Monday, March 14, 2011

அம்மா. அப்பா காக்கா......

இன்றோடு ஒரு மாதம், புதை சேறில் மூழ்கி மூச்சு திணறி போராடி வெளி வந்த காலம், போன மாதம் இதே 14 ஆம் தேதி, 5 நாட்களாக கோமாவில் இருந்த என் அம்மா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட 15வது நிமிடம் கண்ணைத்திறந்து என்னைப்பார்த்ததும், நான் பார்த்துக்கொண்டே இருக்கும் போதே அவர் உயிர் பிரிந்ததும்  நிகழ்ந்த நாள்.என் அப்பா இறந்து முழுதாக ஒரு வருடம் 15 நாட்களே ஆன நிலையில் அம்மாவும் கிளம்பிட்டாங்க. திடீர்ன்னு ஒரு வட்டவெளியில் பாதுகாப்பு இல்லாமல் நிற்பது போல ஒரு உணர்வு..அம்மா....

அம்மா...உனக்கும் எனக்குமான உறவு ரொம்ப அன்னியோன்னியமா இருந்ததில்லை. 6 குழந்தைகளை பெற்று வளர்க்கும் ஆயாசத்தில் குறிப்பிடும் படி நீ  என்னை கவனித்ததாக நினைவு இல்லை.  ஒரு வயசில் கொண்டு போய் அப்பிச்சி வீட்டில் விட்டுட்டே, நான் திரும்பி வரும்போது எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா பிறந்து சாமிகிட்ட போயிட்டதும், புதுசா ஒரு தம்பி பிறந்திருப்பதும் தெரிஞ்சுது. ஆனா உனக்கு தெரிஞ்சிருக்கும், அந்த வீட்டு வாசப்படியில் உக்கார்ந்து நான் அம்மாவை நினைச்சு அழுதது இன்னும் புகையாக நினைவிருக்கிறது.

அம்மா...உன்னோடு வந்த பிறகும் ஒரு நாள்கூட உன் பக்கத்தில் தூங்கினதில்லம்மா, எனக்கு பிறகு 2 தம்பி, 1 தங்கைன்னு எப்பவும் உன்னை பங்குபோட்டுக்க ரெடியா இருப்பாங்க. ஒவ்வொரு வருச லீவுக்கும் நான் போகவே மாட்டேன்னு அழுவேன், நீயும் அப்பிச்சியும் பிடிவாதமா ஊருக்கு கொண்டு போய் விடுவீங்க, எப்ப திரும்பி வந்து கூட்டிட்டு போவேன்னு தினம் ராத்திரி அழுதுட்டேதான் இருப்பேன்.

அம்மா...கொஞ்சம் பெரியவளானதும் அதே காம்பவுண்டில் இருந்த விதவை தூரத்து சொந்தக்கரம்மாக்கு துணைக்கு நிரந்தர துணையாக ஆயிட்டேன். உன்கூட ஒரு நாள் கூட பக்கத்தில் உக்கார்ந்தோ உன் கையில் சாப்பிட்டோ நினைவே இல்லம்மா. உன்னால தலை பின்ன முடியாதுன்னு நான் 10வரைக்கும் முடியே வளர்த்தலை. நான் உன்னை எவ்வளவு எதிர்பார்த்தனோ அவ்வளவு தூரத்தில் இருந்தேன்.

அம்மா, நீ ரொம்ப பாவம், படிப்பறிவு இல்லாத, அப்பாதான் உலகம்னு நம்பி இருந்த லட்சக்கணக்கான அம்மாவில் நீயும் ஒருத்தி, ஒரு நாள் கூட என்னைப்படின்னு சொன்னதில்லை, திட்டினதில்லை, அடிச்சதில்லை, ஒரு முத்தம்கூட கொடுத்ததில்லை. ஆனா நீ கடைசி படுக்கையில் இருந்த போது நான் உனக்கு கொடுத்தேன், மகேஷும், தேவாவும் ரமேசும் அழுதுட்டே இருந்தாங்க, நீ போயிடுவேன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சுது, நாங்க உன்கிட்ட பேசினது உனக்கு தெரிஞ்சுதா?

அம்மா...எனக்கு குழந்தைகள் பிறந்தபோதும் நீ என் அருகில் இல்லை, உன்னை ரொம்ப மிஸ் பண்ணினது அப்பதான். உனக்கு அப்பாமேல எவ்வளவு நம்பிக்கை, நாங்க கிண்டல் பண்ணினமாதிரியே உன்னால அப்பா இல்லாமல் இருக்க முடியலையா? உன் கண்ணை தானம் கொடுததது உனக்கு தெரிஞ்சிருந்தா நீ என்ன சொல்லிருப்பேன்னு யோசிக்கறேன்.

அம்மா.. நீ என்னை பார்த்துட்டே கண்ணை மூடினையே அனத நிமிசம் எனக்கு என்ன தோனிச்சு தெரியுமா? நல்லதும்மா நீ போனதே நல்லது, இப்படி கஷ்டப்பட்டு படுக்கையில் இருப்பதற்கு போவதே நல்லதுன்னு தோனிச்சும்மா. நீ இல்லாத இந்த 30 நாட்களில் வாழ்க்கையின் இழப்பதற்கு ஒன்னுமில்லைன்னு புரிஞ்சுது. நீ போன 5வது நாள் இன்னொரு மரணமும் நம்ம வீட்டில் நடந்துடுச்சு. யாருக்காகவோ வாங்கின வலி, அர்த்தமற்று யார் மேலோ கொண்ட அன்பு, கோபம், பொறாமை, துக்கம், ஏமாற்றம் எல்லாமே அந்த நேர உணர்வுகள்.

அம்மா.. நீ சொன்னது மாதிரி நான் கொஞ்சம் கல்லுதான்மா, அப்பா இறந்தபோது இருந்த திடுக்கிடல் நீ போனபோது இல்லம்மா, ஒருவேளை உன் முடிவு ஏற்கனவே தெரிந்தனாலயால் இருக்கும். இப்ப எங்க இருக்கே? இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாமில்ல? உனக்கு புரியுதோ இல்லையோ உன்கிட்ட எல்லாம் சொல்லனும்னு தோனும், எப்பவும் போல பேசாம இருந்திடுவேன், நேத்து திருப்பூர் போயிட்டு வரும்போது இனி இங்க நமக்கு யார் இருக்காங்கன்னு தோனுச்சு.

அப்பா, இப்பவாவது அம்மாவை நல்லா பார்த்துக்க. தினம் காலையில் வரும் காக்காக்கள் தான் இனி நீங்க நினைச்சுக்கறேன். எப்பவும் எங்க கூட இருங்க. ரெண்டு பேருமே இல்லைன்னு நினைக்கும்போது ஒரு துக்கமான, ஏமாற்ற, ஒரு குறை இருப்பது போன்ற  உணர்வு வருவதை தவிர்க்கமுடியலை.. இனிமேல் சும்மா கூப்பிடக்கூட நீங்க ரெண்டு பேரும் இல்லையே. இதிலிருந்து நான் சீக்கிரம் வந்துடுவேன், அவங்களையும் வரவைங்க.

அம்மா, அப்பா இனி போட்டாவிலும், வீட்டை சுத்தும் காக்கா உருவிலும்..

9 comments:

முகமூடி said...

உணர்வுகளை வார்த்தைகளாக வடித்து உள்ளிர்கள். உங்கள் அன்னை உங்களுடனே இருப்பதாக நினைத்து கொள்ளவும். எழுதியதை வைத்து பார்க்கும் போது தாயை நீங்கள் அதிகமாக இழந்துள்ளிர்கள் என்று தோன்றுகிறது. சில சமயம் நம்மை நாம்தான் தேற்றி கொள்ளவேண்டும்.

உங்கள் அன்னையின் ஆத்மா சாந்தியடையவும். அவர் உங்களை பற்றி கண்ட கனவுகள் சீக்கிரமே மெய்ப்படவும் ஆண்டவனை வேண்டுகிறேன்.

vinu said...

varuththangal..................

கோபிநாத் said...

ம்..

R.Gopi said...

விஜி....

நீண்ட சோகத்தின் இடைவெளியில் இருந்து மீண்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள்ள்ள்ள்...........

தாய், தந்தை இருவரின் இழப்புமே வார்த்தையில் வடிக்க முடியாத அளவு சோகத்தை தரும் என்பதை உணர்ந்தோர் அறிவர்.

நான் என் தந்தையை இழந்த போது இதை உணர்ந்தேன்...

வாழ்க்கையில் நிறைய வலிகளை தாங்கி, தாண்டி தான் வந்து வாழ் வேண்டியுள்ளது...

அது போல், நீங்களும் இந்த வலிகளை தாங்கி / தாண்டி வாருங்கள்... வருவீர்கள் என்று உங்களை அறிந்தோர் அறிவர்...

சுசி said...

:((((

எல் கே said...

:(

☀நான் ஆதவன்☀ said...

:( மீண்டு வாங்கக்கா.. அதுக்கான மன உறுதி உங்ககிட்ட இருக்கு. பல சமயங்கல்ல நான் கவனிச்சிருக்கேன்.

ரெண்டு பேரும் கடவுளா மாறி உங்களை பார்த்துட்டு தான் இருப்பாங்க.

Ramani said...

மனம் கனக்கச் செய்துபோகும் பதிவு

அப்பாவி தங்கமணி said...

This post made me sad... reminded me of my losses... made me want to see my mom now...:((

Post a Comment

வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க