Thursday, December 23, 2010

LOVE YOU பப்புகாலையில சாப்பிட்டு ரெடியா இரு விஜி,ஸ்கேன் பண்ணி பார்த்துட்டு முடிவு பண்ணலாம்..சொல்லிட்டு டாக்டர் - ( எனக்கு சின்ன மாமியார்), கிளம்பிட்டாங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. மருத்துவமனையில் வந்து சேர்ந்து ஒரு வாரம் ஆகிடுச்சு, தினம் 4 யுனிட் சலைன், ரெண்டு முறை ஸ்ட்ராயிட் ஊசி, எல்லாம் முடிஞ்சுது. ஆனாலும் சரியாகவில்லை, வேறு வழியில்லை எதாவது ஒரு முடிவு நாளைக்கு எடுத்துத்தான் ஆகனும். ரெண்டாவது குழந்தை உறுதியான நாளிலிருந்து வாந்தியும் தலைசுத்தும் கடைசிநாள் வரை இருந்தது,, ஆறாம் மாத துவக்கத்தில் கர்ப்பகால சர்க்கரை நோய் வேறு, நல்லவேளை டயட்டிலேயே சரியாகும் என்று சொன்னது, இல்லைன்னா அதற்கு தினம் இன்சுலின் போடவேண்டி இருந்திருக்கும். 27வது வாரத்தில் கர்ப்பப்பை வாய் திறந்துவிட்டது என்று பாண்ட் போட்டிருந்தார்கள்,, 34 வாரம் தான் ஆகியிருந்தது, ஆனால் பனிக்குட நீர் ரொம்ப குறைவாக இருந்ததால் ஒரு வாரமாக மருத்துவமனை வாசம். 8 பாயிண்ட் இருக்க வேண்டிய பனிக்குட நீர் வந்து சேரும் போது 6 இருந்தது, ஒரு வாரத்தில் 4ஆக குறைந்து விட்டது. இனி அடுத்த நாள் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

ரெண்டு நாளில் சுனாமி வரப்போவதை அறியாமல் அந்த மருத்துவமனை மிக மெதுவாக விழித்துக்கொண்டது. வெள்ளிக்கிழமை- டிசம்பர் 24- 2004, காலையில் 10 மணிக்கு ஸ்கேன் பார்த்த போது குழந்தை 35 வாரம் ஆகியிருந்தது.. பொதுவாக 40 வாரம் இருக்க வேண்டும். ஆனால் வேற வழியில்லை. என்ன பண்ணலாம் விஜின்னு மறுபடியும் கேள்வி.. சிசேரியன் மட்டும் வேண்டாம் வேற என்ன வேண்டும் என்றாலும் ட்ரை பண்ணலாம். கடைசி நிமிடம் வரை நான் ஒத்துழைக்கிறேன்னு சொல்லிட்டேன். ஸ்கேன் பார்க்கும் போதே பிஞ்சு விரல்களில் அச்சு காட்டினார்கள். இன்னைக்கு வேண்டுமா இல்லனா நாளைக்கு ஒரு நாள் வரை தள்ளிப்போடலாம், கிருஸ்மஸ் பேபியா இருக்கும்னு சொன்னாங்க. நான் இல்ல வேண்டாம் இன்னைக்கே இருக்கட்டும், இன்னைக்கு பிறந்தா அது ராம்க்கு நான் தரும் ஸ்பெஷல் பர்த்டே கிஃப்ட்னு சொன்னேன். ஏனெனில் டிசம்பர் 24 ராம்க்கும் பிறந்தநாள்.


12 மணிவாக்கில் நார்மல் டெலிவர் நடக்க, வலி வருவதற்கு ஜெல் தரப்பட்டது. அரை மணி நேரத்தில் வலி ஆரம்பித்தது, நான் இந்த முறையும் டெலிவரியை பார்க்க விரும்பினேன். அதனால் எபிட்யுரல் அனஸ்தீஷியா போட சொன்னேன். அதற்குள் நல்லா வலி வந்ததால், மாமியார் கொஞ்ச நேரம் பொறுத்துக்க எதுக்கு அன்ஸ்தீஷியா வேண்டாம்னு சொன்னார், இல்ல நான் இந்த குழந்தையையும் முதல் நிமிடத்தில் இருந்து பார்க்கனும் என்று சொல்லி போட்டுக்கொண்டேன். மாலை 5.30 மணிவரை பார்க்கலாம் இல்லனா சிசேரியன் என்று சொல்லப்பட்டது.

நான் ரெண்டு குழந்தைகளூக்கும் வயிற்றில் உறுதி செய்யப்பட்ட நாள் முதல் அவர்களிடம் பேசுவேன். இப்பவும் சொன்னேன், குழந்தை வயிற்றில் இருக்கும் போதே அதற்கு பேரு வைத்திருந்தோம்.. பாப்ஸ் இதான் அந்த பேரு, பாப்ஸ் நீ இப்ப அம்மாவை கஷ்டப்படுத்தாம வந்திடு, உன்னை பார்த்துக்க அம்மாவை தவிர யாரும் இல்லை, அம்மாவையே இன்னொருத்தர் தயவில விட்டுடாதேடா செல்லம்னு கேட்டுக்கொண்டேன். ராம் கூடவே இருந்தார், 5 மணிக்கு டாக்டர் இன்னும் அரை மணி நேரத்தில் டெலிவரி ஆகிவிடும்னு சொன்னதும் ராமை வெளியில் போகச்சொல்லிவிட்டேன். வலியை உணராமல் குழந்தை வந்ததும் அதன் எடை ஒரு கிலோ 600 கிராம் மட்டுமே இருந்தது.. பெண் குழந்தை என்று தெரிந்ததும் ரொம்ப சந்தோசமாவும் அவளோட சுறுசுறுப்பான அழுகை சந்தோசமாகவும் இருந்தது...

எல்லா தாய்க்கும் அவர்கள் குழந்தை ரொம்ப ஸ்பெஷல் தான். அவர்களை பற்றி எவ்வளவு பேசினாலும் தீரவே தீராது. அதிலும் ரெண்டும் பெண் குழந்தைகளூம் என் வீட்டில் வளரும் தேவதை என்று கூட சொல்ல முடியாது, தெய்வங்கள் தான். எதாவது ஒரு முடிவெடுத்து அது தோல்வியில் முடிந்து மனசு கஷ்டப்படும் நேரங்களில் இவர்கள் பேசுவது தெய்வத்தின் குரலாகத்தான் தோனும்.

இன்னைக்கு என் குட்டி செல்லத்துக்கு 6 வயசு ஆகிறது. ஆனால் அவளோட நிதானம், கவனிக்கும் தன்மை, நகைச்சுவை உணர்வு எல்லாம் ஸ்பெஷல் தான்.. லவ் யூடா பப்பு :)) உன் சிரிப்பு, குறும்பு, டைமுக்கு அடிக்கும் டயலாக், ஒரு நாளைக்கு நீ கொடுக்கும் 100 முத்தம், எல்லாம் எப்பவும் இப்படியே இருக்கனும்டா... ஹேப்பி பர்த்டே செல்லம்


டிஸ்கி: இன்னைக்குத்தான் ராம்க்கும் பிறந்த நாள்... ஹேப்பி பர்த்டே ராம்.Tuesday, December 14, 2010

பதிவர் சங்கமம் - ஈரோடு பதிவர் சந்திப்பு

நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு., உங்கள் எல்லாரையும் சந்திக்க ஆவலாக உள்ளோம்... ஈரோடு பதிவர் சங்கமத்தில் சந்திப்போம்.. வாங்க வாங்க


நாள் : 26.12.2010 ஞாயிறு
நேரம் : காலை 11.00 மணி
இடம் : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்
URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு

நிகழ்ச்சி முன்னோட்டம் .......

* பதிவர்கள் அறிமுகம்
* வலைப்பூக்கள் ஒரு மாற்று ஊடகம்
* சிறுகதைகளை உருவாக்குவோம்
* புகைப்படங்களில் நேர்த்தி
* நீங்களும் குறும்படம் எடுக்கலாம்
* உலகத்திரைப்படங்கள்
* வலைப்பக்கங்களை திறனுடன் பயன்படுத்துதல்
* பதிவர்கள் கலந்துரையாடல்

காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர்  என்று விருந்தும் உண்டாம். (பார்சல் உண்டான்னு கேக்க மறந்துட்டனே)

பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து அரங்கிற்கு வந்து செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்ய எண்ணியுள்ளோம்
உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்
தொடர்புகளுக்கு:
erodetamizh@gmail.com அல்லது குழும பதிவர்களைத் தொடர்பு கொள்ளவும்.