Friday, February 17, 2012

என் செல்லக்கண்ணம்மா



ஒரு ஜூன் மாதத்தில் என் நண்பனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருந்தாள், அவளை பார்த்ததும் எதோ ஒன்று இல்லாத வெறுமை டக்குன்னு தோனியது. கல்யாணம் ஆகி 8 மாசம் ஆச்சே, ஒண்ணும் விசேசம் இல்லையா போன்ற கேள்விகள் ஆரம்பம் ஆன நேரம். குழந்தையா நமக்கா? அய்யோ ஒரு பொம்மையை கூட ஒழுங்கா வெச்சுக்க வக்கில்லாத ஆளு, நம்ம பெருமை நமக்குதான் தெரியும்னு என்ற நினைப்பு மாறி ஒரு குழந்தை இருந்தா நல்லாத்தான் இருக்கும் போலன்னு தோன ஆரம்பித்தது அன்றுதான்.

ஜூலை 2, 2000 அன்று என் சின்ன மாமியார் மகப்பேறு மருத்துவர், உறுதியாக குழந்தைதான்னு சொன்னதும், அங்கயே விசில் அடிச்சேன். அந்த நிமிடம் முதல் என் குழந்தையுடன் பேச ஆரம்பித்தேன். அன்னைக்கே திரும்பி ட்ரெயினில் போகும் போது ஊருக்கதை அதனிடம் பேசி முடித்திருந்தேன். கூட்டமாகவே இருந்து பழக்கப்பட்ட நான் தனியா இருப்பதை விரும்பினேன். ஒரு மழைக்காலத்தில் என் நெஞ்சளவு தண்ணீரில் நடந்து வரும் போது அதையும் என் வயிற்றுக்குழந்தைக்கு சொல்லிட்டே வந்தேன்.

காதல் திருமணத்தின் அத்தனை சங்கடங்களையும் பாதியாக குறைக்க வந்த குழந்தை, டெலிவரிக்கு முன் கோவையில் செட்டில் பண்ணியே ஆகனும்னு பாட்டியின் அடத்தில் கோவை வந்தோம். ஒரு விடியற்காலையில் மருத்துவ அதிசயத்தில் ஒன்றாக பிறக்கும் குழந்தையை வலியின்றி ரசித்து பார்த்துகொண்டிருந்தேன். என்ன அழகான அழுகையா இருந்தது. என்ன குழந்தைன்னு தெரிஞ்சுக்கனுமான்னு மாமி கேட்டாங்க. எனக்கு பையன் வேணும்னு முதலில் நினைச்சுட்டு இருந்தேன். இல்ல வேண்டாம் நானே பார்த்துக்கறேன்னு சொல்லி குழந்தைவரும் வரை காத்திருந்தேன். தூயவெள்ளை டவலில் சுற்றிய ரோஜா வண்ண தேவதை, எவ்வளவு அழகான கண்கள், நான் பார்த்தவரைக்கும் உலகின் அழகிய கண், வரைந்த மாதிரியான இதழ்கள், சின்ன சங்கு பூ மாதிரி இமைகள், அழுத்தி எடுத்தால் ரத்தம் கன்றும் தாழம்பு கைகள். சொர்க்கம் என்பது என் முன் இருந்தது.

ஒரு நாள் இரவில் அழததில்லை, ஒரு முறைகூட என்னை சங்கடப்படுத்தியதில்லை, அது இது என்று எதற்கும் அடம் பிடித்ததில்லை. அவளுடைய உள்ளும் புறமுமாக எல்லாமாக நானே இருந்தேன், எனக்கு அவளும். மழலையாக பேசியதே இல்லை, நடக்க ஆரம்பிக்கும் முன்பே நன்றாக பேசுவாள், யாருமற்ற பகல் பொழுதுகளில் நானும் அவளும் இருண்ட அறைக்குள் பேசிக்களித்து களைத்த கதைகள் ஆயிரம். தாய்ப்பால் குடிக்கும் போதே என் முகம் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பாள், திடீரென்று முகம் விலக்கி ஒரு தேவதை சிரிப்பு சிரிப்பாள். அந்தக்காலம்தான் வாழ்ந்த காலத்தில் வசந்தம்.

சரியாக எல்.கே.ஜி போன அன்று இன்னொரு குழந்தை என் வயிற்றில். கொஞ்சம் பயந்தேன், பாசத்துக்கு பங்கு வருமென்று நினைப்பாளோ? மாலையில் வீட்டுக்கு வந்ததும் முதலில் அவளிடம் தான் சொன்னேன். அவளுக்கு ஊற்றி வைத்திருந்த ஹார்லிக்ஸை என் வயிற்றுக்கு அருகில் வைத்து பாப்ஸுக்கும்மா என்றாள். ஒரு குழந்தையை நல்லபடியா வளர்த்தியிருக்கிறேன் என்று கொஞ்சம் இறுமாந்தேன். தினம் பள்ளிக்கு செல்லும் போது அவள் ஸ்னாக்ஸில் கொஞ்சம் கொடுத்து செல்வாள், வந்ததும் அதுவரை முக்கியமான நான் விலக்கப்பட்டு அங்கு பாப்ஸ் வந்தது. இம்முறை வயிற்றிலிருப்பது பெண் தான் என்று தெரிந்திருந்தது. இருந்தாலும் சும்மா பாப்ஸ்ன்னு சொல்லுவோம். 8 மாதத்தில் ஒரு நாள் என் வயிற்றில் காது வைத்து குழந்தையின் அசைவை ரசித்துக்கொண்டிருந்தாள். எதோ சொல்லும் போது வயிற்றுக்குழந்தை செமையா ஒரு உதை உதைத்தது. என்ன சந்தோசம் அவளுக்கு. ரெண்டாவது குழந்தை பிறந்ததும் தினம் மருத்துவமனைக்கு வருவாள். வந்ததும் அவளிடம் தான் குழந்தைக்கு சர்வீஸ் போகும். நாப்கின் தருவது. எனக்கு உதவுவதுன்னு அவள் பிசியா இருப்பாள்.

இன்றுவரை பப்புக்கு அவள் தான் இன்னொரு அம்மா, நான் ஊரு உலகமே சுத்த போனாலும் அவளிடம் ஒரு வார்த்தை கண்ணு பப்புவை பார்த்துக்கடா என்று சொல்லி சென்றாள் போதும். கொஞ்சம் அடாவடியான எனக்கு இப்படி அமைதியான பொறுப்பான பெண்., உறவினர் எல்லாருமே சொல்லுவாங்க. அவ ரொம்ப அன்பான பொண்ணு, யாரு வந்தாலும் சிரித்த முகத்துடன் தண்ணீர் கொண்டுவந்து தருவாள். நானாக சொல்லித்தரவில்லை. அவளே செய்வாள். பிறகு அவளுண்டு அவ வேலை உண்டுன்னு அமைதியகா நகர்ந்துவிடுவாள். எப்பவும் படிப்பு படிப்பு .. பாட புத்தகமில்லை. அதை தவிர அனைத்தும். பொரி மடித்து வரும் பேப்பர் உட்பட படிச்சு முடிச்சுடுவா.

உலகத்தில் அவளுக்கு பிடித்த இன்னொரு விசயம் பரதநாட்டியம். அவளோட கடலளவு கண்ணுக்கு ஏற்ற விசயம். ரொம்ப சின்ன வயசில் இருந்து கத்துக்கறா, ஒரு முறை ஒரு நடன நிகழ்ச்சியின் போது வெள்ளை பட்டாடையில் முதல் ஆளா வரும்போது எனக்கு திக்குன்னு இருந்துச்சு. நம்ம குழந்தையா இது? இவ்வளவு அழகான ஒரு குழந்தைக்கு அம்மா என்பதே பெருமைதான். எந்த வரைமுறைகளூம் இல்லாத மிக இயல்பான எளிமையான பெண் என் மகள் என்றால் எனக்கு சந்தோசம் தானே. என் அம்மா இறந்த போதுஅழாமல் அசராமல் நின்று கொண்டு அடுத்த ஏற்பாடுகளை பார்த்துட்டு இருந்தேன். இவ வந்து கட்டிப்பிடித்ததும் என் அம்மாவின் ஸ்பரிச நினைவு உடனே வந்து ஒரு பெரிய அழுகையா வெளிவந்தது. இப்போதும் மனம் தடுமாறும் போதும் கோபப்படும் போதும் என் தெய்வ அசிரீரி அவள் தான்.


வர்ஷா வளர்ந்து கொண்டே போகிறாள் நான் அவளுக்கு குழந்தையாகிக்கொண்டே இருக்கிறேன். இதுவும் நன்றாக இருக்கிறது

என் உயிரான என் கண்மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், உனக்கு பிடித்தது மட்டுமே நடக்கட்டும். நம்ம மூணு பேருக்கும் பிடித்த பாட்டு.

உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி


 

Tuesday, February 14, 2012

அம்மா

பிப்ரவரி மாதம் என் வாழ்க்கையில் மிக முக்கியமானது. வர்ஷா பிறந்து நான் ஒரு அம்மான்னு ஆனதும் என் அம்மா இந்த உலகைவிட்டு போனதும் ஒரு பிப்ரவரி மாதம்.  இன்றோடு ஒரு வருசம்.. முழுசாக ஒரு வருசம். எப்படி ஓடிப்போயிடுச்சு. ஒரு வாரமாகவே போன வருசம் இந்த நேரம், இந்த நாள்னு ஒவ்வொரு நாளும் எதோ ஒரு வகையில் தடுமாற்றம். பிப்ரவரி 14. ஒரு வருசம்மா.. நீ எங்களை விட்டு போயி ஒரு வருசம் ஆயிடுச்சு. உடம்பு சரியில்லைன்னு ஒரு வாரம் ஹாஸ்பிடலில் வீட்டுக்கு போனதும் கண்ணை திறந்து என்னை பார்த்தபடி போன உன் உயிர்..  அம்மா.

அம்மாவும் அப்பாவும் அடுத்தத்து தவறுவது ரொம்ப கொடுமைம்மா. எதாவது தோனும் போது,. ஒரு சந்தோசமோ துக்கமோ சட்டுன்னு சொல்ல ஒரு ஆள் இல்லையே. என்னதான் விட்டேத்தியா இருந்தாலும் நமக்குன்னு அம்மா அப்பா இல்லையேன்னு ரொம்ப தோனுதும்மா. நீயும் போன இந்த ஒரு வருசத்தில் எவ்வளவோ நடந்திடுச்சு. உன் மரணம் என்னை ரொம்ப மாத்திடுச்சும்மா. நீ இப்படி டக்குன்னு போவேன்னு நான் எதிர்பார்க்கலை.

ரொம்ப நாள் கழிச்சு இதை எழுதும் போது என்னவோ நினைப்பு வந்து வாய்விட்டு அழனும் போல இருக்கு. அம்மா. எப்பவாவது எங்களை பார்க்கனும்னு உனக்கு தோனிச்சா?  மின்மயானத்தில் இருந்து வரும் போது எப்படி இருந்துச்சு தெரியுமா? ஒரு மண் பானையில் இதான் உன் அம்மா அப்பான்னு வாங்கி ஆத்தில் கரைக்கும் போது உங்களை வைத்து கட்டின கனவுகளும் கரைஞ்சுடுச்சு.  ரொம்ப நாளா உன் புடவையை வச்சு தூங்கிட்டு இருப்பேன். இனி ஆயுசுக்கும் அப்படித்தான்னு நினைச்சு தாங்க முடியலைம்மா. எவ்வளவோ நாள் எத்தனையோ கஷ்டப்பட்டிருப்போம், ஆனாலும் உங்களோடு இருந்த அந்த சந்தோசமான நாட்கள் இனிமேல் வரவே வராதும்மா. அப்பா போனதும் பாதி போயிடுச்சு, நீயும் போனதும் உடம்பில் மனசில் இருந்து என்னமோ போயிடுச்சும்மா.

ரெண்டு பேரும் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இப்படி போயிட்டீங்க. எங்களுக்குன்னு யாரும் இல்லன்னு ஏன் தோனலை? ரோட்டில் யாராவது உங்க வயசில் போனாலே அவங்களிடம் உங்க ஜாடையை தேடுகிறேன். இந்த மாதிரிதான் அப்பா இருப்பாரு, அம்மா நடப்பாங்க, முடியலைம்மா.
போனில் உன் நம்பரைபார்த்தாலே கஷ்டமா இருக்குப்பா.ஊரு உலகத்தில் சின்ன வயசில் அம்மா அப்பாவை இழந்தவங்க எவ்வளவோ பேரு இருப்பாங்க. ஏன் உனக்கு கூட உன் அம்மா சின்ன வயசிலேயே இறந்துட்டாங்கல்லமா, ஆனாலும் அம்மா அப்பா உறவை விட வேறு எதுவும் தனியா சிறப்பானதா இல்லை.


அம்மா அப்பா எங்களோடவே இருங்க, மறந்துடாதீங்க.. எங்களுக்கு யாரும் இல்லைம்மா.
..