Sunday, September 29, 2013

ஹிஹி நானும் பேட்டி எடுப்பேன் :))


 வாசகர்கள், நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அதே பழைய பேட்டி அதே தலைப்பில் அதே போட்டோவோட மீள்பதிவு.ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட சரி பண்ணலை. அப்படியே இருக்கட்டும்னு தான் :) வரலாறு முக்கியம்ல


இப்பவும் கும்மிக்கலாம்.


உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் வயித்தெரிச்சலையும், பொறாமையையும் அடக்கி கொண்டு ஒரு எழுத்தாளரா வேடம் இடுவது எவ்வளவு கடினம் என்று இந்த வலைபதிவு எழுத்தாளர்களை பார்த்தாலே தெரியும்..யாராவது ஒரு தீயனைப்பு வண்டிக்கு சொல்லி விடுவும். ஏனெனில் பேட்டி ஆரம்பம். இதையெல்லாம் தாண்டி நான்கு பேர் ஒரு குழுமம் ஆகி ஒருவரை ஒருவர் வளர்ப்பதற்குள் தாவு தீர்ந்து விடும். அதிலொருவர் நம் நண்பர், பார்த்துக்கொண்டிருக்கும் போதே சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்பவர், என்னதான் அடிச்சாலும் வலிக்காத மாதிரியே இருப்பது போன்றவை சாட்சிகள்.
நீங்க ஒரு எழுத்தாளர்ன்னு எப்ப கண்டுகினீங்க?

நான் எல்கேஜியில் எழுத ஆரம்பித்த போதே எங்கள் ஆசிரியர் சொன்னார், பிற்காலத்தில் மிகப்பெரிய எழுத்தாளராக வரும் வாய்ப்பு அதிகம் என்று. அன்றே முடிவு செய்த விசயம் வலைப்பூ ஒன்றை ஆரம்பித்து அதில் என் எழுத்துக்களை வடித்து அருகில் அமரவேண்டும் என்பது...
என்ன மாதிரியான பொஸ்தகம் படிக்க இஷ்டம்?

தமிழ் எழுத்துக்கள் எல்லாம் வாசிக்க பிடிக்கும், அதிலும் பழைய பேப்பர் கடையில் இருக்கும் பிரபல எழுத்தாளர்கள் அனைவரின் எழுத்தும் பிடிக்கும், ஏனெனில் அதிலிருந்து அப்படியே காப்பி அடிக்கலாம், ஒருத்தனும் அறியப்போவதில்லை. ஆனால் பதிவுலகம் வந்த பின் தான் தெரிந்தது, இங்கே இருக்கும் எல்லாரும் அப்படித்தான் என்று.
இந்த ப்லாக் எழுதி என்னாத்தை சாதிச்சே? அது உனக்கு இன்னா கொடுதுச்சு?

அது எங்கே திறந்தது, படாத பாடு பட்டு கைக்காசை செலவு பண்ணி நானல்லவா திறக்க செய்தேன். பாருங்கள் இப்போது கூட கைக்காசை போட்டு பெட்ரோல் அடித்து, பேட்டி எடுக்க என லஞ்ச் செலவு, கேள்வி எழுதி கொடுத்தும் கூட வெண்ணைய் மாதிரி இழுக்கிறாயே ...

வாசலை தவிர கம்பர்,திருவள்ளுவர் ...அவர்களுக்கு மட்டும் நான் இப்படி அவரை குதறுவது தெரிந்தால் இட்லி பொட்டலம் கட்டும் நூலில் தூக்குப் போட்டு இறந்திருப்பார். நல்லவேளை இல்லை.

நேற்றுகூட நண்பரை போனில் அழைத்து என் எழுத்தை வாசிக்க சொன்னேன், விட்டுப்போன குவாட்டரை ராவாக கவிழ்த்துவிட்டு போனிலேயே வாந்தி எடுத்தார். வல்லமை பொருந்திய எழுத்துக்கள் உருவாக இந்த நட்புக்களே காரணம்.


பலவீனம் என்று பார்த்தால் என்னைத் தவிர வேறு யாரையும் நான் எழுத்தாளரா நினைப்பதுஇல்லை. அது தெரியாமல் இந்த பைத்தியகார பயலுகள் என்னை புகழும் போது எனக்கு வரும் புன்னகையை அடக்க
முடியவில்லை.ந்த ப்லாக்ல எல்லாரும் ஒரு குரூப்பா கூடி கும்மியடிக்கரானுவளே, அத்த பத்தி என்ன ஃபீல் ??

நம்மை பதிவுலகில வாழவக்கும் தெய்வமே இந்த மனப்பான்மை தானே. கண்டிப்பா தப்பு இல்ல. சொறிதலில் உள்ள சுகம் புரிதலில் இல்ல. எதாவது புரிஞ்சுதா?

அட , இதை ஆரம்பித்து வைத்ததே நாம் தானே. ஒரு எழுத்தாளனை உருவாக்குவது எவ்வளவு சிரமம் தெரியாதா? அவன் சும்மா நான் இன்று காலை கடன் சரியாக முடித்தேன் என்று எழுதினாலும், சூப்பர் தல, :)), ரிப்பீட்டு, எப்படி சகா உன்னால மட்டும், சான்ஸே இல்லை, வாழ்த்துக்கள் என்று மாறிமாறி பின்னூட்டமிட்டு அவனை ஒரு எழுத்தாளனாக மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்க்குள் டவுடர் கழண்டுடும்.
உன்னக்கு முன்னாடி செல வஸ்தாது எழுதிகிரானுவ, அத்த என்ன நெனைக்கறே?
அன்பைப்பெறுவது அவ்வளவு எளிதல்ல , மூத்த பதிவர் இப்படி எல்லாருடைய ப்ரொபைல் முதல் கொண்டு தேடி படித்து அவர்களுக்கு என்ன பிராண்டு பிடிக்கும், எப்படி ஜிங் ஜக் அடிப்பது போன்றவைகளை கற்றுணர்ந்து, அதே பிராண்டு, ஜால்ராவை இன்று வரை தொடர்வதால் தான் முடிகிறது. இல்லனா அவனுகளோட எனக்கு என்ன வேலை.

புதிதாய் எழுத வருபவர்கள் நிஜமாவெ நல்லாவே எழுதித்தொலையாரானுக, அதைப்பார்த்து தினம் வயிறெரிந்து புலம்புவதே வாடிக்கையானது. எனக்கு முன்னாடி இருந்தவனுகளை நான் சரி செய்தது போல் ஒருத்தனும் என்னை கவனிக்கவில்லை. மதிக்கக்கூட இல்லை. ஒரு ஐநூறு பின் தொடர்பவர்கள் இருந்தால் ஒரு ஐம்பது பின்னூட்டங்களாவது வர வேண்டும், நான் பதிவு எழுதி அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் தெரிவித்த பின்னும் முப்பது நாற்பது பின்னூட்டம் வரவைப்பதே பெரும்பாடாக உள்ளது. இப்போது புதிதாக எழுத வந்தவர்கள் நல்ல நண்பர்கள் பலரை பெற்றிருப்பதால் எளிதாக பின்னூட்டங்கள் பெறுகிறார்கள், அதை பார்த்து பொறுக்காமல் நான் யாரிடமும் பேசுவதில்லை.

இப்படியே முடிஞ்சிருமா? இல்ல பொஸ்தகம், சினிமான்னு போவுமா?

பின்ன? பத்திரிக்கைகளில் யாரையாவது கரெக்ட் பண்ணி அடிக்கடி நம் பேர் வரவும், மக்கள் வலைப்பூக்களில் வாழ்த்து சொல்லி ப்ரமோட் பண்ணவும் ஏற்பாடு பண்ணனும்.என்ன கொஞ்சம் செலவாகும், முடிஞ்சா நாம் வலைப்பூவில் எழுதியதை ஒரு தொகுப்பா போட்டு ஊறுகாயும் நாட்டு சரக்கும், பொது கக்கூஸ், பழைய மனைவியும் புது காதலியும்ன்னு எதாவது தலைப்பில் புக் போடணும். உடனே நம் சக வளர்த்து விட்ட எழுத்தாளனும் நண்பனும் புக் போடுவான். வேற வழியில்லாமல் சிரிச்சுட்டே வாழ்த்திட்டு வரனும். என்ன அதைவிட கொடுமைன்னா எவனும் அந்த புத்தகத்துக்கு விமர்சனம் எழுதாம இருக்கனும்.
இதையெல்லாம் ஒரு எழுத்துன்னு படிக்கிறானுவளே அவனுகள இன்னா பண்ணரது?

ரொம்ப பாவமா இருக்கு. பதிவ கூட படிச்சிடலாம் பின்னூட்டங்களை எப்படி தாங்கிக்குறாங்கன்னு தெரியல.கிசுகிசுன்னு ஒரு க்ரூப்புக்கே தெரிஞ்ச பதிவர்கள் பத்தி எழுதறத கூட சகிச்சுக்கறாங்க. அவங்க ரொம்ப நல்ல்ல்வய்ங்க. என்ன கொஞ்சம் பிரபலமான வெளியில் போக முடிவதில்லை. எல்லாரும் ஆட்டோகிராப் கேட்டு நச்சரிக்கிறார்கள்.. தூக்கம் கலைந்த பின் தான் தெரியுது அத்தனையும் கனவுன்னு. நடக்கனும்னு சொல்லலை, நடந்தா நல்லாருக்கும்னு தான் சொல்றேன்.
இந்த பொம்பளை பசங்க இன்னாமா கிறுக்கராங்க? உனக்கு காண்டாவுல?
ம்ம் அவர்கள் இம்சை தாங்க முடியவில்லை, குழந்தை ஜட்டி மாற்றுவதில் இருந்து, ஆயா வடை சுட்டது வரை எழுதி கொல்கிறார்கள். இதெல்லாம் எதிர்த்து யாருமே கேட்பதில்லை. சில சமயம் நல்லா வேற எழுதி தொலைக்கிறார்கள். எல்லாற்றையும் விட எரிச்சல், நான்கு பெண் பதிவர்களுக்கு மேல் எனக்கு யாரும் பின்னூட்டம் இடுவதில்லை.
நீ எத்தையோ நெனைச்சு எழுதறே, பயலுவ எத்தையோ நினைச்சு படிக்கரானுவலே?

எப்படித்தான் கரெக்டா பாயிண்டை பிடிக்கரானுக என்று தோன்றும்.
இப்படி ராவ எங்க கத்துகின?

அதெல்லாம் தானா அப்படியே வரும்.
மத்தவனுக எல்லாரும் ரொம்ப மிஸ்டேக்கா எழுதுரானுவ, இத்த நீ தட்டி கேக்க கூடாது?ஆக்சுவலி ஐ லவ் டமில் வெரி மச் யா. யாராவது என்னத்தவிர தப்பா எழுதினா கன்னா பின்னான்னு கோபம் வர்ற அளவுக்கு டமில லவ் பண்றேன். அலட்சியமா எழுதும் பதிவர்களை பார்த்து பிரமிக்கிறேன். பய ரொம்ப தெளிவா இருக்கானுக என்று.இப்பாலிக்கா இந்த ப்லாக் எப்படி இருக்கு? இனி எப்படி இருக்கும்?

நான் வரும் வரை ஆரோக்கியமாத்தான் இருந்தாது. வந்தபின் எப்படி என்பதை நாடு சொல்லும்.
உனக்கு யாருனாச்சும் எழுதுனா புடிக்குமா?

வேற யார் இருக்கிறார்கள் எப்போதும் நானும் , நீரும் , நம் சகோக்களூம் தான்.

அதை தவிர யாரையும் நான் ஊக்கு விக்க விரும்புவதில்லை..
நான் எதாச்சும் கேட்க உட்டுட்டனா?
இந்த முதுகு சொறியற சுகம் ரொம்ப நல்லாயிருக்கு. உங்களுக்கு எப்ப சொறியனும்?

டிஸ்கி : நல்லா கும்ம மட்டுமே இந்த பதிவு.

Monday, August 5, 2013

உலகதாய்ப்பால் வாரம் - ஆகஸ்ட் முதல் வாரம்

ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரம், தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தி நிறைய நிகழ்வுகள் நடக்கும். 


இந்த போஸ்டர் பார்க்க சிரிப்பாவோ கிண்டலாவோ இருந்தாலும் இது நல்ல விஷயம். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வாரம் உலகதாய்ப்பால் வாரம். அந்த காலத்திலேயே ஒரு அம்மா பிறந்த நிறைய குழந்தைகளுக்கு பால் ஊட்டும் வழக்கம் இருந்தது. இதில் ஒரு சதவீதம் கூட தவறில்லை. தாய்ப்பால் வங்கி அநேகமாக எல்லா மருத்துவமனைகளிலும் உள்ளது. ரத்தம் யார் வேண்டுமானாலும் தரலாம், தாய்ப்பால் தாய் மட்டுமே தரமுடியும், அதற்கு ஒரு நல்ல மனதும் ஆரோக்கியமான உடலும் வேண்டும். முடிந்தால் இளம் தாய்மார்கள் தரலாம்.

உலகில் கலப்படம் இல்லாத ஒரே உணவு தாய்ப்பால், குழந்தை உருவானவுடன் பால் சுரக்கும் சுரப்பிகள் வேலை செய்யும் குழந்தை பிறந்த மறுநிமிடம் பால் வெளிவரும். முதலில் வரும் பால் அனைத்து சத்துக்களையும் கொண்டு இருக்கும் சீம்பால் ஆகும், அதை கண்டிப்பாக குழந்தைக்கு தர வேண்டும். பாலில் சரியான விகிதத்தில் நீர் கலந்து இருப்பதால் ஆறுமாதம் வரை குடிக்க தண்ணீர் தர கூடாது, தேவையும் இல்லை.

அம்மாக்கு உணவு முறை: 

குழந்தை பிறந்ததும் சாப்பிடகூடாது என்று எந்த கட்டுப்பாடுகளூம் நீங்களே போட்டுக்கொள்ள வேண்டாம்.  சாதாரணமாக உண்ணும் உணவுகள் சாப்பிடலாம். உங்களுக்கு எது  ஆகாதோ அதை விட்டு விடுங்கள்.

பால், ரொட்டி, பிஞ்சு கத்திரி, அவரை, புடலங்கை போன்றவற்றை பாசி பருப்புடன் சேர்த்து கூட்டு செய்யலாம். முருங்கை கீரை மிக மிக நல்லது. பால் சுறா என்னும் கருவாடு, மீன் போன்றவைகளும் பூண்டு அதிகம் சேர்த்து கொள்ளலாம்.

பால்  சுரக்கவில்லை, குழந்தைக்கு பால் போதவில்லை என்பதெல்லாம் வெறும் கற்பனை. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஆறு முறை பாப்பா சிறுநீர் கழித்தால், அது தேவையான பால் எடுத்து கொள்கிறது என்று அர்த்தம். குழந்தையை சும்மாவாவது மார்புகளை சப்ப அனுமதிக்க வேண்டும், ஒரு நாளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் அம்மாவின் வெறும் உடம்பின் மேல் குழந்தையை படுக்க வைத்து அதன் உடல் முழுதும் வருடி கொடுக்கவும், நீங்கள் சொல்வதை உங்கள் குழந்தை புரிந்து கொள்ளும்.

குழந்தைக்கு பால் கொடுக்க சோம்பேறித்தனம் படகூடாது,   மீறி போனால் அதிகபட்சம் குழந்தை இரண்டு வருடம் தாய்ப்பால் குடிக்கும் அதற்குள் இரவு தூக்கம் கெடும் போன்ற  காரணம் எதுவும் வேண்டாம்,அம்மா தருவது தாய்ப்பால் மட்டும் அல்ல அதன் எதிர்கால வாழ்க்கை என்று நினைவில் கொள்ளுங்கள். வேலைக்கு போகும் அம்மாக்கள் தாய்ப்பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்து குளிர்சாதனபெட்டியில் வைத்து தேவைப்படும் போது அறையின் தட்பவெப்பத்திற்கு வந்தவுடன் சங்கில் புகட்டலாம், குறைந்த பட்சம் இரண்டு வருடம் பால் கொடுங்கள்.. தவறில்லை. நீங்களும் சரியான உள்ளாடை போட்டால் மார்பு சரிவதை தடுக்கலாம்.

சங்கில் புகட்டும் போது மடியில் போட்டு ஊற்றக்கூடாது,   பால் கொடுக்கும் நிலையில் வைத்து அதன் தலை நம் முழங்கைமேல் இருக்க வேண்டும் அப்போதுதான் புரை ஏறாது. ஒவ்வொரு முறை பால் குடித்ததும் தட்டி கொடுத்து ஏப்பம் வரவைக்கவும். அதேபோல் ஒவ்வொருமுறையும் ஒரு சிறிய கப்பில் தண்ணீர், கொஞ்சம் பஞ்சு வைத்து கொண்டு பால் கொடுக்கும் முன்பும் பிறகும் பஞ்சால் மார்பு காம்புகளை துடைக்கவும். குழந்தையின் உதட்டையும் துடைக்கவும், இல்லாவிட்டால் அதன் உதடு கறுத்து விடும். பால் கொடுக்கும் போது குழந்தை நுனி காம்பில் குடிக்க கூடாது, குழந்தையின்  வாய் கொள்ளும் வரை   மார்புகாம்புகள் இருக்க வேண்டும்

 

தாய்ப்பால் தருவது மிக பெரிய பரவசமான   பால் கொடுத்த அனைத்து அம்மாக்களும் உணர்ந்த அனுபவம், அம்மாவுக்கும் குழந்தைக்கும் மட்டுமே உண்டான பந்தம், அதை அனுபவித்து ரசித்து செய்யுங்கள்.

Monday, June 10, 2013

என் வெளிச்ச பூக்களுக்கு வாழ்த்துகள்


ம்ம்மா சாயங்காலம் வரும் வரைக்கும் ரெஸ்ட் எடுங்கம்மா, வந்து பார்த்துக்கலாம். இது என் கண்மணிகள் இன்னைக்கு எங்கிட்ட சொல்லிட்டு போனது. கடந்த 50 நாட்களாக என்னுடன்.. இப்படி சொல்லுவது கூட தப்புதான் அவங்களோட எப்படி ஓடுச்சுன்னே தெரியலை. நான் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ரொம்ப சோர்ந்து போன தற்கொலை எண்ணம் கூட வந்த நாட்கள். என் குழந்தைகளோட முழு தைரியமும் என் வளர்ப்பு குறித்த சிறு பெருமிதமும் கொள்ள வைத்த நாட்கள். என்குழந்தைகள் என் முழு தோழிகளாகவும் சில நேரம் அம்மாவாகவும் என்னிடம் அன்புகாட்டிய விடுமுறை. இந்த விடுமுறை முடியாமல் இருந்திருக்கலாம்.


இந்த விடுமுறையில் கண்டிப்பா எதாவது கத்துக்கனும்னு நான் சொன்னபோது அவங்க சாய்ஸ் வீட்டு வேலைகளும் சமையலுமாக இருந்தது. வேற வீட்டுக்கு குடிவந்த நான்கு மாதம் ஆகிறது, இந்த நான்கு மாதத்தில் பெரும்பாலும் எல்லா வேலைகளூம் அவங்க தான் பண்ணிருக்காங்க. சமையல் கூட சில நேரம் அவங்கதான். அம்மா குழந்தைகள் உறவு மாறி தோழிகள் என்ற நிலை வந்து ரொம்ப நாள் ஆனபோதும் இந்த விடுமுறையில் என்னை உக்காரவைச்சு என்குழந்தைகள் ரொம்ப பார்த்துக்கிட்டாங்க. உடம்பு சரியில்லைன்னதும் அவங்களோட தவிப்பும் வேதனையும் எனக்கு இன்னும் பயத்தை உண்டாக்கிடுச்சு. கண்ணுகளா உங்களுக்காகவாவது எல்லாத்தையும் சமாளிக்கலாம்னு தோனுதுடா. 

இந்தவருசம் 8வது போகும் வர்ஷு சுடிதார்ல வந்து நிக்கும் போதுதான் என் பொண்ணு எவ்வளவு பெரியவளாயிட்டான்னு தோனுது. முன்னாடி இருக்கும் கடமைகள் பயமுறுத்துகிறது. கிட்டதட்ட அவ தோள் தாண்டி வளர்ந்து நிக்கும் பப்பு இந்த வருசம் 4ம் வகுப்பு. வழக்கம் போல இந்த வருடமும் என் செல்லங்கள் புஸ்தகத்தை கட்டிட்டு அழவேண்டியதில்லை. இந்த விடுமுறை பப்புக்கு அவ மொழியில் வெட்டியா போயிடுச்சு. வர்ஷா சிலது கற்றுக்கொண்டாள். ஹிந்து பேப்பர் நடத்தின ஃபோட்டாகிராபி சம்மர் கேம்ப், சுட்டிவிகடன் நடத்திய சுட்டி ஸ்டார் என்னும் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் தேர்வுல கலந்துட்டு செலக்ட் ஆயிருக்கா. விவசாயகல்லூரி வானொலியில் நான் பேட்டி கொடுக்க போனபோது கூட ரேடியோ ஸ்டேசன் காட்ட ரெண்டுபேரையும் கூட்டிட்டு போயிருந்தேன். அங்கு கதை, பாட்டுன்னு பாடினதில் வாராவாரம் கதை நேரத்தில் வர்ஷாவோட கதை வெளிவர அவங்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். வாழ்த்துகள் கண்ணம்மா.

பப்பு இந்த வருசம் பென்சிலை விட்டு பேனாவில் எழுத போறாளாம், பேனாவை பத்தி ஏகப்பட்ட ஆராய்ச்சி பண்ணி வாங்கிட்டு போயிருக்கா. அவளால் மட்டுமே இந்த 2 மாதங்கள் சின்ன சிரிப்பொலி கேக்க முடிஞ்சது. வருங்காலத்தில் விவசாயம் பார்க்க போறாளாம். அக்ரி யுனிவர்சிடியில் ஒரு ப்ரொபசரை ப்ரெண்ட் பிடிச்சி வச்சிருக்கா. அவரும் இவளுக்கு ஒரு துண்டு வெச்சிருக்காராம். பாவம் அக்ரி.

என் செல்லங்களுக்கு, எப்பவும் போல இப்பவும் உங்களை படின்னு சொல்லி படுத்த மாட்டேன். உங்களுக்கு என்ன தேவைன்னு உங்களுக்கே இப்ப தெரிஞ்சிருக்கும், இது பண்ணுங்க இதை செய்யாதிங்கன்னு இனி சொல்லிதர வேண்டாம். முடிவு பண்ணிக்குங்க, முடிவு செய்தபிறகு எதுக்காகவும் யோசிக்கவோ கவலைப்படவோ தேவையில்லை. இதெல்லாம் நம்மால் முடியும்னு நம்பிக்கையில தான் அந்த முடிவு நம்முள்ள வருது. அதனால் எப்பவும் எதையும் சந்தோசமா தெளிவா அணுகுங்க. கேள்வி நீங்க உங்களையே கேட்டு அதற்கு எல்லாகோணத்திலும் பதில் நீங்களே சொல்லி பாருங்க. இந்த பதிலில் இந்த முடிவு வரும் இது எதிர்விளைவா நடக்கும்னு நினைச்சு பாருங்க. வாழ்க்கை ஒரு முழு நீள கலர் படம் விரும்பிய வண்ணங்களில் அழகா அமைச்சுக்குங்க.ஒரு அம்மாவா அதுக்கு நான் என் உதவிகளை கண்டிப்பா செய்வேன். 

என்னை மன அளவில் இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என் தோழிகளுக்கு ஆல் தெ பெஸ்ட்..என் ஜாய். அண்ட் தேங்க்ஸ்.

உங்களுக்கு பிடித்த பாடலுடன் இந்த நாள் துவங்கட்டும். லவ் யு கண்ணுகளா


Sunday, May 12, 2013

இல்லாத அம்மாக்கு அன்னையர் தின வாழ்த்து

நல்லா பேசிட்டு இருப்போம்,திடீர்னு மூட்ஆகும், மனதை காயப்படுத்திய சம்பவங்கள் நினைவுக்கு வந்து மேலும் கிளரும். என்னை மூட் அவுட் பண்ணும் விஷயம் இரண்டு. முதல் விஷயம் என் அம்மா. என்னடாது அம்மாவ நினைத்தால் எப்படி கஷ்டமா இருக்கும்னு யோசிக்காதீங்க.

எல்லோருக்குமே அம்மா என்பது ஒரு அற்புதமான உறவு, அவர் கடைசி வரை நம்மோடு நல்லபடியா இருந்து நம் சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்ள எப்போதும் தயாரா இருக்கணும். இருப்பார், ஒரு அம்மாக்கு அதவிட பெரிய சந்தோசம் எதுவும் இருக்காது. ஆனால் அப்படி அம்மா எல்லோருக்கும் அமையாது, அமைந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் .

என் அம்மா ஒரு சின்ன கிராமத்தில் இருந்து வந்தவர், அவரோட அம்மா என் மாமா பிறந்த உடனே இறந்துட்டங்கலாம். சின்ன வயதில் இருந்து கஷ்டப்பட்டவர்கள். திருமணம் ஆகி திருப்பூர் வந்தபின் அவர் அப்பா, ( என் அப்பிச்சி) நெலம் எல்லாம் வித்து என் அம்மாவின் அருகிலே வந்து குடும்பத்துடன் செட்டில் ஆயிட்டார்.

என் கல்லூரி காலம் வரை ஒரு குடம் தண்ணீர் எடுக்க என் அம்மா என்னை விட்டதில்லை. இத்தனைக்கும் நாங்கள் நாலு பேர்( 2 தம்பி, ஒரு தங்கை), யாரையும் ஒரு வேலை செய்ய விடமாட்டார். நான் வேலைக்கு போகும் சமயம் கூட நான் வெளியில் இருந்து வண்டி ஸ்டார்ட் பண்ணி சத்தம் போட்டுடே இருப்பேன், லஞ்ச் பாக்சை தலைகீழ கவுத்து லேசா வெளியில் வந்த அப்படியே வெச்சுட்டு போய்டுவேன். ரொம்ப படுத்தி இருக்கேன். திடீர்னு ஒரு நாள் நான் ஊரில் இல்லாத சமயம் என் அம்மா தண்ணீர் தொட்டியில் கீழ விழுந்துட்டாங்க, மயக்கமும் வந்துடுச்சு, அந்த நேரம் யாரும் இல்லை, என் பாட்டி வந்து எடுத்து விட்டு ஹாஸ்பிடல் போனால் பக்கவாதம் என்று சொன்னார்கள்.

அன்று முதல் இன்னைக்கு வரை அவர்க்கு சரியாகவே இல்லை, கொஞ்சமா வீட்டுக்குள் நடப்பார், அவ்வளவு தான், இதுவரை பார்க்காத வைத்தியம் இல்லை, மருத்துவர்கள் சொல்வது, அவங்க fight பண்ணவே மாட்டேங்கறாங்க, மருந்தை விட மனசு சரியாகணும் , என் அம்மாக்கு முதல் முறை உடல் நிலை சரி இல்லாத போது என் வீட்டில் சில பிரச்னை இருந்தது. இப்ப அதெல்லாம் ஒன்றும் இல்லாவிட்டாலும் அவர் இன்னும் குணமாக வில்லை. எதுவுமே நினைவு இல்லை, எப்பவும் என்னை பார்த்தால் அழுவாங்க.

எனக்கு குழந்தை பிறந்த சமயம் தினமும் நான் என் அம்மாவை நினைத்து அழுவேன். இன்னமும் என்னைக்கு அவரை நினைக்கிறேனோ அந்த நாள் முழுதும் அவர் நினைவாகவே இருக்கும்,

அவரிடம் நான் பலமுறை கேட்டு பதில் பெறாத கேள்வி, ஏம்மா இப்படி இருக்கே, உனக்கு என்ன வேணும் என்கிட்ட சொல், நான் கண்டிப்பா பண்றேன். மறுபடியும் என் ஸ்கூல் காலேஜ் கால அம்மா எனக்கு வேணும், இதுவரை உன் மடியில் தூங்கினதா எனக்கு நினைவே இல்லை, ஒரு தடவை யாவது தூங்கனும், எவ்வளவு வருஷம் ஆச்சு, உன் கையால் சாப்பிட்டு, எல்லோரும் சொல்லராங்க நான் உன்னை மாதிரியே இருக்கேன், உன்னை மாதிரியே சமையல் பண்றேன், அம்மா உனக்கு ஒரு கடமையும் மீதி இல்லை, உன் உடம்பு சரியில்லாமல் போன சமயம் இருந்த மாதிரி இல்லை நம் குடும்பம், எனக்கு, நம்ம குட்டி மகேஷுக்கு கல்யாணம் ஆயிடுச்சு, நீதான் வரவே இல்லையே, நம்ம பழைய வீடு வித்துட்டாலும் புது வீடு கட்டி அதில்தான் நீ இருக்கே. உன் நிலையில் நான் இருந்து எல்லாமே முடிச்சுட்டேன். ப்ளீஸ் மா, ஒரு தடவை பழைய மாதிரி இரும்மா, உன்ன கட்டி பிடிச்சு அழக்கூட பயமா இருக்கு, உனக்கு எதாவது ஆயிடுமோன்னு, உன்னோட புடவையை என் கண் முன்னாடி வச்சுருக்கேன், எப்பவும் நீ என் கூட இரு. ஏன் என்னை பார்த்தல் அழுகறே? என்ன இருக்கு உன் மனசில், நாங்க எல்லோரும் நல்ல இருக்கோம், அம்மா நீ இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு, என்ன செஞ்சா நீ திரும்ப பழையபடி வருவே.

அம்மா உன்னை நான் என்னனு வாழ்த்தறது, நான் எதாவது தப்பு பண்ணிருந்தா என்னை மன்னிச்சுடு. ப்ளீஸ்.

எவ்வளவு நாள் உன் போட்டோ , புடவையும் வைத்து உன் வாசம் பிடிப்பது, அம்மா ஒரு தரம் என்னை பார்த்து சிரி. ப்ளீஸ்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்


----------

நாலு வருசம் முன்னாடி எழுதினது. இதில் எதுமே நடக்காமலே ஒன்றரை வருடங்களுக்கு முன் இறந்து போன அம்மாக்காக