Wednesday, December 7, 2011

கானல் வாழ்க்கை


வீடு வரை உறவு 
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசிவரை யாரோ?
எவ்வளவு உண்மை...


நேற்றிருந்தவர் இன்றில்லை, இன்றிருப்பவர் நாளையில்லை. நிதர்சனம்தான். இன்று இறந்த பிணத்தைப்பார்த்து நாளை இறக்கப்போகும் பிணம் அழுகிறதுன்னு பட்டினத்தாரோ யாரோ சொல்லிருக்காங்க.. ஒரு இழப்பு வாழ்க்கையை அவர்களை சார்ந்தவர்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிபோடும்  என்று இதுவரைக்கும் யோசிக்கலை.

சின்னவயதில் சாவு அறிமுகமானது பக்கத்து வீட்டு பாட்டியினால், திடீர்னு இறந்துட்டாங்கன்னுசொன்னாங்க. போயி பார்த்தேன், படுக்க வைத்திருந்தார்கள் அவ்ளோதான் சாவுக்கான அறிமுகம். 7வது படிக்கும் போது என் அப்பிச்சியின் அம்மா (அம்மத்தா) இறந்துவிட்டார்கள்னு பள்ளியில் இருந்து அழைத்து வந்து ஊருக்கு போனோம். அது இழப்பாக தெரிந்ததைவிட உறவு எல்லாம் கூடிய விழாவாகவே இருந்தது. இதற்குப்பிறகு வேறு ஏதும் பெரிதாக பாதிக்கவில்லை.

15வருடங்களுக்கு ஒரு நாள் அலுவலகத்திற்கு வந்த போன் சொல்லிய சேதி, எங்க பக்கத்துவீட்டில் இருந்த நகைக்கடை அதிபர் குடும்பத்துடன் தற்கொலை. திருப்பூரில் 13 பேர் இறந்தது மிகப்பெரிய அதிர்வு. அதும் பிறந்ததிலிருந்து பார்த்தவர்கள் இன்னைக்கு நாயைக்கூட விட்டுவைக்காமல் போய்விட்டார்கள் என்றதும் அதிர்ச்சிக்கு அளவில்லை.

பால்ய சிநேகிதம் என்பது மனதுக்கு மிக நெருக்கமானது, வலியோ சுகமோ பகிரும் உறவு அதுதான். சித்ரா. என் மிக நெருங்கிய தோழியாக இருந்தவள், கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள், படிப்பு சரியாக வராததால் திருமணத்திற்கு அவசரப்படுத்தப்பட்டவள், 13 வருடத்திற்கு முன் ஒரு ஜூலை 8-ல் தீக்குளித்தாள், உயிர் போகாமல் ஒரு நாள் முழுதும் இருந்தாள், என்னைப்பார்க்கனும்னு என் அப்பாவிடம் சொல்லி அனுப்பினார்கள் எனக்கு அவளைப்பார்க்கும் தைரியம் அப்போது இல்லை. இப்போதும் வரவில்லை.. மன்னிச்சுடு சித்ரா. பெரிய கண்களூடன் உன் சாயலில் பாதி கொண்டிருக்கும், நீ தற்கொலை செய்து கொள்ளும் போது 7 மாதக்குழந்தையாக இருந்த உன்  மகனை இப்போது பார்த்தாலும் மனசுக்குள் ஒரு கலவரம் வருகிறது.

ரொம்ப வருடம் கழித்து 4 வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பாவும் அவரைத்தொடர்ந்து 45 நாளில் என் அப்பாவின் அம்மாவும் (தாத்தா- பாட்டி) போய்ச்சேர்ந்தார்கள். இதைவிட என் அப்பா இறந்தது கூட ஒரு அதிர்ச்சிதான். ஆனால் என் கண் முன் நடந்த மரணம், இப்பவும் ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் நினைவில் வருவது. நாலே நாட்கள் கோமாவில் இருந்து வீட்டுக்கு போனதும் ஒரு வினாடி கண்ணைத்திறந்து பார்த்துவுடன் ஒரு சின்ன விக்கலில் உயிரை விட்ட அம்மா.

அம்மா இறந்துட்டாங்கன்னு சுதாரிக்கவே சில நிமிடம் ஆனது,. சரியாயிடுச்சு போலன்னு நினைச்சு அம்மா பாரும்மான்னு உலுக்கி எடுத்தேன். நானும் என் சித்தியும் மட்டுமே அருகில். ஆனால் திறந்து கண்கள் மூடவே இல்லை. முதலும் கடைசியுமாக நினைவு தெரிந்து அம்மாவை கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்தேன். கொடுத்துட்டே இருந்தேன். அழவே தோனலை. கூட இருந்தவர்களின் அழுகுரல் தான் மறுபடியும் இந்த உலகில் கொண்டுவந்தது. அவங்க கண்ணை தானம் தரும்போது என் மாமா உட்பட யாரும் ஒத்துக்கலை. டாக்டர் கடைசியாக மறுபடியும் அந்தக்கண்களை திறக்கும் போது எனக்கு பார்க்கும் அளவு தைரியம் வரவில்லை.

அம்மா இறந்ததுமே உண்மையிலேயே இவ்வளவு நாள் நினைத்தது வாழ்க்கை இல்லை. அர்த்தமில்லாத கோபம், வருத்தம், எல்லாம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. அடுத்த நான்கு நாட்களில் அப்பாவின் ஒரே தங்கையின் கணவர் - என் மாமா ஹார்ட் அட்டாக்கில் இறந்ததும் அடச்சேன்னு ஆயிடுச்சு.

அதெல்லாம் விட இன்னும் வாழ்க்கையின் மேல் பயமும், காதலும், விருப்பமும் வரக்காரணம், என் மாமியாரின் மரணம். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக புற்றுநோயில் போராடி, இவ்வளவுதான் என்று அளவிட முடியாத கஷ்டப்பட்டு, உடலின் ஒவ்வொரு பகுதியும் வலியில் துடித்து, தோல் கருகி, சுருங்கி, உடல் முழுதும் ரணமாகி, கடைசி இருபது நாட்கள் நரகத்தில் இருந்து ஒவ்வொரு அணுவும் வலியை அனுபவித்து ஒரு வழியாக மரணித்தார். அது என்னைப்பொறுத்தவரை அவருக்கு விடுதலைதான்.கடைசிநாட்களில் அவர் கண்ணாடியே பார்க்கவில்லை, ஒரு நாள் விளையாட்டாக போனில் போட்டா எடுத்த வர்ஷாவிடம் அவர் இன்னும் கொஞ்சம் சிரிக்கறேன் இப்ப எடுன்னு. அந்த சிரிப்பு என்பது உதடுகளின் விரிசல் தான்.

ஒரு மரணம் ஒரு தனிமனித மரணம் அல்ல, அது ஒரு தலைமுறையின் முடிவு. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே முடிந்துவிடுகிறது. அவருக்கு பிடித்தது, பிடிக்காததது, விருப்பு, வெறுப்பு, வலி,கோபதாபங்கள். மரணமில்லா பெருவாழ்வு சாத்தியமில்லாதது போல் மறதியும் உடனே வந்தால் பரவாயில்லை. எந்தப்பொருளை பார்த்தாலும் அதோடு சம்பந்தப்பட்ட அவர்களின் நினைவு வந்து இருக்கிறவர்களை கொல்கிறது. மனதை அதிலிருந்து வெளியெடுப்பது அவ்வளவு சிரமம்.

ம்ம் போகிறவர்கள் போகட்டும் மிச்சமிருப்பவர்களுடன் தொடரும் பயணம்..13 comments:

Anonymous said...

||ஒரு மரணம் ஒரு தனிமனித மரணம் அல்ல, அது ஒரு தலைமுறையின் முடிவு. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே முடிந்துவிடுகிறது. அவருக்கு பிடித்தது, பிடிக்காததது, விருப்பு, வெறுப்பு, வலி,கோபதாபங்கள். மரணமில்லா பெருவாழ்வு சாத்தியமில்லாதது போல் மறதியும் உடனே வந்தால் பரவாயில்லை. எந்தப்பொருளை பார்த்தாலும் அதோடு சம்பந்தப்பட்ட அவர்களின் நினைவு வந்து இருக்கிறவர்களை கொல்கிறது. மனதை அதிலிருந்து வெளியெடுப்பது அவ்வளவு சிரமம்.|| aamaam.

Anonymous said...

ரணம் இந்த களம்..

ஆனந்த் ராஜ்.P said...

ஒருவரின் மரணம் மிக மெதுவாகவே அவரின் வெற்றிடத்தை உணரச்செய்கிறது..! போகிற போக்கில் சொல்லிவிட்டு போய்விட்டீர்கள்.."அது ஒரு தலைமுறையின் முடிவு" என்று.. உண்மையில் ஒரு மரணத்திற்குப் பின் தான் அடுத்த தலைமுறையின் உண்மையான ஆதிக்கம் ஆரம்பிக்கிறது..!

விச்சு said...

சாவின் துயரம் தன்னைச் சார்ந்தோர் இறக்கும்போதுதான் புரியும்.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அன்பின் விஜி,

எத்தனை அழகாக உங்கள் மன வேதனையை பகிர்ந்துள்ளீர்கள்,உணர்ந்திருந்தாலும், நமக்கென்று வரும்போது தாங்கிக்கொள்வது அவ்வளவு எளிதான காரியம் அன்று... விஜியின் மற்றொரு முகம் மிக மாறுபட்ட தத்துவார்த்த முகம் ஆச்சரியமளிக்கிறது!!!!

விஜி said...

பனி ஆமாங்க

டமில் ஏன் ஏன்?

விஜி said...

ஆனந்த்ராஜ் உண்மைதான். நான் சொன்னது இறந்தவரின் தலைமுறை அவரோடு முடிந்துவிடும். அடுத்து வருவது இன்னொரு புது தலைமுறைதானே

விஜி said...

விச்சு ம்ம் ஆமாம்

விஜி said...

@நித்திலம் - நாந்தான் சொன்னனே - ஞானி :))

kathir said...

//வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க
//

சொல்ல ஒன்றுமில்லை :(

விஜி said...

@கதிர் :))

Ponniyinselvan said...

\\மரணமில்லா பெருவாழ்வு சாத்தியமில்லாதது போல் மறதியும் உடனே வந்தால் பரவாயில்லை. எந்தப்பொருளை பார்த்தாலும் அதோடு சம்பந்தப்பட்ட அவர்களின் நினைவு வந்து இருக்கிறவர்களை கொல்கிறது. மனதை அதிலிருந்து வெளியெடுப்பது அவ்வளவு சிரமம்.||
with someone's death we too die and live a lifeless life.
karthik amma

விஜி said...

ம்ம் பொன்னியின் செல்வன் சிலருக்கு அப்படித்தான் :(

Post a Comment

வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க