Saturday, October 30, 2010

பெண்ணியம் குடும்பத்துக்கு தேவையா?

நீங்க சொல்லுங்க பெண் என்றால் எப்படி இருக்கனும்?
அடக்கமா இருக்கனும்,அன்பா இருக்கனும்,

நீங்க சொல்லுங்க எப்படி உடை அணியனும்
புடவை, தாவணி தான் நல்லது

குடும்பத்தில் பெண்கள் எப்படி இருக்கணும்?
பொறுமையா, அன்பா, பண்பா (மதிய நேர சீரியல் கதாநாயகி மாதிரி போல)

கணவன் அடிச்சா என்ன பண்ணுவீங்க,
என் பக்கம் தப்பு இருந்தா அடிச்சா வாங்கிப்பேன்., திருப்பி அடிப்பேன், அப்ப அமைதியா இருப்பேன் அப்பறமா சொல்லித்திருத்துவேன்..

பெண்ணீயவாதிகள் எப்படி இருப்பாங்க?
சிகரெட் பிடிப்பாங்க, தண்ணி அடிப்பாங்க, யாரைப்பார்த்தும் பயப்பட மாட்டாங்க, போல்டா இருப்பாங்க, அடங்கவே மாட்டாங்க.. ப்ளா ப்ளா....


பெண்ணீயவாதிகளின் பார்வையில் பெண்ணீயம்னா என்ன?
உரிமையை எடுத்துக்கறது, சுதந்திரமா இருப்பது,பெண்கள் தண்ணி அடிச்சா என்ன தப்பு?, ஒரு பெண் அவள் விரும்பிய கணவனை தேர்ந்தெடுக்கவும், கல்யாணமே வேண்டுமா வேண்டாமா என்றும், திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழவும், எப்ப இஷ்டமோ அப்ப குழந்தை பெத்துக்க உரிமை வேண்டும்னு விவாதத்தை ஆரம்பிச்சாங்க.

இப்படி துவங்கிய பெண்ணியம் குடும்பத்தில் தேவையா இல்லையா என்ற பேச்சு - இதை விவாதம்னு சொல்ல முடியாது, ஏன்னா பேசியது அத்தனையும் நிகழ்ச்சி நடத்தும் இயக்குனர். இந்த வெட்டி பேச்சு தலைப்பைத் தாண்டி வேறு வேறு அர்த்தமற்ற விவாதத்தில் போனது, ஒரு ஆயாசத்தையும் எப்படா முடிப்பாங்க என்ற வெறுப்பையும் கொடுத்தது.

பெண்ணியம் என்று பொதுவில் சொல்லும் உரிமையை எடுப்பதும் கொடுப்பதும்.. யாரு யாருக்கு தருவது? பெரும்பாலான பெண்ணியம் பேசுபவர்கள் சிங்கிள் பர்சனாகவே இருக்கிறார்கள். ஆணோ பெண்ணோ ஒரு விசயம் அல்லது விருப்பம் அவர்கள் எப்படி நினைத்தார்களோ அந்த விகிதத்தில் சிறிதும் குறையாமல் அது நிறைவேறவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள், அது அப்படி நிறைவேறாமல் போனால் அதனால் ஏற்படும் ஒரு வித கோபம், ஆதங்கம் தான் பெண்ணியம், அல்லது ஆணாதிக்கம். ஆண்களால் மட்டுமே பெண்கள் கஷ்டப்படுகிறார்களா? ஏன் மாமியார், நாத்தனார், இன்னும் சொந்த அம்மாவால் கஷ்டப்படும் பெண்கள் கூட இருக்கிறார்கள். அதே மாதிரி பெண்களால் கஷ்டப்படும் ஆண்கள் இல்லாமலா இருக்காங்க? அவர்கள் வெளியில் சொல்லுவதில்லை என்பதே உண்மை. எதிர்பார்த்து அது நடக்காமல் போகும் போது வரும் விளைவுகளுக்கு நமக்கு சவுகரியமான பேரை வைத்திருக்கோம்.


குடும்பத்தில் பெண்ணீயம் தேவையா? இல்லையா? என்ன கருமம் இது?
பெண்கள் இல்லாத வாழ்க்கை எப்படி நல்லாருக்காதோ அதே போல் ஆண்கள் இல்லாத வாழ்க்கையும் சுவாரஸ்யம் இல்லாததுதான். ஒரு பெண் அழகா உடை உடுத்துவது அவளுக்கு தன்னம்பிக்கை தரும் அதே நேரம் நம் மனதுக்கு பிடித்தவர்களும் அதை ரசிக்கனும் என்ற எண்ணமும் இருக்கும், இதெல்லாமா பெண்ணியத்தில வரும்? அதே மாதிரி எந்த வீட்டிலாவது சண்டை இல்லாமல் எப்போதும் கொஞ்சிட்டு இருப்பாங்களா? நினைச்சுப்பாருங்க, எப்பவும் மனைவி பிராணநாதான்னும் கணவன் கண்ணே மணியேன்னும் பேசிட்டு இருந்தா எப்படி இருக்கும்.

ஒரு கணவனும் மனைவியும் கருத்துவேறுபாடால் தாராளமா பிரிஞ்சு போகலாம், ஆனால் ஒரு அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சு போனால் அப்படி ஒரு பெண்ணீயம் தேவையா? குழந்தைகள் நம் மூலம் உலகிற்கு வருகிறார்கள் நாமே அவங்களூக்கு எல்லாம் இல்லை, ஒரு பெற்றோரிடம் வளரும் உரிமையை அவங்ககிட்ட இருந்து பிரிக்க நாம யாரு?
உனக்கென்ன தெரியும், அவங்க கஷ்டம், சும்மா பேச நல்லாருக்கும்னு சொல்றவங்களுக்கு, காதல் கல்யாணமோ பெற்றோர் பார்த்து வைத்த கல்யாணமோ இரண்டு பேர் சேர்ந்து வாழும் போது கருத்துவேறுபாடு கண்டிப்பாவரும்.நம் அம்மா அப்பாவும் சண்டை போட்டுகலையா? சேர்ந்து இருக்கலையா?

இன்றைக்கு உண்மையில் பொருளாதார சுதந்திரம் தான் பெண்களை இப்படி யோசிக்க வைக்கிறது, அதே பொருளாதாரத்தை நம் குடும்பத்துக்கு பயன்படுத்தலாம் என்று தோணினால் இப்படி பிரிந்து போகும் எண்ணம் வருமா? திருமணம் ஆனதும் பெற்றொர்களுடன் இல்லாமல் ஒரு 3 வருடங்கள் தனியாக இருப்பது கூட ஒரு வகையில் நல்லது தான், ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்து எப்படி ஒரு குடும்பத்தை சமாளிப்பது என்று கற்றுக்கொள்ள உதவும், காலையில் எழுந்ததிலிருந்து மாலை வரை எத்தனை செலவுகள், அதை வருமானத்துக்குள் எப்படி அடக்குவது, என்ன சேமிப்பு போன்ற எல்லாம் கணவனும் மனைவியும் தெரிந்து கொள்ள இந்த காலகட்டம் தேவைப்படும்.

கருத்து வேறுபாடுகள் வர எவ்வளவோ காரணங்கள் இருக்கிறது, ஆணும் பெண்ணும் அதை அனுசரித்து போவது தான் குடும்பத்தை கொஞ்சம் நிம்மதியோடு நகர்த்த உதவும்.இன்னும் சொல்லப்போனால், இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் சேர்த்துதான், எல்லாரும் எதோ ஒரு நேரத்தில் பிடிக்கிறதோ பிடிக்கலையோ நடித்துதான் ஆகனும், அதை குடும்பத்தில் வெளி ஆட்களிடம் காட்டுவதில் தவறேதும் இல்லை, நம்முடனேயே இருக்கும் நம் குடும்ப ஆட்களுக்கு நம்மை பற்றி ஒளிவுமறைவின்றி தெரியும், ஓரிரு நாட்கள் வந்து செல்லும் சொந்தங்களையும் நட்புகளையும் மற்ற அனைத்தையும் புன்னகை முகமூடியின் பின் தள்ளி உபசரித்து அனுப்புவதால் நாம் ஒன்றும் குறைந்துவிடுவதில்லை, அது யார் பக்கம் இருந்து வந்தாலும், அதை விட இன்னொன்று கணவனோ மனைவியோ அவர்கள் பிறந்த வீட்டு சொந்தங்களை இரண்டாம் இடமாக வைத்திருந்தால் பிரச்சனையே இல்லை, யாரு விவாதத்திற்க்கு எடுத்துக்கொண்டாலும் குழந்தைகள் பெரிதானதும் நம் குடும்பமே முக்கியமாக எல்லாருக்கும் இருக்கும், அதில் மாற்றுகருத்து இருந்தால் அங்கே பிரச்சனை கண்டிப்பா வரும்.

பெண்ணீயம்,ஆணாதிக்கம் இதெல்லாம் குடும்பத்துக்கு தேவையே இல்லை, நீ பெரிசா நான் பெரிசான்னு ஆரம்பிச்சா அது போயி நிற்கும் இடம் பஞ்சாயத்தாத்தான் இருக்கும், இதுக்கா திருமணம்,?விரும்பும் போது குழந்தை பெத்துக்க உரிமையா? அதுக்கு பெண்ணியமா? ஒரு குழந்தைக்கு வருடக்கணக்கில் தவமிருக்கும் பெண்களுக்கே அதன் அருமை தெரியும்.

பெண்ணீயமோ ஆணாதிக்கமோ அதைப்பத்தி பேசி கடைசியில் இழப்பது ஒரு அழகான வாழ்க்கையை, கடைசியில் மிஞ்சும் விரக்தியை தான். நம் குழந்தைகள், அவர்களின் வாழ்க்கை, அதில் வரும் திருப்தி இதை யோசித்தாலே போதும். கணவன், மனைவி, சொந்தங்கள் என்று நம் வரையில் இருக்கும் சிலரை திருப்தி படுத்த முடியாதவங்க, வீட்டை ஒழுங்கா கட்டிக்காக்க துப்பில்லாதவங்க சமூகத்தை என்ன திருத்த போறாங்க?

யோசிக்கறேன்,சொல்லவந்ததை ஒழுங்கா இன்னும் சொல்லலை,இதுவே பதிவு பெரிசா போயிடுச்சு அதனால  இது இன்னும் வரும்..

14 comments:

கவிதா | Kavitha said...

//நம் குழந்தைகள், அவர்களின் வாழ்க்கை, அதில் வரும் திருப்தி இதை யோசித்தாலே போதும். கணவன், மனைவி, சொந்தங்கள் என்று நம் வரையில் இருக்கும் சிலரை திருப்தி படுத்த முடியாதவங்க, வீட்டை ஒழுங்கா கட்டிக்காக்க துப்பில்லாதவங்க சமூகத்தை என்ன திருத்த போறாங்க?//

ம்க்கும்..இதையே தான் நானும் சொல்றேன் வீட்டுல் இருக்க ஒருத்தர் இரண்டு பேரை ஒன்னும் பண்ண முடியலையாம் ..ஊர்ல இருக்க எல்லாரையும் திருத்த போறாங்களாம்.. அய்யோ அய்யோஒ.... :)))))))) சிப்பு சிப்பா வருது விஜி..

Anonymous said...

அட போப்பா நாடு போயிட்டு இருக்கிற போக்கில அது தேவையா? இது தேவையான்னு? இங்கு யாரும் எதை எதிர்ப்பார்த்துகிட்டு இருப்பதில்லை விஜி..அந்த நேரத்துக்கு எது அத்தியாவசியமோ அது தான் தேவை.இன்னும் பெண்ணியம் ஆணாதிக்கம் எல்லாம் பேசிகிட்டு..மேட்னிக்கு நம்ம ரெண்டு பேருக்கும் டிக்கெட் போட்டு இருக்கேன் கவிதாவுக்கு சொல்லாம வா..

Vidhya Chandrasekaran said...

நல்லா எழுதியிருக்கீங்க விஜி.

அசுரன் திராவிடன் said...

பெண்களை ஆண்கள் படிக்க வைக்க வேண்டும்.அவர்களுக்கு உலக படிப்பும் ,பகுத்தறிவும் ஆராய்ச்சி படிப்பும் தாராளமாய் கொடுக்க வேண்டும். புராண காலேட்சபமும் ,பழங்கால பதிவிரதைகள் கதைகளும் மாத்திரம் பெண்களுக்கு தெரிந்தால் போதும் என்றால் பெண்கள் சிறிதும் பயன் பட மாட்டார்கள் . புருசனின் அளவுக்கு மீறிய அன்பும்,ஏராளமான நகையிலும் ,புடவையிலும் ஆசையும் ,அழகில் பிரக்யாதி பெற வேண்டுமென்ற விளம்பர ஆசையும் பெற்ற பெண்களும் ,செல்வத்தில் புரளும் அகம்பாவ பெண்களும் அடிமை வாழ்விலேயே திருப்தி அடைந்து விடுவார்களே ஒழிய உலக சீர்திருததிற்கோ ,விடுதலைகோ பயன்படுவது
கஷ்டமாகும் .முதலில் நமது பெண்களுக்கு பகுத்தறிவு ஏற்பட செய்ய வேண்டும் .நமது நாட்டிலுள்ள கேடுகளெல்லாம் பெண்களை பகுத்தறிவற்ற ஜீவன்களாக வைத்திருக்கும் கொடுமை முக்கிய கேடுகளில் ஒன்றாகும் ---தந்தை பெரியார் (1940 )

பெண்கள் வியாதியஸ்தர்களாய் ஆவதற்கும், சீக்கிரம் கிழப்பருவம் அடைவதற் கும், ஆயுள் குறைவதற்கும் இந்தக் கர்ப்பம் என்பதே முலகாரணமாக இருக்கின்றது.... பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு தங்களுக்கே என்று பெண்கள் கருதுவதால் சுதந்திரமும், வீரமும் இன்றி அடிமையானதுமான காரியங்களுக்கு ஆளாகிறார்கள்....
`ஆண்மையின் கொடுமையிலிருந்து மட...்டுமல்லாது பெண்கள் தாய்மையின் கொடுமையிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும் என்றதோடு,
ஒரு மனிதன் தான் பிள்ளைக் குட்டிக்காரனாய் இருப்பதனாலேயே தான் யோக்கியமாகவும், சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாகி விடுகிறான். அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது என்றும் பிள்ளைப் பேறு என்பது பற்றிய தமது மதிப்பீட்டை வெளிப்படையாக பகன்றவர் பெரியார்

"பெண் ஏன் அடிமையானால்(Click here to Download " என்கிற நூல் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்டது. இதை படியுங்கள் பெரியாரின் சிந்தனை எவளவு தொலைநோக்கானது என்று புரியும்.இன்றைக்கு நடப்பதை அன்றே கணித்து இருக்கிறார் என்றார் பாருங்கள்

rajasundararajan said...

எல்லாம் நல்லாத்தேன் இருக்கு, ஆனா அறிவுபூர்வமா இருக்கு. அறிவைப் பயன்படுத்திட்டாதான் பிரச்சனையே வராதே.

விபத்து, நொடிநேரக் கவனக் குறைவாலதான் நடக்குது. ஆட்டத்துக்குள்ள மனசு வந்திறுது. 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டும்தான் வாசம் உண்டு' என்கிற கோட்டிக்கார மனசு.

//ஒரு கணவனும் மனைவியும் கருத்துவேறுபாடால் தாராளமா பிரிஞ்சு போகலாம், ஆனால் ஒரு அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சு போனால்...// இது அக்கறை.

பிறகும் குடும்பத்துக்குள் நின்னு பேசுறீங்க. குடும்பம்னு ஆகுறதுக்கு முந்தியே தெளிவுபெற வழி இருக்கா?

அபி அப்பா said...

\\நீங்க சொல்லுங்க பெண் என்றால் எப்படி இருக்கனும்?
அடக்கமா இருக்கனும்,அன்பா இருக்கனும்,\\

அடக்கமான பின்னே எங்கயிருந்து அன்பா இருக்குறது:-)

கோபிநாத் said...

ஒரு ம் போட்டுக்கிறேன் ;)

சுசி said...

//குடும்பத்தில் பெண்ணீயம் தேவையா? இல்லையா? என்ன கருமம் இது? //

இதுக்கு அப்புறம் நீ சொன்னது.. சபாஷ்டி செல்லம் :)))))))))))

ILA (a) இளா said...

ஈயம் தேவை ? ஒரு நல்ல ஈயக் குண்டா ஃபார் குழம்பு வெச்சிங். மத்தபடி பதிவை நான் இன்னும் படிக்கல

வால்பையன் said...

//பெண்களால் கஷ்டப்படும் ஆண்கள் இல்லாமலா இருக்காங்க? அவர்கள் வெளியில் சொல்லுவதில்லை என்பதே உண்மை. //


ஆமாங்க, எனக்கும் ராமை நினைச்சால் கொஞ்சம் பாவமா தான் இருக்கு!

Unknown said...

//பெண்களால் கஷ்டப்படும் ஆண்கள் இல்லாமலா இருக்காங்க? அவர்கள் வெளியில் சொல்லுவதில்லை என்பதே உண்மை//

ராம் பிளாக் ஆரம்பிச்சிருக்காராம். கூடிய சீக்கிரம் சொல்லுவாருன்னு எதிர்பார்க்கலாம்.

shunmuga said...

nalla irukk vijiji

ரவி said...

தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

Saravanan Arumugam said...

குடும்பத்தில் பெண்ணீயம் தேவையா? இல்லையா? என்ன கருமம் இது?
பெண்கள் இல்லாத வாழ்க்கை எப்படி நல்லாருக்காதோ அதே போல் ஆண்கள் இல்லாத வாழ்க்கையும் சுவாரஸ்யம் இல்லாததுதான். ஒரு பெண் அழகா உடை உடுத்துவது அவளுக்கு தன்னம்பிக்கை தரும் அதே நேரம் நம் மனதுக்கு பிடித்தவர்களும் அதை ரசிக்கனும் என்ற எண்ணமும் இருக்கும், இதெல்லாமா பெண்ணியத்தில வரும்? அதே மாதிரி எந்த வீட்டிலாவது சண்டை இல்லாமல் எப்போதும் கொஞ்சிட்டு இருப்பாங்களா? நினைச்சுப்பாருங்க, எப்பவும் மனைவி பிராணநாதான்னும் கணவன் கண்ணே மணியேன்னும் பேசிட்டு இருந்தா எப்படி இருக்கும்.

super-nga.. idhu dhaan yedhaartham. good.

பெரும்பாலான பெண்ணியம் பேசுபவர்கள் சிங்கிள் பர்சனாகவே இருக்கிறார்கள்.

ha ha ha ha. they are not supposed talk about this topic.

Post a Comment

வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க