Showing posts with label பால்யம் - ஜவ்வுமிட்டாய். Show all posts
Showing posts with label பால்யம் - ஜவ்வுமிட்டாய். Show all posts

Sunday, September 18, 2011

பால்யம் - ஜவ்வு மிட்டாய்

க்ளிங் க்ளிங் க்ளிங்.. இந்த வித்யாசமான மணி முட்டாய் தாத்தாவோடது.  மறக்கமுடியாத சில முகங்களில் அவரோடதும் ஒண்ணு. முட்டாய்தாத்தா,, காலையில் வெயில் மண்டைகாய வைக்கும் போது நிலாகாய்ஞ்சுட்டு மெதுவா நடந்து வருவார். ஒவ்வொரு அடி எட்டு வைக்கும் போதும் அதற்கு பேக்ரவுண்ட் இந்த க்ளிங் சத்தம். 

அவரோட தோளில் இருக்கும் துண்டை மெத்தையாக்ககி ஒரு  மரசட்டம் சாய்ந்திருக்கும், அதில ஒரு பொம்மை முகம் சகல அலங்காரங்களும் செய்து பொட்டு வைத்து பூச்சூடி இருக்கும். அவளோட உடம்புதான் விசேசம். நல்ல பிங்க் கலரில் வெள்ளை பார்டரோடு நடுவில் வரிவரியா சிவப்பும் சில நேரம் இருக்கும், இழுக்க இழுக்க வரும் இனிப்பு ட்ரெஸ் அவளுக்கு. 

ஐஞ்சு பைசாக்கு செயின், பத்து பைசாக்கு டாலர் வச்ச நெக்லஸ், வாட்ச், இன்னும் ஐஞ்சு பைசா சேர்த்து கொடுத்தா செயின், நெக்லஸ், வாட்ச் எல்லாம் கிடைக்கும். பரபரன்னு அந்த ஜவ்வு மிட்டாயை இழுத்து ரெண்டு சுத்து சுத்தி நகை செய்து மாட்டியும் விடுவார்.  அதோட கண்டிப்பா ஒரு கொசுறு கன்னத்தில் ஒட்டிவிடப்படும்.  சனி ஞாயிறு காலை பதினோரு மணி எங்க முட்டாய் தாத்தாவிடம் நெக்லஸ் வாங்கி போட்டுகொண்டால் மட்டும் தான் நகரும். பிசுபிசுன்னு உடம்பு முழுசும் ஒட்டிக்கொள்ளும் அதை எவ்வளவு  முடியுமோ அவ்வளவு இழுத்து ரசிச்சு சாப்பிடனும்.

இப்பல்லாம் எப்பவாவது எங்காவது போகும் போது ஏதும் திருவிழா மாதிரி தெரிந்தால் நானும் முடிஞ்ச அளவு தேடிப்பார்க்கிறேன். இந்த மிட்டாய் மட்டும் இருக்காது. கடைசியில் கண்டே பிடிச்சேன். ஒரு நண்பனின் திருமணத்தில் தீம் ஊர்திருவிழா, அதற்காக அவன் குழந்தைகளுக்கு சின்ன ரங்கராட்டினம், இந்த மிட்டாய்காரர், ஒரு பஞ்சு மிட்டாய், பலூன் கடையும் வச்சிருந்தான்... யாருக்கும் தெரியாமல் நைசா ஒண்ணு வாங்கிட்டு வந்தேன். வீட்டுக்கு வந்து எப்பவும் போல ஒரு செயின் செய்து சாப்பிட முயற்சி செய்தேன்.. சுவையும் பிடிக்கலை அதை செயினா போடவும் பிடிக்கலை. ஆனால் பிசுபிசுப்பு மட்டும் அப்படியே பழைய மாதிரியே இருந்தது...வயசாயிடுச்சோ? இல்ல வாழ்க்கை முறை மாற்றத்தில் பழசு மறக்கப்படுகிறதோன்னு ஒரே ஃபீல் பண்ணி அடுத்தது மூக்குத்திப்பூ பத்தி யோசிச்சேன்.