Showing posts with label வாழ்வியல். Show all posts
Showing posts with label வாழ்வியல். Show all posts

Monday, June 10, 2013

என் வெளிச்ச பூக்களுக்கு வாழ்த்துகள்


ம்ம்மா சாயங்காலம் வரும் வரைக்கும் ரெஸ்ட் எடுங்கம்மா, வந்து பார்த்துக்கலாம். இது என் கண்மணிகள் இன்னைக்கு எங்கிட்ட சொல்லிட்டு போனது. கடந்த 50 நாட்களாக என்னுடன்.. இப்படி சொல்லுவது கூட தப்புதான் அவங்களோட எப்படி ஓடுச்சுன்னே தெரியலை. நான் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ரொம்ப சோர்ந்து போன தற்கொலை எண்ணம் கூட வந்த நாட்கள். என் குழந்தைகளோட முழு தைரியமும் என் வளர்ப்பு குறித்த சிறு பெருமிதமும் கொள்ள வைத்த நாட்கள். என்குழந்தைகள் என் முழு தோழிகளாகவும் சில நேரம் அம்மாவாகவும் என்னிடம் அன்புகாட்டிய விடுமுறை. இந்த விடுமுறை முடியாமல் இருந்திருக்கலாம்.


இந்த விடுமுறையில் கண்டிப்பா எதாவது கத்துக்கனும்னு நான் சொன்னபோது அவங்க சாய்ஸ் வீட்டு வேலைகளும் சமையலுமாக இருந்தது. வேற வீட்டுக்கு குடிவந்த நான்கு மாதம் ஆகிறது, இந்த நான்கு மாதத்தில் பெரும்பாலும் எல்லா வேலைகளூம் அவங்க தான் பண்ணிருக்காங்க. சமையல் கூட சில நேரம் அவங்கதான். அம்மா குழந்தைகள் உறவு மாறி தோழிகள் என்ற நிலை வந்து ரொம்ப நாள் ஆனபோதும் இந்த விடுமுறையில் என்னை உக்காரவைச்சு என்குழந்தைகள் ரொம்ப பார்த்துக்கிட்டாங்க. உடம்பு சரியில்லைன்னதும் அவங்களோட தவிப்பும் வேதனையும் எனக்கு இன்னும் பயத்தை உண்டாக்கிடுச்சு. கண்ணுகளா உங்களுக்காகவாவது எல்லாத்தையும் சமாளிக்கலாம்னு தோனுதுடா. 

இந்தவருசம் 8வது போகும் வர்ஷு சுடிதார்ல வந்து நிக்கும் போதுதான் என் பொண்ணு எவ்வளவு பெரியவளாயிட்டான்னு தோனுது. முன்னாடி இருக்கும் கடமைகள் பயமுறுத்துகிறது. கிட்டதட்ட அவ தோள் தாண்டி வளர்ந்து நிக்கும் பப்பு இந்த வருசம் 4ம் வகுப்பு. வழக்கம் போல இந்த வருடமும் என் செல்லங்கள் புஸ்தகத்தை கட்டிட்டு அழவேண்டியதில்லை. இந்த விடுமுறை பப்புக்கு அவ மொழியில் வெட்டியா போயிடுச்சு. வர்ஷா சிலது கற்றுக்கொண்டாள். ஹிந்து பேப்பர் நடத்தின ஃபோட்டாகிராபி சம்மர் கேம்ப், சுட்டிவிகடன் நடத்திய சுட்டி ஸ்டார் என்னும் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் தேர்வுல கலந்துட்டு செலக்ட் ஆயிருக்கா. விவசாயகல்லூரி வானொலியில் நான் பேட்டி கொடுக்க போனபோது கூட ரேடியோ ஸ்டேசன் காட்ட ரெண்டுபேரையும் கூட்டிட்டு போயிருந்தேன். அங்கு கதை, பாட்டுன்னு பாடினதில் வாராவாரம் கதை நேரத்தில் வர்ஷாவோட கதை வெளிவர அவங்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். வாழ்த்துகள் கண்ணம்மா.

பப்பு இந்த வருசம் பென்சிலை விட்டு பேனாவில் எழுத போறாளாம், பேனாவை பத்தி ஏகப்பட்ட ஆராய்ச்சி பண்ணி வாங்கிட்டு போயிருக்கா. அவளால் மட்டுமே இந்த 2 மாதங்கள் சின்ன சிரிப்பொலி கேக்க முடிஞ்சது. வருங்காலத்தில் விவசாயம் பார்க்க போறாளாம். அக்ரி யுனிவர்சிடியில் ஒரு ப்ரொபசரை ப்ரெண்ட் பிடிச்சி வச்சிருக்கா. அவரும் இவளுக்கு ஒரு துண்டு வெச்சிருக்காராம். பாவம் அக்ரி.

என் செல்லங்களுக்கு, எப்பவும் போல இப்பவும் உங்களை படின்னு சொல்லி படுத்த மாட்டேன். உங்களுக்கு என்ன தேவைன்னு உங்களுக்கே இப்ப தெரிஞ்சிருக்கும், இது பண்ணுங்க இதை செய்யாதிங்கன்னு இனி சொல்லிதர வேண்டாம். முடிவு பண்ணிக்குங்க, முடிவு செய்தபிறகு எதுக்காகவும் யோசிக்கவோ கவலைப்படவோ தேவையில்லை. இதெல்லாம் நம்மால் முடியும்னு நம்பிக்கையில தான் அந்த முடிவு நம்முள்ள வருது. அதனால் எப்பவும் எதையும் சந்தோசமா தெளிவா அணுகுங்க. கேள்வி நீங்க உங்களையே கேட்டு அதற்கு எல்லாகோணத்திலும் பதில் நீங்களே சொல்லி பாருங்க. இந்த பதிலில் இந்த முடிவு வரும் இது எதிர்விளைவா நடக்கும்னு நினைச்சு பாருங்க. வாழ்க்கை ஒரு முழு நீள கலர் படம் விரும்பிய வண்ணங்களில் அழகா அமைச்சுக்குங்க.ஒரு அம்மாவா அதுக்கு நான் என் உதவிகளை கண்டிப்பா செய்வேன். 

என்னை மன அளவில் இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என் தோழிகளுக்கு ஆல் தெ பெஸ்ட்..என் ஜாய். அண்ட் தேங்க்ஸ்.

உங்களுக்கு பிடித்த பாடலுடன் இந்த நாள் துவங்கட்டும். லவ் யு கண்ணுகளா


Friday, December 16, 2011

பல்ப் ஃப்ரம் பப்பு

இது கூகுள் பஸ்ஸில் எழுதியது. ஒரு தொகுப்பா எடுத்து வைத்து பப்பு பெரியவளானதும் கொடுக்கனும்

========

பப்பு சீக்கிரம் சாப்பிடு கண்ணு

அரை மணி நேரம் கழிச்சு அதே பருப்பு சாதம் நோண்டிட்டு இருந்தா

ஏநான் :என்னடி பண்றே. சீக்கிரம் சாப்பிடுன்னு சொன்னனே, நீ சாப்பிடற 4 பருக்கை பருப்பு சாதத்துக்கு அரை மணி நேரமா?

பப்பு : நான் டயட்டும்மா...

நான் : ங்ஙே!!!! என்னது டயட்டா?

பப்பு: ஆமாம்மா டயட்டுன்னா உங்களை மாதிரி இல்ல, நிஜ டயட்டு.. மீதி ஆனதை சாப்பிட மாட்டேம்மா.

-------
1.பப்புவும் வர்ஷாவும் சாப்பிட்டு இருந்தாங்க, ஒரு மாசமா டிவிக்கு தடா, வாரம் 3 மணி நேரம் டிவியில் ப்ரோக்ராமும், ஒரு படம் டவுன்லோடியும் பார்க்கலாம், சாய்ஸ் இருக்கு டிவி வேண்டாதவங்க கம்ப்யுட்டர் கேம்ஸ் ஆடலாம், யாரு குறைவா டிவி, கம்புட்டர் முன்னாடி இருக்காங்களோ அவங்களுக்கு வாரம் 50 பாயிண்ட், 500 பாயிண்ட் யாரு முதலில் ரீச் பண்றாங்களோ அவங்க இஷ்டப்படி 150 ரூபாய்க்கு ட்ரீட், ஒன்லி சாப்பாடு, ட்ரீட் வேண்டாதவங்க அந்த காசை உண்டியில் சேர்த்துடலாம். வர்ஷா 800, பப்பு 600 ரூபாய் வச்சிருக்காங்க, அதுல நான் 300ரூபாய் கடன் வாங்கினேன், மேட்டர் அது இல்ல வர்ஷாக்கு மேத்ஸ்ல இண்ட்ரஸ்ட்னு ஒன்னு சொல்லிதந்திருக்காங்க, அவ அதை பப்பு கிட்ட சொல்ல, பப்பு 12% வட்டி கணக்கு போட்டு அதை அவங்க பாட்டிகிட்ட செக் பண்ணி வந்து என்கிட்ட கேக்குது...அந்த 300 ரூபாய்க்கு இது இண்ட்ரஸ்ட்ம்மா, அதையும் சேர்த்துடுன்னு :((

2. எதோ சினிமா பாட்டு பாடிட்டு இருந்தா நான் முறைச்சேன், அதுக்கு ரொம்ப கூலா சொல்லுது எதை கேக்கறதா இருந்தாலும் என்கிட்ட கேக்காதீங்க, என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேளுங்க, அவங்கதான் சொல்லித்தந்தாங்க, நான் சும்மா பாடிப்பார்த்தேன்னு.

--------
பப்பு :அம்மாஆஆ, நீங்க என்ன சொன்னாலும் கலைஞருக்கு ஓட்டு போட மாட்டேன்

நான் : சுட்டி டிவி அவங்களுதுதான், ஓட்டு போடலைன்னா எப்படி தெரியும்?

பப்பு : ஓ அப்படியா? சரி போடறேன் :))

வருங்கால அரசியல்வாதி ரெடி


------
நான் : பப்பு போயி குளிடி..

பப்பு : ஒரு லுக்கோடு - ம்ம் எனக்கு ஆர்டர் போட அந்த ஆண்டவனே யோசிப்பான்

நான் : என்னடி சொல்றே?

பப்பு : பஞ்ச் டயலாக்கும்மா :))))

------
ஒவ்வொரு வருசமும் சித்ராபவுர்னமி மிக சிறப்பா சத்யநாராயண பூஜை ராமின் சித்தி வீட்டில் செய்வது வழக்கம், நேத்து நைட் பப்புவிடமும் வர்ஷாவிடமும் நாளைக்கு சாயங்காலம் இந்த பூஜைக்கு போறோம்னு சொன்னேன்..

இதற்கு முன் ஒரு சின்ன ப்ளாஷ்பேக் : பப்பு,வர்ஷா ரெண்டு பேருக்கும் பிடிச்ச கதை அவங்க பிறந்த கதைதான். வயிற்றில் இருக்கும் போது என்ன நடந்தது, எப்படி பிறந்தார்கள்ன்னு கேள்வியில் துளைச்சுடுவாங்க, டைரி எழுதும் பழக்கம் இருந்தது , (இப்ப இல்லை) அதை கொடுத்து படிச்சுக்க சொல்லிடுவேன். அப்படி ஒரு சித்ரா பவுர்னமி விரதத்திற்கு பிறகு பிறந்தவள் பப்பு, இதை சொல்லியிருந்தேன்.

மறுபடியும் நேத்து நைட் ஸ்டோரி..

நான்: பப்பு சீகிரம் கிளம்பனும், பாட்டிகூடவே போயிட்டு வந்திடலாம்

பப்பு : நான் வரலம்மா

நான் : ஏண்டா

பப்பு: இந்த பூஜைக்கு போயித்தானே நான் பிறந்தேன் , நாளைக்கு போயிட்டு வந்தா இன்னொரு பாப்பா வரும், எனக்கு பிடிக்கலை, நான் வரலை, எப்பவும் நாந்தான் பாப்பா........(பாரேன் இந்த புள்ளக்குள்ள இம்புட்டு இருக்கு)

நான் ----- பல்ப்பா எறியுது என்னை சுத்தி :(((((((

#புள்ளயா பெத்து வெச்சிருக்கேன்

Wednesday, December 7, 2011

கானல் வாழ்க்கை


வீடு வரை உறவு 
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசிவரை யாரோ?
எவ்வளவு உண்மை...


நேற்றிருந்தவர் இன்றில்லை, இன்றிருப்பவர் நாளையில்லை. நிதர்சனம்தான். இன்று இறந்த பிணத்தைப்பார்த்து நாளை இறக்கப்போகும் பிணம் அழுகிறதுன்னு பட்டினத்தாரோ யாரோ சொல்லிருக்காங்க.. ஒரு இழப்பு வாழ்க்கையை அவர்களை சார்ந்தவர்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிபோடும்  என்று இதுவரைக்கும் யோசிக்கலை.

சின்னவயதில் சாவு அறிமுகமானது பக்கத்து வீட்டு பாட்டியினால், திடீர்னு இறந்துட்டாங்கன்னுசொன்னாங்க. போயி பார்த்தேன், படுக்க வைத்திருந்தார்கள் அவ்ளோதான் சாவுக்கான அறிமுகம். 7வது படிக்கும் போது என் அப்பிச்சியின் அம்மா (அம்மத்தா) இறந்துவிட்டார்கள்னு பள்ளியில் இருந்து அழைத்து வந்து ஊருக்கு போனோம். அது இழப்பாக தெரிந்ததைவிட உறவு எல்லாம் கூடிய விழாவாகவே இருந்தது. இதற்குப்பிறகு வேறு ஏதும் பெரிதாக பாதிக்கவில்லை.

15வருடங்களுக்கு ஒரு நாள் அலுவலகத்திற்கு வந்த போன் சொல்லிய சேதி, எங்க பக்கத்துவீட்டில் இருந்த நகைக்கடை அதிபர் குடும்பத்துடன் தற்கொலை. திருப்பூரில் 13 பேர் இறந்தது மிகப்பெரிய அதிர்வு. அதும் பிறந்ததிலிருந்து பார்த்தவர்கள் இன்னைக்கு நாயைக்கூட விட்டுவைக்காமல் போய்விட்டார்கள் என்றதும் அதிர்ச்சிக்கு அளவில்லை.

பால்ய சிநேகிதம் என்பது மனதுக்கு மிக நெருக்கமானது, வலியோ சுகமோ பகிரும் உறவு அதுதான். சித்ரா. என் மிக நெருங்கிய தோழியாக இருந்தவள், கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள், படிப்பு சரியாக வராததால் திருமணத்திற்கு அவசரப்படுத்தப்பட்டவள், 13 வருடத்திற்கு முன் ஒரு ஜூலை 8-ல் தீக்குளித்தாள், உயிர் போகாமல் ஒரு நாள் முழுதும் இருந்தாள், என்னைப்பார்க்கனும்னு என் அப்பாவிடம் சொல்லி அனுப்பினார்கள் எனக்கு அவளைப்பார்க்கும் தைரியம் அப்போது இல்லை. இப்போதும் வரவில்லை.. மன்னிச்சுடு சித்ரா. பெரிய கண்களூடன் உன் சாயலில் பாதி கொண்டிருக்கும், நீ தற்கொலை செய்து கொள்ளும் போது 7 மாதக்குழந்தையாக இருந்த உன்  மகனை இப்போது பார்த்தாலும் மனசுக்குள் ஒரு கலவரம் வருகிறது.

ரொம்ப வருடம் கழித்து 4 வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பாவும் அவரைத்தொடர்ந்து 45 நாளில் என் அப்பாவின் அம்மாவும் (தாத்தா- பாட்டி) போய்ச்சேர்ந்தார்கள். இதைவிட என் அப்பா இறந்தது கூட ஒரு அதிர்ச்சிதான். ஆனால் என் கண் முன் நடந்த மரணம், இப்பவும் ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் நினைவில் வருவது. நாலே நாட்கள் கோமாவில் இருந்து வீட்டுக்கு போனதும் ஒரு வினாடி கண்ணைத்திறந்து பார்த்துவுடன் ஒரு சின்ன விக்கலில் உயிரை விட்ட அம்மா.

அம்மா இறந்துட்டாங்கன்னு சுதாரிக்கவே சில நிமிடம் ஆனது,. சரியாயிடுச்சு போலன்னு நினைச்சு அம்மா பாரும்மான்னு உலுக்கி எடுத்தேன். நானும் என் சித்தியும் மட்டுமே அருகில். ஆனால் திறந்து கண்கள் மூடவே இல்லை. முதலும் கடைசியுமாக நினைவு தெரிந்து அம்மாவை கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்தேன். கொடுத்துட்டே இருந்தேன். அழவே தோனலை. கூட இருந்தவர்களின் அழுகுரல் தான் மறுபடியும் இந்த உலகில் கொண்டுவந்தது. அவங்க கண்ணை தானம் தரும்போது என் மாமா உட்பட யாரும் ஒத்துக்கலை. டாக்டர் கடைசியாக மறுபடியும் அந்தக்கண்களை திறக்கும் போது எனக்கு பார்க்கும் அளவு தைரியம் வரவில்லை.

அம்மா இறந்ததுமே உண்மையிலேயே இவ்வளவு நாள் நினைத்தது வாழ்க்கை இல்லை. அர்த்தமில்லாத கோபம், வருத்தம், எல்லாம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. அடுத்த நான்கு நாட்களில் அப்பாவின் ஒரே தங்கையின் கணவர் - என் மாமா ஹார்ட் அட்டாக்கில் இறந்ததும் அடச்சேன்னு ஆயிடுச்சு.

அதெல்லாம் விட இன்னும் வாழ்க்கையின் மேல் பயமும், காதலும், விருப்பமும் வரக்காரணம், என் மாமியாரின் மரணம். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக புற்றுநோயில் போராடி, இவ்வளவுதான் என்று அளவிட முடியாத கஷ்டப்பட்டு, உடலின் ஒவ்வொரு பகுதியும் வலியில் துடித்து, தோல் கருகி, சுருங்கி, உடல் முழுதும் ரணமாகி, கடைசி இருபது நாட்கள் நரகத்தில் இருந்து ஒவ்வொரு அணுவும் வலியை அனுபவித்து ஒரு வழியாக மரணித்தார். அது என்னைப்பொறுத்தவரை அவருக்கு விடுதலைதான்.கடைசிநாட்களில் அவர் கண்ணாடியே பார்க்கவில்லை, ஒரு நாள் விளையாட்டாக போனில் போட்டா எடுத்த வர்ஷாவிடம் அவர் இன்னும் கொஞ்சம் சிரிக்கறேன் இப்ப எடுன்னு. அந்த சிரிப்பு என்பது உதடுகளின் விரிசல் தான்.

ஒரு மரணம் ஒரு தனிமனித மரணம் அல்ல, அது ஒரு தலைமுறையின் முடிவு. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே முடிந்துவிடுகிறது. அவருக்கு பிடித்தது, பிடிக்காததது, விருப்பு, வெறுப்பு, வலி,கோபதாபங்கள். மரணமில்லா பெருவாழ்வு சாத்தியமில்லாதது போல் மறதியும் உடனே வந்தால் பரவாயில்லை. எந்தப்பொருளை பார்த்தாலும் அதோடு சம்பந்தப்பட்ட அவர்களின் நினைவு வந்து இருக்கிறவர்களை கொல்கிறது. மனதை அதிலிருந்து வெளியெடுப்பது அவ்வளவு சிரமம்.

ம்ம் போகிறவர்கள் போகட்டும் மிச்சமிருப்பவர்களுடன் தொடரும் பயணம்..



Wednesday, November 30, 2011

காந்தலும் ருசி

காந்தல் ஒரு ருசி, காந்தல்ன்னா சமைக்கும்போது அதிக வெப்பத்தினால் தீய்ந்து போகும் பகுதி. அதற்கென ஒரு ருசியும் வாசனையும் உண்டு. காந்தலே ஒரு ருசின்னு ஒத்துக்கொள்ளூம் போது ஏன் இன்னும் சில மனிதர்கள் கருப்பை ஒரு கலராக ஒத்துக்கொள்ள தயங்குகிறார்கள்?

ஷாப்பிங் போன ஒரு சின்ன குழந்தை 5 வயதிருக்கும் கொஞ்சம் ஒல்லியா கருப்பா லட்சணமா விளையாடிட்டு இருந்தது. அதோட கண்கள் அவ்வளவு அழகு, எனக்கு பக்கத்தில் அந்த குழந்தையின் அம்மாவும் பாட்டியும் அவளுக்கு பிறந்த நாள் துணி எடுக்கிறார்கள் போல், எந்த உடை எடுத்தாலும் கருப்பா இருக்கிறா அவளுக்கு செட் ஆகாதுன்னு சொல்லி ஒதுக்கி முடிவில் ஒரு மஞ்சள் கலர் துணி எடுத்து போனார்கள்..




வர்ஷா படிக்கும் நடனப்பள்ளியில் கிட்டத்தட்ட 15 வயதில் ஒரு பெண் இருக்கிறாள், அத்தனை நளினமாக அழகா அபிநயம் பிடித்து ஆடுவாள், ஆனால் அவள் கருப்பாக இருக்கும் ஒரே காரணத்தினால் எப்போதும் பின்வரிசை தோழியாக..

இது சும்மா உதாரணம் தான், ஆனால் இந்த ஒரு வாரத்தில் கருப்பாக இருக்கிறாய் என்று யாரையாவது யாராவது குறை கூறிக்கொண்டே இருப்பதை கேட்டுக்கொண்டே இருக்கிறேன். எதேச்சையாக பார்த்த விளம்பரத்திலும் கருப்பான பெண் அவமானமாக உணர்கிறாளாம்....என்ன நினைப்பு இது?கருப்பு என்பது உடலின் மெலனின் மட்டுமே அதுவா ஒரு மனித உயிர்? அதுவா உணர்வு? அதுவா அளவுகோல்?

கருப்பு என்பது மிக கவர்ந்திருக்கும் நிறம். எப்போதாவது நீங்கள் கருப்பு உடை அணிந்து பாருங்கள் உங்களுக்கே உங்களை பிடிக்கும். சின்னக்குழந்தைகளை கருப்புன்னு சொல்லுவது எவ்வளவு அவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை தரும் என்பதை ஏன் பெற்றோர் உணருவது இல்லை?
அவர்களை நான்கு பேர் முன்னிலையில் சொல்வதை எப்போது நிறுத்துவார்கள்? அப்படி சொல்லும் போது அந்த குழந்தையின் முகம் போகும் போக்கை பாருங்கள். கோவில் சிலையில் கூட கருப்புதான் அழகான சிலையாக இருக்கிறது.

நான் சின்னப்புள்ளையா இருக்கும் போது இப்படி தினம் தினம் கேட்டிருக்கேன். அப்பல்லாம் எல்லாரும் ஒரே கலரில் இருப்போம் வெள்ளையானவர்கள் ரொம்ப குறைவு.. நானும் கல்லூரி காலங்களில் நினைத்தது உண்டு..ச்சே இன்னும் ஒரு ஷேடு டல்லாயிருக்கலாம்னு ( தொழில் புத்தி) ஆனால் கலரில் ஒரு மண்ணும் இல்லைன்னு புரிய ரொம்ப நாள் ஆயிடுச்சு.  

சோப்பு, க்ரீம் போட்டு கலர் வருதோ இல்லையோ சில பாட்டி வைத்தியங்கள் மூலம் நம் தோலை மிருதுவாக வாசனையாக சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்.

அதில் ஒன்று இது

பாசிப்பயிறு - 1கிலோ
கடலைப்பருப்பு -அரைக்கிலோ
கஸ்தூரி மஞ்சள் - 150 கிராம்
பூலாங்கிழங்கு - 150 கிராம்
கோரைக்கிழங்கு - 150 கிராம்
வெட்டிவேர் - 150 கிராம்
ஆவாரம்பூ - 150 கிராம்
இதை மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். சோப்பு தேய்த்த பிறகு இதை தினம் தேய்த்து குளித்தால் உடம்பில் இருக்கும் சொறசொறப்பு, வறட்டுத்தன்மை நீங்கும். வெட்டிவேர் நல்ல வாசனையை தரும். முக்கியமா வேர்வை வாசனையை போக்கும். இதை ஆண்களும் உபயோகிக்கலாம். கஸ்தூரி மஞ்சள் தவிர்த்து மற்றவைகளை பொடிசெய்து கொள்ளலாம். இது அனைத்துமே நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். இதோடு குப்பைமேனி தழை ரோஜா இதழ்களும் சேர்த்து அரைத்தால் பெண் குழந்தைகளின் உடம்பில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்கும்.

(ரொம்ப நாளா பதிவு எழுதாமல் டச் விட்டு போயிடுச்சு. இனி எழுத ட்ரை பண்ணுவோம்..#தப்பிக்க முடியாதுல்ல)


Saturday, October 16, 2010

சில நேரங்களில் சில மனிதர்கள்....

எதுக்கு இப்படி சண்டை போட்டுக்கிறார்கள்ன்னு அதிசயமாக பார்த்து தூணைக்கட்டி நின்றது நல்லா நினைவிருக்கிறது, 8வது படிக்கும் போது. அந்த வீட்டின் திண்ணையில் நிறைய பெரியவங்க உட்கார்ந்திருக்காங்க, இந்தப்பக்கம் லச்சுமி அக்கா அந்தப்பக்கம் தண்டபாணி அண்ணன், நடுவில லச்சுமி அக்காவின் அம்மா அப்பா, பெரிய சண்டைன்னு தோனுது என்னன்னு புரியலை, போன லீவுக்கு லச்சுமி அக்கா வீட்டுக்கு போன போது கூட அரசாணிக்கா தோட்டத்துல இருந்து அறுத்துட்டு வந்து சின்ன வெங்காயம் போட்டு வேகவைச்சு தந்தாங்க அவங்க மாமியார், இப்ப எதுக்கு அழறாங்க? ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி 3 வருசம் முடிஞ்சிருந்தது. இந்த பேச்சு வார்த்தைக்கு  பிறகு லச்சுமி அக்கா அவங்க அம்மா வீட்டிலேயே இருந்துட்டாங்க.

10வது படிக்கும் போதுதான் தெரிந்தது ரெண்டு பேருக்கும் அத்து விட்டுடாங்கன்னு, அப்படின்னா என்னன்னு கூட தெரியலை, இனிமேல் லச்சுமி அக்கா இங்க தான் இருப்பாங்கங்கறது மட்டும் புரிஞ்சுது. சில நேரங்களில் பள்ளிக்கூடம் விட்டு வரும் போது தண்டபாணி அண்ணன்
ரோட்டோரத்தில நின்னு எதாவது சாப்பிட தரும், அப்படியே லச்சுமி அக்காவை கூப்பிட சொல்லும், எனக்கு அவங்க அம்மாவை பார்த்தா கொஞ்சம் அலர்ஜி அதனால மாட்டேன்னு சொல்லிடுவேன், லச்சுமிக்காவும் பயந்துட்டு வராது.. எல்லாரும் சொல்லுவாங்க அவ அவியம்மாவுக்கு பயந்து பொழப்பை தொலைச்சுட்டான்னு.. சிவன் மலையடிவாரத்தில கடை வச்சிருந்தாங்க தண்டபானி அண்ணன், அப்பல்லாம் எங்க தெருவில மக்கள் மாசாமாசம் சிவன்மலை போவாங்க, யாரோடவாவது ஒட்டிட்டு நானும் போவேன், தவறாம சர்க்கரை மிட்டாய் வாங்கி தந்து லச்சுமிக்காவை விசாரிப்பாரு, அவரு கடையிலதான் செருப்பை விட்டுட்டு போவோம், திரும்பி வரும்போது வடை,டீ  லச்சுமிக்காவின் நலவிசாரிப்போடு கிடைக்கும்.

காலேஜ் படிக்கும் போது தான் தெரிந்தது, லச்சுமிக்கா அழுது புலம்பின அன்னைக்குதான் தண்டபானி அண்ணனுக்கு கல்யாணமாம், லச்சுமிக்கா அழுதுபுலம்பியதில் தெரிந்ததுகொண்டது, குழந்தையில்லாததால் லச்சுமிக்காவின் அம்மா திரும்ப அங்க போக வேண்டாம்னு சொல்லிட்டதாவும், அவங்க சேர்ந்து இருக்கும் போது வாங்கின 5 செண்ட் இடத்தை அவங்க அம்மா பேரில் எழுதி வாங்கிக்கொண்டதாகவும் புத்தியில்லாம அந்த அண்ணனைவிட்டு வந்துட்டேன்னு சொல்லி அழுதாங்க, எனக்கு என்னன்னு ஒண்ணும் புரியலை, இப்ப புரியுது,, சில வருசங்களுக்கு முன் காங்கயம் பஸ்ஸ்டாண்டில் தண்டபானி அண்ணனை பார்த்தேன், எனக்கே ரெண்டு குழந்தைகள் இருக்காங்க அவரு என்னை இன்னும் 10 வகுப்பு புள்ளன்னு நினைச்சு அச்சு முறுக்கு, கடலைபர்பி, சர்க்கரை மிட்டாய் பொட்டலம் கட்டி தந்தாரு, எங்கூட இருந்த மக்கள் செம கிண்டல் பண்ணினாங்க, ஆனா எனக்கு அந்த அன்பு பிடிச்சிருந்தது, அவரிடம் என் குழந்தைகளின் போட்டா காட்டியபோது அவரின் கண்ணில், பேச்சில் தெரிந்த பிரியம் இன்னைக்கும் மறக்கலை, திரும்பி வரும்போதும் அவர் லச்சுமி அக்காவை விசாரித்தார், நான் இப்ப அந்த ஊரிலேயே இல்லைன்னு சொன்னேன், அந்த அண்ணனுக்கு கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதாக சொன்னார், எனக்கு லச்சுமிக்காவின் அழுகை முகம் நினைவுக்கு வந்தது..

நல்லா யோசிச்சு பார்த்தா இந்த இருவரின் வாழ்க்கை இப்படி ஆக காரணம் லச்சுமிக்காவின் அம்மாதான், அவருக்கு இவங்க ஒரே பொண்ணு, கல்யாணம் பண்ணினதே மிக லேட்டாத்தான், அப்படியும் அவங்களை வாழ விடாமல் செய்த குணம் ஏன்? முதல் காரணம் சொத்து இவங்க சொத்தெல்லாம் மாப்பிள்ளைக்கு போயிடும் கடைசி காலத்தில் கஷ்டப்படனும்னு அடிக்கடி சொல்லிட்டு இருப்பாங்க, அதே பயத்தில தான் லச்சுமிக்காவின் இடத்தையும் அவங்க பேரிலேயே மாத்திக்கிட்டாங்க,  முதலில் வந்தது லச்சுமிக்காவின் அம்மா அவங்க பேரு பாப்பாத்தியம்மா..மிக உயரமான நல்ல உறுதியான பெண்மணி, வெத்திலை பாக்கும் குரங்கு மார்க் புகையிலையும் ஓடிப்போய் கடையில் வாங்கிட்டுவான்னு சொல்லி முடிப்பதுக்குள்ள போயிருப்பென், அப்படி ஒரு குரல். அவங்க பேச்சுக்கு பயந்தே தாவணி போடசொல்லி எங்கம்மா என்னை திட்டிட்டே இருப்பாங்க :(

பாப்பாத்தியம்மா மாதிரி சில அம்மாக்களும் இருக்காங்க, இதுவரை இப்படி 2 பேரை நான் சந்திச்சிருக்கேன், வாழ்வின் சிலகாலம் கூட சேர்ந்து வாழ்ந்திருக்கேன். நினைவு தெரிந்து நான் சந்திச்ச மனிதர்கள், அவர்களின் குணம், நட்பு,  பாசம், துரோகம், பிடிச்சது, பிடிக்காதது,வெகுளித்தனம், அவங்க கேரக்டர் என்று என் பார்வையில் ஒரு சின்ன தொடரா பதிந்து வைக்கலாம்னு தோனியது,. இதற்கு இதைவிட பொருத்தமான தலைப்பு தோனலை..