Showing posts with label கேரக்டர். Show all posts
Showing posts with label கேரக்டர். Show all posts

Saturday, October 16, 2010

சில நேரங்களில் சில மனிதர்கள்....

எதுக்கு இப்படி சண்டை போட்டுக்கிறார்கள்ன்னு அதிசயமாக பார்த்து தூணைக்கட்டி நின்றது நல்லா நினைவிருக்கிறது, 8வது படிக்கும் போது. அந்த வீட்டின் திண்ணையில் நிறைய பெரியவங்க உட்கார்ந்திருக்காங்க, இந்தப்பக்கம் லச்சுமி அக்கா அந்தப்பக்கம் தண்டபாணி அண்ணன், நடுவில லச்சுமி அக்காவின் அம்மா அப்பா, பெரிய சண்டைன்னு தோனுது என்னன்னு புரியலை, போன லீவுக்கு லச்சுமி அக்கா வீட்டுக்கு போன போது கூட அரசாணிக்கா தோட்டத்துல இருந்து அறுத்துட்டு வந்து சின்ன வெங்காயம் போட்டு வேகவைச்சு தந்தாங்க அவங்க மாமியார், இப்ப எதுக்கு அழறாங்க? ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி 3 வருசம் முடிஞ்சிருந்தது. இந்த பேச்சு வார்த்தைக்கு  பிறகு லச்சுமி அக்கா அவங்க அம்மா வீட்டிலேயே இருந்துட்டாங்க.

10வது படிக்கும் போதுதான் தெரிந்தது ரெண்டு பேருக்கும் அத்து விட்டுடாங்கன்னு, அப்படின்னா என்னன்னு கூட தெரியலை, இனிமேல் லச்சுமி அக்கா இங்க தான் இருப்பாங்கங்கறது மட்டும் புரிஞ்சுது. சில நேரங்களில் பள்ளிக்கூடம் விட்டு வரும் போது தண்டபாணி அண்ணன்
ரோட்டோரத்தில நின்னு எதாவது சாப்பிட தரும், அப்படியே லச்சுமி அக்காவை கூப்பிட சொல்லும், எனக்கு அவங்க அம்மாவை பார்த்தா கொஞ்சம் அலர்ஜி அதனால மாட்டேன்னு சொல்லிடுவேன், லச்சுமிக்காவும் பயந்துட்டு வராது.. எல்லாரும் சொல்லுவாங்க அவ அவியம்மாவுக்கு பயந்து பொழப்பை தொலைச்சுட்டான்னு.. சிவன் மலையடிவாரத்தில கடை வச்சிருந்தாங்க தண்டபானி அண்ணன், அப்பல்லாம் எங்க தெருவில மக்கள் மாசாமாசம் சிவன்மலை போவாங்க, யாரோடவாவது ஒட்டிட்டு நானும் போவேன், தவறாம சர்க்கரை மிட்டாய் வாங்கி தந்து லச்சுமிக்காவை விசாரிப்பாரு, அவரு கடையிலதான் செருப்பை விட்டுட்டு போவோம், திரும்பி வரும்போது வடை,டீ  லச்சுமிக்காவின் நலவிசாரிப்போடு கிடைக்கும்.

காலேஜ் படிக்கும் போது தான் தெரிந்தது, லச்சுமிக்கா அழுது புலம்பின அன்னைக்குதான் தண்டபானி அண்ணனுக்கு கல்யாணமாம், லச்சுமிக்கா அழுதுபுலம்பியதில் தெரிந்ததுகொண்டது, குழந்தையில்லாததால் லச்சுமிக்காவின் அம்மா திரும்ப அங்க போக வேண்டாம்னு சொல்லிட்டதாவும், அவங்க சேர்ந்து இருக்கும் போது வாங்கின 5 செண்ட் இடத்தை அவங்க அம்மா பேரில் எழுதி வாங்கிக்கொண்டதாகவும் புத்தியில்லாம அந்த அண்ணனைவிட்டு வந்துட்டேன்னு சொல்லி அழுதாங்க, எனக்கு என்னன்னு ஒண்ணும் புரியலை, இப்ப புரியுது,, சில வருசங்களுக்கு முன் காங்கயம் பஸ்ஸ்டாண்டில் தண்டபானி அண்ணனை பார்த்தேன், எனக்கே ரெண்டு குழந்தைகள் இருக்காங்க அவரு என்னை இன்னும் 10 வகுப்பு புள்ளன்னு நினைச்சு அச்சு முறுக்கு, கடலைபர்பி, சர்க்கரை மிட்டாய் பொட்டலம் கட்டி தந்தாரு, எங்கூட இருந்த மக்கள் செம கிண்டல் பண்ணினாங்க, ஆனா எனக்கு அந்த அன்பு பிடிச்சிருந்தது, அவரிடம் என் குழந்தைகளின் போட்டா காட்டியபோது அவரின் கண்ணில், பேச்சில் தெரிந்த பிரியம் இன்னைக்கும் மறக்கலை, திரும்பி வரும்போதும் அவர் லச்சுமி அக்காவை விசாரித்தார், நான் இப்ப அந்த ஊரிலேயே இல்லைன்னு சொன்னேன், அந்த அண்ணனுக்கு கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதாக சொன்னார், எனக்கு லச்சுமிக்காவின் அழுகை முகம் நினைவுக்கு வந்தது..

நல்லா யோசிச்சு பார்த்தா இந்த இருவரின் வாழ்க்கை இப்படி ஆக காரணம் லச்சுமிக்காவின் அம்மாதான், அவருக்கு இவங்க ஒரே பொண்ணு, கல்யாணம் பண்ணினதே மிக லேட்டாத்தான், அப்படியும் அவங்களை வாழ விடாமல் செய்த குணம் ஏன்? முதல் காரணம் சொத்து இவங்க சொத்தெல்லாம் மாப்பிள்ளைக்கு போயிடும் கடைசி காலத்தில் கஷ்டப்படனும்னு அடிக்கடி சொல்லிட்டு இருப்பாங்க, அதே பயத்தில தான் லச்சுமிக்காவின் இடத்தையும் அவங்க பேரிலேயே மாத்திக்கிட்டாங்க,  முதலில் வந்தது லச்சுமிக்காவின் அம்மா அவங்க பேரு பாப்பாத்தியம்மா..மிக உயரமான நல்ல உறுதியான பெண்மணி, வெத்திலை பாக்கும் குரங்கு மார்க் புகையிலையும் ஓடிப்போய் கடையில் வாங்கிட்டுவான்னு சொல்லி முடிப்பதுக்குள்ள போயிருப்பென், அப்படி ஒரு குரல். அவங்க பேச்சுக்கு பயந்தே தாவணி போடசொல்லி எங்கம்மா என்னை திட்டிட்டே இருப்பாங்க :(

பாப்பாத்தியம்மா மாதிரி சில அம்மாக்களும் இருக்காங்க, இதுவரை இப்படி 2 பேரை நான் சந்திச்சிருக்கேன், வாழ்வின் சிலகாலம் கூட சேர்ந்து வாழ்ந்திருக்கேன். நினைவு தெரிந்து நான் சந்திச்ச மனிதர்கள், அவர்களின் குணம், நட்பு,  பாசம், துரோகம், பிடிச்சது, பிடிக்காதது,வெகுளித்தனம், அவங்க கேரக்டர் என்று என் பார்வையில் ஒரு சின்ன தொடரா பதிந்து வைக்கலாம்னு தோனியது,. இதற்கு இதைவிட பொருத்தமான தலைப்பு தோனலை..