப்பா எறியுது என்னை சுத்தி :(((((((

#புள்ளயா பெத்து வெச்சிருக்கேன்

Monday, December 12, 2011

அக்கம் பக்கம்

பக்க்த்து மாநிலமான கேரளாக்கும் நமக்கும் பங்காளி தகராறு முட்டிகொண்டு நிற்கும் இந்த நேரத்தில் தண்ணி தராத கேரளாவை கடுமையா கண்டிச்சுட்டு, முடிஞ்சா ப்ரித்வியை நாடுகடத்தி கோவைக்கு அனுப்புமாறு பணிவுடன் உம்மன்சாண்டி அங்கிளை கேட்டுக்கிறேன். வாளையாறு டேம்க்கு யாராவது போயிருக்கீங்களா? அதுவும் இருப்பது தமிழ்நாட்டில் தான் ஆனால் பயன் கேரளாவிற்கு..இதுக்கு ஒரு நாளைக்கு தனியா பொங்கலாம். கோவையில் பாதிக்கும் மேல் கேரள மக்கள் தான் இருக்கிறார்கள், தனியே கோவில், க்ளப், சங்கம், பள்ளிக்கூடம் என்று மினி கேரளாவே இருக்கிறது. ம்ம்ம் பெருந்தன்மையின் பரிசுதான் இது.

-------
கிட்டத்தட்ட ஆண்டு முடிவை நெருங்கும் நேரம் இந்த வருடம் முழுதும் அசைபோட்டுப்பார்த்தால் கற்றதும் பெற்றதும் ரொம்ப அதிகம். தனி செண்டி பதிவா தேத்திடலாம் விஜி ..டோண்ட்வொர்ரி

------
தங்கம்னு பேப்பரில் எழுதி லாக்கரில் வைக்கும் நிலைமைக்கு வந்துடுவோம் போல. எங்களை மாதிரி குடும்ப இஸ்திரிகளுக்கு விலையை கேட்டாலே திக்குன்னு இருக்கு. சேமிப்பின் பழக்கத்தை வலியுறுத்தும் தங்க விலையேற்றத்திற்கு ஒரு ஜே !!

------
 எங்கள் தெருவில் ஒரு பெண், கார்ப்பரேசனில் பணி புரிகிறார். 42 வயதானவர். அசாதாரணமான உடல் பருமன். அதைக்குறைக்க அவர் விஎல்சிசி சென்று ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டாராம். அதில் அவரின் இரு தொடைகளும் உணர்ச்சி இழந்து போனது. உடல் முழுதும் கொழுப்பு கட்டிகளும் படர்ந்துவிட்டது. ஏஞ்ஜெல் என்று இன்னொரு உடல்பருமன் குறைக்கும் நிலையம் சென்று சிகிச்சை எடுத்ததில் அவருடைய தோல் தொடையிலிருந்து கால் பாதம் வரை கருகினது போல ஆனது.

யாருக்கு உடல் எடை குறைக்கனுமோ தயவுசெய்து சாதாரண உடற்பயிற்சி, சரியான உணவு முறைமூலம் மட்டுமே குறைக்க முயற்சி செய்யுங்கள்,. நான் அந்த பெண்னை பற்றி சொன்னது 10 சதவீதம் தான். உக்கார்ந்தால் எழ முடியவில்லை. திரும்பி படுக்க முடியவில்லை. :(


இந்த மாதிரி நிலையங்களை போகும் முன் தெரிந்தவர்களிடம் கேட்டு போங்கள், யாரோ ஒரு சிலருக்குதான் சரிப்படும். எனக்கு தெரிந்து இந்த சிகிச்சை முறை ஒத்துக்கொள்ளாதவர்கள் தான் அதிகம்
--------
நேத்து பாரதியார் பிறந்த நாள், இன்னைக்கு சூப்பர் ஸ்டார் பிறந்தநாள். சமூகவலைத்தளங்களில் திடீர் பாரதி பாசத்தை தாங்க முடியலை. பாவம் பாரதி. இருந்திருந்தா ரொம்ப ஃபீல் பண்ணிருப்பார்,. இம்புட்டு பாசக்காரங்களா இருக்காங்களேன்னு.. சூப்பர் ஸ்டார் வீட்டு சமையல் காரருக்கும் ஒரு வாழ்த்து சொல்லிடுங்க. வரலாறு முக்கியம்.-------
கூகுள் பஸ்ஸில் இருந்த வரைக்கும் பொழுது போனதே தெரியாது. ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் விருந்தினர் வீடு மாதிரி இருக்கு, போகலாம்னும் தோனுது போனதும் எப்ப கெளம்புவோம்னும் இருக்கு :)) செட் ஆக இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் போல.
---

தினம் பேப்பர் பார்க்கவே பயமா இருக்கு. இந்த வாரத்தில் 3 பெண் குழந்தைகளுடன் அம்மா தற்கொலை திருப்பூரில், கணவன் மனைவி குடும்பத்துடன் தற்கொலை, பெங்களூரில் 4 டாக்டர்கள் தற்கொலை.. என்ன நடக்குது.. சாவு அம்புட்டு ஈசியா போயிடுச்சா?

------

ஈரோடு பதிவர் சங்கமம் வரும் ஞாயிறு நடக்கிறது. மேலதிக தகவலுக்கு http://www.erodekathir.com/2011/12/2011.html. வாங்க அங்க மீட் பண்ணுவோம் :)

Wednesday, December 7, 2011

கானல் வாழ்க்கை


வீடு வரை உறவு 
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசிவரை யாரோ?
எவ்வளவு உண்மை...


நேற்றிருந்தவர் இன்றில்லை, இன்றிருப்பவர் நாளையில்லை. நிதர்சனம்தான். இன்று இறந்த பிணத்தைப்பார்த்து நாளை இறக்கப்போகும் பிணம் அழுகிறதுன்னு பட்டினத்தாரோ யாரோ சொல்லிருக்காங்க.. ஒரு இழப்பு வாழ்க்கையை அவர்களை சார்ந்தவர்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிபோடும்  என்று இதுவரைக்கும் யோசிக்கலை.

சின்னவயதில் சாவு அறிமுகமானது பக்கத்து வீட்டு பாட்டியினால், திடீர்னு இறந்துட்டாங்கன்னுசொன்னாங்க. போயி பார்த்தேன், படுக்க வைத்திருந்தார்கள் அவ்ளோதான் சாவுக்கான அறிமுகம். 7வது படிக்கும் போது என் அப்பிச்சியின் அம்மா (அம்மத்தா) இறந்துவிட்டார்கள்னு பள்ளியில் இருந்து அழைத்து வந்து ஊருக்கு போனோம். அது இழப்பாக தெரிந்ததைவிட உறவு எல்லாம் கூடிய விழாவாகவே இருந்தது. இதற்குப்பிறகு வேறு ஏதும் பெரிதாக பாதிக்கவில்லை.

15வருடங்களுக்கு ஒரு நாள் அலுவலகத்திற்கு வந்த போன் சொல்லிய சேதி, எங்க பக்கத்துவீட்டில் இருந்த நகைக்கடை அதிபர் குடும்பத்துடன் தற்கொலை. திருப்பூரில் 13 பேர் இறந்தது மிகப்பெரிய அதிர்வு. அதும் பிறந்ததிலிருந்து பார்த்தவர்கள் இன்னைக்கு நாயைக்கூட விட்டுவைக்காமல் போய்விட்டார்கள் என்றதும் அதிர்ச்சிக்கு அளவில்லை.

பால்ய சிநேகிதம் என்பது மனதுக்கு மிக நெருக்கமானது, வலியோ சுகமோ பகிரும் உறவு அதுதான். சித்ரா. என் மிக நெருங்கிய தோழியாக இருந்தவள், கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள், படிப்பு சரியாக வராததால் திருமணத்திற்கு அவசரப்படுத்தப்பட்டவள், 13 வருடத்திற்கு முன் ஒரு ஜூலை 8-ல் தீக்குளித்தாள், உயிர் போகாமல் ஒரு நாள் முழுதும் இருந்தாள், என்னைப்பார்க்கனும்னு என் அப்பாவிடம் சொல்லி அனுப்பினார்கள் எனக்கு அவளைப்பார்க்கும் தைரியம் அப்போது இல்லை. இப்போதும் வரவில்லை.. மன்னிச்சுடு சித்ரா. பெரிய கண்களூடன் உன் சாயலில் பாதி கொண்டிருக்கும், நீ தற்கொலை செய்து கொள்ளும் போது 7 மாதக்குழந்தையாக இருந்த உன்  மகனை இப்போது பார்த்தாலும் மனசுக்குள் ஒரு கலவரம் வருகிறது.

ரொம்ப வருடம் கழித்து 4 வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பாவும் அவரைத்தொடர்ந்து 45 நாளில் என் அப்பாவின் அம்மாவும் (தாத்தா- பாட்டி) போய்ச்சேர்ந்தார்கள். இதைவிட என் அப்பா இறந்தது கூட ஒரு அதிர்ச்சிதான். ஆனால் என் கண் முன் நடந்த மரணம், இப்பவும் ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் நினைவில் வருவது. நாலே நாட்கள் கோமாவில் இருந்து வீட்டுக்கு போனதும் ஒரு வினாடி கண்ணைத்திறந்து பார்த்துவுடன் ஒரு சின்ன விக்கலில் உயிரை விட்ட அம்மா.

அம்மா இறந்துட்டாங்கன்னு சுதாரிக்கவே சில நிமிடம் ஆனது,. சரியாயிடுச்சு போலன்னு நினைச்சு அம்மா பாரும்மான்னு உலுக்கி எடுத்தேன். நானும் என் சித்தியும் மட்டுமே அருகில். ஆனால் திறந்து கண்கள் மூடவே இல்லை. முதலும் கடைசியுமாக நினைவு தெரிந்து அம்மாவை கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்தேன். கொடுத்துட்டே இருந்தேன். அழவே தோனலை. கூட இருந்தவர்களின் அழுகுரல் தான் மறுபடியும் இந்த உலகில் கொண்டுவந்தது. அவங்க கண்ணை தானம் தரும்போது என் மாமா உட்பட யாரும் ஒத்துக்கலை. டாக்டர் கடைசியாக மறுபடியும் அந்தக்கண்களை திறக்கும் போது எனக்கு பார்க்கும் அளவு தைரியம் வரவில்லை.

அம்மா இறந்ததுமே உண்மையிலேயே இவ்வளவு நாள் நினைத்தது வாழ்க்கை இல்லை. அர்த்தமில்லாத கோபம், வருத்தம், எல்லாம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. அடுத்த நான்கு நாட்களில் அப்பாவின் ஒரே தங்கையின் கணவர் - என் மாமா ஹார்ட் அட்டாக்கில் இறந்ததும் அடச்சேன்னு ஆயிடுச்சு.

அதெல்லாம் விட இன்னும் வாழ்க்கையின் மேல் பயமும், காதலும், விருப்பமும் வரக்காரணம், என் மாமியாரின் மரணம். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக புற்றுநோயில் போராடி, இவ்வளவுதான் என்று அளவிட முடியாத கஷ்டப்பட்டு, உடலின் ஒவ்வொரு பகுதியும் வலியில் துடித்து, தோல் கருகி, சுருங்கி, உடல் முழுதும் ரணமாகி, கடைசி இருபது நாட்கள் நரகத்தில் இருந்து ஒவ்வொரு அணுவும் வலியை அனுபவித்து ஒரு வழியாக மரணித்தார். அது என்னைப்பொறுத்தவரை அவருக்கு விடுதலைதான்.கடைசிநாட்களில் அவர் கண்ணாடியே பார்க்கவில்லை, ஒரு நாள் விளையாட்டாக போனில் போட்டா எடுத்த வர்ஷாவிடம் அவர் இன்னும் கொஞ்சம் சிரிக்கறேன் இப்ப எடுன்னு. அந்த சிரிப்பு என்பது உதடுகளின் விரிசல் தான்.

ஒரு மரணம் ஒரு தனிமனித மரணம் அல்ல, அது ஒரு தலைமுறையின் முடிவு. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே முடிந்துவிடுகிறது. அவருக்கு பிடித்தது, பிடிக்காததது, விருப்பு, வெறுப்பு, வலி,கோபதாபங்கள். மரணமில்லா பெருவாழ்வு சாத்தியமில்லாதது போல் மறதியும் உடனே வந்தால் பரவாயில்லை. எந்தப்பொருளை பார்த்தாலும் அதோடு சம்பந்தப்பட்ட அவர்களின் நினைவு வந்து இருக்கிறவர்களை கொல்கிறது. மனதை அதிலிருந்து வெளியெடுப்பது அவ்வளவு சிரமம்.

ம்ம் போகிறவர்கள் போகட்டும் மிச்சமிருப்பவர்களுடன் தொடரும் பயணம்..



Sunday, September 18, 2011

பால்யம் - ஜவ்வு மிட்டாய்

க்ளிங் க்ளிங் க்ளிங்.. இந்த வித்யாசமான மணி முட்டாய் தாத்தாவோடது.  மறக்கமுடியாத சில முகங்களில் அவரோடதும் ஒண்ணு. முட்டாய்தாத்தா,, காலையில் வெயில் மண்டைகாய வைக்கும் போது நிலாகாய்ஞ்சுட்டு மெதுவா நடந்து வருவார். ஒவ்வொரு அடி எட்டு வைக்கும் போதும் அதற்கு பேக்ரவுண்ட் இந்த க்ளிங் சத்தம். 

அவரோட தோளில் இருக்கும் துண்டை மெத்தையாக்ககி ஒரு  மரசட்டம் சாய்ந்திருக்கும், அதில ஒரு பொம்மை முகம் சகல அலங்காரங்களும் செய்து பொட்டு வைத்து பூச்சூடி இருக்கும். அவளோட உடம்புதான் விசேசம். நல்ல பிங்க் கலரில் வெள்ளை பார்டரோடு நடுவில் வரிவரியா சிவப்பும் சில நேரம் இருக்கும், இழுக்க இழுக்க வரும் இனிப்பு ட்ரெஸ் அவளுக்கு. 

ஐஞ்சு பைசாக்கு செயின், பத்து பைசாக்கு டாலர் வச்ச நெக்லஸ், வாட்ச், இன்னும் ஐஞ்சு பைசா சேர்த்து கொடுத்தா செயின், நெக்லஸ், வாட்ச் எல்லாம் கிடைக்கும். பரபரன்னு அந்த ஜவ்வு மிட்டாயை இழுத்து ரெண்டு சுத்து சுத்தி நகை செய்து மாட்டியும் விடுவார்.  அதோட கண்டிப்பா ஒரு கொசுறு கன்னத்தில் ஒட்டிவிடப்படும்.  சனி ஞாயிறு காலை பதினோரு மணி எங்க முட்டாய் தாத்தாவிடம் நெக்லஸ் வாங்கி போட்டுகொண்டால் மட்டும் தான் நகரும். பிசுபிசுன்னு உடம்பு முழுசும் ஒட்டிக்கொள்ளும் அதை எவ்வளவு  முடியுமோ அவ்வளவு இழுத்து ரசிச்சு சாப்பிடனும்.

இப்பல்லாம் எப்பவாவது எங்காவது போகும் போது ஏதும் திருவிழா மாதிரி தெரிந்தால் நானும் முடிஞ்ச அளவு தேடிப்பார்க்கிறேன். இந்த மிட்டாய் மட்டும் இருக்காது. கடைசியில் கண்டே பிடிச்சேன். ஒரு நண்பனின் திருமணத்தில் தீம் ஊர்திருவிழா, அதற்காக அவன் குழந்தைகளுக்கு சின்ன ரங்கராட்டினம், இந்த மிட்டாய்காரர், ஒரு பஞ்சு மிட்டாய், பலூன் கடையும் வச்சிருந்தான்... யாருக்கும் தெரியாமல் நைசா ஒண்ணு வாங்கிட்டு வந்தேன். வீட்டுக்கு வந்து எப்பவும் போல ஒரு செயின் செய்து சாப்பிட முயற்சி செய்தேன்.. சுவையும் பிடிக்கலை அதை செயினா போடவும் பிடிக்கலை. ஆனால் பிசுபிசுப்பு மட்டும் அப்படியே பழைய மாதிரியே இருந்தது...வயசாயிடுச்சோ? இல்ல வாழ்க்கை முறை மாற்றத்தில் பழசு மறக்கப்படுகிறதோன்னு ஒரே ஃபீல் பண்ணி அடுத்தது மூக்குத்திப்பூ பத்தி யோசிச்சேன்.



Thursday, September 15, 2011

பால்யம் - எருக்கம்பூ

எங்க ஸ்கூலுக்கும் வீட்டுக்கும் ஒரு கிலோ மீட்டருக்கு அதிக தூரமிருக்கும். நேர்வழியில் போனால் லேட்டாகும். அதனால் குறுக்குவழி.(என்னைக்கு நேர்வழியில் போயிருக்கேன்னு சொல்லுவது கேட்கிறது) போகும் வழியில் நிறைய அரளிப்பூ, வெள்ளெருக்கு, ஊமந்தம்பூ, இன்ன பிற பேர் தெரியா பூக்கள் இருக்கும். அதைவிட அதிகமாக முள்ளு மரம். சின்னசின்ன சந்துகளின் முடிவில் ஒரு பெரிய வீடு இருக்கும். ரொம்ப அதிசயமாக தினம் பார்த்து செல்வோம். அங்க தான் இருக்கு பெரிய எருக்கம்பூ தோட்டம். பின்ன ஒரே இடத்தில் 20 செடி இருந்தா அது தோட்டம் தானே?  முதலில் அது பக்கம் போகவே மாட்டேன். ரெண்டு  மூணு நாய் அங்கயே படுத்திருக்கும்.  எந்த மனுசபயலுகளை கண்டும் பயப்படாத இந்த சிங்கம் அந்த தம்மாத்துண்டு நாய்க்கு பயப்படும். இப்பவும் தான்.

கொழுக்கட்டைக்காக விநாயகரை தீவிரமா கும்பிடும் சதுர்த்தி காலத்தில் ஈஸ்வரன் கோவிலில் ஒரு இன்ப அதிர்ச்சி. விநாயகர் கழுத்தில் நம்ம எருக்கம்பூ மாலை. அப்பத்தான் தெரிஞ்சுது விநாயகர் எம்புட்டு எளிமையானவர்னு. சரி நாமும் ஒரு மாலை கட்டுவோம்னு நான், சித்ரா, வனிதா, செல்வி எல்லாரும் எருக்கம்பூ வேட்டைக்கு போனோம். எருக்கம்பூல இருந்து பால் வருமாம் அதை கையில் தொட்டா கையில புண்ணு வரும், ஆறவே ஆறாது, மேல பட்டா சொறியும் போன்ற தடாபுடா முஸ்தீபுகளுடன் பூ பறிக்கும் படலம் ஆரம்பமானது. ஒரு கொத்தா பூ, லேசா மொட்டோடு ஒரு மாதிரி வெண்மை கலந்த சாம்பல் ஊதாவில் அவ்வளவு அழகான பூ. லேசா குமிழ் மாதிரி அமைப்பில், கொத்து கொத்தாக இருந்தது. லேசா அழுத்தி பார்த்தேன். பட்... அட பூ விரிஞ்சுடுச்சே...கண்டுபிடிச்சமில்ல. எல்லா பூவையும் அழுத்தி அழுத்தி பட் பட்ன்னு விரிய வச்சோம்....விரிஞ்ச பிறகு அழகு கொஞ்சம் குறைச்சலா போனது போல பட்டது.

அதற்குபிறகு எப்ப எங்க எருக்கம்பூ பார்த்தாலும் ஒரு பட் கண்டிப்பா உண்டு. இப்ப வரைக்கும். இது நான் எடுத்த எருக்கம்பூ படம். என் பால்யத்தை நினைவுபடுத்தும் பூ...

இன்னும் வரும்
டிஸ்கி..இது சின்ன பதிவுதான். பஸ்ல போடலாம்னு எழுதினது.இருந்தாலும் ஒரு கல்வெட்டா கிடக்கட்டும்னு :))))

Friday, June 17, 2011

அக்கம் பக்கம்

கோவையில் இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்.. இன்னொரு தமாசா ஆகாமல் இருக்கனும். என்னதான் சட்டம் போட்டாலும் நம்ம மக்கள் அதை ஸ்டைலா மாத்திடுவாங்க. ஹெல்மெட் வண்டி பெட்ரோல் டாங்க் மேல், கண்ணாடி மேல், சைடில் என்று தலையைத்தவிர எல்லா இடமும் தொங்கியது. தலைதொங்காமல் இருக்கத்தான்யா ஹெல்மெட்.

---

தினம் புதுபுதுப்பாடல்கள் கேட்க நல்லாத்தான் இருக்கு. சமீபத்தில் கேட்ட பாடல் 180. நல்லாத்தான் இருக்கு. கேட்டதும் கடுப்படித்த பாடல் வேங்கை படத்தில் வரும் ஓப்பனிங் பாட்டு. கதை, சதைன்னு காது வலிக்குது..ஏன்யா ஏன்?
----
சமீபத்தில் தான் ஆடுகளம் பார்த்தேன், ஒத்தை சொல்லாலே பாட்டுக்கு தனுஷ் என்னா ஆட்டம். பார்க்கும் போதே அந்த சந்தோசம் நமக்கும் தொற்றி ஒரு ஆட்டம் போடலாம்னு தோனுச்சு. 60 வருச பழமையான வீட்டில் இருக்கோம்னு நினைப்பு வந்து கம்முனு இருந்துட்டேன். இந்தப்பாட்டை பார்த்து தனுஷ் ரசிகையா மாறலாமான்னு யோசிக்கும் போது வேங்கை படப்பாட்டை கேட்டேன்..என்ன கொடுமை தனுஷ் இது.. வரட்டும் பார்ப்போம்.

------
பள்ளி திறந்து எல்லாரும் செட்டில் ஆகியாச்சு. விலைவாசி ஏற்றத்துக்கு வேன் ட்ரைவர் மட்டும் தப்புவாறா என்ன? போன வருசம் வேனுக்கு 1,100 ரூபாய் ரெண்டு பேருக்கும் சேர்ந்து கொடுத்தேன், இந்த வருசம் அது 2,000. பள்ளிக்கூடம் பக்கமா இருந்தா நடந்தே போயிடலாம். அதனால் ஸ்கூல் பஸ்ஸை சரணடையப்பட்டது. சமச்சீர் இதுக்கு வர வாய்ப்பு உண்டா?

------
கோவையில் இருப்பவர்கள் லேசில் வேறு ஊரில் செட்டில் ஆக மாட்டார்கள், அப்படி இருக்கு ஃப்ரீயா ஊருமுழுதும் ஏசி பண்ணியது போல்.. சொர்க்கமே என்றாலும்.....

----

ஒரு க்ரூப் டூர் போலாம்னு எங்க சங்கத்தில முடிவு செய்து அதற்கு ஒருங்கினைப்பு வேலை நடக்குது. இரண்டு பெண்கள் இருந்தாலே சமாளிப்பது கஷ்டம். 16 பேரை எப்படி கூட்டிட்டு போயி திருப்பி கொண்டு வந்து சேர்த்தப்போறேன்னு நினைச்சாலே கண்ணைக்கட்டுது. ஆனால் சில பல பதிவு எழுத விசயம் கிடைக்கும்.. நரி கிழக்க போனாலும் மேற்கே போனாலும்...............

--------
எங்க ஊருக்கு வரவங்களுக்கு ஒரு அறிமுகம் கொடுக்கலாம்னு :) கோவை வரவங்க எல்லாருக்கும் அன்னபூர்னா தவிர ஹோட்டலே இல்லாத மாதிரி ஒரு பில்டப்பு இருக்கு. அதையும் தாண்டி வயித்தை கெடுக்காத காசையும் பிடுங்காத நல்ல ஹோட்டல் நிறைய்ய இருக்கு.

சாப்பாடு : ரொம்ப பழைமையான ஹோட்டல்.கிட்டத்தட்ட சுதந்திரத்திற்கு  முன் இருந்து இருக்கும்னு நினைக்கிறேன். C.S. MEALS. மதியம் மட்டுமல்ல இரவும் கோவையில் ஃபுல் மீல்ஸ் இருக்கும் இரண்டு உணவகங்களில் இது ஒன்று. ( இன்னொன்று கீதா கபே) மதியம் கெட்டித்தயிர், இனிப்பு ( இது மட்டும் சுமாரா இருக்கும்) வத்தக்குழம்புன்னு நல்ல லஞ்ச். அதே இரவில் நீர்த்த மோர், ஒரு கூட்டுன்னு சிம்பிள் சாப்பாடு. ரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கு, அவங்களோடதே அருகில் டிபன் செண்டரும் வச்சிருக்காங்க அங்க அடை, அவியல், வெண்ணெய், வெல்லம்...ம்ம்ம்ம்ம்ம் சூப்பர். எதிரில் கலெக்டர் ஆபிஸ் இருப்பதால் ஓரளவிற்கு கூட்டமும் இருக்கும். நல்ல சைவ ஹோட்டல்.

-----


கூகுள் பஸ்ஸில் முழு நேரம் போவதால் இந்த பதிவு டைரி எழுதும் பழக்கம் குறைஞ்சு போச்சு. இனி கொஞ்சமாவது எழுதனும்னு என்று பாடிகார்ட் முனிஸ்வரனை வேண்டிக்கறேன்.