Showing posts with label கண்டனம். Show all posts
Showing posts with label கண்டனம். Show all posts

Monday, November 1, 2010

முஸ்கின், ரித்திக் என்ன பாவம் செய்தார்கள்?

முஸ்கின் ஜெயின், அவள் தம்பி ரித்திக் ஜெயின்  11 மற்றும் 8 வயது சின்ன குழந்தைகள், அவர்களின்  ஒரு நாள் எப்படியெல்லாம் போயிருக்கும், பள்ளி தோழர்கள், அம்மா அப்பா என்று வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்த அந்த அழகான மலர்களை ஒவ்வொரு இதழையும் பிய்த்துப்போட்ட கொடூர மனம் படைத்த மிருகங்கள்.
கோவையில் இரண்டு நாளுக்கு முன் கடத்தி சென்று கொலை செய்யப்பட்ட சின்னக்குழந்தைகளை கடத்திட்டு போனது அவர்களின் பள்ளிக்கு செல்லும் வேன் ட்ரைவர், கோவையில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் குழந்தைகள் கடத்துவது அதிகமாக நடக்க ஆரம்பித்த இந்த வேலையில் பெற்றோருக்கான கடமைகளை நாம் இன்னும் இறுக்கவேண்டியது அவசியம்.



குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் பற்றி அவசியம் சொல்லித்தரவும், அது யாரா இருந்தாலும் வேண்டாம், குடும்பத்தில் ஒருவராக நெருங்கிப் பழகியவர்களே நம்மைப்பற்றி மொட்டை கடுதாசி போடும் காலம் இது, (சொந்த அனுபவம்). என்னதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் சில நேரங்களில் இப்படி மக்களை கணிக்க தவறுவதும் நடக்கத்தானே செய்கிறது.
பொதுவாகவே குழந்தைகளோடு தொடர்புடைய மனிதர்களை நாமும் நல்லா அறிமுகம் செய்து கொள்வது அவசியம், முக்கியமா, வேன் டிரைவர், பள்ளி வாட்ச்மேன், செக்யுரிட்டி, கேம்ஸ் மாஸ்டர், வகுப்பு ஆசிரியர், எதேனும் வகுப்புகளுக்கு அனுப்புகிறோம் என்றால் அங்கு இருப்பவர்கள் எல்லாரின் முகவரியும் போன் நம்பரும் கண்டிப்பாக வைத்திருங்கள், வழக்கமாக வரும் நேரத்தை விட 5 நிமிடம் அதிகம் ஆனாலும் அவர்களை அழையுங்கள், ஒரு வேளை நீங்கள் சென்று அழைத்துவருவதாக இருந்தால் எதாவது காரணமாக தாமதமானால் அதையும் பள்ளிக்கோ அந்த வகுப்புக்கோ உடனே தெரிவியுங்கள்.

குடும்ப விசயம் வெளியில் பேசக்கூடாது என்று குழந்தைகளுக்கு பழக்குங்கள், வெளியூர் போவது வீட்டில் யார் இருக்கிறார்கள் போன்றவைகளை வேனிலோ ஆட்டோவிலோ பொது இடத்திலோ பேசவேண்டாம். நம் தொலைபேசி, மற்றும் சில எமர்ஜென்சி நம்பர் சொல்லிக்கொடுங்கள், குறைந்த பட்சம் 5 ரூபாயாவது எப்போதும் குழந்தைகளீடம் கொடுத்து எமர்ஜென்சி பணம் என்று சொல்லிவைக்கவும்.

நான் என் குழந்தைகளை மாலை 6 மணிக்கு தான் பள்ளியிலிருந்து அழைத்து வரப்போவேன், அப்போது வாரத்தில் 3 நாட்களாவது சில குழந்தைகள் ஒன் ருப்பி தாங்க ஆண்ட்டி இன்னும் அப்பா வரலை, ஆட்டோ மேன் வரலை என்று கேட்பார்கள், பெற்றோர் ஆசிரியர் கமிட்டி உறுப்பினராக இருப்பதால் பள்ளியில் இதை பற்றி கூறி ஒரு பொதுதொலைபேசி வைக்கும் படி கூறினேன், ஆயிரக்கணக்கில் கட்டணம் கட்டும் பள்ளியில் இது போன்ற ஒரு ரூபாய் செலவு பெரிதா குழந்தைகள் பாதுகாப்பு முக்கியமா என்று நீண்ட விவாதத்திற்குப்பின் இப்போது வைத்திருக்கிறார்கள். நான் தினம் போவதால் கிட்டத்தட்ட எல்லா குறைகளையும் பள்ளியின் கவனித்திற்கு கொண்டு போய்விடுவேன். இது எல்லாருக்கும் முடியாது, ஆனாலும் குறைந்த பட்சம் அம்மாவோ அப்பாவோ ஒரு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாவது போங்கள்.
வீட்டிலேயே கூட தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் யாரையும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அனுமதிக்க வேண்டாம், பக்கத்து வீட்டில் போய் படிப்பது, விளையாடுவது எதும் வேண்டாம், எதுவானாலும் நம் கண் முன் நடக்கட்டும்.

வெளியிடங்களூக்கு குழந்தைகளை கூட்டிக்கொண்டு போகும் போதும் விலையுயர்ந்த ஆடைகள் ஆபரண்ங்கள் வேண்டாம், பெண்குழந்தைகள் மட்டும் அல்ல ஆண் குழந்தைகளுக்கும் இந்த பிரச்சனை உண்டு. நூறு மடங்கு கவனம் நாம் வைக்காவிட்டால் இழப்பு நமக்குதான்

11 வயது குழந்தையிடம் பாலியல் கொடுமை பண்ணினவனை இனி விசாரித்து என்ன ஆகும்? விசாரனையே இல்லாமல் கொடுமையாக மிகக்கொடுமையா தண்டிக்கனும். இனிமேல் எவனும் இது மாதிரி ஒரு நினைப்பே வராதபடி தண்டிக்கனும், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு மிகக்கடுமையான கண்டனங்களை போலிசுக்கும் அரசுக்கும் தெரிவிப்பது நம்கடமை.

 

நம் எதிர்காலமே இன்னொருவரால் சிதைக்கப்படுவதை அனுமதிக்க முடியுமா?முடிந்தால் உங்கள் கண்டனங்களை உங்கள் பதிவுகளில் பதிவுசெய்யுங்கள்.