Wednesday, February 19, 2014

காசி பயணம் - காசி - அலகாபாத்

 27.01.14 - 28.01.14

 



வட இந்திய கோவில்களுக்கும் நம்ம ஊர் கோவில்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசங்களில் ஒன்று, அங்கு நாமே நம் கையால் சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் பண்ணலாம், தொட்டு கும்பிடலாம். பெரும்பாலும் வெள்ளை மார்பிள் கற்களால் ஆன சிலைகளை பார்த்தால் தென்னிந்தியாவிலிருந்துபோன நமக்கு பக்தி வருவது சந்தேகமே. நாம் கோவிலுக்கு வெளியே நின்று கருங்கல் சிலையை லட்சணமாக அலங்கரித்து வீசப்படும் விபூதியையோ குங்குமத்தையோ பயபக்தியாக பெற்றுவருபவர்கள். அத்தனை ஈசியா சாமியை தொட நமக்கு மனசும் சம்மதிப்பதில்லை. முன்பொருமுறை ஹரித்துவார் ரிஷிகேஷ் போன போது இதை ஆச்சரியமாக இருந்தது.


கங்கையில் குளித்து கையில் ஒரு செம்பு தண்ணீருடன் ஒவ்வொரு சிவலிங்கமாக விட்டு இறுதியாக சுயம்புவான கேதாரநாதலிங்கத்தின் மீது அபிஷேகித்து கோவில் மண்டபத்தில் அமர்ந்து ஜெபம் முடித்து காலை சிற்றுண்டியும் சுவாமியின் சிற்றுரையையும் கேட்டு காசி விசுவநாதரை தரிசிக்க கிளம்பினோம். 



வழக்கமான பிரச்சனைக்குரிய வழிபாட்டு தலங்களில் இருப்பதை போல் இங்கும் செக்யுரிட்டி செக்கிங் அதிகம் தான். செல்போன், டார்ச், பேனா, கத்தி, கீ செயின் முதல் கொண்டு எந்த ஒரு பொருளையும் எடுத்து செல்லகூடாது. காசியில் அதிக பணம் கையில் வைத்திருப்பதும் பாதுகாப்பில்லை என்பதால் பர்ஸ் அவசியமின்றி போகிறது. செருப்பை தங்கியிருந்த இடத்திலேயே விட்டு குறுகலான வீதிகளை கடந்து பயணிக்கிறோம். எங்கள் குழுவில் மொத்தம் 40 பேர். அனைவரும் ஒன்றாகவே இருந்தோம். கொஞ்சம் வழி தவறினாலும் மீண்டும் சேர்வது சிரமம். ஒரு வழியாக உள் நுழைந்து வேறு வழியாக வெளியேற வேண்டும். ஊரும் புதிது பாஷையும் தெரியாது. எனவே எங்கு சென்றாலும் ஒன்றாகவே இருத்தல் நலம்.   பகல் பூஜை நேரமானதால் கோவிலுக்குள் நான் உட்பட மூன்று பேரை மட்டும் அனுமதித்து மற்றவர்களை வெளியில் நிறுத்திவிட்டார்கள். உள்ளே சென்று திரும்பி பார்த்தால் மற்றவர்களை காணோம்.. திரும்பி வெளியில் வரவும் முடியாது. கோவிலுள் உள்ளே நல்ல கூட்டமும்...  காவலர்கள் கெடுபிடியினால் உள்ளிருப்பவர்கள் அனைவரையும் உடனே அனுப்பிவிடுகின்றனர். நாங்கள் மூன்று பேரும் தீபாராதனை மற்றும் விசுவநாதரை தரிசித்து எங்கள் குழுவினர் வந்தால் கண்டுபிடிக்க கூடிய இடமாக பார்த்து அங்கிருந்த மண்டபத்தில் காத்திருந்தோம்.  எல்லோரும் வந்த பின் விசுவநாதர் கோவிலை ஒரு சுற்று சுற்றிவந்தோம்.


விசுவநாதரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே. (காசியை பற்றியும் கோவில்களை பற்றியும் இங்கு நான் தரும் எல்லா தகவல்களும் எங்களுக்கு எங்கள் குரு மூலம் கூறப்பட்டதே ) ஏகப்பட்ட முறை கொள்ளையடிக்கப்பட்ட கோவில் இது. மதுராவில் உள்ளது போல் அடுத்த சுவர் ஒரு மசூதிதான். தஞ்சை பிரகதீஸ்வரரை போன்ற பிரம்மாண்டத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். அதிகம் போனால் ஒரு அடி அளவிலே உள்ளார் உலகாளும் இறைவன். சுற்றிலும் வெள்ளி கவச சுவருடன் மேலே எப்போதும்  இருக்கும் ஜலத்துடன் நாமே தொட்டு வழிபட்டு வரலாம். கோவிலின் உள்ளே ஒரு கிணறு உள்ளது, அதில் உண்மையான லிங்கம் இருப்பதாக கூறுகின்றனர்.
தொந்தி கணபதி என்று விநாயகரும் உள்ளேயே ஒரு அன்னபூரணியும் உண்டு. வழிபட்டு கோவிலின் இன்னொரு வாசல் வழியாக வெளியேறி அன்னபூரணி சந்நதியை அடைகிறோம். மேருமலையும் அன்னபூரணியும் அதுனுள் சிவன், ராமர், ஆஞ்சநேயர் என்று சந்நதிகளூம் உண்டு. வழிபட்டு அங்க்யே நித்திய அன்னதான கட்டிடத்தை சரணடைந்தோம். காசி வந்து அன்னபூரணியிடம் உணவருந்தாமல் போகமுடியுமா? இனிப்பு, தயிர், சாம்பார், சாதம் என்று அருசுவை விருந்து உண்டு இன்னொரு வாசல் வழியே வெளியேறுகிறோம்.

விஸ்வநாதரும் அன்னபூரணியும் மட்டுமே ஓரிடத்தில் உள்ளார்கள், விசாலாட்சி கொஞ்சம் தள்ளி தனியான இடத்தில் இருக்கிறார். குறுகலான சந்துகளில் கொஞ்சம் நடந்து சென்றால் சட்டென்று வரும் ஒரு சின்னஞ்சிறு கட்டிடத்தில் சுயம்புவடிவான விசாலாட்சி அலங்கரிக்கப்பட்டு அருள்பாலிக்கிறார். அவரையும் தரிசித்து மீண்டும் காசிதெருக்களில் இருபுறமும் வேடிக்கை பார்த்து நாங்கள் தங்கியிருந்த குமாரசாமி மடத்தை அடைகிறோம்.

 


மாலை மணி நான்கு ஆகிறது,  உடனே கங்கையில் குளித்து சந்தியாவேளையில் கங்கையில் நிகழும் மங்களாரத்தியை காண போக வேண்டும். மீண்டும் கேதாரநாதர் படித்துறை, காலையில் இருந்த கால நிலை இப்போது அப்படியே தான் இருக்கிறது. மீண்டும் திவ்யமான குளியல், ஜெபம், கேதாரநாதர் தரிசனம் முடித்து அனைவரும் தச அசுவமேத காட் செல்கிறோம். மாலை 5.50 முதல் தினமும் நடக்கும் கங்கா ஆரத்தியை வர்ணிக்க முயற்சிதான் செய்ய முடியும். நேரில் பார்த்து அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும்.


விஸ்வநாதர் கோவில் செல்லும் வழியில் சட்டென்று பிரியும் ஓரிடத்தில் வலப்புறமாக கங்கை பிரவாக்கிறாள். அங்கே படித்துறையில் மேடை அமைத்து கங்கைக்கு தினமும் ஆரத்தி காட்டப்படுகிறது. இந்த மொத்த பயணத்தில் இருமுறை கங்கா ஆரத்தியை காணும் வாய்ப்பு கிட்டியது. அந்த இருளும், குளிரும், வேதங்களும் இசையும் மக்களின் கங்கா மாதாகி ஜெய் கோஷமும் வேறு விதமான பக்தியை வேறு ஒரு உலகத்தை உங்களுக்கு காட்டும். தென்னிந்தியாவில் ஸ்தலம் முக்கியம், வட இந்தியாவில் தீர்த்தம் முக்கியம். நதிக்கரையே நாகரிகம், நதியே தெய்வம், நதியே வாழ்க்கை அப்படி இருக்கும் போது  நதியை நமஸ்கரித்து வணங்கி மகிழ்வதே ஆரத்தி. உயரமான இடமாக தேடி அமர்ந்தேன், நான் சென்ற இடங்களை என் குழந்தைகளும் நண்பர்களும் எப்போது சென்று பார்ப்பார்கள் என்பது இப்போது தீர்மானிக்க முடியாது. இந்த கங்கை ஆரத்தியை அவர்களுக்கு புகைப்படமாகவேணும் காட்ட வேண்டுமே.
கண்முன் கங்கையை வணக்கி விதவிதமான தீபமும் மற்ற சடங்குகளும் நடந்தேறியது. ஒரு மணிநேர நிகழ்வு முடிந்ததும் கங்கை, விசுவநாதர், அன்னபூரனி, விசாலாட்சியுடன் ஆதிசங்கர மகராஜுக்கும் ஜெய் என்று வாழ்த்துரைத்து கலைகின்றனர்.








அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் உள்ளது நகரத்தார் சத்திரம். இரவு உணவிற்கு அங்குதான் செல்ல வேண்டும். காசியில் தமிழர்கள் அதிகம் வருவதாலோ என்னவோ நீங்கள் தமிழ் பேசினால் அவர்கள் புரிந்துகொள்வார்கள். மற்ற இடங்களை போல் இல்லாமல் இங்கு இட்லியும் தோசையுமே பிரதானமாக கடைகளில் உள்ளது.கூடவே மூன்று நேரம் வேண்டுமானாலும் உப்புமா கிடைக்கும். தங்க குமாரசாமி மடமும், உணவுடன் தங்க நகரத்தார் சத்திரமும் முன்கூட்டியே பதிவு செய்தால் பிரச்சனை இன்றி சுகமான பயணம் அமைய வழிவகுக்கும்.







வயிற்றை கெடுக்காத உணவுடன் மீண்டும் குமாரசாமி மடம் திரும்புகிறோம். காலையில் 6 மணிக்கு அனைவரும் திரிவேணி சங்கமம் உள்ள அலகாபாத் செல்ல தயாராக இருக்க வேண்டும்.



தயாராக இருந்தோம், அவ்வளவாக ரோடும் கால நிலையும் சரியில்லாததால் நீண்ட பயணமாக 9 மணிக்கு வித்யாஞ்சல் எனப்படும் விந்திய வாசினி கோவிலை அடைந்தோம். சக்திபீடங்களில் ஒன்றான விந்தியவாசினியை தரிசித்து அங்கிருந்த காளியையும் வணங்கி பிரம்மாண்ட ஹோம குண்டத்தை சுற்றி அமர்ந்து அந்த சூழலை உள்வாங்கி கிளம்பினோம்.



சீதாமாட்டி என்னும் இடம் அடுத்த இலக்கு, சீதையை கண்ட அனுமன் தனியான ஒரு கோவிலில் இருக்கிறார். அனுமன் என்றாலே பிரம்மாண்டம் தானே, அந்த நித்யபிரம்மாண்டத்தை வணங்கி சீதையை காண செல்கிறோம்.



 


சீதை, தன் தாயுடன் பூமிக்குள் சரணடைந்த இடம். பெரிய ஓடைபோன்ற நதிக்கரையில் இரண்டு அடுக்குகளாக அமைந்திருக்கும் கோவில். மேல் அடுக்கில் சீதை மணப்பெண் அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார். கீழ் அடுக்கில் சீதையின் சமாதி நிலை என்று தத்ரூப காட்சிகள் சிலையாக வடிக்கப்பட்டிருக்கின்றன. சீதையை விட பின்புலமாக செதுக்கப்பட்டுள்ள மற்றவர்களின் சிலைகள் இன்னும் தத்ரூபமாக இருந்தது









 



















 






 



  


அங்கிருந்து கிளம்பி மாலை 3 மணி அளவில் அலகாபாத் சென்றடைந்து சிறு படகின் மூலம் திரிவேணி சங்கமம் நெருங்குகிறோம், மாலையும் நெருங்குவதால் தொலைவில் சூரியனும் நதியில் சரணடைய தயாராகிறார். தூரத்தில் விளக்கு வெளிச்சம் தெரிகிறதே அதுவே திரிவேணி சங்கமம் என்று சுவாமி சொல்லும் போது நெருங்கிவிட்டோம். தொலைவில் தெரிந்த விளக்கொளியில் திரிவேணி கனகமாக ஜொலித்தது. பெரும் வெள்ள பிரவாகத்தில் நீராடி திரிவேணியை வணங்கி மீண்டும் படகில் ஏறினோம்.

 


 
 
இந்த பயணத்தில் நான் மிக ரசித்த, மனதிற்கு இதமான, பிடித்த ஒரு நிகழ்வு திரும்பி வரும் படகுபயணத்தில் நிகழ்ந்தது. குளிர் போர்த்திய முன்னிரவில் அமாவாசைக்கு முந்தைய நாளில் நட்சத்திரத்தின் ஒளியில் தூரத்தில் தெரியும் நகரின் விளக்கை தவிர வேறு எந்த சலனமும் இல்லாத அமைதியான சூழலில் மந்திர ஜெபம் செய்தோம். அதன் பிறகு சுவாமியிடம் பஜன் பாடலாமே என்ற போது அவரும் இசைந்து தெய்வநாமங்களை பாடதுவங்கினார், நாங்களும் பின்பற்றினோம். அந்த சூழலே மாறியது, ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் படகோட்டிகளும் எங்களுடன் பஜனை பாடல்களை சேர்ந்திசைக்க ஆரம்பித்தனர். எங்கள் மாணவர்கள் பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன், நானும் சில பஜன் நிகழ்வுகளில் இருந்திருக்கிறேன். என்றாலும் அந்த இரவில், நதியின் ஓட்டத்தில் குருவின் குரல் எங்கள் ஆன்மாவை அசைத்தது என்பதே உண்மை. “ மந்த்ரமூலம் குருவாக்யம்”
 
 
 
 
 
 
அடுத்த நாள் தை அமாவாசை, நடு ஜாமம் ஒரு மணி அளவில் காசியை அடைகிறோம். வழக்கம் போல் காலை 6 மணிக்கு நதிக்கரையில் சந்திக்கலாம்....

5 comments:

ரோகிணிசிவா said...

superaa irukunga,unga eluthu ,koodavae travel pannra unarvu

திவாண்ணா said...

புடைப்புச்சிற்பங்கள் அருமை! த்ரிவேணி சூழலும் அருமையாக இருந்திருக்கும்! கங்கை, யமுனை நீரின் நிற வேறுபாட்டை கவனித்தீர்களா?

அமுதா கிருஷ்ணா said...

காசிகோயிலில் ராத்திரியில் நடக்கும் ஸ்ரீங்கார் பூஜை போன முறை போன போது பார்த்தோம். நீங்க சொன்ன மாதிரி ஆரத்தி நேரில் பார்த்தால் தான் உணர முடியும்.

வெங்கட் நாகராஜ் said...

கங்கா ஆரத்தி - அதை உணரத்தான் முடியும் என்பது உண்மை......

ஹரித்வாரிலும், காசியிலும் ஆரத்தி பார்த்திருக்கிறேன். அப்படி ஒரு பரவசம்....

தொடர்ந்து பயணிப்போம்...

துளசி கோபால் said...

அருமை!

Post a Comment

வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க