Monday, March 14, 2011

அம்மா. அப்பா காக்கா......

இன்றோடு ஒரு மாதம், புதை சேறில் மூழ்கி மூச்சு திணறி போராடி வெளி வந்த காலம், போன மாதம் இதே 14 ஆம் தேதி, 5 நாட்களாக கோமாவில் இருந்த என் அம்மா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட 15வது நிமிடம் கண்ணைத்திறந்து என்னைப்பார்த்ததும், நான் பார்த்துக்கொண்டே இருக்கும் போதே அவர் உயிர் பிரிந்ததும்  நிகழ்ந்த நாள்.என் அப்பா இறந்து முழுதாக ஒரு வருடம் 15 நாட்களே ஆன நிலையில் அம்மாவும் கிளம்பிட்டாங்க. திடீர்ன்னு ஒரு வட்டவெளியில் பாதுகாப்பு இல்லாமல் நிற்பது போல ஒரு உணர்வு..அம்மா....

அம்மா...உனக்கும் எனக்குமான உறவு ரொம்ப அன்னியோன்னியமா இருந்ததில்லை. 6 குழந்தைகளை பெற்று வளர்க்கும் ஆயாசத்தில் குறிப்பிடும் படி நீ  என்னை கவனித்ததாக நினைவு இல்லை.  ஒரு வயசில் கொண்டு போய் அப்பிச்சி வீட்டில் விட்டுட்டே, நான் திரும்பி வரும்போது எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா பிறந்து சாமிகிட்ட போயிட்டதும், புதுசா ஒரு தம்பி பிறந்திருப்பதும் தெரிஞ்சுது. ஆனா உனக்கு தெரிஞ்சிருக்கும், அந்த வீட்டு வாசப்படியில் உக்கார்ந்து நான் அம்மாவை நினைச்சு அழுதது இன்னும் புகையாக நினைவிருக்கிறது.

அம்மா...உன்னோடு வந்த பிறகும் ஒரு நாள்கூட உன் பக்கத்தில் தூங்கினதில்லம்மா, எனக்கு பிறகு 2 தம்பி, 1 தங்கைன்னு எப்பவும் உன்னை பங்குபோட்டுக்க ரெடியா இருப்பாங்க. ஒவ்வொரு வருச லீவுக்கும் நான் போகவே மாட்டேன்னு அழுவேன், நீயும் அப்பிச்சியும் பிடிவாதமா ஊருக்கு கொண்டு போய் விடுவீங்க, எப்ப திரும்பி வந்து கூட்டிட்டு போவேன்னு தினம் ராத்திரி அழுதுட்டேதான் இருப்பேன்.

அம்மா...கொஞ்சம் பெரியவளானதும் அதே காம்பவுண்டில் இருந்த விதவை தூரத்து சொந்தக்கரம்மாக்கு துணைக்கு நிரந்தர துணையாக ஆயிட்டேன். உன்கூட ஒரு நாள் கூட பக்கத்தில் உக்கார்ந்தோ உன் கையில் சாப்பிட்டோ நினைவே இல்லம்மா. உன்னால தலை பின்ன முடியாதுன்னு நான் 10வரைக்கும் முடியே வளர்த்தலை. நான் உன்னை எவ்வளவு எதிர்பார்த்தனோ அவ்வளவு தூரத்தில் இருந்தேன்.

அம்மா, நீ ரொம்ப பாவம், படிப்பறிவு இல்லாத, அப்பாதான் உலகம்னு நம்பி இருந்த லட்சக்கணக்கான அம்மாவில் நீயும் ஒருத்தி, ஒரு நாள் கூட என்னைப்படின்னு சொன்னதில்லை, திட்டினதில்லை, அடிச்சதில்லை, ஒரு முத்தம்கூட கொடுத்ததில்லை. ஆனா நீ கடைசி படுக்கையில் இருந்த போது நான் உனக்கு கொடுத்தேன், மகேஷும், தேவாவும் ரமேசும் அழுதுட்டே இருந்தாங்க, நீ போயிடுவேன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சுது, நாங்க உன்கிட்ட பேசினது உனக்கு தெரிஞ்சுதா?

அம்மா...எனக்கு குழந்தைகள் பிறந்தபோதும் நீ என் அருகில் இல்லை, உன்னை ரொம்ப மிஸ் பண்ணினது அப்பதான். உனக்கு அப்பாமேல எவ்வளவு நம்பிக்கை, நாங்க கிண்டல் பண்ணினமாதிரியே உன்னால அப்பா இல்லாமல் இருக்க முடியலையா? உன் கண்ணை தானம் கொடுததது உனக்கு தெரிஞ்சிருந்தா நீ என்ன சொல்லிருப்பேன்னு யோசிக்கறேன்.

அம்மா.. நீ என்னை பார்த்துட்டே கண்ணை மூடினையே அனத நிமிசம் எனக்கு என்ன தோனிச்சு தெரியுமா? நல்லதும்மா நீ போனதே நல்லது, இப்படி கஷ்டப்பட்டு படுக்கையில் இருப்பதற்கு போவதே நல்லதுன்னு தோனிச்சும்மா. நீ இல்லாத இந்த 30 நாட்களில் வாழ்க்கையின் இழப்பதற்கு ஒன்னுமில்லைன்னு புரிஞ்சுது. நீ போன 5வது நாள் இன்னொரு மரணமும் நம்ம வீட்டில் நடந்துடுச்சு. யாருக்காகவோ வாங்கின வலி, அர்த்தமற்று யார் மேலோ கொண்ட அன்பு, கோபம், பொறாமை, துக்கம், ஏமாற்றம் எல்லாமே அந்த நேர உணர்வுகள்.

அம்மா.. நீ சொன்னது மாதிரி நான் கொஞ்சம் கல்லுதான்மா, அப்பா இறந்தபோது இருந்த திடுக்கிடல் நீ போனபோது இல்லம்மா, ஒருவேளை உன் முடிவு ஏற்கனவே தெரிந்தனாலயால் இருக்கும். இப்ப எங்க இருக்கே? இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாமில்ல? உனக்கு புரியுதோ இல்லையோ உன்கிட்ட எல்லாம் சொல்லனும்னு தோனும், எப்பவும் போல பேசாம இருந்திடுவேன், நேத்து திருப்பூர் போயிட்டு வரும்போது இனி இங்க நமக்கு யார் இருக்காங்கன்னு தோனுச்சு.

அப்பா, இப்பவாவது அம்மாவை நல்லா பார்த்துக்க. தினம் காலையில் வரும் காக்காக்கள் தான் இனி நீங்க நினைச்சுக்கறேன். எப்பவும் எங்க கூட இருங்க. ரெண்டு பேருமே இல்லைன்னு நினைக்கும்போது ஒரு துக்கமான, ஏமாற்ற, ஒரு குறை இருப்பது போன்ற  உணர்வு வருவதை தவிர்க்கமுடியலை.. இனிமேல் சும்மா கூப்பிடக்கூட நீங்க ரெண்டு பேரும் இல்லையே. இதிலிருந்து நான் சீக்கிரம் வந்துடுவேன், அவங்களையும் வரவைங்க.

அம்மா, அப்பா இனி போட்டாவிலும், வீட்டை சுத்தும் காக்கா உருவிலும்..

Tuesday, March 1, 2011

வலி...வலி...வலி

நலமா?


இரண்டு மாதங்கள் தான் எழுதாமல் இருந்திருக்கேன், ஆனால் கடந்து  போன 65 நாட்களும் கற்றுக்கொடுத்த பாடங்கள் மீதமிருக்கும் வாழ்க்கைக்கு மிகவும் உதவும்.

வலிக்காமலே வாழ்வில்லையே..ரொம்ப சரிதான், இதுவரைக்கும் எவ்வளவோ வலிகள் வந்து போயிருக்கிறது. எப்ப நினைச்சாலும் வலிக்ககூடியது ஒன்றுதான். கால் தடுக்கி விழுந்து இடது கை மணிக்கட்டு இரண்டு இடத்தில் நொறுங்கியது. வலி உச்சந்தலையில் இறுக்கி பிடித்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்தேன். மருத்துவமனைகள் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு போயி ரொம்ப நாள் ஆயிடுச்சு போல. ஆனாலும் அந்த காலை வேளையில் அறுவை சிகிச்சைக்கு கிட்டத்தட்ட என்னையும் சேர்த்து 20 பேர் இருந்தோம். வலி மறக்க செய்யும் மருந்து ஊசிமூலம் இடது கை தோள் பகுதியிலும் கழுத்திலும் போடப்பட்டது. உடைந்த கை என்னோடதே இல்லை என்பது போல் தனியே கட்டுப்பாடின்றி சுழன்றது.

உடைந்த மணிக்கட்டுக்கு பின்னிங் என்னும் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது, உடைப்பின் தன்மை பொறுத்தும் தேவை பொறுத்தும் பின் எண்ணிக்கை அமைகிறது. சுவற்றில் ஓட்டை போடும் ட்ரில் மிசின் மாதிரி ஒரு ட்ரில் மிசினில் கை எலும்புகளில் ஓட்டை இடப்பட்டு பின்கள் பொருத்தப்படுகிறது. நீளமாக இருக்கும் அவைகள் தேவைபோக வெட்டப்பட்டு மடக்கி விடப்படுகிறது. உணர்வுகள் மறத்துப்போவதால் வலியின்றி இந்த சிகிச்சையை பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் மேல் வழக்கம் போல் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கட்டு. வலியே இல்லை, கை மிக கனமா, எதோ ஒரு தேவையற்ற பொருளை சுமப்பது போல ரொம்ப உறுத்தலா இருந்தது. ஒரு 4 மணி நேரம் கழித்து தான் நரகம் தெரிந்தது.

ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் வைக்க முடியாது, கையில் பெல்ட் போட்டு தோள் வழியே கழுத்தில் மாலை மாதிரி ஒரு தொட்டில் வேறு. இந்த இடம் தான் வலிக்குது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாமல் கை, விரல்கள், தோள் பட்டை, பின் கழுத்து, முதுகு என்று வலி வலி வலி மட்டுமே. தூக்கம் தொலைத்த மிக நீண்ட 6 வார காலங்கள். வீக்கம் குறைந்து சிறு இடைவெளி தெரிய ஆரம்பித்ததும் தோலின் வறட்டுத்தன்மை காரணமாக அரிப்பு வேறு. ஏதாவது பூச்சி உள்ள போயிட்டா என்ன பண்றது என்ற கவலை.

எல்லாவற்றையும் விட கொடுமை, ஒரு வேலையும் செய்ய முடியாமல் முடக்கி போட்டதுதான். தலை பின்னக்கூட இன்னொருத்தர் தயவு தேவை.
ஒரு கையை கொண்டு என்னதான் செய்து பழக முடியும்? இல்லாத போதுதான் அதன் உபயோகம் தெரியும் என்பது உண்மைதான். கோபம், ஆத்திரம், யாருகிட்டவும் பேசப்பிடிக்காமல், எந்த நேரமும் ஒரு எரிச்சல், எல்லாரிடமும் சிடுசிடுப்பது, தூக்கமில்லாததால் வரும் சோர்வு என்று கூட இருப்பவர்களையும் சேர்த்து வதைத்த நாட்கள்.

6 நரக வாரத்திற்குப்பிறகு கட்டுப்பிரிக்கப்ப்ட்டு பின் அகற்றப்பட்டது. வலியில் மயக்கமே வந்தது. இதற்கு எந்த வலி நிவாரணிகளும் தரப்படுவது இல்லை. பின் எடுத்ததும் கையே ஒரு கோணல் ஆனது போலவும், விரல்களை அசைக்க முடியாத வலியும்....இனி பழைய படி வண்டி ஓட்ட இன்னும் 3 மாதம் ஆகும்.

பின் இணைத்தலும் , அகற்றுதலும் யுடுபில் இருக்கு ஆனால் பார்க்கவே முடியாது. ஒரு சின்ன கவனக்குறைவு இவ்வளவு வலியும், செலவும், வேதனையும் தந்திருக்கிறது. இதற்கு முன் பிரசவ டேபிளுக்கு மட்டும் இன்னொரு முறை போகக்கூடாதுன்னு நினைச்சிருக்கேன். ஆனால் அதை விட கொடூரம் எலும்பு முறிவு. வயதானவர்கள், குழந்தைகளை நினைத்தால் ரொம்ப கஷ்டம்தான். ஒரு சின்ன கை எலும்பு முறிவேஇப்படி இருக்கே இடுப்பு உடைந்தவர்கள், கால் உடைந்தவர்கள்...நினைக்கவே பயமாருக்கு.

இந்த வலியில் எனக்கு ஒரே பொழுது போக்கு, ப்திவுலகம் தான், கூகுள் பஸ் இல்லாட்டி நான் கொலைகாரியாவே ஆயிருப்பேன். இவ்வளவு நடந்ததிலிருந்து ஒன்று நல்லா புரிஞ்சுது.. என்னவா?

நான் ஒத்தைக்கையையிலேயே வேகமா தமிழில் டைப் பண்ணுவேன்,, இப்ப வரைக்கும், இதையும் சேர்த்து, இன்னும் 3 மாசத்திற்க்கு :)))