Wednesday, June 15, 2011

தேவதைகள் கலைத்த வீடு

கிட்டத்தட்ட 60 நாட்கள், காலைச்சுற்றும் பூனைக்குட்டி மாதிரி வீடு முழுதும் வியாபித்த என் தேவதைகள், படுக்கை அறைக்கதவு காலை 10 மணிக்கு மேல் தான் திறக்கும், அதற்குள் அதிலிருந்து வரும் சந்தோசக்குரலில் தெரியும் குறும்பு அந்த நாளைக்கான அலும்புக்கான அஸ்திவாரம்.

ராம நாமம் ஜெபித்தால் புண்ணியமாம்? அதைவிட அதிக முறை அதைவிட அதிக அன்புடன், காதலுடன், கோவத்துடன், பாசத்துடன் உங்களை கூப்பிட்டிருக்கிறேன், என்ன கத்தினாலும் ஒரு சின்ன எதிர்வினை கூட உங்ககிட்ட இருந்து வராது.

என்னைமட்டுமல்ல சுற்றி இருக்கும் நண்பர்களையும் சந்தோசமாகவும், உயிர்ப்போடும் வைத்திருக்கும் வித்தை எங்கிருந்து வந்தது? தினம் பப்புவை தேடி வரும் நண்பர்களுக்கு அவள் அளிக்கும் பதிலிருந்தே அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள்ன்னு தெரிந்துவிடும். 60 நாட்கள் கொண்டாட்டமுடன் கழிந்த இரவுகள், கடைசியாக நேற்று இரவு போட்ட ஆட்டமும், தினம் பாடிய பாடல்களும், உங்களிடம் வாங்கின எண்ணற்ற பல்புக்களும் தான் இனிவரும் நாளையும் நகர்த்த உதவும்.

எதற்கு இன்று விடியவேண்டும்? இதோ திரும்பி வந்து பார்க்கும் போது கலைந்து கிடக்கும் வீடு. காலையில் உங்களை ஆசிர்வதிப்பது போல் தூறிய மழை, அதோடு பப்புவின் பெரிய வகுப்பு போகும் (2 வகுப்பு) முன்னேற்பாடுகள், சொத்து பிரிப்பை விட ஜாக்ரதையாக பிரிக்கப்பட்ட பென்சில்கள், க்ரேயான்கள். ஒவ்வொன்றும் நீங்கள் இப்போது இங்கில்லை என்று குறைகூறுகிறது..

கண்ணுகளா, பள்ளி என்பது ஒவ்வொரு நிமிடமும் சந்தோசமுடன் நினைவு கொள்ள வேண்டியது. எப்போதும் போல் இனியும் படின்னு படுத்த மாட்டேன். முதல் மார்க் எடுத்து உங்க அறிவை நீங்க நிருபிக்க வேண்டியதில்லை, சந்தோசமா அனுபவியுங்கள், பள்ளிதரும் அனுபவம், நண்பர்கள், ஒரு நாள் நோட் கொண்டு போகாட்டி மிஸ் வந்து திட்டுவாங்களோ என்ற பய உணர்வு, பிடிச்ச லஞ்ச் கொண்டு போய் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ண, பிறந்தநாள் நண்பர்களின் தனித்தருணங்களில் உடனிருங்கள், இது கடந்து போனால் திரும்ப வராது. வீடு, வாழ்வியல் துன்பங்கள் எல்லாருக்கும் காத்திருக்கும், கடந்து செல்லவேண்டியும் இருக்கும், அதுவரை பள்ளியை அனுபவியுங்கள். அதோடு முடிஞ்சா கொஞ்சம் படிங்க, ஒரு போதும் ட்யுசன் போ என்றோ, ஏன் முதல் மதிப்பெண் வரலைன்னோ கண்டிப்பா நான் கேட்க மாட்டேன்.
என்ன பிடிக்குதோ அதை செய்யுங்கள், அதில் மேலும் சிறப்பாக வர பெற்றோரா என்ன கடமையோ அதை நாங்கள் செய்கிறோம். உங்கள் சந்தோசம் முக்கியம்.

அன்பான குழந்தைகளை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி.. சிலநேரம் அடுத்தடுத்த சென்ற வருடம் இறந்து போன என் பெற்றோரை நினைத்து மூட் அவுட் ஆகும் போது வர்ஷா வந்து மெதுவா அணைத்துக் கொள்ளுவாள், பப்புவோ இப்ப எதுக்கு சோக சீன்ன்னு கேட்பாள்,

இரண்டையும் அனுபவிக்கும் அம்மாவாக ஆனதற்கு நன்றி கடவுளே.என் அம்மாவாக, தோழிகளாக, செல்ல எதிரிகளாக, எப்போதும் கலாய்க்கும் என் இனிய ராட்சசிகளுக்கு இந்தப்பாட்டு.

உங்களுக்கு பிடிச்ச பாட்டு உங்களுக்காக மட்டும் செல்லங்களா..

6 comments:

எல் கே said...

குழந்தைகள் பள்ளி சென்றுவிட்டால் வீட்டில் இருக்கும் தாய்களுக்குதான் கஷ்டம் .

Ramani said...

அருமையான பதிவு
திருவிழா முடிந்த மைதானம்போல
திருமணம் முடிந்த மண்டபம் போல
அவர்கள் இருப்பை ரசிக்கத்
தெரிந்தவர்களுக்குத்தான்
அந்த வெறுமை புரியும்
சூப்பர் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Deepa said...

ரொம்ம்ம்ம்ம்ப நல்லாருக்கு விஜி! Hats off! :-)

மகேந்திரன் said...

குழந்தைகள் இருந்து விளையாடும் இடம்
வெள்ளிச் சலங்கைகள் ஒலிக்கும்
சலசலக்கும் நீரோடை போல அவர்களின்
குரல்கள் ஒலிக்கையில், நாம் வேலையின் நிமித்தம் இருந்தால்
சற்று இடைஞ்சலாக தான் இருக்கும்.
அவர்களை தவிர்த்துப் பார்த்தால்
இப்புவியே சூனியமாய் தெரியும்
அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.

கடைசியில் நீங்கள் பதிவேற்றிய பாடல் மிக இனிது.
ஒரு பெண் மகவை பற்றி இதற்கு மேல் கூற முடியாத பாடல்.

Vijayashankar said...

எவ்வளவு தான் கோபப்பட்டாலும் , அவர்கள் வந்து அணைத்துக்கொள்ளும் போது... தேவதைகளின் தெய்வீகம்.

ஏ. ஆர். சரவணன் said...

கண்ணுகளா, பள்ளி என்பது ஒவ்வொரு நிமிடமும் சந்தோசமுடன் நினைவு கொள்ள வேண்டியது. எப்போதும் போல் இனியும் படின்னு படுத்த மாட்டேன். முதல் மார்க் எடுத்து உங்க அறிவை நீங்க நிருபிக்க வேண்டியதில்லை, சந்தோசமா அனுபவியுங்கள், பள்ளிதரும் அனுபவம், நண்பர்கள், ஒரு நாள் நோட் கொண்டு போகாட்டி மிஸ் வந்து திட்டுவாங்களோ என்ற பய உணர்வு, பிடிச்ச லஞ்ச் கொண்டு போய் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ண, பிறந்தநாள் நண்பர்களின் தனித்தருணங்களில் உடனிருங்கள், இது கடந்து போனால் திரும்ப வராது. வீடு, வாழ்வியல் துன்பங்கள் எல்லாருக்கும் காத்திருக்கும், கடந்து செல்லவேண்டியும் இருக்கும், அதுவரை பள்ளியை அனுபவியுங்கள். அதோடு முடிஞ்சா கொஞ்சம் படிங்க, ஒரு போதும் ட்யுசன் போ என்றோ, ஏன் முதல் மதிப்பெண் வரலைன்னோ கண்டிப்பா நான் கேட்க மாட்டேன்.
என்ன பிடிக்குதோ அதை செய்யுங்கள், அதில் மேலும் சிறப்பாக வர பெற்றோரா என்ன கடமையோ அதை நாங்கள் செய்கிறோம். உங்கள் சந்தோசம் முக்கியம்.

Che... Chance-e illeenga... Ippadi oru amma (appa) ellaa kozhandhaigalukkum kedaichittaa, adutha thalaimurai evlo manidhaabimaanathodayum, anbu neranjadhaavum irukkum... Naan adikkadi, en manaivitta solluven... Oru manidhanoda adhigabatcha saadhanai, indha olagathukku oru nalla thalaimuraiya kudukkuradhu dhaan... nu. Great.

Post a Comment

வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க